சிந்துவெளி நாகரிகத்தின் எச்சங்களை எங்கே தேட வேண்டும்?

ஜூன் 16-30

– ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ்

இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை இரண்டு புதிர்கள் என்று சொல்லியிருந்தேன். ஒரு புதிர் என்னவென்றால், நாம் சிந்து சமவெளி நாகரிகத்தைக் கண்டுபிடித்தாச்சு. ஆனால் சிந்து சமவெளி நாகரிகம் யாருடைய நாகரிகம்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? அந்த நாகரிகம் ஏன் முடிவுக்கு வந்தது? எப்படி முடிவுக்கு வந்தது? எதனால் அழிந்தது?  சிந்து சமவெளி நாகரிகம் எப்படி முடிந்தது?

என்பது குறித்த ஒரு கேள்வி. அதற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இரண்டாவது புதிர். ஒரு முக்கியமான பழைய நாகரிகத்தினுடைய வழித்தோன்றல்கள் என்று கருதப்படுகிற பழந்தமிழர்களின் நாகரிகம் எங்கே தொடங்கியது? இந்த இரண்டும் ஒரே கேள்விக்குறிகள். இது ஏன் எங்கே தொடங்கியது என்று கேட்டால் இதிலும் நிறைய விஷயங்கள் இருக்கு. ஏன்னா சிந்து சமவெளி நாகரிகம் என்பது இந்தோ _ ஆரிய நாகரிகம் என்கிற ஒரு கருதுகோள்; திராவிட நாகரிகம் என்கிற கருதுகோள்;

 

இவை இரண்டுமில்லாமல் வேறொரு நாகரிகம்னு சொல்லுகிற கருதுகோள்; அது சுமேரியாவிலிருந்து வந்த நாகரிகம் என்று சொல்லுகிற கருதுகோள்; இப்படி நிறையக் கருத்துகள் இருக்கிற மாதிரி, திராவிடர்களின் தோற்றம் பற்றியும் பல கருத்துகள் இருக்கும். ஒரு கருத்து, அவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தவர்கள்; ஒரு காலத்தில் ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வந்த ஒரு மொழிக்கூட்டம்; அதுமட்டுமில்லாமல் லெமூரியா கண்டத்திலிருந்து வந்தவர்கள். இப்படிப் பல வகையான கடல்கோள் நினைவுகள் சங்க இலக்கியத்தில் இருக்கு. ஆக திராவிடர்களின் தோற்றம் பற்றிய ஒரு தெளிவின்மையும் இருக்கிறது.

திராவிடர்கள் எங்கு தோன்றினார்கள்? எப்படித் தோன்றினார்கள்? என்பது ஒரு வினாக்குறி. சிந்து சமவெளி நாகரிகம் எப்படி அழிந்தது என்பது இரண்டாவது வினாக்குறி. ஆனால், இதில் முக்கியமான விஷயம் என்னவென்று கேட்பீர்களேயானால், இரண்டு வரலாற்றுப் புதிர்களுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதினுடைய புரிதலில்தான் இருக்கிறது.

இந்திய வரலாற் றின் உண்மையான எதிர்காலம் என்ன வென்றால், இந்த இரண்டு கேள்விகளுமே _ இரண்டு புதிர்களுமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல இரண்டு வெவ்வேறான பிரச்சினைகளை வளர்ப்பதால்தான் பிரச்சினையே இருக்கு. அதில் என்ன பிரச்சினை வருது? என்பதைத் தனியாகப் பார்ப்போம். எழுத்து வடிவம் வரலாற்றின் தொடக்கம். வேதங்களுக்கு முன் பிரிந்த ஒரு விரிவான உலகம். அந்த உலகத்தைப் பற்றி யாருக்குமே தெரியாமல் இருந்தது. இந்தியாவின் தொன்மை வரலாறு வாய்மொழி மரபாகவே இருந்தது. எனது இந்த ஆராய்ச்சியானது தேதியற்ற இந்தியாவிற்கான தேடல்தான். சிந்துவெளி நாகரிகம் எப்படி முறிந்தது? பழந்தமிழ்த் தொன்மங்களின் தோற்றுவாய் எது? பழந்தமிழ்த் தொன்மங்கள் வாய்மொழி மரபாய் நிலைபெற்றன. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இலக்கியப் பதிவு பெற்றன. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் இருக்கு. ஆனால், நமக்குக் கடைச்சங்க நூல்கள் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால்…? நீங்கள் யோசித்துப் பாருங்கள். அந்த இலக்கியம் இல்லாத ஒரு தமிழ்த் தொன்மத்தை யோசித்துப் பாருங்கள். ஆக நமக்குக் கிடைக்காமல் போன நூல்கள் பல இருக்கு. அதற்கு முன்னால் ஒரு வாய்மொழி மரபு இருக்கு. பாட்டு மரபு, பாணர் மரபு, கூத்தர் மரபு, கலை மரபு இருக்கு. இப்படிப்பட்ட சொல்லாடல்கள் இருக்கக்கூடிய ஒரு நீண்ட நெடும் வாய்மொழி மரபு இலக்கியத்தில் ஒரே நாளில் தோன்றிவிட முடியாது!

அந்த இலக்கியத்திற்குப் பின்னால் நீண்ட மரபு இருக்கும். அந்த மரபுக்கு ஒரு காலம் இருக்கும்; ஓர் இடம் இருக்கும். இவ்விரு புதிர்களும் நாணயத்தின் இரு பக்கங்கள்! திராவிடக் கருதுகோள் என்பதைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு என்னுடைய ஆய்வினைச் சொல்ல இன்னும் விரும்புகிறேன். இந்தத் திராவிடக் கருதுகோள் என்பது 1924ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சர் ஜான் மார்ஷல் லண்டனில் இருந்து அறிவிச்ச சரியாக 50ஆவது நாளிலே டிசம்பர் மாதம் இந்தியன் ரிவ்யூ என்கிற இதழில் ஒரு கட்டுரை வருகிறது வங்காளத்தைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான சுனித்குமார் சட்டர்ஜி 1960களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறந்த உரையை ஆற்றினார். அந்த உரையை நான் ஆங்கிலத்தில் படித்து இருக்கிறேன். சுனித்குமார் சட்டர்ஜிதான் திராவிடக் கருதுகோளுக்கான முதல் குரலைப் பதிவு செய்தவர். அவர்தான் ஒரு கட்டுரை எழுதுகிறார். லண்டனில் இருந்து 50 நாளில் கால்டுவெல், கட்டுரையை கால்க்லேட் பண்ணுகிறார். கால்டுவெல்லுக்கு முன்னால் எல்லீஸ் பங்களிப்பைப் பற்றிப் புதிய நூல்கள் வந்திருக்கின்றன. கால்டுவெல் திராவிடக் குடும்பத்தைப் பற்றிப் பேசியதெல்லாம், அவர் சொல்லி இந்த சிந்துவெளி நாகரிகத்திற்கும், வேதகால நாகரிகத்திற்கும் தொடர்பு இல்லை.

திராவிட நாகரிகத்தோடு தொடர்புடைய நாகரிகம் சிந்துவெளி நாகரிகம். இது தமிழர்களுடைய நாகரிகம் என்பதை முதன்முதலாக சிந்துவெளி நாகரிகம் அறிவிக்கப்பட்ட 50 நாட்களுக்குள் ஓர் அறிவிப்பைச் செய்தவர் சுனித்குமார் சட்டர்ஜி.

சர் ஜான் மார்ஷல்

அதற்குப் பின்னால் ஹிராஸ் பாதிரியார், ரஷ்ய நிபுணர்கள் முயற்சி செய்தார்கள். அவர்களுக்குப் பின்னால், பின்லாந்தைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா போன்றவர்கள் முயற்சி செய்தார்கள். அய்ராவதம் மகாதேவனுடைய பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இவர்களெல்லாம் சேர்ந்து, சிந்துவெளி நாகரிகம்  திராவிடர் என்பதை, அந்த எழுத்தினுடைய கணிப்பொறியியல் மூலமாகச் செய்த அந்த வரிவடிவின் ஆய்வின் மூலமாகவும், மொழியியல் அடிப்படையிலும், தொல் அடையாளங்களைப் பொருத்தும் அந்த அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கிற சிவன் மாதிரி இருக்கக்கூடியது; தாய்த் தெய்வ வழிபாடு திராவிடர்களுக்குரியது; பெரியகோட்டை மதிற்சுவர் உள்ள கட்டடங்கள்  இவர்களுக்கு உரியது; வணிகம் சார்ந்த மரபு, கடல் வணிகம் சார்ந்த மரபு; இப்படியென்று திராவிடத்திற்குரிய கருத்துகளை எல்லாம் பட்டியல் போட்டு பலரும் எழுதியிருக்கிறார்கள்.

ஆனால், வேறு மாறுபட்ட கருத்துகளும் இருப்பதனால் இதுவரையிலும் சிந்துவெளி நாகரிகத்தினுடைய எழுத்துகளை யாரும் படிக்கவில்லை. அதற்கு ரொஸடாஸ்டோன் என்று சொல்லக்கூடிய _ இருமொழி இன்கிரிப்ஸன் என்று சொல்லப்படுகின்ற கல்வெட்டின் துணையைக் கொண்டுதான் சுமேரியா நாகரிகத்தினுடைய எழுத்தைப் படிக்க முடிந்தது. அப்படின்னா… என்னவென்று கேட்பீர்களேயானால், இப்ப நம்ப தமிழில் எழுதியிருப்பதை ஆங்கிலத்தில் எழுதியிருப்போம் அல்லவா! இது இரண்டும் சேர்ந்து கல்வெட்டா கிடைச்சுதுன்னா, இந்த ஆங்கிலமும், இந்தத் தமிழும், தொடர்பு உடையதை வைத்து மத்த கல்வெட்டை எல்லாம் படிக்கலாம். அப்படி ஓர் இருமொழிக் கல்வெட்டுக் கிடைக்காததனால், இதுவரை சிந்துவெளி எழுத்துகளைப் படிக்க முடியவில்லை.
அதனால் என்ன மொழி என்பது தெரியவில்லை. அது என்ன மொழி என்று தெரியாத சூழ்நிலையில் _ அந்தத் தெளிவற்ற நிலைமையில் திராவிடக் கருதுகோள் என்பது ஆகக் கூடுதலான சாத்தியங்கள் உள்ள ஒரு கருதுகோளாக நினைக்கப்படுகிறதே தவிர, அது ஒரு முடிந்த முடிவாக நினைக்கப்படவில்லை. இதுவரைக்கும் இது திராவிடக் கருதுகோள் என்று நாம் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். அதை ஏற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் பிராகுயி என்கிற மொழி ஆப்கானிஸ்தானுடைய _ ஈரானுடைய எல்லை _ கிழக்கு ஈரானுடைய எல்லையான இது, பாகிஸ்தான் (பலுசிஸ்தான்) பகுதியில் பிராகுயி என்ற திராவிட மொழியாகப் பேசப்படுகிறது. அங்கே பிராகுயி என்ற ஊரும் உள்ளது. அங்கு பிராகுயி மொழி பேசப்படுவதனாலே சிந்துவெளி நாகரிகத்தின் எச்சமாக இருக்குமென்று ஒரு வாதம்  வைக்கப்படுகிறது. நீங்கள் வளர்ந்த உன்னதமான பண்பாட்டுக்கும், வேறு எந்தவித பண்பாட்டு வளர்ச்சிக்கும் இல்லாமல் ஓர் அடிப்படை நிலையில் வாழ்கிற வாழ்க்கை இருக்கிறதை, ஒரு நாடோடிகளாகவும், செட்டில்டு இல்லாத ஒரு வாழ்க்கை இருப்பதையும் பார்த்தீர்களேயானால், அப்படிப்பட்ட வாழ்க்கைக்கு உரிமையாளராகவும், சொந்தக்காரர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நகர நாகரிகத்திற்குச் சொந்தமான மக்களுடைய வழித்தோன்றல்கள் இப்படிப்பட்ட அடிமட்டமான நிலையில் இருப்பார்களா? இவர்களைப் போய் நீங்கள் எப்படித் திராவிட நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் என்று சொல்லலாம்? என்கிற ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. இரண்டாவதாக பிராகுயி மொழி கி.பி. ஆயிரத்தில் மத்திய இந்தியாவிலிருந்து அந்தப் பகுதிக்குப் போனதென்று இந்தச் சந்தேகங்களின் அடிப்படையில் சிலர் எழுதுகிறார்கள்.

சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்

பிராகுயி திராவிடக் கருதுகோளுக்கு ஒரு தீர்வாக இல்லாமல் பிரச்சினையாகவே இருக்கின்றது. அதனால்தான் அதற்கு பிராகுயி என்று ஆய்வறிஞர்கள் எழுதுகிறார்கள். ஆக, பிராகுயி (Problem) பிரச்சினை என்பதைத் தவிர தீர்வல்ல. அப்படியென்றால், வேறென்ன தீர்வு இருக்கு? நம் மனதில் கொள்ள வேண்டிய விஷயம், ஒரு நாகரிகம் _ அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஒரு நாகரிகம், அந்த நாகரிகத்திற்கான வழித்தோன்றல்களை _ அதாவது எந்த மொழியை நாம் சந்தேகப்படுகிறோமோ, (திராவிட மொழி என்று சந்தேகப்படுகிறோம்) அது சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று சொன்னால் சந்தேகப்படக் கூடிய அந்த மொழிக்குடும்பத்தில் எந்தப் பகுதி, எந்த மொழி, எந்த மக்கள் இன்னொரு உயர்ந்த நாகரிகத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்களோ, அந்த நாகரிகத்தில் போய்ச் சேரவேண்டும். விட்டகுறையை, தொட்டகுறையை நீங்கள் அடிமட்டத்தில் இருக்கக்கூடிய தொல் பழங்குடியைப் போய்ச் சேரக்கூடாது. அதாவது, சிந்துவெளி மக்கள் பேசிய மொழி ஒரு தொல்மொழியாக இருக்க முடியாது. ஒரு வளர்ந்த மொழியாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால், சிந்துவெளி மக்கள் சாதாரண மக்கள் அல்ல. அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சாக்கடை கட்டியவர்கள்; சாரங்களை அமைத்தவர்கள்; நீச்சல் குளங்களை அமைத்தவர்கள்; பெரிய பெரிய வீடுகளில் குடியிருந்தவர்கள்; நகர சபையை நடத்தியவர்கள்; துப்புரவுத் தொழிலாளர்களை நியமித்து வேலை வாங்கியவர்கள்; வெளிநாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்தவர்கள்; முத்திரைகளை வைத்திருந்தவர்கள்; ஒரே மாதிரியான செங்கல்களை 1600 சதுர கிலோமீட்டரில் எல்லா நகரங்களிலும் பயன்படுத்தியவர்கள்; அப்படிப்பட்ட ஒரு நாகரிகத்திற்குச் சொந்தமானவர்கள்.

சிற்பக்கலையை வளர்த்திருந்தார்கள்; ஓவியக் கலையை வளர்த்து இருந்தார்கள். அப்படியென்றால் அவர்கள் பேசிய மொழியில் இலக்கியம் இல்லாமல் இருந்திருக்குமா? அல்லது வாய்மொழி இலக்கியமாவது இல்லாமல் இருந்திருக்குமா? அப்படியென்றால் அந்த நாகரிகத்தினுடைய  எச்சத்தை, எச்சமிச்சங்களை அதோடு தொடர்புடைய, இன்னொரு சொந்தக்காரர்களிடம் தேட வேண்டுமே தவிர, வேறெங்குமே தேடக்கூடாது என்பதன் அடிப்படையில் பழந்தமிழ்த் தொன்மங்களோடு சிந்துவெளியைத் தொடர்புபடுத்துகிற ஓர் அணுகுமுறை இருக்கிறது. இந்த அணுகுமுறையை அஸ்கோ பர்போலாவும் அய்ராவதம் மகாதேவனும் கடைப்பிடித்து இருக்கிறார்கள். இதுதான் இன்றுவரை உள்ள நிலவரம். இதற்கு எதிரான வாதம் என்னவென்று சொன்னால் அவர் கேட்கும் ஒரே கேள்வி. சிந்துவெளி நாகரிகம் எங்கே இருக்கு? கன்னியாகுமரி எங்கே இருக்கு? சிந்துவெளி நாகரிகம் எங்கே இருக்கு? மதுரை எங்கே இருக்கு? சிந்துவெளி நாகரிகம் எங்கே இருக்கு? தமிழ்நாடு எங்கே இருக்கு? 2000 _ 2500 கி.மீ. இவ்வளவு தூரத்திற்குள்ள இடைவெளியை எப்படி விளக்கப் போகிறீர்கள்? இரண்டாவது கேள்வி. 1900களில் சிந்துவெளி நாகரிகம் அழிந்துவிடுகிறது. ஆனால் நீங்கள் சங்க இலக்கியங்கள் கி.மு. 200, கி.மு.300தான் சொல்ல முடியும். (தொடரும்)

தொகுப்பு: அ.பிரபாகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *