கடல்லயே இல்லையாம்!
(இந்திய ஒலிம்பிக்கும், வண்டுமுருகன் ஜாமினும்)
உலகெங்கும் ஒலிம்பிக் நாள் கொண்டாடப்படுகிறது. நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.. ஒலிம்பிக் அருங்காட்சியகத்தைப் பார்க்கும் வாய்ப்பை வெல்லுங்கள் அப்படின்னு ஒரு விளம்பரம். சரி, நாமளும்தான் என்ன போட்டின்னு போய்ப் பார்க்கலாமேன்னு பார்த்தேன். உங்களுக்குப் பக்கத்தில எங்க விழா நடக்குதோ, போட்டி நடக்குதோ அங்க போய் கலந்துக்கங்கன்னு போட்டிருந்துச்சு. சரி, நம்மளுக்குப் பக்கத்திலன்னா சென்னை இல்ல பெங்களூரு-வா இருக்கும்னு ஆவலா எடுத்துப் பார்த்தா… அடப் பாவிகளா…
வஞ்சர மீன் இருக்குன்றான்… வால மீன் இருக்குன்றான்…
கெண்டை மீன் இருக்குன்றான்… கெளுத்தி மீன் இருக்குன்றான்…
அவ்வளவு ஏன் சுறா மீன் கூட இருக்குன்றான்… ஆனா… ஜாமீன் மட்டும் இல்லைங்கிறான்…
கடல்லயே இல்லையாம்..னு வடிவேலு படத்தில வர்ற மாதிரி…
பாகிஸ்தான்ல இருக்குன்றான்… பங்களாதேஷ்ல இருக்குன்றான்…
இலங்கைல இருக்குன்றான்… இந்தோனேசியால இருக்குன்றான்…
மியன்மார்ல இருக்குன்றான்… மாலத்தீவுல இருக்குன்றான்…
அவ்வளவு ஏன் நேபாளத்திலகூட இருக்குன்றான்… ஆனா… இந்தியாவுல மட்டும் இல்லைங்கிறான்…
ஒரு கண்ணை இடுக்கிக் கொண்டு, இந்தியா ஒலிம்பிக்-லயே இல்லையாம்..னு சொல்றாய்ங்க…
அதிர்ச்சி ஆகாதீங்க.. இது பழைய செய்தி! கடந்த ஆண்டு டிசம்பர்லயே இந்திய ஒலிம்பிக் சங்கத்தைத் தடை பண்ணிருச்சாம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி! இங்க ஒரே ஊழல், அரசின் தலையீடு, முறைகேடு, உறுப்பினர்கள் பலர் மேல கிரிமினல் வழக்குகள் அப்படியிப்படி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சொல்லித் தடை பண்ணிட்டாங்க… துப்பாக்கிச் சுடும் போட்டியில பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் மாதிரி ஆட்கள் நேரில போய் ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளை 5 மாதம் கழிச்சுச் சந்திச்சு (கடந்த மே மாதத்தில) தடையை நீக்கக் கேட்டிருக்காங்க… முறையா தேர்தல் நடத்துங்க… அப்புறம் தடையை ரத்து பண்றோம்னு சொல்லிட்டாங்க… நம்மாளுகளும் நம்பிக்கை தெரிவிச்சுட்டு வந்துட்டாங்க…
இதைப் பத்தி எவனுக்காவது தெரியுமா? கிரிக்கெட் – ஒரு விளையாட்டுன்னு அதைக் கட்டிக்கிட்டு அழுது, அதுலயும் சூதாடி, ஊழல் செஞ்சு, அதைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கானுக…
இங்க என்னடான்னா, உருப்படியா விளையாட வேண்டிய விளையாட்டுகளுக்கே ஆப்பு வந்திடுச்சு! முழுமையான உடல் தகுதியும், விளையாட்டுத் திறமையும் இருக்கிற, இந்த நாட்டோட மூலை முடுக்குகள்லயும், கிராமங்கள்லயும், மலைப் பகுதியிலயும் இருக்கிற வீரர்கள், வீராங்கனைகளைக் கண்டுக்காம, அவங்களை வளர்த்தெடுக்காம, பணம் – சிபாரிசுன்னு உருப்படாத சாம்பார்களைத் தேர்ந்தெடுக்கிறது – கிரிக்கெட் மாதிரி மொக்கை விளையாட்டுகளுக்கு விளம்பரம், வசதி கொடுக்கிற ஊடகங்கள், அரசுகள் எல்லாம் உருப்படியான விளையாட்டுகளுக்கு வசதி தராம தட்டிக் கழிக்கிறதுன்னு இருந்தா… வௌங்கும் இந்த நாட்டு விளையாட்டு!
கிரிக்கெட் இந்த நாட்டுல மத்த உண்மையான விளையாட்டுகளை எப்படி ஒழிச்சதுன்னு ரொம்பப் பேரு கேட்கிறாங்க… ஒலிம்பிக்-ல நம்ம இல்லைங்கிறதயே தெரியாம வச்சிருக்கே… இதை விடவா ஒரு எடுத்துக்காட்டு வேணும்… அந்த மட்டையைப் புடுங்கி அடுப்புல போட்டாத் தான் நாடு உருப்படும்.
விலைவாசி ஏறினா நமக்கென்ன?
அம்புஜம் : ஏன்னா, மாசம் பொறந்து இத்தன நாளாகுறதோ இல்லியோ.?.. இன்னும் இந்த மளிகை ஜாமான் வாங்கியாராம இருக்கேளே? விலைவாசி வேற கும்முன்னு ஏறிண்டே போகுதாம்.. நியூஸெல்லாம் படிக்கிறேளா…?
சிறீராமன் : அடிப் போடி அம்புஜம்.. விலைவாசி எவ்வளவு ஏறினாத்தான் நமக்கென்னடி ஆச்சு? நாம யாருன்னு நோக்குத் தெரியுமா தெரியாதா?
அம்பு : எனக்கு என்னன்னா தெரியும் .. நீங்க என் ஆம்படையாள் .. அது மட்டும்தானாக்கும் நேக்குத் தெரியும் ..
சிறீரா : அட மடையி ! நாம பிராமணாள்டி .. நாம் பூதேவர்டி .. பூஜை, யாகம் புனஸ்காரம் எல்லாம் செய்ய நமக்கு மட்டும் தான்டி நீஷீஜீஹ்க்ஷீவீரீலீ இருக்கு அம்பு : அப்படியாங்கானும் .. பேஷ் .. பேஷ்…
கிறீரா : மழை வேண்டியும், உலக நலனுக்காகவும் அப்டின்னு அள்ளி விட்டோம்னா ஒரு மாச மளிகை ஜாமான அள்ள முடியாதா என்ன ? அதுவும் இந்தச் சூத்திராள் இருக்காளே, சரியான மடப்பசங்க .. அவா எவ்வளவு காலம் ஏமாறுவாளோ, அவ்வளவு காலம் மாசா மாசம் நமக்கு மளிகை ஜாமான் அவாளோட பணத்துலதான்டீ…என்ன…நான் சொல்றது..புரியறதா…?
அம்பு: …ம்…பேஷ்..பேஷ்..நம்மளவா அந்தக் காலத்துலேயே நன்னாத்தான் யோசிச்சு இந்த பூஜை, புனஸ்காரங்களையெல்லாம் உருவாக்கியிருக்கா…!
_ திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
வடுகப்பட்டியில் சிறுவன் தலையில் செருப்பு
உசிலம்பட்டிக்கு அருகே உள்ள வடுகப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் பள்ளி மாணவன் அருண்குமார் அந்த ஊரின் வழக்கப்படி தலையில் செருப்பை வைத்துக்கொண்டு நடந்து வந்துள்ளான். வந்த வழியில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டு நின்றபோது, வெயிலின் சூடு தாங்க முடியாமல் தலையில் வைத்திருந்த செருப்பை எடுத்துக் கால்களில் போட்டுள்ளான். அதனைப் பார்த்த ஜாதி இந்துப் பிரிவைச் சேர்ந்த இளைஞன், அருண்குமாரைத் திட்டி, தலையில் செருப்பை வைக்கும்படிக் கூறியுள்ளான்.
இதுகுறித்து, தலித்துகள் இந்துக்கள் வாழும் தெருக்களில் செருப்புப் போட்டு நடக்கக் கூடாது, இறந்தவரின் உடலினையும் கொண்டு செல்லக் கூடாது. கோயில் வராண்டாவில் உட்காரக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் பல உள்ளன. என் மகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பின்புதான் இங்குள்ள தீண்டாமைப் பிரச்சினை வெளியே தெரிய வந்துள்ளது என்று அருண்குமாரின் பாட்டி கூறியுள்ளார். 21 ஆம் நூற்றாண்டில்தான் நாம் இருக்கிறோமா? செருப்பு என்பது கால்களைப் பாதுகாப்பது. அதனை ஒரு மனிதன் தலையில் சுமக்க வேண்டும் என்பது எவ்வளவு கொடுமை.இதனை இன்னும் அனுமதிக்கும் சமூகம் எப்படி வளர்ந்த சமூகமாகும்? வெட்கம்.. வெட்கம்…
வாடிப்பட்டியில் வன்கொடுமை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தில் வசிக்கும் முருகாயி (வயது 65) தனது வீட்டிற்கு அருகே உள்ள பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுத்துள்ளார்.
இதனைப் பார்த்த ஜாதி இந்து பிரிவைச் சேர்ந்த சிலர், தலித் இனத்தைச் சேர்ந்த பெண் எப்படிப் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கலாம் என்று கூறி, முருகாயியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, ஜாதிப் பெயரைச் சொல்லி அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இப்படி, வெளிச்சத்திற்கு வரும் நிகழ்வுகள் சில இருக்க வெளி உலகத்திற்குத் தெரியாமல் எத்தனை மக்கள் இப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவிக்கிறார்களோ? அரசும், அரசு அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
– பவானந்தி