கேள்வி : உலகிலேயே கடவுளை நம்பாத நாத்திகர்கள் அதிகம் உள்ள சீனா உலக வல்லரசாக வளர்ந்து வருகிறதே எப்படி?
_ ப.தமிழ்மணி, திருநெல்வேலி
பதில் : கடவுளை நம்பாததினால்தான், தன்னம்பிக்கை உள்ளவர்களாக ஆகமுடியும். மார்க்சிசம், லெனினிசம், மாவோயிசம் என்பது மட்டுமல்லாமல், முன்னாலேயே புத்த நெறியையும் (நாத்திகத்தையும்) அடிநீரோட்டமாகக் கொண்டு, கன்பூஷியசிஸ் போன்றவர்களின் மனிதநேயத் தத்துவக் கருத்தோட்டமும் உள்ளதால்தான் உலக வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கிறது!
வறட்டுச் சித்தாந்தத்தைவிட, யதார்த்தத்தினையும் இணைத்துள்ளனர் தற்போதைய சீனத் தலைமையினர்; இவையே இதற்கு முக்கியக் காரணங்கள்.
கேள்வி : சனி என்று சொன்னாலே நாக்கில் சனியன் வந்துவிடுவானாமே, அப்படியென்றால் இன்று சனிக்கிழமை என்று எப்படிச் சொல்வது? இப்படிச் சொல்லும் மெத்தப் படித்த சனியன்களை என்ன செய்வது? – இல.சங்கத்தமிழன், செங்கை
பதில் : படுமுட்டாள்தனத்திற்கு ஏன் இப்படி விளம்பரம் தருகிறீர்கள் _ இப்படிக் கேள்வி கேட்டு என்னைப் பதில் எழுதச் சொல்லி! இவைகளை அலட்சியப்படுத்துங்கள்.
கேள்வி : நாட்டிலும் வீட்டிலும் குழப்பத்தை உருவாக்குகிற தொலைக்காட்சி நெடுந்தொடரைப்பற்றிய தங்கள் கருத்து? _ தி.பொ. சண்முகசுந்தரம், திட்டக்குடி
பதில் : அசிங்கம் _ ஆபாசம் _ கிரிமினல் சதி _ இவைகளின் கூட்டுத்தொகை இத்தொடர்கள் _ இவைகளைத் தவிர்க்க முயற்சியுங்கள்.
கேள்வி : அத்வானியின் ராஜினாமா-நாடகம்தானே? – அ. தமிழ்க்குமரன், ஈரோடு
பதில் : நாடகமா? ஆர்.எஸ்.எஸ்.சிடம் அடிதண்டா சரணாகதியா? போகப் போகப் புரியும் _ நாட்டிற்கு!
கேள்வி : கண்டுபிடிப்பாளராக உலகமே கொண்டாடும் கொலம்பஸின் மறுபக்கம், அவரைப் பெரும் கொடுங்கோலனாய்க் காட்டுகிறதே?
_ சீர்காழி கு.நா. இராமண்ணா, சென்னை
பதில் : கொலம்பஸ் பாராட்டப்படுவது, அவரது கண்டுபிடிப்பிற்காகத்தானே! மற்றவை பற்றி நமக்கேன் கவலை?
கேள்வி : கருநாடகத்தில் யார் முதல்வராக வந்தாலும் காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கொடாக்கண்டர்களாக இருக்கிறார்களே?
_ சி. சுவாமிநாதன், ஊற்றங்கரை
பதில் : அவர்களது மாநில உரிமை, பிடிப்பு _ ஒற்றுமை _ இவைகளின் வெளிப்பாடு அது! இங்கே… அய்யய்ய சொல்ல வெட்கமாகுதே!
கேள்வி : கலை, இலக்கியத் துறையில் கழகத்தின் அடுத்த பாய்ச்சலாக _ வெகுமக்கள் கூடும் மெரினா கடற்கரை போன்ற பகுதியில், ஒரு முழுநிலவு நாளில் (இரவு முழுக்க) திராவிடர் பண்பாட்டு கலை, இலக்கிய இரவு கொண்டாட கழகம் ஆவன செய்யுமா?
_ அ. வெற்றிமுரசு, வேப்பம்பட்டு
பதில் : நல்ல யோசனை; இதை அந்த இளம் நண்பர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்!
கேள்வி : மதச்சார்பற்ற நாட்டில் மதவாதிகளுக்கு அஞ்சல்தலை வெளியிடுவது சரியா?
_ வெங்கட. இராசா, ம.பொடையூர்
பதில் : மதச்சார்பற்ற நாட்டில் கூடாதுதான். ஆனால் மதச்சார்பற்ற என்று சொல்லிக் கொள்ளும் அளவில் உள்ள நாட்டில்… என்று பார்த்தால் அவை சர்வசாதாரணம்தானே!
கேள்வி : போபர்ஸ் ஊழல் செய்த முன்னாள் பிரதமர் ராஜீவ் அவர்கள் மறைந்ததும், அந்த ஊழலும், வழக்கும் மறைந்துவிட்டதா? மறந்து விட்டதா? அல்லது மறைத்து விட்டார்களா? வரும் தேர்தலுக்குள் முளைத்து வெளியில் வருமா? _ பெ. கூத்தன், வாழப்பாடி
பதில் : ஊழல்கள் எப்போது தோன்றும், எப்போது மறையும் என்பது எளிதில் நம் நாட்டில் கணிக்க முடியாதவைகள் ஆகும்!
கேள்வி : குன்னூர் – வெலிங்டன் இந்திய ராணுவப் பயிற்சியகத்தில் சிங்கள ராணுவத்துக்குப் பயிற்சி அளிக்கும் விசயத்தில் மத்திய அரசு இவ்வளவு பிடிவாதம் காட்டுவது ஏன்? – எஸ். கிருபாகரன், கோவை
பதில் : 24.6.2013 அன்று வேதாளம் முருங்கை மரத்திலிருந்து கீழே இறங்கிவிட்டது; இலங்கைக்காரர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். மத்திய அமைச்சர் அந்தோணி தஞ்சையில் சொல்லிய வாக்கு மாறுவது எவ்வகையில் சரி? தேவையற்ற தலைவலியை இப்படி மத்திய அரசு வரவழைத்து இருக்க வேண்டாமே!