வேலூருக்கு என்று – எப்போதும் சில பழமொழிகள் உண்டு. அதில் ஒன்று, கோட்டையில் கோயில் உண்டு, ஆனால் அங்கே சாமி சிலை கிடையாது; தென்ன மரத் தெரு என்று இருக்கும், ஆனால் அங்கே ஒரு தென்னமரம்கூட கிடையாது என்பது போன்ற வேடிக்கைப் பழமொழிகள் உண்டு.
400 ஆண்டுகளாக அங்குள்ள வேலூர் கோட்டை ஜலகண்டேசுவரர் கோயிலில் இருந்த சாமி சிலை, சத்துவாச்சாரி பக்கம் _- வெளியே _ பல வெளிமாநிலப் படையெடுப்புகளுக்கு அஞ்சி அகற்றி எடுத்துச் செல்லப்பட்டது.
அதன்பிறகு அச்சிலை வைக்கப்படாமல், அக்கோட்டை மத்திய அரசின் தொல்பொருள் துறையின் சின்னமாகத்தான் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது.
கடந்த 30, 35 ஆண்டுகளாக, ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியினர் இக்கோயிலில் சிலை வைத்து பூ செய் நடத்தப்பட வேண்டும் என்றெல்லாம் கோரி வந்தனர். மத்திய அரசின் தொல்பொருள் துறை அனுமதிக்கவில்லை.
ஆனால் திடீரென்று ஒரு நாள் ஊர்வலமாக அதிகாலை வந்து அச்சிலையை உள்ளே வைத்து வழிபாடு நடத்த முயன்றனர்; வேலூரில் மதக் கலவரங்களை உருவாக்கிட சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராகவும் கலகம் நடத்தத் திட்டமிட்டே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கென்று இருந்த தொல்பொருள் துறையின் பார்ப்பன அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருந்து கோயிலில் ஜீரணாத்தோரண பூரண கும்பாபிஷேகம் எல்லாம் நடத்தி, சட்டம்மீறி நடந்தவர்களுக்கு உதவி அது முதல் பூசை – _ புனஷ்காரங்களும் நடைபெறத் தொடங்கின!
அப்படி மார்ச் 16, 1981 முதல் இது நடந்து வரத் துவங்கியது. சேஷாத்திரி என்ற ஒரு பார்ப்பன அதிகாரி அவர் கிஷிமி என்ற மத்திய தொல்பொருள் துறை அதிகாரியாக இருந்தாலும், அவரின் மறைமுக உதவியால்தான் இந்த அத்துமீறல் நடந்தது; அது மெல்ல மெல்ல அன்றாட பூஜை, வழிபாட்டுக்குரியதாக ஆகிவிட்டது.
அன்றிருந்த அ.தி.மு.க. அரசும்கூட இதைக் கண்டும் காணாததுபோல் துணை நின்றது மிகப் பெரிய கொடுமையாகும்!
1981 முதல் இத்தனை ஆண்டுகளாக இது இந்து முன்னணியாளர்களைக் கொண்ட ஒரு தனியார் குழுவுக்குச் சொந்தமான கோயில் போலவே நடந்து வந்தது -_ மிகப் பெரிய சட்ட அநீதி அல்லவா?
உடனடியாக இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை இதனைத் தனது அதிகாரத்தின்கீழ் கொண்டு வந்து உண்டியல் மற்றும் செயல்பாடுகளைக் கண்காணித்திருக்க வேண்டும்; செய்யத் தவறினர்.
தனியார் ஆதிக்கத்தின்கீழ் _- வருவாய் அவர்களுக்குச் சொந்தம் என்பதுபோல _- முந்தைய தியாகராயர் நகர் திடீர்ப் பிள்ளையார் _ – உண்டியல் வசூல் கொள்ளை சில நாள் நடந்ததுபோல _- அங்கும் 2003 வரை நடந்தது!
2003இல் இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை இக்கோயிலைத் தன்வசம் எடுத்துக் கொண்டது. இதை எதிர்த்து அந்த இந்து (முன்னணி) குழுவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடை ஆணை (stay) வாங்கிவிட்டனர்!
வழக்கு நடந்து 2012 டிசம்பரில் இந்த ஜலகண்டேசுவரர் கோயில் நிர்வாகத்தை இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை (பி.ஸி. & ணி.ஷி.) நிர்வாகத்தின்கீழ் கொண்டு வந்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிமன்றம் _- மேல் முறையீட்டில் _- தீர்ப்பு அரசுத் துறைக்குச் சார்பாக வழங்கிவிட்டது!
இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை ஆணையர் திரு. தனபால் அய்.ஏ.எஸ். அவர்கள் ஆணைப்படி துணை ஆணையர் ஒருவர் கோயில் தக்காராக நியமனம் செய்யப்பட்டு, பொறுப்பேற்று கோயில் நிர்வாகத்தை துறையின் அதிகாரத்தின்கீழ் கொண்டு வந்துவிட்டார்.
கோயில் உண்டியலையும் கைப்பற்றி சீல் வைத்து, தனியார் உரிமையைப் பறித்து _- அரசின் அறநிலையப் பாதுகாப்புக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துவிட்டனர்!
இதற்காக தமிழக அரசும், குறிப்பாக தமிழக முதல் அமைச்சரும் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் செயலும் பெரிதும் வரவேற்கத்தக்கவையே!
அக்கோயில் கொள்ளை இதன்மூலம் தடுக்கப்பட்டுள்ளது!
இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறையை நீதிக்கட்சி அரசு 1924ஆம் ஆண்டுகளில் உருவாக்கிய நோக்கம் இதன்மூலம் நிறைவேறியுள்ளது!
இக்கோயிலில் பக்தி வேஷம் போட்டு, மதவெறியைத் தூண்டிடும் வாய்ப்பையும், மத வெறியைப் பரப்பும் அபாயமும்கூட இந்த நிலையினால் தடுக்கப்பட்டுள்ளது.
வருவாயும் அறநிலையத் துறைக்குரியதாகி உள்ளது!
சிதம்பரம் கோயிலை தி.மு.க. ஆட்சியின் போது கையகப்படுத்தி இந்து அறநிலையத் துறையினர் வசம் கொண்டு வந்ததை எதிர்த்து, தில்லை தீட்சதர்கள் பெரிதும் ஆர்ப்பாட்டம் செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தோற்று, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று அங்கும் தடையாணை பெற முடியாமல், வழக்கு மட்டும் நடைபெறும் நிலை உள்ளது!
அதுபோன்ற மற்றொரு வரவேற்கத்தக்க முடிவு இது. பலவிடங்களில் ஆக்கிரமிப்புகளை மறைக்க கோயில் ஒன்று திடீரென்று முளைத்து, அதுவே வருவாய் வசூல் தொழிற்சாலையாக காலப் போக்கில் மாற்றப்படுவது தமிழ்நாட்டில் அநேகம்; அவற்றின்மீதுகூட இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் பார்வை _- நடவடிக்கை பாய வேண்டும்.
இது ஆத்திக _- நாத்திகப் பிரச்சினை அல்ல; பொதுநலம் _- மக்கள் நலப் பிரச்சினை – கொள்ளை தடுக்கப்படல் வேண்டும் என்பதே முக்கியம் என்பதால் இதுவே நமது வரவேற்புக்குக் காரணம்.
– கி.வீரமணி,
ஆசிரியர்