காவிரித் தீர்ப்பு : திசைத் திருப்பும் கரு’நாடகம்’

ஜூன் 16-30

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயிகளின் வேதனை நாளுக்கு நாள் சொல்லொணாத சோகத் தொடராக தொடர்ந்து கொண்டுள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்பை மதித்ததுண்டா?

குறுவை, சம்பா என்று பயிரிட்டு வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் நடத்திவரும் நமது விவசாயத் தோழர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகத்தின் ஈரமில்லா நெஞ்ச முடிவு காரணமாக நியாயமான உரிமைப்படி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி ஒருமுறைகூட, நீரை அளித்ததே கிடையாது!

 

உச்ச நீதிமன்றமாக இருந்தாலும், நடுவர் மன்றாக இருந்தாலும்கூட, சட்டத் தீர்ப்புகளைக் கூட மதிக்காது, கர்நாடக அரசு (அங்குள்ள வாக்கு வங்கி அரசியலில் யார் அதி வேகமாக தமிழ்நாட்டுக்கெதிரான குரலை உயர்த்துவது என்ற போட்டியினால்)  6.6.2013 அன்று ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி (அது மத்திய அரசால் கெசட் செய்யப்பட்டதினால் சட்ட வலிமை பெற்ற தீர்ப்பாகவே கருதப்பட வேண்டும்) முதல் 4 மாதங்கள் (ஜூன் துவங்கி) 134 டி.எம்.சி. தண்ணீர் தர முடியாது. மாறாக 97.82 டி.எம்.சி. தண்ணீர்தான் கொடுக்க இயலும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வருகிற ஜூன் 12ஆம் தேதி டெல்லியில் கூடவிருக்கும் காவிரிக் குழுக் (தற்காலிகக் குழு) கூட்டத்தில் இதனைத் தெரிவிக்கப் போவதாகவும், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புத் தரப்பட்டு 5 ஆண்டுகளாகி விட்டதால் _- 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுபரிசீலனை செய்ய அச்சட்டத்தில் இடம் இருப்பதால் மறு பரிசீலனைக்காக மனு போட்டு வழக்கை நடத்தப் போவதாகவும் கூறியிருப்பது

சட்டப்படியும் சரி
நியாயப்படியும் சரி
சரியான நிலைப்பாடு அல்ல.
கண் ஜாடை நடவடிக்கையா?

அதற்குரிய காரணங்கள்:

மத்திய அரசு அமைத்துள்ள குழு ஒரு தற்காலிக ஏற்பாடாகவே உள்ளது. கர்நாடகத் தேர்தலை ஒரு சாக்காக மத்திய அரசு கூறியது. தேர்தல் முடிந்து ஏறத்தாழ ஒரு மாதம் ஆகும் நிலையில், ஏன் இன்னமும் காலதாமதம் _- கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்குச் சாதகமான கண் ஜாடை நடவடிக்கையா?

இக்குழு தற்காலிகக் குழுவாக அமைந்தபோதே நாம் தெளிவாகச் சுட்டிக் காட்டினோம்; இதனால் உருப்படியான எந்தப் பலனும் ஏற்படாது என்று.

அதுபோலவே இது ஒரு கொலு பொம்மைக் காட்சியாகத்தான் அமைந்தது.

உடனடியாக நிரந்தரக் குழுவை, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புப்படி செயல்படுத்த நிபுணர்களைக் கொண்ட நடுநிலை தன்னாட்சிக் குழுவின் மேற்பார்வை _- கண்காணிப்புக்கு விட்டு, நீரை இரு மாநிலங்களுக்கும் அக்குழுதான் அளிக்க ஆணைகள் ஆண்டுதோறும் பிறப்பிக்கப்பட வேண்டும்.

சட்டப்படி அதுதான் சரியான ஏற்பாடாகவே அமையும்.

இந்நிலையில் கர்நாடக அரசு தனது பல்வேறு முட்டுக்கட்டை முயற்சிகளில் ஏற்கெனவே தோல்வி அடைந்து விட்ட நிலையில், புதுக்கரடி ஒன்றை விட்டு, தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமையை மறுக்க நினைக்கிறது!

நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பளித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டதால் மறுபரிசீலனை செய்வோம் என்று கர்நாடக முதல் அமைச்சர் கூறுவது சரியல்ல.

1). இறுதித் தீர்ப்பு என்பது எதிலிருந்து சட்டப்படி கணக்கிட வேண்டுமென்றால், மத்திய அரசிதழில் *(கெசட்டில்) வெளியானதிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகே மறுபரிசீலனையை எந்த மாநிலமும் கோர முடியும்.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளி வந்த நாள் பிப்ரவரி 5,  2007;  அது கெசட்டில் வெளியிடப்பட்ட நாள் பிப்ரவரி 19, 2013 ஆகும். இதன்படி மறுபரிசீலனை மனு 2018இல்தான் போட முடியும்.

2). 2007 முதல் கணக்கிடப்படக் கூடாது; மேலும், நிரந்தரக் குழுவும் இன்னும் அமையவில்லையே! எனவே இது ஒரு திசைத் திருப்பல் நாடகம் ஆகும் _ -இதனை ஏற்கவியலாது. தமிழக அரசே, கருநாடகத்தைப் பார்!

தமிழ்நாட்டில் -_ அனைத்துக் கட்சிக் கூட்டம் எப்பிரச்சினையிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடந்ததே இல்லை.

எத்தனையோ பேர் கத்திப் பார்த்து ஓய்ந்து போனாலும், ஒத்தக் கருத்துகூட கர்நாடகத்தைப்போல எளிதில் இங்கே வராது  என்பது மேலும் வேதனையின் வெந்த புண்ணாகும்!

தமிழ்ச் சமுதாயமே, அந்தோ! உன் கதி இப்படித்தானா? டெல்டா விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முடிவே இல்லையா?

வேதனை! வெட்கம்!

கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *