ஆய்வு : சிந்துவெளியில் தமிழர் தொன்மை /3
– ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்
சங்க இலக்கியங்களிலேயே சில வடமொழிச் சொற்கள் கலந்து இருக்கு. இப்படியெல்லாம் இருப்பதனால் கி.மு.200களில் எழுதப்பட்ட சங்க இலக்கியத்தை கி.மு.1900இல் அழிந்துவிட்ட சிந்துவெளி நாகரிகத்தோடு எப்படித் தொடர்புப்படுத்துவது? சமீபத்தில், நடந்த அகழ்வாராய்ச்சியின் மூலமாக இந்த கால, நில இடைவெளிகள் சுருங்கி வருகின்றன. இதுவரைக்கும் இந்தியாவில் கிடைத்த சிந்துவெளிக் குறியீடுகளோடு தொடர்புடைய மட்பாண்டக் கீறல்களில் 75லிருந்து 80 விழுக்காடு மட்பாண்டக் கீறல்கள் தமிழ்நாட்டில்தான் கிடைத்திருக்கின்றன.
அது மட்டுமல்லாமல் சிந்துவெளி நாகரிகம் என்பது ஹரப்பா, மொகஞ்சதாரோவில் இருந்த மாதிரி அதே மாதிரியான நகரங்களைத்தான் எல்லா இடத்திலேயும், கட்டியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற தேவையில்லை. அவர்கள் அந்தந்த இடங்களில் கிடைத்திருக்கக்கூடிய கச்சாப் பொருட்களை மண், பாறை இவைகளை அடிப்படையாக வைத்துத்தான் கட்டடங்களைக் கட்டியிருக்கிறார்கள். அந்த வகையில் இதுவரைக்கும் மகாராஷ்டிராவில் இருக்கக்கூடிய தைமாபாத் அப்படிங்கிற ஊர் வரைக்கும் சிந்துவெளி நாகரிகத்தினுடைய சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.
ஆனால், சங்க இலக்கியம் பேசுகிற விஷயங்கள் வடவேங்கடம் தென்குமரி எல்லைகளுக்குள் மட்டும் சுருங்கியதல்ல. சங்க இலக்கியத்தினுடைய நில எல்லை, கால எல்லை இவை இரண்டுமே கொஞ்சம் வித்தியாசமானது. வடவேங்கடம்_தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் என்று சொன்னாலும், சங்க இலக்கியத்தால் குறிப்பிடப்படுகிற பொன்படு_பொன்கானம் என்கிற ஒரு பகுதியைப்பற்றிப் பேசுவாங்க.அதுவந்து கொங்கன்போஸ்ட். அப்படியன்று கோவான்னு சொல்ற பகுதிதான் பொன்படு _ பொன்கானம். நன்னன் என்கிற ஒரு மன்னனைப்பற்றிப் பேசுவாங்க. அந்த நன்னனைப் பற்றிப் பேசும்போது ஏழில் மலை இருக்கக்கூடிய நன்னன் அப்படின்னு சொன்னா அதுவும் கொங்கனத்தைச் சேர்ந்த நன்னனாகத்தான் பேசப்படுகிறார்கள். துளு நாட்டைப் பற்றி சங்க இலக்கியத்தில் இருக்கிறது. அந்த துளு நாட்டோடு தொடர்பு பற்றிக் குறிப்பு இருக்கு. சங்க இலக்கியத்தில் வடவேங்கடம் என்பது வடக்கு எல்லையாகக் குறிக்கப்பட்டாலும் அதில் பேசப்படுகிற செய்திகள் அந்த எல்லைக்கும் அப்பாற்பட்ட செய்திகள். கிட்டத்தட்ட சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டதைவிட தைமாபாத்துக்குப் பக்கத்தில் தெளிவாகக் கொண்டுபோய் விடுகிறது. சங்க இலக்கியத்தில் பேசப்படுகிற நிகழ்ச்சிகளெல்லாம் ஒரு சமகாலப் பதிவு கிடையாது.
சங்க இலக்கியப் புலவர்களெல்லாம் பத்திரிகை நிருபர்கள் கிடையாது. காலையில் போய் ஒரு அரசரைப் பார்த்துவிட்டு வந்து சாயந்தரம் ஒரு கவிதை எழுதல. அவர்கள் பதிவு செய்த விஷயங்களெல்லாம் அவர்களுக்கு முன்னால் _ நெடுநாளைக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகள். அந்த நிகழ்ச்சிகள் பற்றி ஒரு சில குறிப்புகள் சொல்கிறேன். உதாரணமாக, கல்லூர் அப்படிங்கிற பெரும் புகழ்பெற்ற தொல்பொருள். கல்லூர்_ன்னு சொல்லி ஒரு அகநானூற்றுப் பாடல். சங்க இலக்கியம் ஒரு சமகாலப் பதிவல்ல. அது நீண்டநெடும் தொல் மரபினுடைய முதல் ஆவண முயற்சி. அதில் சொல்லப்படுகின்ற விஷயங்களும், கால,நில எல்லைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டின் எல்லைக்கும் அப்பாற் சென்றது. தமிழ்நாட்டு சங்க காலத்தினுடைய சமகாலத்திற்கும் அப்பாற் சென்றது. அந்த வகையில் அது சிந்து சமவெளியை மிகவும் நெருங்குகிறது.
இடப்பெயர்கள் நாகரிகங்களைவிடத் தொன்மையானவை. நாகரிகம்கூட அழிந்துவிடும். ஆனால், இடப்பெயர்கள் அழியாது. சுமேரிய நாகரிகம் என்பது அழிந்துவிட்டது. ஆனால், சுமேரியா காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஊர்ப்பெயர்கள் இன்றைக்கும் ஈராக்கில் இருக்கிறது. வெசட்ட பூமி நாகரிகத்தில் எரிடு என்ற நகரம், ஊர் இன்றைக்கும் இருக்கிறது. சுமேரிய இலக்கியத்திலும் பதிவாகியிருக்கிறது. பைபிளில் விவிலிய நூலில் கூறப்பட்டிருக்கிற இடப்பெயர்கள் எல்லாம் இன்றைய வரை இருக்கிறது. ஆக இடப்பெயர்கள் நாகரிகங்களையும் கடந்து சாகாவரம் (சாதனை) பெற்றிருக்கின்றன. அப்படிப்பட்ட இடப்பெயர்கள் அங்கு பதிவாகி இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்தத் தொடர்புகளில் இருக்கும் என்று நினைத்து இந்தக் கண்ணோட்டத்தோடு தேடிக்கொண்டிருக்கும்போது கொற்கையைக் கண்டறிந்தேன். கொற்கையைக் கண்டறிந்தவுடன் வஞ்சியைத் தேடினேன். வஞ்சியையும் கண்டறிந்தேன். தொண்டியையும் கண்டறிந்தேன். ஒரே நாள் இரவில் மூன்று பகுதிகளையும் பாகிஸ்தான் பகுதிகளில் கண்டறிந்தேன். இங்கு தொண்டி, கொற்கை பல பெயர்கள் ஆப்கானிஸ்தானிலும் இந்தப் பெயர்களையெல்லாம் கண்டுபிடிக்கவும், அடுத்தடுத்து சேரன், சோழன், மாறன், வழுதி, அதியமான் நெடுமான் அஞ்சி, சங்க இலக்கியத்தில் சொல்லப்படுகிற ஊர்ப் பெயர்களெல்லாம் புலவர்களுடைய பெயர்களோடு தொடர்புடைய ஊர்ப்பெயர்கள். அது என்னுடைய யூரேக்கா மணித்துளி. அந்த நள்ளிரவு இன்றும் எனக்கு நினைவு இருக்கிறது. அது ஊர்ப் பெயர். பெயர் கண்டுபிடித்த இரவு எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. உறங்கிக் கொண்டிருந்த எனது மனைவியை எழுப்பி பாகிஸ்தானில் சிந்துவெளிப் பகுதியில் கொற்கை, வஞ்சி, தொண்டியைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று சொன்னேன். அவர் கேட்டு மகிழ்ச்சியோடு தூங்கச் சென்றார். இது என்னுடைய கண்டுபிடிப்பினுடைய அன்றைய உச்சகட்டமான நிகழ்ச்சி. ஆனால், 2002இல் இதைக் கண்டுபிடித்தேனே தவிர, 2010 கோவை செம்மொழி மாநாடுவரை நான் இதைப்பற்றி ஊடகங்களில் பேசவில்லை. கட்டுரைகள் எழுதவில்லை.
என்னைப் பொறுத்தவரை இந்தச் செய்தியை நான் எட்டு ஆண்டுகள் அடைகாத்தேன். இதை அடைகாத்ததற்கான காரணம், ஒரு தமிழ் மாணவன் என்ற முறையில் எனக்கு இருந்த பொறுப்புணர்ச்சி. ஏனென்றால், இந்த ஆராய்ச்சி மூலம் வெளிவரக்கூடிய செய்திகள், இதுவரை நாம் நமது தொன்மங்கள்பற்றி வைத்துக் கொண்டிருக்கிற பல கருத்தோட்டங்களை அசைத்துப் பார்க்கக்கூடும். அந்த அசைத்துப் பார்க்கக்கூடிய கருத்தோட்டங்களுக்கு நாம் தயாராக இருக்கிறோமா. அப்படிப்பட்ட கருத்தை நான் ஒரு வெளிமேடையில் பேசுவதற்கு முன்னால் அதை நானே பலமுறை மீண்டும், மீண்டும், மீண்டும் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வு ஒரு தமிழ் மாணவன் என்ற முறையில் எனக்கு இருந்தது. அதற்காகவே எட்டு ஆண்டுகள் இதைப்பற்றி நான் பேசவே இல்லை.
கோவை மாநாட்டில் அஸ்கோ பர்போலா நான் இந்தச் செய்தியை வைத்ததும் என்னைப் பார்த்துக் கேட்டார். இதை எப்போது கண்டுபிடித்தீர்கள் என்று, நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடித்தேன் என்று சொன்னேன். எட்டு ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேட்டார்? காஷ்மீரில் தேர்தல் நடத்திக் கொண்டிருந்தேன் என்று சொன்னேன். இது ஒரு விபத்தா, எதேச்சையாக இருக்கக்கூடிய பெயரா, இதுக்கும் அதுக்கும் தொடர்பு இருக்கா? அப்படியென்று மீண்டும், மீண்டும் அதற்குள் உள்ளே சென்று அந்தக் கருதுகோளை _ ஆய்வு முடிவுகளை அதற்குள் எப்படிப் பயணித்து இருக்கிறேன் என்பதையும் உங்களுக்கு விளக்க விரும்புகிறேன்.
எனது ஆய்வு முடிவுகளை ஆய்வின் பயணத்தோடு, பயணம் செய்தால்தான் நீங்கள் உண்மையில் புரிந்துகொள்ள முடியும். தமிழர்களைப் பொறுத்தவரையில் பொதுவாகவே பெயருக்கு ஒரு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சுமேரிய நாகரிகத்தில் பார்த்தீர்களேயானால் அரசரோட பெயர் முக்கியமான ஆட்களுடைய பெயர், பட்டியல் பட்டியலாகப் போட்டு இருப்பார்கள் சுமேரிய நாகரிகத்தினுடைய கல்வெட்டுகளில். பெயர்களைப் பொறித்து வைப்பது, எழுதி வைத்துக்கொள்வது. இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் கைலாசபதி வீரயுத்தப் பாடல்கள்ன்னு ஒரு புத்தகம் எழுதி இருப்பார். அதில் எழுதும்போது மன்னர்களுடைய குறுநிலத் தலைவர்கள், சங்ககால வீரயுகத் தலைவர்களுடைய ஒரு பெரிய நோக்கமே எப்படியாவது ஒரு நல்ல பெயர் வாங்கிடணும் என்பார். ஒரு பெயரை நினைத்த உடனேயே கடையெழு வள்ளல்கள் என்று சொல்லுகிறோம். அடியேனும் சான்றோர்க் கனி என்கிறோம். முல்லைக்குப் போய் தேர் கொடுத்தார் ஒருத்தர். மயிலுக்குப் போய் போர்வையைப் போர்த்தினார். இப்படியெல்லாம் நாம் சொல்கிறோம். அவர்களெல்லாம் இதை ஏன் செய்தார்கள் என்றால், மன்னா உலகில் மன்னுதல் குறித்தோர், தன்புகழ் நிறுவி தாம் உயர்ந்தனரே _ அப்படியென்று சங்க இலக்கியத்தில் ஒரு இடத்தில் வரும். மன்னா உலகில் _ நிலையற்ற இந்த உலகில்.
மன்னுதல் குறித்தோர், நிலையாக இருக்க விரும்புவோர், தன் புகழ் நிறுவி தாம் தாம் உயர்ந்தனரே! தன்னுடைய பெயரை இங்கே விட்டுவிட்டு, புகழை இங்கே விட்டு, தான் செத்துப்போயிட்டார். அதற்காகவே அவர்கள் வாழ்கிறார்கள். தொல்காப்பியத்தில் ஊரும் பெயரும் உரித்தன மொழிப.
பேரும் பெயரும், வீடும் பெயரும் எழுதி நாட்டி நடுகல் வழிபாடு, இந்தியாவிலேயே நீத்தார் நினைவு என்று சொல்லப்படுகிற நடுகல் வழிபாட்டினுடைய உச்சகட்டமான நிலை தென்னிந்தியாவில் மட்டும்தான். இந்தியாவில் கிடைக்கிற நீத்தார் தொடர்பான நடுகல்களிலே 80 சதவிகிதத்திற்கும் மேலும் தமிழ்நாட்டில்தான் கிடைக்கிறது. ஏதோ ஒரு வகையில் பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஒரு பண்பாட்டை நாம் வளர்த்திருக்கிறோம். அதனால்தான் பெயரன், தன்னுடைய தாத்தாவினுடைய பெயரைத் தாங்குபவன்தான் பெயரன்.
நன்னன் செய் நன்னன், அப்பா பெயரை அவன் எடுத்துக் கொள்வான். சங்க இலக்கியத்தில் ஒரு மன்னனுடைய பெயரில் வந்து, நன்னன் செய் நன்னன், நன்னன் மகன் நன்னன், ஒவ்வொரு இடத்திலேயும் நடுகல்லில் பெயர் எழுதி வைத்து விடுவார்கள். நடுகல் மனிதர்கள் மட்டும் கிடையாது. அரசலாபுறத்திலேயும், ஈந்தசாருலயும் ஒரு கல்வெட்டு, கோழி சண்டைபோட்டு அந்தக் கோழிச்சண்டையில் இறந்துபோன கோழியினுடைய உருவத்தைப் பொறித்து வைத்து, அந்தச் சேவலுக்கு பொற்கோடிரி என்று சேவலுக்காக எழுப்பப்பட்ட தமிழ் நடுகல் 5ஆம் நூற்றாண்டு, 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் இதுவரையும் கிடைக்கிறது.
இப்போதும் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஒரு முக்கியமான விஷயம், அதை அவ்வளவு சாதாரணமாக விட்டுவிட மாட்டார்கள். சங்க இலக்கியம் என்பது ஒரு பெயர்க் கருவூலம். புலவர் பெயர், அரசர் பெயர், குறுநிலத் தலைவர், மலைகளின் பெயர்கள், துறைமுகங்களின் பெயர்கள், போர்க்களங்களின் பெயர்கள், குடிகளின் பெயர்கள் அப்படி பட்டியல் மாதிரி. பாணன், கடம்பன், இடும்பன், துடியன் என்னும் இன்னான்கு இனவும் குடியும் இலவே! அப்படி எல்லா வகையிலும் சங்க இலக்கியமே ஒரு வகையான பெயர்ப்பட்டியல். அந்தப் பெயர்ப் பட்டியலை நான் சேகரித்தேன்.
அந்தப் பெயர்ப் பட்டியலையே ஓர் ஆதாரமாக வைத்துக்கொண்டு சங்க இலக்கிய சிந்துவெளிப் பகுதியைப் பார்க்கும்போது அங்கு கிடைத்த பெயர்கள் திராவிட மொழிகளின் பெயர்கள். தமிழ் உள்ளிட்ட திராவிடர் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளுடைய பெயர்களெல்லாம் அங்கு ஊர்களின் பெயர்களாக இருக்கிறது. ஒரு மொழியினுடைய பெயரே ஒரு இடத்தினுடைய பெயராக வரும். திராவிட மொழிகளின் பெயர். புலப்பெயர்வுகளோடு தொடர்புடைய பெயர்கள்.
தொகுப்பு: அ.பிரபாகரன்