மொழிவழி மாநிலமாகப் பிரிந்த தால்தான் நிலமே நமக்குச் சொந்தமாகி உள்ளது. மொழி நம்முடைய அடையாளமாகவும் எல்லையாகவும் செல்வமாகவும் உள்ளது. தாய்மொழியிலேயே நம்முடைய படைப்புகளைக் கொண்டுவருவது இயல்பு. தாய்மொழியை இழந்துவிட்டால் நம்முடைய அடையாளத்தையே நாம் இழந்து விடுவோம். வாழ்க்கையில் எந்தப் பகுதியில் அறைகூவல் இல்லை. அறைகூவல்தான் வாழ்க்கையாகும்.
– கவிப்பேரரசு வைரமுத்து
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அதற்கு முன் அரசியலை நன்றாகப் படித்துவிட்டு, மக்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு வரவேண்டும். ஆந்திராவிலும் தமிழகத்திலும் சினிமா ஹீரோக்களைத் தலைவர்களாக நினைத்து வழிபடும் அறிவற்ற சூழல் இருக்கிறது.
எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஜெயித்த காலம் வேறு. ஜெயலலிதாவே எம்.ஜி.ஆரின் இதயக்கனி என்பதால்தான் ஆட்சிக்கு வந்தார். தமிழ்நாட்டைப் போல கேரளாவில் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால், கட்டாயம் தோல்விதான் அவர்களை வரவேற்கும். ஏனென்றால், மலையாள மக்கள் ஒன்றும் அவ்வளவு அப்பாவிகள் அல்ல!
_ அடூர் கோபாலகிருஷ்ணன், இயக்குநர்
வழக்குரைஞர்களுக்கான சிலவற்றைச் செய்து கொள்வதற்காக, சட்டம் உருவாக்கப்படவில்லை. சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கார்ட்டூன்களில் எல்லாம், வழக்குரைஞர்கள், ஏமாற்றுக்காரர்கள் போல சித்தரிக்கப்படுகின்றனர். அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
– அல்டமாஸ் கபீர், தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம்