வைதீகபுரியில் வைக்கம் வீரர் சிலை
– கி.விரமணி
காரைக்குடி தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவானது 13.03.1975 அன்று காரைக்குடி வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்துவிட்டது. கழகத் தலைவர் அன்னையார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் அப்பொழுது தமிழக முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள், தன்மானத் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலையினைத் திறந்து வைத்தார்கள்.
விழாவில், சிலை அமைப்புக் குழு புரவலர் சுயமரியாதைச் சுடரொளி இராம. சுப்பையா எம்.எல்.சி. அவர்கள் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்கள். சிலை அமைப்புக் குழு தலைவரும் மாவட்ட திராவிடர் கழக செயலாளருமான என்.ஆர்.சாமி வழிமொழிந்தார். விழாவில் செட்டி நாட்டரசர் ராஜா சர். எம்.ஏ.முத்தையா (செட்டியார்) அவர்கள் தனது உரையில், தந்தை பெரியார் அவர்களின் பெருந்தொண்டை தமிழர் எவரும் மறக்க முடியாது. அவர் தொண்டால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லாம் தலை எடுத்தார்கள் என்றும், பெரியார் எந்தப் பதவிக்கும் போகவில்லை, அப்போது பதவியில் இருப்பது என்பது சுலபம் என்று குறிப்பிட்டார்கள்.
கழகத் தலைவர் அம்மா அவர்கள் ஆற்றிய உரையில், காரைக்குடி மாநகரிலே மறக்க முடியாத ஒரு சரித்திரச் சிறப்பு நாளாக இன்று அமைந்துவிட்டது என்று கூறினார்கள். கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றும்போது, பெரியாருடைய சிலைகள் எங்கெங்கே அமைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அந்தச் சிலையைக் காணும்தோறும் அவர் யாத்துத்தந்த கொள்கைகள், வகுத்த புரட்சிகரமான திட்டங்கள், உருவாக்கிய சமுதாயச் சீர்திருத்தங்கள், வழங்கிய அறிவார்ந்த பொன்மொழிகள் இவைகள் எல்லாம் நம்முடைய மனதில் பதியும் என்பதற்காகவும், பதிந்த அந்த எண்ணங்களைப் பணிகளாக மாற்றி மக்கள் சமுதாயத்திற்குத் தொண்டாற்ற -_ ஆர்வத்தைப் பெற்றிட இயலும் என்று குறிப்பிட்டார்கள். 1945_1946இல், புதுவையில் நடைபெற்ற மாநாட்டில் சில எதிர்க்கட்சி முரடர்களால் தாக்குண்டு பெரியார் அவர்களால் காயங்களுக்கு மருந்து போடப்பட்டு அங்கிருந்து குடிஅரசு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு துணையாசிரியனாக வேலை பார்த்து ஓராண்டு காலத்திற்கு மேல் அன்னையார் மணியம்மையார் கையால் சாப்பிட்ட கருணாநிதிதான் இன்றைக்கு அதே மணியம்மையார் தலைமையில் பெரியார் சிலையைத் திறந்து வைத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார்கள்.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த அன்பில் தர்மலிங்கம் அவர்கள், திராவிடர் கழகம், ஒரு தனித்தன்மை வாய்ந்த கட்சி, பட்டம் பதவி என்று எதையும் எதிர்பார்க்காத இயக்கம். என் கருத்தை நன்கு சிந்தித்துப் பார் _ முடிவு வந்த பிறகு என் சொல்லைக் கேளு என்று கூறி இயக்கத்தை ஆரம்பித்தவர் உலகிலேயே தந்தை பெரியார் அவர்கள்தான் என்று எடுத்துக் காட்டினார்கள். விழாவில் கழகத் தோழியர், தோழர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கழகக் கொடியோடு அலகுக் காவடி, கடவுள் மறுப்போடு தீச்சட்டி ஏந்திய தாய்மார்கள் மூடத்தனத்தை முறியடித்த காட்சி என்று காரைக்குடி ஊர்வலம், எங்கும் நடைபெறாத ஒரு நிகழ்வாக நடைபெற்றது. சிலையின் பீடத்தில், வேறு எங்கும் அமைக்கப்படாத வகையில் புதுமையானதாய், விரிந்த தாமரைப் பூ,- அதன்மீது பீடம், அந்தப் பீடத்தின்மீது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் முழுஉருவ வெண்கலச் சிலை கம்பீரமாக அமைக்கப்பட்டிருந்தது.
சிலையின் பீடத்தில் தந்தை பெரியார் அவர்களின் கடவுள் மறுப்பு வாசகம் ஒரு பக்கமும், அய்.நா.சபை (யுனெஸ்கோ) தந்தை பெரியார் அவர்கட்கு வழங்கிய விருது வாசகம் இன்னொரு பக்கமும் பொறிக்கப்பட்டிருந்தது. நாத்திகர் என்று ஒரு காலத்திலே வெறுக்கப்பட்ட தந்தைக்கு, எந்தக் காரைக்குடி நகரம் எதிர்ப்பைக் காட்டியதோ அதே ஊரில் இன்றைக்குச் சிலை எடுப்பும் அதுவும் காரைக்குடி போன்ற வைதீகபுரியில், நாத்திகத் தந்தை அவர்கட்குக் கிடைக்க முடியாத வெற்றி என்பதே இந்தச் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி. சிறப்புடன் 26.4.1975 அன்று அங்கு நடைபெற்றது.
இந்தியத் துணைக்கண்டத்திலே முதன் முதலாக சமுதாயப் போரில் வெற்றி கண்டவர்கள் தந்தை பெரியார் அவர்களே! முதல் களம் வைக்கம்! அதன் பொன்விழா கடந்த 20.4.1975 முதல் 27.4.1975 வரை வைக்கத்திலே சிறப்புடன் கொண்டாடப்பட்டது. 26.4.1975 அன்று அங்கு நடைபெற்ற பெண்கள் மாநாட்டைத் துவக்கிவைக்குமாறு வந்த அழைப்பை ஏற்று கழகத் தலைவர் அன்னையார் அவர்களும் பொதுச்செயலாளராகிய நானும் 25ஆம் தேதி பிற்பகலே வைக்கம் சென்றடைந்தோம். குறிப்பிட்ட நிகழ்ச்சியிலே அம்மா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்; நானும் உரை நிகழ்த்தினேன். தந்தை பெரியார் அவர்களின் வழித்தோன்றலாக அன்னையார் வந்திருக்கிறார்கள் என்ற உணர்வில் விழாக்குழுவினர்கள் அன்னையாரை அன்போடு வரவேற்று உபசரித்து மிகுந்த நன்றி உணர்வோடு கூடிய மரியாதையைக் காட்டினர். கழகத் தலைவர் அவர்கள் அங்கு தங்கிய இரு நாட்களிலும் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், படித்தவர்கள் எல்லாம் வந்து அன்னையாரிடம் உரையாடி, நமது இயக்க நடவடிக்கைகளை எல்லாம் கேட்டறிந்தனர். தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்டத்தால்தான் தாங்கள் எல்லாம் மனிதரானோம் என்ற நன்றி உணர்வு அவர்களிடையே ததும்பி நின்றது.
கழகத் தோழர்கள் நெல்லை மாவட்ட செயலாளர் தி.ஆ.தியாக அரசன், நாஞ்சில் தமிழ்மறை, தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் நீடாமங்கலம் அ.ஆறுமுகம், நீடாமங்கலம் சுப்ரமணியம், மதுரை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் பெரியகுளம் ச.வெ.அழகிரி, திருவனந்தபுரம் தோழர் நயினார், செல்வம் ஆகியோரும் வைக்கம் சிறப்பு நிகழ்ச்சியைக் காண வந்திருந்தனர்.
25ஆம் தேதி, 26ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் வைக்கம் நகர மக்கள் பல்வேறு கட்சி அமைப்புகளைச் சார்ந்த இளைஞர்களும், நண்பர்களும் தாய்மார்களும் ஓய்வு விடுதியில் தங்கியிருந்த தலைவர் அன்னையார் அவர்களைக் கண்டு மிகுந்த அன்போடு உரையாடி தந்தையின் பெருமையினை மிகுந்த நன்றி உணர்வோடு நினைவு கூர்ந்தனர்.
முன்னதாகவே நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த ஜார்ஜ்ஜோசப் அவர்களது மகள் திருமதி மாயா தாமஸ் அவர்களும், கேரளா வீட்டுவசதி வாரியத் தலைவரும் வலது கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகருமான திருமதி ரோசம்மா பொன்னூஸ் அவர்களும், பிரபல சமூக சேவகியான திருமதி ரோசம்மா சாக்கோ ஆகியோரும் கழகத் தலைவரைக் கண்டு மரியாதை தெரிவித்து மகிழ்ச்சியோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
நிகழ்ச்சி வைக்கம் சத்தியாகிரகம் தொடங்கப்பட்ட இடத்தில் சத்தியாகிரகம் பொன்விழாக் கொடி கோயில் எதிரில் நாட்டப்பட்டிருந்தது! வைக்கம் சத்தியாகிரகம் நினைவாக, கேரள எஸ்.என்.டி.பி.யோகம் அமைப்பினரால் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வைக்கம் சத்தியாகிரகம் ஆசிரமப் பள்ளி மைதானத்தில் போடப்பட்டிருந்த பெரிய பந்தலில் விழா 20ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது.
சில நாள்களுக்கு முன்பு வைக்கத்திற்கு பிரதமர் திருமதி இந்திராகாந்தி ஹெலிகாப்டரில் வந்திருந்தார்கள். பொன்விழா நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்து அவர் ஆற்றிய சம்பிரதாய உரையில் தந்தை பெரியார் பெயரைக்கூட குறிப்பிடாமல் பொதுப்படையாகப் பேசிச் சென்றதோடு, பொருளாதார சுதந்திரம் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றே பேசியது வேதனையான வேடிக்கையாகும்! பிறகு தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு கட்சித் தலைவர்களையும் அழைத்து கருத்துரைகள், சிறப்புரைகள் எல்லாம் நடத்தப்பெற்றன. அங்கு நடந்த மகளிர் கருத்தரங்கத் (வனிதா சம்மேளனம்)தில் என்னையும் பேச அழைத்து நானும் சிறிதுநேரம் பெரியாரும் _ கழகமும் மேற்கொண்ட பெண்ணுரிமைப் போராட்டங்களை விளக்கினேன்!
பெரியார் பிரச்சாரப் பயிற்சிப் பள்ளி
அன்னை மணியம்மையார் அவர்கள் கழகத்திற்குப் பொறுப்பு ஏற்ற பிறகு வடஆற்காடு மாவட்டம் வடசேரியில் (ஆம்பூரில்) நடைபெற்ற திராவிடர் மாணவர் கழகப் பயிற்சி முகாம் (15-.05.1975 முதல் 22.05.1975 வரை ஒரு வார காலம் சிறப்புடன் நடைபெற்றது. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிர்வாகக்குழு உறுப்பினர், வடசேரி ஜெகதீசன், அவரது துணைவியார் மீரா ஜெகதீசன், அவரது மாமனார் வடசேரி மிராசுதார், மாவட்டத் தலைவர் சபாஇரத்தினம், ஆம்பூர் மணிவாசகன், ஆம்பூர் ஏ.பெருமாள் (சாணாரக்குப்பம்), திருப்பத்தூர் ஏ.டி.கோபால், ஜோலார்பேட்டை கே.கே.சின்னராசு மற்றும் தி.மு.க. நண்பர்கள் பலரும் மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்தனர். இதன் வெற்றிக்கு மூலகாரணமாக ஜெகதீசனும், மணிவாசகமும், மீராவும் இருந்தனர்.
கழகத் தலைவரும், நாங்களும் சேர்ந்து ஒரு வார காலமும் அங்கேயே தங்கி செவ்வனே பயிற்சி தந்தோம். பல்வேறு பொருள்களில் மாணவர்களுக்கு அறிஞர் பெருமக்கள் கருத்து விளக்கம் தந்தனர். பயிற்சி பெற்ற மாணவர்கள் பல பிரிவாகப் பிரிக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு தீவிர இயக்கப் பிரச்சாரம் செய்தனர். பிரச்சாரப் பயிற்சிப் பள்ளியை முடித்து வைத்து கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் மாணவர்களிடையே ஆற்றிய உரையில், பிரச்சாரப் பயிற்சிப் பள்ளி என்ற பெயரால் கழகக் கொள்கைகளை நாடெங்கும் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 10 நாட்களாக இது நடைபெற்று வந்திருக்கிறது. இன்று இப்பயிற்சிப் பள்ளியினை முடித்து வைக்கும் நேரத்தில் நான் முதல் நாளில் சொன்ன கருத்துகளை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். தனி ஒரு மனிதனாக நின்று அய்யா அவர்கள் உருவாக்கிய இந்த இயக்கத்தை உலகமே வியந்து பாராட்டும் வகையில் அய்யா அவர்கள் செய்திருக்கிறார்கள். எந்த எதிர்ப்பையும் அலட்சியம் செய்து இந்த இயக்கத்தை மிகவும் தீவிரமாக வளர்த்து இன்றும் நாமெல்லாம் மிக எளிதாக காரியமாற்றும் வகையில் அய்யா அவர்கள் உருவாக்கிவிட்டுப் போயுள்ளார்கள் என்று குறிப்பிட்டார்கள். பகல் விருந்திற்குப் பின்னால் அம்மா அவர்கள் இயக்க வெளியீடான புத்தகங்களைப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கினார்கள்.
சுயமரியாதை இயக்கப் பொன்விழா சிறப்பு
உலக அரங்கில் எத்துணை எத்துணையோ பொதுநலச் சங்கங்கள் -_ பொதுநல அமைப்புகள். அவற்றுள் நமக்கு ஏன் இந்த வீண் வம்பு? என்று சமுதாயப் பக்கம் தலை வைக்காமல், அரசியல்_ குறைந்த முதலீடு _ நிறைந்த லாபம் என்ற கணக்கில் இன்பச் சுற்றுலா கண்டவைகளே ஏராளம்!
தொடக்கம் முதல் தொடர்ந்து எதிர்ப்பு _ ஏளனம் _ எரிச்சல் புயல்கள்தான் எதிர்கொண்டழைப்பு என்பதை முழுக்க முழுக்கத் தெரிந்தும் அந்தத் தொண்டைத்தான் செய்வேன், அந்த சமுதாயப் புரட்சிப் பணியில்தான் குதிப்பேன் என்று உலக வரலாற்றிலேயே மார்தட்டி முன்வந்த ஒரே சமுதாயத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தான் _ முன்வந்த ஒரே இயக்கம் அவர்கண்ட சுயமரியாதை இயக்கம்தான்.
அத்தகைய ஓர் இயக்கம் பொன்விழா காணுகிறது என்றால் அது ஏதோ ஆண்டுக்கணக்கல்ல _ உலக வரலாற்றில் ஒரு சாதனைச் சிகரம்! அறிவும், துணிவும், தன்னல மறுப்பும் முறைப்படி இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற சூத்திரத்தை உலகத்திற்குத் தந்த தத்துவ விழா!
தத்துவம் தந்த அந்தத் தந்தை, உடலால் மறைந்திருந்தாலும் அவர் தந்த உன்னதத் தத்துவங்களும், அவற்றை வழிநடத்த அவர் உருவாக்கித் தந்த அன்னையின் தலைமையும் அந்தப் பாசறையில் பக்குவப் பயிற்சி பெற்ற தொண்டர் குழாமும் சுயமரியாதை இயக்கத்தின் பொன்விழாவை மாசு மருவில்லாமல் சனவரி 22, 23, 24 நாட்களிலே தஞ்சை மாநகரிலே எடுத்திருக்கின்றன என்றால் ஒரு சிறு புள்ளிகூட மிகையாகாது.
சுயமரியாதை இயக்கத்தின் பொன்விழாவை எடுக்க ஒரு நகரம் எவ்வளவு எழிலும் ஏற்றமும் பெற்றிருக்க வேண்டுமோ அவ்வளவும் தஞ்சை பெற்றுக் குலுங்கிட ஊண் உறக்கம் இன்றி உழைத்த கழகச் செம்மல்களைப் பாராட்டலாம் _ நன்றி கூறலாம் என்றால் _ பாராட்டும் நன்றியும் பார்த்துத் தொண்டு செய்ய முன்வராதே என்ற தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கருத்தை நாம் நினைத்துக் கொண்டு பணியாற்றுவோம்.
ஏதேதோ ராஜாக்கள் எல்லாம் பவனி வந்த பூமி என்று தஞ்சை மண்ணைச் சொல்வார்கள் _ ஆனால், அந்த ராஜாக்களோ ஆரிய அடிமைகள் _ மடமையின் முற்றங்கள். ஆனால் இப்பொழுது அங்கே பவனி வந்த தோழர்களோ தந்தை பெரியாரின் தொண்டர்கள் _ ஆரிய ஆதிக்கத்தினை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்க்கும் வேழங்கள்! பகுத்தறிவுத் தந்தையின் ஒளிக்கற்றைகள்.
நகரில் தொட்ட இடமெல்லாம் கருத்துக்கனல் வெடிக்கும் பதாகைகள், வரவேற்புத் தொங்கல்கள் _ நுழைவு வாயில்கள்! உலகில் மற்ற நாடுகளில் எல்லாம் நாத்திக ஆராய்ச்சி, அறைக்குள்தான் ஆனந்தத் தாண்டவமாட முடியும் _ அதை அம்பலத்தில் ஆடவைத்த அதிசயத்தை இந்தத் தமிழ்நாட்டில்தான் காண முடியும். மூன்று நாள் நிகழ்ச்சிகளும் தஞ்சை திலகர் திடலில் அமைக்கப்பட்ட மாயூரம் நடராசன் பந்தலிலே மூச்சுவிட நேரமின்றி முழுமூச்சாய் நடைபெற்றன.
– நினைவுகள் நீளும்