50 வயது பெண்ணின் . . .

ஜூலை 01-15

இளம் பெண்ணின் கற்பனைகள் தன் அழகைப்பற்றிய சிந்தனைகள், தன் உற்றார் உறவினரைப் பற்றிய பெருமிதம் இவை எல்லாம் இருக்கும்பொழுது கவலைக்கு இடமேது? ஆனால் வாலிபத்தைத்தாண்டி வயோதிகத்தை மிதிக்கும்பொழுது ஏற்படும் முதல் அறிகுறிதான் மனோபாஸ் என்ற சூற்பை ஓய்வு ஆகும். இந்நிலை ஏற்படும்பொழுதுதான் கருங்கூந்தலில் வெண்ணிறம், கண்ணில் கண்ணாடி, உடல் அங்கங்களிலெல்லாம் தொய்வு ஏற்பட்ட உணர்வு, ஏதோ தன்னிடம் இருந்த அழகெல்லாம் தன்னை விட்டுச் சென்று கொண்டிருப்பது போன்ற பிரமை ஆகியவை ஏற்படுகின்றன. ரோமானியப் பேரரசில் பெண்கள் முழுமையாக வாழ்ந்த காலமே 23 வயது வரைதான். கொலம்பஸ் இந்தியாவைத் தேடி அமெரிக்காவை அடைந்தபோது 30 வயதாக இவ்வாழ்நாள் காலம் உயர்ந்தது.

அதுவே ராணி விக்டோரியா காலத்தில் 40ஆக மேலும் உயர்ந்தது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் சூற்பை ஓய்விற்கு முன்னரே பெண்கள் பழங்காலத்தில் மரணம் அடைந்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. ஆனால் இன்று 45 வயதிற்கு மேல் 75 வயதுவரை வளர்ந்த நாடுகளில் 95 விழுக்காடு பெண்கள் வாழ்கிறார்கள். உலக நாடுகளில் ஏறத்தாழ சூற்பை ஓய்விற்குப் பிறகு 1/3 விழுக்காட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.

சூற்பை ஓய்வு என்பது உடல் செயல்திறன் குறைபாட்டின் காரணம்தான் என்றாலும் சில சமயங்களில் அறுவை முறைப்படி கருப்பையும் அல்லது சூற்பையையும் சேர்த்து அகற்றப்படும் பொழுது மாதவிடாய் நின்றுவிடும். ஒரு பெண்ணுக்கு சூற்பை ஓய்வு எப்பொழுது ஏற்படப் போகிறது என்பதை எந்தப் பரிசோதனைகளின் மூலமும் அறிய முடியாது. வாழ்க்கைப் பயணத்தில் தேவையான ஒரு திருப்புமுனைதான் சூற்பை ஓய்வு என்பது

அதிகமான அளவு இரத்த ஒழுங்கு அல்லது அடிக்கடி உண்டாகும் மாதவிலக்கு என்பது சூற்பை ஓய்விற்கான அறிகுறி அல்ல. இம்மாதிரியான அறிகுறிகள் கருப்பையில் ஏற்பட்டு இருக்கும் நார்த்தசைக்கட்டி, தொங்கு தசைகளினாலேயே இருக்கலாம். மிக அபூர்வமாகக் கருப்பைப் புற்றின் காரணமாகக்கூட இருக்கலாம். இக்காரணங்களை முழுவதுமாகச் சோதனை மூலம் அறிந்துகொண்டால் நோயை முழுவதும் குணப்படுத்த முடியும். ஆகவே சூற்பை ஓய்வு தோன்றும் நிலை என்று, அடிக்கடி மாதவிலக்கு ஏற்படும்பொழுது நினைத்து ஏமாந்துவிடக் கூடாது.

