புறநானூற்றைத் திருத்திய “தமிழ்த் தாத்தா” உ.வே.சாமிநாதய்யர்

மார்ச் 16-31

(புறநானூறு, சீவகசிந்தாமணி போன்ற சங்க இலக்கியங்களையும், பழந்தமிழ் நூல்களையும் பதிப்பித்தவர் டாக்டர் உ.வே. சாமிநாதய்யர். இவ்வரிய பணியைச் செய்த அவர் ஆரிய இனத்திற்குச் சாதகமாக அவற்றில் சில திருத்தங்களையும் செய்தார் என்பது நம்தமிழர்கள் அறியார். எடுத்துக்காட்டாக, புறநானூற்றில் அவர் செய்த குறும்புத்தனத்தைக் கீழே காணும் பகுதி நமக்குத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. தமிழ்த் தாத்தாவை அவர்தம் பணிக்காகக் கொண்டாடும் நம் தமிழ்ச் சான்றோர்கள் கீழ்வரும் பகுதியைப் படித்து அவர்தம் பணியின் பெருமையை அறிந்துகொள்வார்களாக).

ஆறுமுக நாவலரவர்கள் அச்சிட்டுள்ள திருக்குறட் பரிமேலழகருரையில் 110 ஆம் திருக்குறட்கு எந்நன்றி கொன்றார்க்கும் என்ற குறளுரையின்கீழ் எடுத்துக்காட்டிய புறநானூற்றுச் செய்யுளில் குரவர்த்தப்பிய கொடுமையோர்க்கும் என்ற பாடம் காட்டப்பட்டுள்ளது.

புறநானூறு பதிப்பித்த சாமிநாத அய்யரவர்கள் பார்ப்பார்தப்பிய கொடுமையோர்க்கும் எனத் திருத்திவிட்டதுடன் பாடபேதமுங் காட்டாது விட்டனர். பரிமேலழகர் மேற்கண்ட குறளுக்கு விளக்கஞ்செய்யப் புகுந்து பார்ப்பார்த் தபுதல் என்று புகுத்திய ஆரியச் சூழ்ச்சியே இவர் திருத்தியதற்கும் காரணமாகும். இதனைக் குரவர்த்தப்பிய எனப் பாடங்கொண்டால் பொருட் சிறப்புண்மை அறிஞர்க்குப் புலனாகும்.

சிந்தாமணி 252 ஆம் பாட்டில் நச்சினார்க் கினியர் குரவராவார் அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தம்முன் என ஐவர் எனக் குறித்தது ஈண்டு பொருத்த முடைத்தாகும். அன்றி நிகண்டில் ஆரியர் – மிலேச்சர் என்றிருப்பதை அச்சிட்டவர் திருத்திவிட்டன ரென்றும் அநாரியர் – மிலேச்சர் என்றே இருக்கவேண்டுமெனவும் சென்னையில் செய்த ஒரு விரிவுரையில் கூறினதாகப் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தமிழர் யாவரும் அறிந்ததொன்றாகும். இவ்வாறு ஆரியர் தம்மனம் போனவாறு திருத்துதலைத் தமிழர் அறியாமலிருப்பதற்குக் காரணம் தமது தாய்மொழியாகிய தமிழைக் கைவிட்டு அன்னிய மொழியைப் பயின்று தொழில் முயற்சியிலிருந்து காலங்கழிப்பதேயாகும். தமிழரது பணத்தைக் கொள்ளை கொள்ளையாகக் கொண்டு பழந்தமிழ் நூல்களை அச்சிட்டு ஒன்றிற்கொன்பது மடங்குவிலையுடன் நம் தமிழரிடத்திலேயே விற்று மேலும் பொருளீட்டித் தம்மினத்தவராகிய ஆரியரையே பாதுகாத்தலைக் கண்டும் தமிழர் யாவரும் விழியாது தூங்கிக் கொண்டி ருத்தல்வருந்தத் தக்கதாகும்.

குடிஅரசு- 29.09.1929

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *