ரிச்சர்டு டாக்கின்ஸ்
கடவுள் _ ஒரு பொய் நம்பிக்கை எனும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர் கிளின்டன் ரிச்சர்டு டாகின்ஸ் எனும் ஆங்கிலேயர் இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற உயிரியல் அறிஞர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக புதுக்கல்லூரியின் புகழ்பெற்ற பேராசிரியர். 1995 முதல் 2008 முடிய 13 ஆண்டுக்காலம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அறிவியல் அறிவை மக்கள் அறியும் துறை (PUBLIC UNDERSTANDING OF SCIENCE) யின் சிறப்புமிக்க பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இப்படி ஒரு துறை நம் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் அமைந்திருந்து கற்பிக்கப்பட்டிருந்தால் அறிவியல் பட்டதாரிகளே மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டிருக்கும் அவலநிலை இந்தியாவில் ஏற்பட்டிருக்காது.
26.3.1941 இல் ஆப்ரிக்க கென்யா நாட்டின் நைரோபி நகரில் பிறந்தவர். தந்தை கிளின்டன் ஜான் டாகின்ஸ் என்பவர் பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கத்தில் கென்யா நாடு இருந்தபோது வேளாண்மைத் துறையில் பணிபுரிந்த அதிகாரி. இரண்டாம் உலகப் போரில் பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. ரிச்சர்டு டாகின்சின் எட்டாவது வயதில், 1949 இல் இங்கிலாந்து நாட்டுக்குத் திரும்பினார். சிறுவயது டாகின்ஸ் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அறிவியல்பூர்வமாகப் பதில் தந்து அவரின் பெற்றோர் அவரை வளர்த்தனர். இருந்தாலும், தனது ஒன்பதாம் வயதில் ரிச்சர்டு டாகின்ஸ் கேட்ட கேள்வி கடவுளைப் பற்றியது. அதற்குப் பதில் அளித்த அரவது பெற்றோர் இந்த உலகைக்காட்டி, அதனைப் படைத்திட ஓர் ஆள் இருந்திருக்க வேண்டுமே என்று வாதிட்டு அவருக்குப் பதில் கூறினர். இந்த உலகைப் படைத்துள்ள கடவுளின் ஆற்றல், அவனது படைப்பின் அழகு போன்ற பல செய்திகளைக் கூறிக் (குழப்பி) கிறித்துவ மதத்தின்மீது பிடிப்பை ஏற்படுத்தி, அவரைக் கிறித்துவனாக ஞானஸ்நானம் செய்து வைத்துவிட்டனர். பின்னாட்களில் ரிச்சர்டு டாகின்சின் கருத்தும் எந்தக் குழந்தையும் கிறித்துவக் குழந்தையாகவோ, இசுலாமியக் குழந்தையாகவோ பிறப்பதில்லை; எந்தக் குழந்தையும் எப்படி மார்க்சியக் குழந்தையாகப் பிறக்க முடியதோ அதுபோலவே, எந்த மதக் குழந்தையாகவும் பிறக்காது. குழந்தையின் பெற்றோரின் மதத்தை வைத்துக் குழந்தைக்கும் மதத்தைக் குறிப்பது தவறு என்று அமைந்தது. ஆனாலும் அவர் கிறித்துவக் குழந்தை என்று ஆக்கப்பட்டார். 17,18 வயது இருக்கும்போது பரிணாமக் கொள்கை ஒன்றே படைப்புக் கொள்கையைவிட சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார். அவருக்குக் கடவுள் நம்பிக்கை தகர்ந்து, கடவுள் இல்லை எனக்கூறும் நாத்திகரானார்.
படிப்பும் பணியும்
இங்கிலாந்து தேவாலயப் பள்ளியில் 1954 முதல் 1959 வரை படித்து, பிறகு பாலியோல் கல்லூரியில் விலங்கியல் படித்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இக்கல்லூரியின் பேராசிரியரான நோபல் பரிசு பெற்ற நிகோலஸ் டின்பெர்கன் என்பாரிடம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார். 1962 இல் பட்டம் பெற்றார். அதே பேராசிரியரின் வழிகாட்டுதலின்கீழ் ஆராய்ச்சி மாணவராகி எம்.ஏ. பட்டமும் டி.பில் பட்டமும் 1966 இல் பெற்றார். விலங்குகளின் பழக்கவழக்கங்கள், குணங்கள், அவற்றின் தெரிவு செய்யும் தன்மைகள் பற்றிய சிறப்பு அறிவுபற்றி ஆய்வு செய்தவர்.
