– உடுமலை. வடிவேல்
நமக்குப் பறவைகள் எவ்வளவோ மேல். அவைகளுக்கு இயற்கை இறக்கைகளைக் கொடுத்துவிட்டிருக்கிறது. அதனால்தானோ என்னவோ அதனதன் கூடுகளுக்குத் திரும்பும்போது களைப்பாக இருந்தாலும், சுதந்திரமாக வெட்டவெளியில் பறந்து சென்று தத்தமது கூடுகளை அடைந்து விடுகின்றன.ஆனால், மனிதன்…
மாலைப்பொழுதில் சென்னை தனது வழக்கமான மக்கள் நெரிசலால் பிதுங்கிக் கொண்டிருந்தது. அப்படிப் பிதுங்கிய இலட்சக்கணக்கான மக்களில் ஒரு துளியாக பெரியார் நேசனும் பேருந்துத் தடம் எண் 13கி_லிருந்து சென்ட்ரல் நிறுத்தத்தில் இறங்க முயன்று, முடியாமல் நெரிசலால் பிதுக்கித் தள்ளப்பட்டார்.
இறங்கியதும், சுதந்திரமாக காற்றைச் சுவாசிக்க விரும்பி, கூவம் ஆற்றின் நாற்றத்தோடு மூச்சை ஆழ்ந்து இழுத்தார் அடுத்தது..,
இங்கிருந்து பெரம்பூர் செல்ல வேண்டும். அதற்குச் சுரங்கப் பாதையைப் பயன்படுத்தி எதிர்த்திசைக்குப் போய் மற்றொரு பேருந்தைப் பிடிக்க வேண்டும். மறுபடியுமா நெரிசல் பயணம் என்று அயர்ச்சியாக இருந்தது. ஆட்டோவில் செல்லலாம்தான். வலது கை தன்னிச்சையாக கால்சட்டையின் பின்பக்கப் பையினுள் நுழைந்தது. பர்சை எடுத்துப் பிரித்தது. உள்ளே ஒரு பத்து ரூபாய்த் தாளும், ஒரு அய்ந்து ரூபாய்த் தாளும், இரண்டு இரண்டு ரூபாய் நாணயங்களும் இரண்டு ஒரு ரூபாய் நாணயமுமாக இருபத்தி ஒரு ரூபாய் இருந்தது. ம்ஹும்… வாய்ப்பே இல்லை.
எதிர்த்திசையை நோக்கி நடந்தார். நடையில் சுறுசுறுப்புக் கூடியது. சீக்கிரமாக வீடுபோய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணமோ என்னவோ.
எதிர்முனைப் பேருந்து நிறுத்தம். வழக்கம்போலவே மக்கள் கொத்துக் கொத்தாக நின்று தாங்கள் செல்ல வேண்டிய பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.
அந்தக் கூட்டத்தை அசுவாரசியமாகப் பார்த்த பெரியார் நேசனுக்குள் இலேசான திடுக்கிடல் ஏற்பட்டது.
அய்ந்து வயதுகூட இருக்காது. பால் வடிய வேண்டிய முகம் வாடிப்போய் களையிழந்து காணப்பட்டது. படிக்க வேண்டிய வயது. ஆனால், இப்போது…,
அம்மா… அய்யா.. வவுரு பசிக்குதுங்க. ஏதாவது தர்மம் பண்ணுங்கய்யா… என்று பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தாள். அந்தக் குரலில் இருந்த பரிதாபம் நெஞ்சைப் பிசைந்தது. சுருதி மாறாமல் ஒவ்வொருவரிடமும் சென்று கேட்டுக் கேட்டுத் தோற்றுத் திரும்பிக் கொண்டிருந்தாள். எல்லாவற்றிலும் போலிகள் மலிந்துவிட்ட இந்தச் சமூகத்தில் எதை நம்புவது, எதை நம்பாமல் இருப்பது என்றே தெரியவில்லை.
அந்தச் சிறுமிக்கு ஒரு ரூபாயைப் போட பெரியார் நேசனுக்கு எந்தத் தடையும் இல்லை. ஒரு ரூபாய் நாணயமும்கூட அவரிடம் இருக்கிறதுதான். அதுவா முக்கியம். ஒரு சராசரி மனிதன்போல், வேண்டாம் ஒரு சராசரி இந்தியன்போல வாழ அந்தச் சிறுமிக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அங்கு நிற்கும் மற்றவர்கள் எப்படியோ தெரியாது. பெரியார் நேசனைப் பொறுத்தவரையில் அந்தச் சிறுமியைப் பிச்சை எடுக்கவிட்ட பெற்றவர்களையும் அதற்குக் காரணமான சமூகத்தையும், அதற்கும் காரணமான ஜாதி மதத்தையும், ஆயிரமாயிரம் கடவுள் பொம்மைகளையும்… ஒன்றா… இரண்டா… அப்பப்பா…
பெரியார் நேசனின் மனதுக்குள் நடக்கும் இந்தப் போராட்டங்களை அறியாமல் அந்தச் சிறுமி கருமமே கண்ணாக இருந்தாள். அங்கிருந்த யாரும் காசு போடுவதாகக் காணோம். பெரியார் நேசன் சற்று உள்ளடங்கி நின்றிருந்ததால், அவரிடம் வராமலேயே அந்தச் சிறுமி சென்று விட்டாள். பெரியார் நேசனின் அடிவயிற்றிலிருந்து தன்னிச்சையாக பெருமுச்சு ஆழ்ந்தெழுந்தது. இதை அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடாதுதான். அப்பொழுதுதான் இத்தகைய நிலையை மாற்றி அமைப்பதற்கான உத்வேகம் நமக்குள் கனன்று கொண்டே இருக்கும். ஆனால், காலம் என்றொரு மருத்துவன் இருக்கிறானே, அவன் மறதி என்றொரு மருந்தை வைத்திருப்பானே, அந்த மருந்தை மறந்துவிடாமல் நமக்கு ஊற்றிக் கொடுத்து விடுவானே. மீண்டும் ஒரு பெருமூச்சு எழுந்தது. தலையை உலுக்கிக் கொண்டு தான் போக வேண்டிய பேருந்து வருகிறதா என்று பார்த்தார். நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் பெரியார் நேசனை நெருங்கினார்.
தயங்கியபடியே பேசினார்.
எக்ஸ்கியூஸ் மி சார்
எஸ்!
இஃப் யூ டோன்ட் மைன்ட். மீ கூட கொஞ்ச்ச மாட்டாடுத்தாமா?
பெரியார் நேசன் ஒருகணம் திகைத்து மீண்டார்.
தாராளமா. என்னன்னு சொல்லுங்க.
நேனு அனுமந்த் ராவ். ஃப்ரம் ஆந்திரா
_ என்று கையை நீட்ட,
நான் பெரியார் நேசன். சென்னைதான்.
_ என்று கூறியபடியே அவர் கையைப்பற்றிக் குலுக்கினார். பெரியார் நேசன் என்ற பெயரைக் கேட்டதும் அவர் முகம் இலேசாக இருண்டது. அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட பெரியார் நேசன் தொடர்ந்து பேசினார்.
கமான் டெல் மீ சார்
பிசினசுகோசரம் சென்னைக்கு பேமிலியோட வந்தேன்.
என்ன பிசினஸ்?
நேனு அஸ்ட்ராலஜிஸ்ட்.
தன்னுடைய பெயரைக் கேட்டதும் ஏன் அவர் முகம் இருண்டதென்று இப்போது புரிந்தது. ஆனால், அதற்கான அவசியம் என்ன என்பதுதான் புரியவில்லை.
சோ வாட். சொல்ல வந்ததைச் சொல்லுங்க.
பெட்டியை மிஸ் பண்ணிட்டேன்.
அடடே! அப்புறம் என்னாச்சு?
ம்ச்சு… அந்தப் பெட்டியில்தான் எல்லாமே இருந்தது. மொபைலு, நகை நட்டுங்க உட்பட தாண்ட்லதான உந்தி. நவ் அயாம் ஹெல்ஃப்லெஸ். மீரு ஏதாவது சகாயம் சேஸ்தாரா?
பெரியார் நேசனுக்கு ஒரே ஒரு நிமிடம் பிச்சைக்கார சிறுமி மனத்திரையில் வந்து போனாள். சார், ஊருக்குப் போகணும். பர்சை மிஸ் பண்ணிட்டேன். கொஞ்சம் உதவ முடியுமா? என்று கேட்கும் நவீன பிச்சைக்காரர்களோடு இவரை ஒப்பிட முடியாதுதான். ஆனால், இன்னொன்று இடிக்கிறதே, அவர் ஒரு ஜோதிடக்காரர். தான் எந்த முட்டாள்தனத்திலிருந்து மக்களை விடுவிக்கப் போராடிக் கொண்டிருக்கிறோமோ, அந்த முட்டாள்தனத்தையே பந்தி விரித்துப் பரிமாறி மக்களின் உழைப்பை உண்டு கொழுத்திருக்கும் ஓர் அயோக்கியன். அவனுக்கா நாம் உதவுவது என்ற எண்ணம் தன்னிச்சையாக மேலோங்கியது. அயாம் சாரி சார் என்று சொல்லிவிட்டு நழுவிவிடலாமா என்றுகூட தோன்றிவிட்டது. ஆனாலும், ஏதோ ஒன்று தடுத்தது. இவர் சொல்வது ஒருவேளை உண்மையாக இருந்துவிட்டால்?
அந்த ஏதோ ஒன்று பேசவும் தூண்டியது.
போலீசில் புகார் செய்துவிட்டீர்களா?
அதைவிட முக்கியம் இராத்திரி ஸ்டேயிங் வித் பேமிலி.
பெரியார் நேசன் குற்ற உணர்வால் குறுகிப்போனார். எப்படி இவ்வளவு நேரம் கவனிக்காமல் போனோம். அனுமந்துவின் பக்கத்தில் அந்நியோன்னியமாக நிற்கும் அந்தப் பெண்ணும், அந்தப் பெண்ணின் இரண்டு பக்கங்களிலும் ஒட்டிக்கொண்டிருக்கும் அப்பாவின் சாயலைக்கொண்ட இரண்டு பெண் குழந்தைகளும்… ச்சே! எப்படிக் கவனிக்கத் தவறினேன். இப்போதுதான் பிரச்சினையின் ஆழம் புரிந்தது. நால்வரின் முகத்திலும், எதிர்பாராத இந்தச் சிக்கலின் அவஸ்தை அப்பிக் கிடந்தது. பார்க்கவே சங்கடமாக இருந்தது.
அடுத்த கேள்வி உடனே எழுந்தது.
இரவு தங்க வேண்டும் என்றால் அதற்கும் பணம் தேவைப்படுமே.
தட் டசிண்ட் மேட்டர். கோயம்பேடு டெர்மினசில் இரவு தங்க வேண்டியதுதான்.
ஓ!… தென்…?
நா பிரண்டு ரேப்பு இக்கட ஒஸ்துண்ணாடு. பேமிலிய ஊருக்கு பம்பின்சேஸ்தானு மத்தத பாத்துக்கலாம்னு.
ச்சே! இன்றைக்குப் பார்த்து அவரும் தன் டெபிட் கார்டை எடுத்து வந்திருக்கவில்லை. பெரம்பூர் சென்று திரும்பி வர குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும். அதற்குள்… சரி, இருக்கட்டும். நமது தோழர்கள் யாரிடமாவது கேட்டுப் பார்க்கலாம் என்று தனது செல்பேசியை எடுத்து ராஜுவை முயன்றார். சுவிட்ச் ஆப் என்று வந்தது. சரி, பழனிகுமாரைவை முயற்சிக்கலாம் என்று நினைத்த மாத்திரத்திலேயே பழனிகுமார் வெளியூர் சென்றிருப்பது ஞாபகத்திற்கு வர அந்த முயற்சியைக் கைவிட்டார்.
முன்பின் பார்த்திராத தன் பொருட்டு பெரியார் நேசன் சிரமப்படுவதைப் பார்த்து அனுமந்த் ராவ் மிகுந்த சங்கடத்துக்குள்ளானார். அதையே சொல்லவும் செய்தார்.
சாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ். அயாம் டெரிபிலி கன்பியூஸ்டு. தட்ஸ் ஒய்…
நோ ப்ராப்ளம். கொஞ்சம் பொறுங்கள்.
_ என மீண்டும் வேறொருவரிடம் பேச முயன்றார்.
ஏற்கெனவே தாறுமாறாகக் குழம்பிப் போயிருந்த அனுமந்த் ராவின் மனது தறிகெட்டு ஓடி இன்னமும் குழம்ப முயன்றது. பெரியார் நேசனுக்கு உதவுகின்ற எண்ணம் உண்மையிலேயே இருக்கின்றதா-? இல்லை, தான் ஒரு ஜோதிடக்காரன் என்பதால் ஊருக்கெல்லாம் ஜோதிடம் பார்க்கிறாய். உனக்குப் பார்த்துக் கொள்ள முடியவில்லையா என்று கேலி செய்ய அவர் போடுகின்ற நாடகமா இது, இப்படிச் செய்யக் கூடியவர்தான் என்பதைப் பெயரே சொல்கிறதே. ஆனால், தனக்காக நண்பர்களிடம் பேசுவதும் குழப்பமாகத்தான் இருக்கிறது. தற்சமயம் அவர் உதவ முடியாத நிலையில் இருந்தாலும் இருக்கலாம் என்று ஒரு பக்கமும், ஒருவேளை பெரியார் நேசன் தன்னால் உதவ முடியவில்லை என்று கைவிரித்து விட்டால், மீண்டும் தன்மானத்தை விட்டு வேறு யாரிடமாவது ஆதியில் இருந்து அந்தம் வரை தங்களது ஏமாளித்தனத்தைச் சொல்லிக்காட்டிப் பிச்சை கேட்க நேரிட்டு விடும் போலிருக்கிறதே என்று மற்றொரு பக்கமும் அப்படி எதுவும் நேர்ந்துவிடக் கூடாதே என்று ஒரு பக்கமும் மாறி மாறித் தெளிவில்லாத குழப்பத்திற்கிடையில் பெரியார் நேசனின் வாயிலிருந்து நல்ல வார்த்தை எதுவும் வந்துவிடாதா என்று வேண்டாத கடவுள்களையெல்லாம் வேண்ட ஆரம்பித்துவிட்டார்.
தன் கணவன் படுகிற அவஸ்தையைக் காணச் சகிக்காத மனைவி தலைகுனிந்து நின்றிருந்தாள். தானும், தன் குழந்தைகளும் அணிந்திருந்த நகைகளையும் பாதுகாப்புக் கருதி அந்தப் பெட்டியில் வைத்தது எவ்வளவு பெரிய தவறு என்றும், ஒருவேளை நகைகள் இருந்திருந்தால் தன் கணவனுக்கு உதவி இருக்கலாமே. இப்போது அதற்கும் வழியில்லையே. தங்கள் பொருட்டு தன் கணவன் முன்பின் தெரியாத ஒருவரிடம் பிச்சை கேட்க நேர்ந்ததே என்று எண்ணி கூனிக் குறுகிக் கொண்டிருந்தாள்.
பெரியார் நேசனின் நிலையும் சொல்லத் தரமற்று இருந்தது. சரி, இப்போதைக்கு நால்வரும் கோயம்பேடு செல்வதற்கு உதவலாம். பிறகு, அவர் கூறியதுபோல அவருடைய நண்பர் வந்தால் நிலைமை சரியாகிவிடத்தான் போகிறது என்று தனக்குள் முடிவு செய்து கொண்டு தன் பர்சில் இருந்த இருபத்தி ஒரு ரூபாயை எடுத்தார்.
சாரி சார். இப்போதைக்கு என்னால் இவ்வளவுதான் உதவ முடிந்தது. இங்கிருந்து கோயம்பேடு அய்ந்து ரூபாய். நான்கு பேருக்கு இருபது ரூபாய் ஆகிறது. இந்தாருங்கள்.
_ என்று நீட்ட, அனுமந்த் ராவ் தயக்கத்துடன் பெற்றுக் கொண்டார். பிறகு, பெரியார் நேசன் என்ன நினைத்தாரோ உள்ளங்கையிலிருந்த அந்த ஒரு ரூபாயையும் அவர் கையிலேயே போட்டு விட்டார். அவருடைய நண்பருக்கு போன் செய்ய இருக்கட்டும் என்று நினைத்தாரோ என்னவோ.
இதுவரையிலும் நிமிர்ந்துகூடப் பார்க்கச் சங்கடப்பட்ட அவர் மனைவி, பெரியார் நேசனைப் பார்த்து இரண்டு கைகளையும் கூப்பினார். பெரியார் நேசனுக்கு தளுக்கென்று கண்ணில் தண்ணீர் தளும்பிவிடும் போலிருந்தது. மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டன. தன்னிச்சையாக தானும் கை கூப்பினார்.
15பி வந்து நின்றது. இது கோயம்பேடு டெர்மினஸ் செல்லும், ஏறிக்கொள்ளுங்கள் என்று பெரியார் நேசன் அவசரப்படுத்தியதும், மனைவியைக் குழந்தைகளுடன் ஏறச்சொல்லிவிட்டு, பெரியார் நேசனின் கைகளைப் பிடித்தபடி, மிஸ்டர் பெரியார் நேசன், நான் ஒரு ஜோதிடக்காரன். பெரியார் கொள்கைக்கு எதிரானவன். உங்கள் பெயரைக் கேட்டதும் உங்களிடமிருந்து எனக்கு உதவி கிடைக்காது என்றிருந்தேன். ஆனால்,…. அஃப்கோர்ஸ். அயாம் எ பெரியாரிஸ்ட். பெரியாரிஸ்ட் மீன்ஸ் நத்திங் பட் ஹீயூமனிஸ்ட்.
அனுமந்த் ராவின் முகத்தில் ஆச்சரியம் மின்னலடித்தது. வேறு எதுவும் பேசத் தோன்றாமல் பேருந்தில் ஏறிக்கொண்டு படியில் நின்றவாறே கையசைத்தார். பெரியார் நேசனும் பெருமூச்சு விட்டுக்கொண்டே கையசைத்தார். ம்… மனிதனின் வாழ்க்கையில்தான் என்னவெல்லாம் நடந்துவிடுகிறது என்று நினைத்தவாறே நகர முயல, தன் கை இழுக்கப்படுவதை உணர்ந்து கீழே பார்த்ததும் தூக்கிவாரிப்போட்டது.
அந்தப் பிச்சைக்கார சிறுமிதான் பெரியார் நேசனின் கையைப்பிடித்தபடி.. சார்… சார்… நீங்களாவது தர்மம் பண்ணுங்க சார்… பசிக்குது சார்… என்று வறண்ட உதடுகளை நாவினால் ஈரப்படுத்தியவாறே கூறியதையே திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தாள். அடடா! கடைசியாக அனுமந்த் ராவுக்குக் கொடுத்த அந்த ஒரு ரூபாயைக் கொடுக்காமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. உள்ளத்தை உருக்குகின்ற அந்தச் சிறுமியின் குரலுக்கு என்ன பதில் சொல்வது. தன் மீதே அவருக்குக் கோபம் கோபமாக வந்தது.
அதுவே, யார்மீது, எதன்மீது என்கிற இனம் புரியாத கோபமாக அதிகரித்துக் கொண்டே போனது. கோபத்தில் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல், பரிதாபமாக நின்ற அந்தச் சிறுமியின் கையைத் தன் கையிலிருந்து வெடுக்கென்று விலக்கி விட்டுவிட்டு நடராஜா சர்வீசில் பெரம்பூரை நோக்கி வெக், வெக்கென்று நடந்தார்.