செய்தியும் – சிந்தனையும்

மார்ச் 16-31

மிக அதிகமாகக் கொச்சைப் படுத்தப்படுவது மதச்சார்பின்மையா? சோசலிசமா? என்பது குறித்து ஒரு பட்டிமன்றம் நடத்தலாம் என்று தோன்றுகிறது.

அனேகமாக சோசலிசம் என்பது குழிப்பிணமாக ஆக்கப்பட்டுவிட்டதால் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்றுகூட எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடலாம்.

சோசலிசம் புதைக்கப்பட்ட மேட்டில் முளைத்த புல்காடுகளை உலக மயம் என்னும் எருமை மாடு மேய்ந்து பத்தை பத்தையாக சாணிகளைப் போட்டுத் தள்ளிவிட்டது.

இப்பொழுது களத்தில் இருப்பது மதச்சார்பின்மைதான்.

இதில் ஆளும்கட்சியான காங்கிரஸ் என்பது பாதி பிஜேபியேயாகும்.

பிஜேபியைப் பற்றி கேட்கவே வேண்டாம். ராமராஜ்ஜியம்தான் அது விரும்பும் மதச்சார்பின்மை.
கேட்டால் அதற்கொரு வியாக்கியானமும் சொல்லிவிடுவார்கள்.

ராமன் ஆட்சி என்றால் சாதாரணமா?

ராமன் மனித உருவில் க்ஷனித்த தெய்வம். எல்லோருக்கும் பொதுவானவர். கிறித்தவர்கள்கூட ராமனை வணங்கத் தயாராக இருக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் சொன்னதும் அந்த அர்த்தத்தில்தான் என்று விளக்கம் சொன்னாலும் சொல்வார்கள்.

கருநாடக மாநிலத்தில் நாள்தோறும் தலைமைச் செயலகத்தில் ஒரு அர்ச்சகப் பார்ப்பான் பூஜை நடத்துகிறான்.

அரசாங்கப் புரோகிதர் என்று ஒருவரை நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அரசு விழாக்கள் எல்லாம் பூமி பூஜையுடன்தான் நடந்துகொண்டு இருக்கின்றன. அந்தப் பூமி பூஜை பார்ப்பனப் புரோகிதர்களைக் கொண்டே நடத்தப்பட்டு வருகிறது.

மத விழாக்களுக்கு மத்திய அரசோ, மாநில அரசோ விடுமுறை விடும்வரை இந்தக் கூத்துகள் நடந்துகொண்டுதான் இருக்கும். சிறுபான்மை மதக்காரர்கள் வாயில் விரலை வைத்துக்கொண்டு இந்(து)தக் காட்சிகளைக் குமுறலுடன் பார்த்துக்கொண்டுதான் இருக்கவேண்டும்.

மதப் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்று கருதினால் சம்பந்தப்பட்டவர்கள் தற்செயல் விடுப்பினைத் தாராளமாக எடுத்துக்கொள்ளட்டுமே. (OPTIONAL LEAVE)

அவர்களுக்காக அந்தக் குறிப்பிட்ட மதப் பண்டிகைகளைக் கொண்டாடாதவர்கள் பேன் குத்திக் கொண்டு வீட்டில் கிடக்க வேண்டுமா?

சில மாதங்களில் இத்தகைய அரசு விடுப்புகள் மூன்று நாட்கள் (சனி, ஞாயிறையொட்டி) வரிசையாக வருவது உண்டு.

பெரும்பாலான அரசு அதிகாரிகளுக்கு மதச் சார்பின்மை என்றால் என்ன என்ற விவரம்கூடத் தெரியாத நிலையில்தான் இருக்கின்றார்கள்.

அதுவும் காவல்துறை இதில் படுமோசம். பிள்ளையார் கோயில் இல்லாத காவல் நிலையம் ஏதேனும் உண்டா?

ஆயுதபூஜை என்ற பெயரால் கெட்டிமேளம் முழங்க காவல் நிலையங்களில் ஆயுத பூஜை ஜோராக நடைபெறுகிறது. துப்பாக்கிகளுக்கெல்லாம்கூட அன்று சந்தனம் குங்குமம் பொட்டுகள்! நல்லா சுடவேண்டும் என்பதற்கா? அல்லது துப்பாக்கி ரவைகள் எதிரிகளின் உடலைத் துளைத்து அதன்மூலம் தம் மரணம் நேர்ந்து விடக் கூடாது என்ற நோக்கத்திலா என்பது தெரியவில்லை.

காவல் நிலையங்களை அடுத்து நீதிமன்ற வளாகங்களில்தான் இந்துக்கோயில்கள்.
இவர்கள்தான் அரசியல் சட்டத்தின் ஒவ்வொரு அரைப்புள்ளியையும் காப்பாற்றிட அவதாரம் எடுத்தவர்கள்.

பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள அனுமதி பெற்றிடாத கோயில்களை இடித்துத் தள்ளுக என்று உச்ச நீதிமன்றம் உறுதியாக ஆணையிடுகிறது. (ஆனால் நீதிமன்ற வளாகங்களில் மட்டும் கோயில்களில் வெள்ளிக்கிழமை பூஜைகள் கிண்கிணிச் சத்தத்துடன் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நீதிபதிக்கு பி(ற)ரசாதங்கள் சென்றுகொண்டுதான் இருக்கின்றன)

உச்ச நீதிமன்றம் இடிக்கச் சொல்லி ஆணையிட்டாலும் நிருவாகம் சற்றும் அசைந்து கொடுக்காமல் கல்லுப் பிள்ளையார்போல அசையாமலேயே அமர்ந்திருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் 50 அடி, 60 அடி உயரத்தில் அனுமன் சிலைகள்;

இவை எப்படி வந்தன? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று கண்டுபிடித்து உளவுத்துறை அரசுக்குத் தெரிவித்ததாகத் தெரியவில்லை. அரசும் அறிக்கை கேட்டதாகவும் தகவல் இல்லை.

தடுக்கி விழுந்தவன் அரிவாள்மனையின்மீது விழுந்ததுபோல, ஏற்கெனவே மதச் சூழலில் சிக்கிய அதிகாரிகள் இத்தகு தாக்கங்களால் பக்திச் சுனாமியில் சிக்கிச் சீரழிகின்றனர்.

வேலையில் சேர்வதற்குக்கூட நல்ல நேரம் பார்த்துப் பாழாய்ப் போகின்றனர்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் (21-.-2.-2011) ஒரு செய்தி கசிந்துள்ளது.

PLAYING IT SAFE WITH THE DIVINE

When it comes to banking on divine intervention for moving up in life, most people ensure that they leave no stone unturned. City police officers, who were transferred recently, carried with them their share of goodwill. On one such “auspicious” day last week, more then 50 officers stood in a queue, clutching lemons or apples to give as offerings at the Egmore commissioner’s office. “It”s not superstition, it has a higher purpose. A person who seeks blessings with an offering elicits a better response. These cops are hardworking and straightforward,” a senior police officer said. Another officer who took charge last Wednesday, carried with him vaastu shastra items from the old place to the new. “It”s very lucky position for me, I will become the next CoP,” he said with a confident smile. Several of the policemen. இதன் தமிழாக்கம் :-

வாழ்க்கையிலும், பதவியிலும் முன்னேற்றம் அடையத் தேவையான தெய்வ அனுக்கிரகத்தைப் பெற அண்மையில் மாற்றம் செய்யப்பட்ட மாநகரக் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட மக்கள் எதனையும் செய்யத் தயாராகவே இருக்கிறார்கள். கடந்த வார இறுதியில் ஒரு நல்ல நாளில், எழும்பூர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கைகளில் எலுமிச்சம்பழம் அல்லது ஆப்பிள்களுடன் அய்ம்பதுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் தெய்வத்துக்குக் காணிக்கை செலுத்த வரிசையில் காத்துக் கிடந்தனர்.

இது ஒன்றும் மூடநம்பிக்கையல்ல. இந்த அதிகாரிகள் கடுமையான உழைப்பாளிகளும், நேர்மையானவர்களும் ஆவர் என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினார். கடந்த புதன்கிழமை தனது புதிய பதவியில் பொறுப்பேற்றுக் கொண்ட மற்றொரு அதிகாரி, தனது பழைய இடத்தில் இருந்து புதிய இடத்திற்கு வாஸ்துசாஸ்திரப் பொருள்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். இது எனக்கு நல்ல நிலையாகும். அடுத்த மாநகரக் காவல் துறை ஆணையராக நான் ஆவேன் என்று அவர் நம்பிக்கையுடன் சிரித்துக் கொண்டே கூறினார்.
கடமையைத் தொடங்க நல்ல நேரம் எது என்பதை பல காவல்துறை அலுவலர்கள் ஜோதிடர்களுடன் கலந்து ஆலோசிக்கின்றனர். புறநகர் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி ஒருவர் பணியில் சேர்வதற்கு நல்ல நேரத்தைப் பார்த்துக் கொண்டு இன்னமும் காத்திருக்கிறார். எனது ஜாதகப்படி அடுத்த திங்கள்கிழமை எனக்கு நல்ல நாள் என்பதால், அடுத்த வாரத்தில் நான் பணியில் சேர்வேன் என்று கூறினார்.
பக்தி, ஜோதிடம், வாஸ்துசாஸ்திரம் என்பவைகளின் பெயரால் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க வேண்டிய காவல்துறையினரே இவ்வாறு இருந்தால், மக்கள் கதி என்னாவது?

– இதுதான் டைம்ஸ் ஆப் இந்தியா தரும் தகவலாகும்.

தமிழ்நாட்டிலேயே இந்த நிலையென்றால் மற்ற மற்ற மாநிலங்களைப்பற்றிக் கேட்கவும் வேண்டுமோ!

– கவிஞர் கலி.பூங்குன்றன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *