– சரவணா.இரா
இன்றைய காலகட்டத்திலும் ஆலயங்களில் கூட்டம் கூடுகிறது என்றால் அந்தக் கூட்டத்தை நான்கு அடுக்குப் பிரமிடாகப் பிரிக்கலாம்.
முதல் அடுக்கு: தான் சார்ந்த மதம் என்ற சுயநலத்தில் கோயிலுக்குச் செல்பவர். இவர்களுக்கு 1%கூட கடவுள் பக்தியோ அல்லது பயமோ கிடையாது. இவர்களுடைய நோக்கம் வருமானம் மட்டுமே, இதில் பார்ப்பனப் பூசாரிகள் இதர ஜோதிடர்கள் மற்றும் கோயில்களில் கடை வைத்திருப்பவர்கள் காரணம். வருகிறவர்கள் எல்லாம் கன்னத்தில் தாளமிட்டு தன்னைத்தானே தலையில் குட்டிக்கொண்டு சென்றுவிட்டால் மேலே கூறியவர்களின் பிழைப்பிற்கு என்ன வழி?
இரண்டாம் அடுக்கு: கடவுளின் மீது நம்பிக்கை வைப்பது போல் நடிப்பவர்கள். இவர்கள் செல்வந்தர்கள், வியாபாரிகள், அதிகாரம் மிக்கவர்கள். இவர்களின் நோக்கமே ஆதாயம் _ உழைப்பின்றி ஆதாயம் பெறுவது. இவர்களுக்கும் கடவுள்பக்தி, பயம் என எதுவும் இம்மியளவும் கிடையாது. இவர்களுக்கு முதல் அடுக்குக்காரர்கள் பெரிதும் துணை செல்வார்கள். இலாபத்தொகையில் கணிசமான பங்கு முதல் அடுக்கு ஆட்களுக்கு உண்டு.
மூன்றாம் அடுக்கு: இவர்களுக்குப் பக்தி இருக்கும், ஆனால் கடவுள் நம்பிக்கை இருக்காது. எதற்குக் கோயிலுக்குப் போகிறோம் என்று தெரியாமல் செல்பவர்கள். இவர்களால்தான் பக்தி வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.
நான்காம் அடுக்கு: இருப்பதைக் கொடுத்துவிட்டு பகவான் செயல் என்று செல்லும் சாமானியர்கள். பிள்ளைக்குத் திருமணம் ஆகவேண்டுமா? மகளுக்கேற்ற மருமகனைத் தேடுவதைவிட்டு கோயில் கோயிலாகச் செல்வார்கள்!.
திருமணம் முடிந்து பிள்ளை பிறக்க வில்லையா? மீண்டும் கோயில்! மகள் குழந்தை யின்மைப் பிரச்சினையால் விரட்டப்பட் டாளா? மீண்டும் கோயில்! இவர்களின் பக்தி குறை யாமல் பார்த்துக் கொள்வதில் முதல்படி ஆசாமிகளின் பங்கு 100% உண்டு.
மேலும் இவர்கள் எண்ணிக்கையில் அதிகம். இவர்களிடம் இருந்து கிட்டத்தட்ட முழு உழைப்பும் பிடுங்கப்படுகிறது. இதில் என்ன வருத்தமான செய்தி என்றால், தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்தும் திருந்த மறுக்கிறார்கள். இவர்கள்தான் பக்தி வியாபாரத்திற்குத் தங்க முட்டையிடும் வாத்து. இந்த இறுதிநிலை மக்கள் திருந்தினால் ஒரே மாதத்தில் திருப்பதி ரெயில் நிலையம் இழுத்து மூடப்படும்.