கேள்வி : தமிழ்ப் பாடங்களில் இறை வாழ்த்துப் பாடல்கள் அவசியமா? இலக்கியப் பகுதியில் காப்பியங்கள், பக்திப் பாடல்கள் என்ற தனிப் பிரிவும் இருக்கிறது. அதே வேளையில் பாடத்தின் தொடக்கமாக இறைவாழ்த்தை வைப்பது தகுமா? எந்த மதம் என்பதை அடையாளப்படுத்தாமல் பொதுவாகக் கடவுள் என்றே அப்பாடல்கள் இருந்தாலும், இந்துமதத்தையொட்டிய பாடலாகத்தான் அவை அமைகின்றன. மத அடையாளமே இல்லாவிடினும் இறை வாழ்த்துகள் தேவையா?
_ அ.பாவேந்தன், திருச்சி
பதில் : தேவையே இல்லை; மதச்சார்பற்ற நாட்டில் கடவுள் என்பது மதத்தின் ஒரு கொள்கையே. (சமண, பவுத்த மதங்களில் கடவுள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.) அதுபோலவே கூட்டம் துவங்கும்போதும் கடவுள் -_ வீஸீஸ்ஷீநீணீவீஷீஸீ ஷீஸீரீ தேவையற்றது.
கேள்வி : இந்திய அரசமைப்புச் சட்டம்… இன்னமும் இந்து அரசமைப்புச் சட்டமாகவே இருக்க என்ன காரணம்? இதனை மாற்றியமைக்க என்ன செய்ய வேண்டும்?
_ நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில் :உண்மையான மதச்சார்பற்ற அரசு மத்தியில் ஏற்பட்டு, புதிய அரசியல் சட்டத்தைச் சமதர்ம அடிப்படையில் உருவாக்கிட வேண்டும்.
கேள்வி : மடாதிபதிகளும் மத வெறியர்களும் நிறைந்துள்ள கர்நாடகத்தில் (முதல்வர் பொறுப்பேற்கும்பொழுது) சித்தராமைய்யா கடவுள் பெயரால் உறுதிமொழி ஏற்காதது எதைக் காட்டுகிறது?
_பி. சாந்தி, அம்மாபாளையம்
பதில் :அவரது பகுத்தறிவுக் கொள்கை உறுதியைக் காட்டுகிறது!
கேள்வி : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட செயல்பாட்டிற்கு சுவரொட்டிப் பாராட்டுகள் காணவில்லை. அத்திட்டத்தில் தி.மு.க. ஆட்சிக்குத் தொடர்பு இருக்கிறது என்பதனால்தானே?
_ மலர்மன்னன், முசிறி
பதில் :நம் நாட்டில் எதிலும் அரசியல் _ எங்கும் அரசியல் _ அரசியல், அரசியல், அரசியலே!
கேள்வி : அறிவுக்கேற்ப வாழ அனுமதிப்பதுதான் இந்து தர்மத்தின் சிறப்பு என வேளுக்குடி கிருஷ்ணன் என்ற ஆன்மீகவாதி கூறியுள்ளது பற்றி… _ ஜி. சாந்தி, அம்மாபாக்கம்
பதில் :அறிவுக்கேற்ப வாழ்வது என்றால் கடவுளுக்கும் ஆத்மாவுக்கும் இடமே இந்துமதத்தில் இருக்கக்கூடாது. உருவமில்லாத கடவுள் எப்படி மனிதனாகப் பிறந்தான்? அதில்கூட மும்மூர்த்திகளில் சிவன் எந்த அவதாரமும் எடுக்காமல், விஷ்ணு மட்டுமே பத்து அவதாரம் _ அறிவுப்படி சரியா?
கேள்வி : மாநில உரிமைகளை மத்திய அரசு புறக்கணிப்பதாகக் கூறி முதலமைச்சர்கள் மாநாட்டைப் புறக்கணித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயல் சரியானதா?
_ அ. கற்பகம், பூவிருந்தவல்லி
பதில் :மாநில உரிமைகள் பறிப்புபற்றி ஒரு மாநில முதலமைச்சர் அங்கு சென்று அல்லவா அதைக் கேட்டு விளாசித் தள்ளியிருக்க வேண்டும்; அந்த அரிய வாய்ப்பை நழுவவிட்டுவிட்டாரே? எனவே அது சரியான முடிவல்ல.
கேள்வி : தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குள் அரசியல் கட்சிகளைச் சேர்த்திருப்பது நல்ல நடவடிக்கைதானே? – பா. பரஞ்சோதி, வேலூர்
பதில் :நல்ல நடவடிக்கைதான் _ மற்றவர்களுக்கு. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு மடிகனம் இருப்பதால் சங்கடம் என்று பலர் கூறுகிறார்கள்! அறியோம் பராபரமே!
கேள்வி : வழக்குரைஞர்களையே நீதிபதிகளாக நியமிப்பது சரியா? நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு புதிய முறையைக் கொண்டுவரப் போவதாகக் கூறியிருக்கிறதே? – க. வேதாசலம், செங்கை
பதில் :எவ்வகையில் அந்த மாற்றம்? என்பதைப் பொறுத்தே கருத்துக் கூறமுடியும்.
கேள்வி : பாரதிய ஜனதா கட்சிக்குள் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் பிரச்சினை உருவாக வாய்ப்புள்ளதா? ராம்ஜெத்மலானி நீக்கம் மற்றும் சில நடவடிக்கைகள் நடந்துள்ளனவே?
_ ம. வெற்றிவேலன், சேலம்
பதில் :ஏற்கெனவே அது நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது! உமாபாரதிகள் நிலை ஒரு சிறு எடுத்துக்காட்டு.