அறிகுறிகள்:

50 வயதுகளில் ஏற்படும் கடைசி மாதவிடாய்க்குப் பிறகு தன் குழந்தைகள் வீட்டைவிட்டு வேலைக்குச் செல்லும் நிலைகளில் தன்னைத் தேடாத நிலையில் வருத்தம் ஏற்படும். ஏனெனில் அடிக்கடி மயக்கம், சிடுசிடுப்பு, நரம்புத் தளர்ச்சி, தலைவலி, தூக்கமின்மை, முகம் எரிச்சல், மனக்கசப்பு, மூட்டில் வலி, உடலில் ஊசி குத்துவது போன்ற உணர்வு இவை எல்லாம் அவ்வப்பொழுது வயதானதை உணர்த்திக் கொண்டு இருக்கும். இந்த அறிகுறிகளில் அவர்கள் மிகவும் கவலைப்படுவது மனத்தளர்ச்சி, மறதி, கலவியில் ஈடுபடமுடியாத இல்லற ஏமாற்றம் போன்றவை சுமாராக 30 விழுக்காடு ஏற்படுகிறது. மற்ற அறிகுறிகளெல்லாம் எப்பொழுதாவது தோன்றி மறையக் கூடியதே. சூற்பை ஓய்வு நிற்பதற்கு முன்புகூட ஓரிரு ஆண்டுகள் உடலில் வேர்வை, உடல் எரிச்சல், பெண்குறி காய்ந்து போதல் போன்றவைகள் தோன்றி நின்ற பிறகு மிகுந்த தொந்தரவைக் கொடுக்கும். நடுத்தர வயதினில் சிலசமயம் பெண்ணுக்கு சூற்பை ஓய்வு ஏற்படும். ஆனால், வயதான நிலையில் ஏற்படும் மாறுதல்களுக்கும் வீட்டுப் பிரச்சினைகளாலும் வாழ்வில் கிடைக்க வேண்டியவைகள் கிடைக்காத நிலைகளிலும் உண்டாகும் அறிகுறிகளுக்கும் ஈஸ்டிரோஜன் குறைபாடு என்று நினைத்து அதை மருந்தாகக் கொடுத்தாலும் நிச்சயம் தோல்வி ஏற்படும்.

இரத்தக் குழாய்கள் தாக்கும் அறிகுறிகள்:

இரத்தக் குழாய்கள் தாக்கப்படுவதால்தான் இரவில் வியர்வையும், உடல் சூடும் ஏற்படுகின்றன. ஆனால் அறிவியல் ரீதியாக இதன் காரணத்தைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. எல்லோருக்கும் ஒரேவிதமான  அறிகுறிகள் ஏற்படுவதில்லை.

எலும்புகளில் மாறுபாடு:

எலும்பில் இருந்து சுண்ணாம்புச் சத்து, விழுக்காடு என்ற அளவில் வெளியேறுகிறது. அப்பொழுது எலும்புகள் சிறுத்து வலுவற்று உடைவதற்கு ஏற்பதாக அமைந்து விடுகிறது. ஆகவேதான் ஆண்களைவிட பெண்களுக்கு சுமார் 50 வயதிற்குப்பின் தொடை எலும்பு, மணிக்கட்டு, முதுகெலும்பு முதலியவற்றில் சிறு அடிபட்டால்கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. படுத்த படுக்கையாக இருந்தாலும் சுண்ணாம்பானது எலும்பை விட்டு வெளியேறும். ஆகவே, வயதான நிலையிலும், பெண்கள் நடையுடன் இருந்து முடிந்தவரை தன் எலும்புகளுக்கு உதவி செய்வதற்காகவாவது நடக்க வேண்டும்.

உணர்ச்சி மாறுபாடுகள்:

சூற்பை ஓய்விற்குப் பிறகு பலதரப்பட்ட உணர்ச்சி மாறுபாடுகள் அடிக்கடி தோன்றுகின்றன. பெண்கள் உடல் சக்தியையும் மன பலத்தையும் இழந்த நிலையில் நன்றாக வேலை செய்ய முடியாமை மனத்தை ஒருநிலைப்படுத்த முடியாமை போன்றவை தோன்றுகின்றன. குடும்பத்தில் உண்மையான அன்பு இருப்பினும் தன்னுடைய குழந்தைகளிடமும், கணவனிடமும் சிறு காரியத்திற்குக்கூட சிடுசிடுப்பு, கோபம் அடைய வேண்டிய நிலைக்கு உள்ளாகிறார்கள். இந்தவித உணர்ச்சி வயப்படும் தன்மையை கடைசி மாதவிடாய்க்கு முன்பு அவர்கள் உணர்ந்தே இருக்க மாட்டார்கள். மேலும் அத்துடன் தன்னைப் பற்றியே கவலை, தன்னைத்தானே சோதனை செய்து கொள்வது இத்துடன் உண்டாகும்.

இவர்களை ஒரு சிறந்த மனநல மருத்துவரே குணப்படுத்துவது நல்லது. மற்றவர்களால் தனக்கு உணர்ச்சிகள் கூடிகுறையும் நிலைகளில் எந்த ஒரு தகுந்த காரணமும் இன்றி அழுவார்கள். அப்பொழுது அவர்கள் மனத்தளர்ச்சியுடன் இருப்பார்கள். அதன்பிறகு உடல் சோர்வுற்று சக்தி அற்று தூக்கமின்மையுடன் உடல் எடை குறைந்து உணவு உண்பதற்கு ஆசையற்று மெலிந்து இருப்பார்கள் அல்லது அதிகமாக உண்டு உடல் பருமனாகக் காணப்படுவார்கள்.

மருத்துவம்

எப்படி இயற்கையாக மாதவிடாய் ஏற்படுகிறதோ, அதேபோல் நிற்பதும் இயற்கை ஆகும். இயற்கையாக நடப்பது உடல் நலத்திற்குத்தான். ஆனால் இவை சில அறிகுறிகள் ஏற்படுத்தும்பொழுது அதைப் புரிந்துகொண்டு கணவன் குடும்பத்துடன் ஒத்துப்போவது அவசியம். இதற்கும் மீறிய நிலையில் மருத்துவ உதவி தேவைப்படுகிறது. அப்பொழுது மன அமைதிக்கும் மன இறுக்கத்தைத் தவிர்ப்பதற்கும் மருத்துவர்கள் மருத்துவம் செய்வது உண்டு.

சூற்பை ஓய்வுக்குப் பிறகு கடைபிடிக்க வேண்டியவை:

உடல் சிவக்கும் நிலை ஏற்படும் நாட்களில் சூடான உணவு, மசாலா போன்றவற்றை ஒதுக்க வேண்டும். மூச்சை உள்ளே ஆழமாக இழுத்து வெளிவிடப் பழகிக் கொள்ள வேண்டும். யாரையாவது சந்திக்கச் செல்லும்முன் உணர்ச்சி வசப்படாத நிலைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். நைலான், டெரிலின் போன்ற ஆடைகளை விடச் சிறந்தது பருத்தி ஆடை ஆகும். ஏனெனில் செயற்கைத் துணிகள் உடம்பில் ஒட்டிக் கொண்டு சூட்டை அதிகரிக்கச் செய்யும். அதேபோல் வயிற்றுக்குப் பெல்ட் போட்டுக் கொண்டால் உடல் இளைத்ததாக நினைத்துக் கொள்ளாது, கட்டுப்பாடான உணவையும் உடற்பயிற்சிகளையும் விடாது பின்பற்ற வேண்டும். கலவியில் ஈடுபடும்பொழுது களிம்புகள் உபயோகப்படுத்த வேண்டும். இவையனைத்தையும் தாண்டி மருந்தின்றி உடலும் உள்ளமும் ஒருமித்த நிலைக்கு உள்ளாக்க யோகாசனமும் சில சமயங்களில் உதவும்.

வாழ்வில் வெற்றி:

இல்லற வாழ்க்கைக்கு ஆணும் பெண்ணும் மிக அவசியம். 60 வயதிற்கு மேல் ஆணுக்குப் பெண் துணை மிக மிக அவசியம். இருவரும் ஒருவரையொருவர் மதித்துப் போற்றி தன் மக்களையும் போற்றி அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்து அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதில்தான் வாழ்வின் வெற்றியே உள்ளது.

_ செய்தித் திரட்டு: சுகந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *