சோத்தபய ராமபக் ஷே
”துக்ளக்கின் துதிபாடும் பயணம்”
– மகா.தமிழ்ப் பிரபாகரன்
ஈழம் சாத்தியமில்லை, கனவிலும்கூட நடக்காது, ஈழம் புலிகளின் நினைப்பு, எட்டுக்கோடித் தமிழர்கள் இருக்கும் தமிழ்நாட்டைத் தனிநாடாக்க முடியாமல் ஏன் இலங்கையைப் பிரிக்கப் போராடுகிறீர்கள் இதை நாங்கள் சொல்லவில்லை, ஈழத் தமிழர்கள்தான் சொல்கிறார்கள் என்று சொல்வது மகிந்தாவோ பொன்சேகாவோ கோத்தபாயவோ அல்ல, அரசியல் பார்வைகளின் தீர்க்கதரிசனமான பத்திரிகை என்று தன்னைத்தானே பெருமைப்படுத்திக் கொள்ளும் துக்ளக்தான்.
எடுத்த எடுப்பிலேயே தமிழகத்தில் புத்த பிட்சுகளைத் தாக்குகிறார்கள், இலங்கை அரசு அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. அரசியல் சார்பில்லாத மாணவர்கள்கூட தமிழ் ஈழத்திற்காகக் குரல் கொடுக்கிறார்கள் என்ற பெருத்த கவலையோடு தொடர்கிறது இலங்கையில் துக்ளக் என்ற துக்ளக்கின் பயணம்.
அதில் துக்ளக் நிருபர் குழு வடகிழக்கு மலையகப் பகுதிகளுக்கு ஆறே நாட்களில் சென்று மக்களின் நிலைமையையும் அப்பகுதிகளின் நிலையையும் ஆராய்ந்து வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரைகள் பல இடங்களில் வரலாற்று அறியாமையோடு எழுதப்பட்டுள்ளது என்றாலும், அதற்கும் மேலாக இன்றைய இலங்கை சொர்க்கமாக மாறி வருகிறது என்று அடுக்கடுக்காய்ப் பல பொய்களை அடுக்குகிறது. இந்த அடுக்கப்பட்ட பொய்களிலுள்ள ஓட்டைகள், இலங்கையில் துக்ளக் தவிர்த்த செய்திகள் குறித்த நிலைமைகள், துக்ளக் கண்ணில் படாத அத்துமீறல்கள், அமைதியைக் கற்பழிக்கும் _- இன்றும் தமிழர்களைக் காயப்படுத்தும் சிங்கள இனவாதிகளின் ஏளனங்கள் _- இந்த ஏளனவாதிகளின் படையாகச் செயல்படும் இலங்கை ராணுவம் _ இலங்கையைச் சிங்களர்களுக்கான தேசமாக மட்டும் மாற்றத் துடிக்கும் செயல்களைப் பற்றியும் துக்ளக் வாதங்கள் வழியிருந்தே தொடர்வோம்.
கொழும்பு நகரத்தில் உள்ள மெயின் ரோடு மற்றும் ஸீ தெருவில் பலரோடு பேசினோம். 90 சதவிகிதக் கடைகள் தமிழ்க் கடைகள்தான். நகைக் கடைகளுக்கும், ஜவுளிக் கடைகளுக்கும் முதலாளிகள், தொழிலாளிகள் எல்லாமே தமிழர்கள்தான். அவர்களிடமெல்லாம் பேசியபோது, போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இலங்கையில் அமைதி திரும்பி, எல்லோரும் நிம்மதியாக வாழத் தொடங்கி விட்டார்கள். தமிழகம் தயவுசெய்து மீண்டும் தமிழீழம் என்று ஆரம்பித்துக் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றே பெரும்பாலோர் சொன்னார்கள் என்று இலங்கையில் துக்ளக் கூறுகிறது.
இவர்கள் கூறுவது போலாக தமிழர்களின் வணிகமே பெரும்பான்மை, சிங்களர்களின் வணிகம் என்பது இப்பகுதியில் மிகச் சொற்பமே. ஆனால் இவர்கள் சந்தித்த தமிழ்க் கடைக்காரர்கள் கொழும்பில் நிகழப்போகும் மாற்றங்கள் பற்றியும் தமிழர்கள் வசமுள்ள கொழும்பு மார்க்கெட் சொற்பமாக உள்ள சிங்களர்களின் கைக்குப் பிரித்துக் கொடுப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதைப் பற்றியும், பலியகொடா என்ற பகுதியில் புது மார்க்கெட் அமையப் போகிறதைப் பற்றியும் ஏனோ கூறவேயில்லை போலும். ஆம், கொழும்பில் பெருமளவு பணம் புழங்கும் தமிழர்களின் மார்க்கெட் பகுதிகள் நகரக் கட்டமைப்புக்காகவும், பாதுகாப்புப் பிரச்சினைகள் என்ற காரணத்திற்காகவும் அகற்றப்பட்டு பலியகொடாவுக்கு மாற்றப்படயிருக்கிறது. மாற்றப்பட்டால் தமிழர்களுக்கு எந்த இழப்பும் இல்லாமல் கடைகள் பிரித்துக் கொடுக்கப்படும், அதோடு தமிழர்களுக்குக் கொடுத்ததைவிட மிகையாக, கடைகளே இல்லாத சிங்களர்களுக்கும் புதுக்கடைகள் தரப்படுவதற்கான வேலைகள் அரங்கேறுகின்றன.
அதன் மூலம் இப்போது கொழும்பு மார்க்கெட் பகுதிகளில் தமிழர்களுக்கு உள்ள செல்வாக்கைக் குறைத்து சிங்களர்களைப் பெரும்பான்மையாக்குவதுதான் இதன் இறுதி வேலைத் திட்டம். ஆனால், இதற்குப் பிரச்சாரங்கள் என்னவோ கஷ்டப்படும் சிங்களத் தொழிலாளர்களுக்கும் வேலை தரும் செயல் என்று நடக்கிறது.. துக்ளக்கைச் சந்தித்த தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர், கொழும்பு நகரில் தனி ஈழம் தொடர்பாக வன்முறைகள் வெடித்ததில்லை. விடுதலைப் புலிகள்தான் அவ்வப்போது இங்கு வந்து வெடிகுண்டுகளை வைப்பதும், மனித வெடிகுண்டுகளை அனுப்புவதுமாக இருந்தனர். ஒருமுறை, மும்பைத் தாக்குதலைப் போல, கைகளில் துப்பாக்கிகளை ஏந்தி கண்மண் தெரியாமல் சுட்டபடி வந்தனர். மற்றபடி கொழும்பு நகரில் தமிழர் _- சிங்களர் மோதல்கள் பெரிதாக வெடித்ததில்லை என்று கூறுகிறார். ஏனோ இந்தப் பத்திரிகையாளருக்கு கொழும்பில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும் – வெலிக்கடா சிறையில் தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டதும் _ – கறுப்பு ஜூலைக் கொடூரங்களும் நினைவிலே இல்லை. கொழும்பில் சோ என்று அன்றே கட்டுரைகள் எழுதிய துக்ளக்கின் சோவுக்கும் இவர்களைச் சந்தித்த பத்திரிகையாளருக்கும் வேண்டுமென்றால் கொழும்பில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்கள் நினைவில்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தியாவின் அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இது ஓர் இனப்படுகொலை என்று பதிவு செய்திருக்கிறார்.
இதை எல்லாம் மறந்துவிட்டு, போன போக்கில் கண்டி தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர்கள் யாருமே தனித் தமிழீழத்தை விரும்பவில்லை என்றும், இங்கு கொஞ்ச நஞ்சம் பேருக்கு இருந்த தனித் தமிழ்ஈழ ஆசையும், வன்னி பகுதியில் நடந்த உயிரிழப்புகளைப் பார்த்துக் கரைந்து காணாமல் போய்விட்டது என்றும் எழுதியுள்ள துக்ளக், தமிழீழம் தேவையில்லை, தேவையில்லை என்றே முன்மொழிகிறதே தவிர மக்களுக்கான பிரச்சினைகள் பற்றியும் பொருளாதார வகையில் அவர்களுக்கு உள்ள சிக்கல்களைப் பற்றியும், எவ்வாறாக இன்றைய வட-கிழக்குப் பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் சிங்களத் தொழிலாளர்கள் உட்புகுகிறார்கள் என்பதைப் பற்றியும் ஆராயவேயில்லை.
1990-ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கு அருகில் உள்ள காத்தாங்குடி மற்றும் ஏறாவூர் நகரங்களில், முஸ்லிம்கள்மீது விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூடுதான் முஸ்லிம் -தமிழர் ஒற்றுமையைக் குலைத்துப் போட்டது என்று ஒரு கடைக்காரர் சொன்னதாகக் கூறும் துக்ளக், 1970 காலகட்டத்தில் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட இஸ்ரேலின் மொசாத் படை ஜெயவர்த்தனே காலத்தில் மீண்டும் இலங்கை வந்ததை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும்.
இந்து- முஸ்லிம் பிரச்சினைகளை உருவாக்குவதன் மூலம் இந்தியாவைப் பிரித்தாளலாம் என்று இங்கிலாந்து ஏகாதிபத்தியம் எப்படி எண்ணியதோ , அதுபோலத்தான் சிங்கள இனவாதமும் தமிழர்- முஸ்லிம் முரண்களை உருவாக்குவதன் மூலம் தமிழீழம் என்ற கோரிக்கையை உடைக்கலாம் அல்லது அழிக்கலாம் என்று எண்ணியது இலங்கை அரசு . இந்த இனவாத எண்ணத்தைச் செயல்படுத்தியவர்கள் இஸ்ரேல் மொசாத் படையினர் . இந்தச் சூழ்ச்சியின் சூத்திரதாரியாக இருந்தவர் ஜெயவர்த்தன அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த லலித் அதுலத் முதலி. (கோத்தபாய ராஜபக்ஷே போல)
இந்த இஸ்ரேல் மொசாத் படை புலிகளின் உடை வடிவத்தில் முஸ்லிம்களைத் தாக்குவதும் கொல்வதுமான வேலைகளைச் செய்தது. இந்தக் குற்றச்சாட்டு புலிகள் மீது விழ, என்ன செய்வதென்று அறியாமல் இருக்கும் நிலையில் புலிகள் இருக்க, புலிகளோடு உறவாடிய சில முஸ்லிம்களே இலங்கை ராணுவத்துக்குப் புலிகளைக் காட்டிக் கொடுப்பவர்களாக (தலையாட்டி) மாறத் தொடங்கினர். அப்போதைய காலகட்டத்தில் ஆட்பலம் குறைவாக இருந்த புலிகள் இயக்கத்துக்கு, பாதுகாப்புத்தான் பெரிய தேவையாக இருந்தது. காட்டிக் கொடுப்புகளால் தங்கள் இயக்கத்தினருக்குப் பாதுகாப்பு இடையூறு ஏற்படுகிறது என எண்ணிய புலிகள் , முஸ்லிம்களைக் கண்டித்தாலோ_ தண்டித்தாலோ அது மதக்கலவரமாக மாற வாய்ப்புள்ளது என்று நினைத்தே முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
1990க்குப் பிந்தைய காலகட்டத்தில் முஸ்லிம் வெளியேற்று நடவடிக்கையால் ஏற்பட்ட பிளவுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் பகிரங்கமாக மன்னிப்புகளும் கேட்டுள்ளார் பிரபாகரன். அதன்பின், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கிடையேயும் புலிகளுக்கிடையேயும் பல பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன.
1993 இல் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ரகுநாதன் என்ற தமிழ் இளைஞனால் தமிழர்-முஸ்லிம் பிரச்சினைகளைத் தூண்டியதன் சூத்திரதாரி லலித் அதுலத் முதலி சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்திகளும் பதிவாகின.
அன்று தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க நினைத்த சூழ்ச்சிகளைச் செய்தது சிங்கள இனவாதம்தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று வெளிப்படையாகவே மசூதிகள் தாக்கப்படுகின்றன, சிங்கள புத்தக் குழுக்கள் முஸ்லிம் கடைகள் மீது நடத்தும் தாக்குதல்களைத் தொடுக்கின்றது, ஹலால் பிரச்சினை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இஸ்ரேல் மொசாத் படையும் சிங்கள இனவாதமும் தமிழீழக் கோரிக்கையைத் துண்டாட உருவாக்கிய முஸ்லிம் பிரச்சினை தமிழீழம் வேண்டாம் என்று சொல்லும் துக்ளக்குக்கும் எப்படியோ உதவிவிட்டது.
தமிழீழக் கோரிக்கை என்பதை புலிகளுக்கான தாகவும் வடகிழக்குத் தமிழர்களுக்காகவும் பார்க்கும் துக்ளக் எப்படி தமிழீழக் கோரிக்கை எழுந்தது? வடகிழக்கு நிலப்பரப்பு தனித்தமிழ் நிலப்பரப்பாக எப்படி உருவெடுத்தது? ஆதி முதலே இலங்கையில் தமிழர்களின் வரலாறு என்ன? எண்பதுகளின் காலகட்டத்தில் சிங்களர்களால் துரத்தியடிக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் எப்படியெல்லாம் சிங்களர்களுக்கிடையே சிக்கிப் பாதிக்கப்பட்டார்கள்? பின் அவர்கள் வடகிழக்குப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த பிறகும் எப்படி போர்ச் சூழலில் பாதிக்கப்பட்டார்கள்? வடகிழக்கில் இருந்த மலையகத் தமிழர்கள் எப்படி ஈழப் போராட்டத்தோடு ஒன்றிப் போனார்கள், 2009 உக்கிரப் போருக்குப் பிறகு இடம்பெயர் முகாமான மெனிக் பார்ம்யில் மலையகத் தமிழர்களும் எப்படிப் பாதிக்கப்பட்டார்கள்? என்பதைப் பற்றியும் ஏன் அறிந்து கொள்ளவேயில்லை. மலையகத் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் இன்றைய வடகிழக்கில் ராணுவத்தால் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஏன் புலனாய்ந்திடவில்லை.
சிங்களக் குடியேற்றமே நடக்கவில்லை என்று சொல்லும் யாழ்ப்பாண ராணுவத் தளபதி ஹத்துரசிங்க-வின் வாதத்துக்குச் சப்புக்கட்டுக் கட்டுவதற்கு தேசிய வளமைச் சட்டம் என்ற சட்டத்தைக் குறிப்பிட்டு, அதற்கு வடபகுதித் தமிழர்களைத் தவிர, கொழும்பிலோ அல்லது வேறு தென்பகுதி இலங்கையிலிருந்தோ யாரும் வடபகுதிக்கு வந்து சொத்துக்கள் வாங்க முடியாது என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை இவ்வளவு அறிந்து கொண்ட துக்ளக்குக்கு, ஏன் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த வெலியோயா (மணலாறு) என்ற பிரதேசப் பிரிவு அநுராதபுரத்துக்கு உட்பட்ட ஒன்பது சிங்களக் கிராமங்களோடு இணைப்புப் பெற்றது? அந்தப் பிரிவை ஏன் முல்லைத்தீவு மாவட்டம் (தமிழ்ப் பகுதி) _ -அநுராதபுரம் மாவட்டம் (சிங்களப் பகுதி) என குழப்ப வேண்டும்.
வட பகுதி மக்களைத் தவிர வேறு யாரும் வடக்கில் நிலம் வாங்க முடியாது என்ற போது, எப்படி அங்கு சிங்களர்களுக்கு ராஜபக்க்ஷே நிலச்சான்றுகளைக் கொடுத்தார். உடனே, இங்கு சிங்களர்களும் வாழ்ந்தார்கள் என்ற வாதத்தை முன்வைப்பார்கள். அங்கு சிங்களர்கள் வாழவில்லை, போரின் சூழலில் 1983 காலகட்டத்தில் தமிழர்கள் வெளியேறிய பின்பு சிங்களர்கள் அங்கு ராணுவத் துணையோடு குடியமர்த்தப்பட்டனர். 2009 முடிந்த பின்பே இப்பகுதியிலிருந்து 1983இல் வெளியேறிய தமிழர்கள் மீள்குடியமர்த்தப்பட்டனர். ஆனால் சிங்களர்களோ 27 ஆண்டுகள் இருந்ததால் இது எங்கள் நிலம் என தமிழர் நிலங்களை உரிமை கோருகிறார்கள். அதற்குத்தான் ராஜபக்க்ஷே நிலச்சான்றும் அளித்துள்ளார். அப்படியெனில், துக்ளக் குறிப்பிட்ட தேசிய வளமைச் சட்டம் ஏன் இங்கு செயல்படவில்லை.
வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று ஹத்துரசிங்க சொல்கிறார். ஆம்! வடக்கு வாழ்கிறது, ஆனால் தமிழர்கள் வாழவில்லை, ராணுவம் சுகபோகத்தோடு வாழ்கிறது.
களத்தில் பிணத்தை முகர்ந்த இலங்கை ராணுவத்தைத் தேடி தமிழ்ப் பெண்கள் உதவி கேட்கிறார்கள் என ராணுவத் தளபதி ஹத்துரசிங்க சொல்வது நம்பும்படியாகவா உள்ளது. யாழ்ப்பாணத்தில் ஆண்களற்ற பெண்களின் வீட்டை இரவு நேரத்தில் தட்டுவதும், நீ புலிதானே என்று மிரட்டி மிரட்டியே எண்ணிக்கையற்ற முறையில் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்படுவதும், ஏனோ துக்ளக்கர்களின் மனசாட்சியை உலுக்கவே இல்லை.
நாலா பக்கமும் ராணுவம் சுற்றிவளைத்துப் போர் நடந்த நிலத்தில், நாலு பேரைச் சந்தித்துப் பேசிவிட்டால் இன்றைய இலங்கையின் நிலைமையைத் தெரிந்து கொள்ள முடியாது. அதிலும், நீங்கள் சந்தித்து வந்துள்ளது அரசின் வசமுள்ள ஆட்களையும் ராணுவத் தலைமைகளையும்தான். திருடனிடம் சென்று நீ திருடுனியா? என்று கேட்டால் எந்தத் திருடன் உண்மையை ஒத்துக்கொள்வான். அப்படித்தான் துக்ளக், கொலைகாரனிடம் கொலைக்கான நியாயம் என்ன என்று கேட்டு வந்துள்ளது.
அரசின் மீதான விமர்சனத்துக்கும், ராணுவம் மீதான விமர்சனத்துக்கும், புலிகளில் இருந்து பிரிந்து சென்றவர்களின் மீதான விமர்சனத்துக்கும் அவர்களிடமே பதில் கேட்டு வாய்ப்பளிக்கிறது துக்ளக்கின் ஜனநாயகம். ஆனால், அதே ஜனநாயகம் ஓர் அரசு அந்த மக்களை என்ன செய்தாலும் கைகட்டி அடிமையாய்த் தலையாட்டி வாழ வேண்டும் என்கிறது. போராடினால் தப்பு, நியாயம் கேட்டால் அது அநியாயம், விடுதலை கேட்டால் அது தீவிரவாதம் என்கிறது.
(உண்மைகள் கசக்கும்)