அமெரிக்காவில், பெர்க்லி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அமெரிக்காவின் வியட்நாம் போர்க் கொள்கையை எதிர்க்கும் மாணவர்களே அதிகமாக இருந்தனர். இவரும் அதே கொள்கையைக் கொண்டிருந்த காரணத்தால் மாணவர்களுடன் இரண்டறக்கலந்து போர் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டார். ஃபிரான்சு நாட்டின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக வியட்நாம் மக்கள் 1940களில் வீரமிக்க விடுதலைப்போரில் ஈடுபட்டனர். அவர்கள் வியட்மின் என்று அழைக்கப்பட்டனர். விடுதலை பெற்றனர். அவர்கள் நாட்டின் எல்லையில் ஒரு பலகை வைத்துள்ளனர். இந்த வழியாக பிரெஞ்சுப் படையினர் 10 லட்சம் பேர் நுழைந்தனர். ஒருவர் கூட திரும்பவில்லை என்று அந்தப் பலகை அறிவிக்கும். அப்படிப்பட்ட வீரஞ்செறிந்த விடுதலைப் போர் அது. போரின் முடிவில், வியட்நாம் தென், வட வியட்நாம் என்று பிரிக்கப்பட்ட அவலம் நிகழ்ந்தது. அப்பத்தைப் பங்கிட்டுத்தர குரங்கு வந்தார்போல, மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளைக் கொண்டது தென்வியட்நாம் என்றும் எல்லார்க்கும் எல்லாமும் என்கிற பொது உடைமைக் கொள்கையைக் கொண்டது வடவியட்நாம் என்றும் பிரிக்கப்பட்டது.
அமெரிக்க எதிர்ப்பு
எல்லாம் மிகச் சிலர்க்கே எனும் முதலாளித்துவக் கொள்கை நிலவும் அமெரிக்கப் பெரிய அண்ணன், பொது உடைமைக் கொள்கையைப் பூண்டோடு அழிக்க வேண்டும் என்கிற வெறியில் வடவியட்நாம் மீது தாக்குதல் தொடுத்த நிலையில் அவர்கள் நடத்திய தற்காப்புப் போர் உலக வரலாற்றில் நிலையான இடம் பெற்ற ஒன்றாகும். இளைஞர்களாக இருக்கும் அமெரிக்கர்கள் எல்லாரும் வடவியட்நாம் மீதான போருக்கு வந்து பணியாற்றவேண்டும் என்பது சட்டம். போருக்கு வர மறுத்தவர்கள் உள்ளே தள்ளப்பட்ட கொடுமை. இருந்தும் எதிர்ப்புகள் ஏராளம். அதில் தன்னை இணைத்துக் கொண்ட மானுடப் பற்றாளர் ரிச்சர்டு டாகின்ஸ்.
1970 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலேயே விரிவுரையாளராகப் பணி அமர்த்தப்பட்டார். இருபதாண்டுகளுக்குப் பின்னர் ரீடர் பதவிக்கு உயர்ந்தார். 1995 இல் சிமோன்யி பேராசிரியர் எனும் மிக உயர்நிலைக்கு உயர்த்தப்பட்டார். சார்லஸ் சிமோன்யி என்பார் தம் பெயரால் இப்பேராசிரியர் பதவியை உருவாக்கினார். அறிவியல் அறிவை மக்கள் அறியும் துறை எனப் புதிய துறையை ஏற்படுத்தி, அதன் மூலம் பொதுமக்கள் பயன்படும் வகையில் அறிவியல் புலத்தில் சாதிக்க வேண்டும் என்ற அவாவின் காரணமாக உருவாக்கினார். அப்படி உருவாக்கப்பட்ட துறையின் முதல் பேராசிரியராக ரிச்சர்டு டாகின்ஸ் வரவேண்டும் என்றும் அவர் விருப்பப்பட்டார். அந்தவகையில் புகழ் பூத்த பேராசிரியராக இவர் விளங்கினார்.
நாத்திகக் கொள்கையாளர்
படைப்புக் கொள்கையைக் கடுமையாக எதிர்ப்பவர் ரிச்சர்டு டாகின்ஸ். ஒரு கடவுள் மனிதர்களை, எல்லா உயிர்களை, இந்த உலகைப் படைத்தது எனும் மதக் கொள்கையை மறுப்பவர். படைப்புக் கொள்கையை ஏற்பவர்கள், இந்த உலகு 4 ஆயிரத்துச் சொச்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் படைக்கப்பட்டது எனக் கூறும் கருத்து, அவர்கள் கொண்டிருக்கும் கொள்கை – அபத்தமான முட்டாள்தனமானது என அழுத்தந்திருத்தமாகக் கூறுபவர். 1986 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக யூனியன் விவாதத்தில் கலந்து கொண்டார்.
இவரும் மற்றொரு உயிரியல் அறிவியலாளருமான ஜான் மேனார்டுஸ்மித் என்பவரும் ஒரு தரப்பில், வில்டர்ஸ்மிக், எட்கார் ஆண்ட்ரூஸ் என்பவர்கள் மறுதரப்பில். இவர்கள் படைப்புக் கொள்கையைப் பரப்பும் பைபிள் படைப்புச் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இம்மாதிரி விவாதங்களில் பங்கேற்கக் கூடாது எனும் கருத்தை இவரது நண்பர் ஸ்டீபன் ஜே கவுல்டு என்பார் கூறுவார். அதனை ஏற்றுக் கொண்ட ரிச்சர்டு டாகின்ஸ் கவுரவம் எனும் உயிர்க்காற்றைப் பெறுவதற்குப் படைப்புக் கொள்கையாளர்கள் இத்தகைய விவாதங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். விவாதத்தில் தோற்றுப் போவதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. மக்கள் மத்தியில் அவர்களுக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கிறது என்ற திருப்தியே போதும் அவர்களுக்கு (விளம்பர சடகோபம்) எனக் கூறுவார். இருப்பினும், இந்த விவாதத்தில் பங்கு கொண்டார். வென்றார். விவாதத்தின் முடிவில் படைப்பா? பரிணாமமா? என்ற வினாவுக்கு படைப்பு என்று 115 பேரும் பரிணாமம் என்று 198 பேரும் வாக்களித்தனர். ரிச்சர்டு டாகின்ஸ் அணியினர் வெற்றி வாகை சூடினர், அறிவியல் வென்றது. மதம் தோற்றது.
கடவுள் இல்லை என்பதோடு, உலகைப் படைத்தது கடவுளல்ல; அது பரிணாம வளர்ச்சி என்ற கொள்கையை உறுதியாகக் கொண்டதோடு அதனை நிறுவிக்காட்டி வருபவர். அமெரிக்கப் பத்திரிகையாளர் பில்மோயர்ஸ் என்பாரிடம் பேட்டி அளித்த போது, (2004இல்) பரிணாமக் கொள்கை (THEORY) என்று கூறினார். ஏன் அதைக் கொள்கை எனக் கூறுகிறீர்கள் என்று பத்திரிகையாளர் கேட்டார். பரிணாமம் நடைபெறும்போது யாரும் பார்க்கவில்லை (பார்க்க முடியாது – காரணம் அது பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்ற படிநிலை வளர்ச்சி) ஒரு கொலை நடந்து முடிந்த பிறகு துப்பறிபவர் வந்து பார்ப்பதைப் போல, நாம் பார்க்கிறோம். கொலை நடக்கும்போது துப்பறிபவர் பார்க்கவில்லை. அனாலும் கிடைத்த தடயங்களைக் கொண்டும், சூழ்நிலை சாட்சியங் களைக் கொண்டும் அவர் முடிவுக்கு வருவதைப் போலத்தான் பரிணாமக் கொள்கை. அதனை இங்கிலீஷ் மொழியில் தியரி என்றுதான் கூறவேண்டும் எனப் பதில் கூறினார்.
– தொடரும்