அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா.வின் எழுத்தோவியம்!

ஜூன் 01-15

மேதாவிகளுக்-கு குஷி வந்துவிட்டால், அவர்கள் சில உண்மைகளை வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.

அது மற்றவர்களுக்கு ஹிம்ஸையாக இருக்கிறது. அதைப்பற்றி யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது. யோசனை புரியாவிட்டால், மேதாவி ஏன் அப்படிச் சொன்னார் என்று கேள்வியைத் திருப்பித் திருப்பிக் கேட்டுக்-கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. மேதாவிகள் தோன்றாவிட்டால், உலகம் எவ்வளவு இன்பத்தோடு தூங்கிக் கொண்டி-ருக்கும்! மேதாவிகள் தோன்றி, இப்பேர்ப்பட்ட உத்தமமான காரியத்தைக் கெடுத்துவிடுகிறார்கள்.

பாருங்கள்! ஒரு மேதாவி, மனித வர்க்கத்தை சந்தையில் கூட்டம் என்று வர்ணிக்கிறார். மனிதனுடைய வாழ்க்கையை எப்படி சந்தை என்று சொல்லுகிறது என்பதைப் பற்றி மற்றவர்கள் தலையைச் சொரிந்துகொண்டே, கொட்டாவிவிட வேண்டியிருக்கிறது. இன்னொரு மேதாவி சொல்கிறார், உலகம் நாடக மேடை என்று. சந்தை போச்சு. நாடக மேடை வந்து சேர்ந்தது. வாலு போச்சு கத்தி வந்தது டம் டம் என்று குழந்தைகள் விளையாடுமே, அந்த சங்கதி மாதிரிதான்!

நாடக மேடையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிற சமயத்தில், பூஜை வேளையில் கரடியை விட்டு ஓட்டுகிற மாதிரி இன்னொரு மேதாவி வந்து, மனித வாழ்க்கையே ஒரு சர்க்கஸ் என்று சொல்லிவிட்டு, நிற்காமல் போய்விடுகிறார். இந்தத் தொல்லைக்கு என்ன செய்கிறது? மூளைக்கு வேலை வைக்கிற இந்த மேதாவிகளைப் படைக்க வேண்டாம் இனிமேல் என்று பிரம்மாவுக்கு தாக்கீது அனுப்பி-விடலாமா? அப்படிச் செய்தால்தான், உலகம் அசல் குறட்டையர் ராஜ்யமாக மாறுவதற்கு இடம் உண்டு.

நாம் எல்லோரும் சர்க்கஸ் பார்த்திருக்கி-றோம். பார்க்காத இரண்டொருவர் இருந்தால், எங்களையும் எப்படிச் சேர்த்துச் சொல்லலாம் என்று அவர்கள் என்பேரில் கோபித்துக்-கொள்ள வேண்டாம். மகா மேதாவி என்று உலகம் போற்றும் காந்தி, சினிமாவே பார்த்ததில்லையாம்! அதேமாதிரி சர்க்கஸ் பார்க்காத புண்ணியசாலிகளும் இருக்கக்கூடும். அவர்களுக்கு நமஸ்காரம்!

சரி, நாம் சர்க்கஸ் பார்த்திருக்கிறோமா? சர்க்கஸ் என்றால் சும்மாவா? சிங்கம், யானை, ஒட்டகம், குதிரை, ஆடு, குரங்கு, கோழி, கழுதை, புலி, பச்சைக்கிளி, கோமாளி, பயில்வான், காசு கொடுத்துவிட்டு இடமில்லாமல் இடி-படுகிறவர்கள், கடைக்கண் நங்கையர்கள், கனைக்கும் இளைஞர்கள், இவைகளைப் பார்த்துப் பொறுக்காமல், இருமிக்கொண்-டேயிருக்கும் பேர்வழிகள் _ இன்னும் எத்தனையோ விசித்திரங்களை சர்க்கஸில் பார்க்கிறோம்.

யானை உரலில் ஏறி நிற்கிறது! சிங்கம் வளையத்துக்குள் புகுந்துபோய், புலிக்குப் பக்கத்தில் படுத்துக் கொள்ளுகிறது! ஒட்டகம் தனது அழகு ஸ்வரூபத்துடன், அரசன் பவனி வருவதைப்போல, உல்லாச நடை போட்டுக் கொண்டு நடக்கிறது. அந்தக் குரங்கு எவ்வளவு அருமையாக கழுதைக்கு முத்தம் கொடுத்து, தன் தெய்வீகக் காதலைத் தெரிவித்துக் கொள்கிறது! தெய்வீகக் காதலாயிருந்தாலும், அதற்கும் ஓர் எல்லையுண்டு என்று சொல்வதைப்போல, கோழி கூவுகிறது. பச்சைக்கிளியும், பயில்வானும் கொஞ்சுகிறார்கள். உண்மையான பச்சைக்-கிளிதான்! உபமான பச்சைக்கிளியல்ல! கோமாளியோ தன் கன்னத்திலேயே அறைந்து  கொண்டு, தன் ஜோட்டைக் கட்டி அணைத்து முத்தமிடுகிறான். இவைகளுக்கு எல்லாம் என்ன பெயர் தெரியுமா? கட்டாயக் கோமாளித்தனம் என்று பெயர். இவைகள் எல்லாம் இயற்கைக்கு மாறான சம்பவங்கள். கட்டாயக் கோமாளித்-தனத்தில், உயிரும் இயற்கையான இன்பமும் கிடையாது.

சர்க்கசிலே இல்லாமல், காட்டிலோ அல்லது வேறு இடங்களிலோ அல்லது சந்தர்ப்-பங்களிலோ, யானை உரலிலே உட்காருமா? சிங்கம் வளையத்துக்குள் பாயுமா? ஒட்ட-கத்துக்கு ராஜப்பவிஷு ஏற்படுமா? குரங்குக்கு கழுதையிடம் வெள்ளப்பெருக்கெடுத்த தெய்வீகக் காதலைக் காண்பிக்க, வேறு சந்தர்ப்பம் ஏது? ஒருவன் தன் ஜோட்டை, தானே முத்தம் கொடுத்துக்கொள்வானா? இவைகள் எல்லாம் கட்டாயக் கோமாளித்தனங்கள் அல்லவா? இவைகள் ஏன் நேர வேண்டும்! கட்டா-யத்தினால், பயம் என்ற கட்டாயமும் பசி என்ற கட்டாயமும் சேர்ந்து, சர்க்கஸிலும் சரி மனித வாழ்க்கையிலும் சரி, பல கோமாளித்தனங்களை உண்டாக்குகின்றன. நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, கட்டாயத்தினால் ஏற்பட்டதால், இந்தக் கோமாளித்தனங்களில் உயிர்ததும்பும் இன்பம் இருப்பதில்லை, இருக்கவும் முடியாது.

அய்யோ பாவி! நம்மைப் பட்டினி போட்டுக் கொன்று, சவுக்கினால் பிய்த்துவிடுவானே என்ற பயத்தினால், சுதந்திரத்தை இழந்த இந்தப் பிராணிகள் கட்டாயக் கோமாளித்தனங்கள் செய்கின்றன.

இந்த மாதிரிக் கோமாளித்தனம் செய்யும்-படியாகக் கஷ்டப்படுத்தும் சர்க்கஸ் எஜமான் கெட்ட எண்ணக்காரனா? இந்தப் பிராணி-களைப் பட்டினிபோட்டு, சவுக்கைக் காண்பித்து பயமுறுத்த வேண்டுமென்பது அவன் எண்ணமா? இல்லை. துன்பமே இயற்கை-யெனும் சொல்லை மனிதர்கள் மறந்து, சிறிது நேரமாயினும் சிரித்துக் கொண்டிருக்கக்கூடாதா என்ற நல்ல எண்ணத்தால், அவன், தனது பிராணிகளைக் கட்டாயக் கோமாளித்-தனங்களில் ஈடுபடும்படிச் செய்கிறான்.

சர்க்கஸ் ஜந்துக்கள் கட்டாயக் கோமாளித்-தனங்களில் ஈடுபடுவதைப் போலவே, மனிதர்-களும் வாழ்க்கையில், அத்தகைய கோமாளித்-தனங்களில் ஈடுபடுகின்றனர். ஒழிந்த வேளையில், நீங்கள் ஊர் சுற்றிப் பாருங்கள். கங்குகரை-யில்லாமல், இந்தக் கோமாளித்-தனங்களைப் பார்க்கலாம்.

நீங்கள் தனியாகப் போகிறீர்களா? அல்லது நானும் கூடவே வந்து, உங்களுக்கு இடங்-களையும் கோமாளித்தனங்களையும் காண்-பிக்கட்டுமா? சரி! நானும்கூட வருகிறேன்.

எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும், பிள்ளையாரை நினைத்துக்  கொள்ள வேண்டும் என்பார்கள். ஆகவே, விக்னேசுவரரின் ஆலயத்துக்குப் போவோம். பிள்ளையாருக்கு முன்னே அதோ, அவர்கள் என்ன செய்கிறார்கள்? தோப்பிக்கரணம் போடு-கிறார்கள் என்றா சொல்லுகிறீர்கள். அதென்ன விசித்திரமாயிருக்கிறதே! பிள்ளையாரை பழிப்பு காண்பிக்கிறது மாதிரி அல்லவா செய்கிறார்கள் அந்த தோப்பிக்கரணத்தை? அது வித்தையா? வேடிக்கையா? பக்தியா? இவர்கள் பக்தியைக் கோமாளித்தனம் செய்கிறார்கள்.

இது ஒரு வகைக் கட்டாயக் கோமாளித்தனம். காலையும் உடம்பையும் ஏதோ வித்தை செய்து, பிள்ளையாருக்குத் தங்கள் தோப்பிக்கரண பக்தியைக் காண்பிக்கின்றார்களாம்! இவ்வாறு கோமாளித்தனம் செய்யும்படியாக, இவர்களை யார் கேட்டுக் கொண்டார்?

கோவில் திருக்குளத்தின் படிக்கட்டின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, சிலர் முணுமுணுத்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்களே? அது என்ன? அவர்கள் ஜபம் செய்து, தியானம் பண்ணுகிறார்களாம்! அப்படியா? அப்படியானால், கண்ணை மூடிக்-கொண்டு, தியானம் அழகாகச் செய்கிறதுதானே? உங்கள் வீட்டில் மாடு கறக்கிறதா? பிள்ளை இந்த வருஷம் பி.ஏ.,க்குப் போயிருக்கிறானா என்று கேட்டுக்கொண்டே, தியானம் சாங்கோபாங்கமாக நடந்து-கொண்டே-யிருக்கிறதோ? இதை, கோமாளித்-தனம் என்று சொல்லாமலிருக்க முடியுமா?

ஜபதபம் செய்தால் மனிதன் மேம்பாடு அடைகிறான் என்றும் அந்தக் கடமையைச் செய்யத் தவறினால், நரகத்துக்குப் போக-வேண்டுமே என்றும் கேள்விப்படும் பரம்பரை என்ற கட்டாயத்தால், இப்பேர்ப்-பட்ட கோமாளித்தனம் ஏற்படுகிறது என்று சொல்லாம். காரணம் எதுவாயிருந்தால் என்ன? இப்பேர்ப்-பட்ட பேர்வழிகளுக்கு நியாயம் என்பது என்ன? ஜபம் என்ன? என்று தெரியவில்லை. அர்த்தம் விளங்காத ஒரு செயலில், அசட்டுத்தனத்தோடோ அல்லது அகம்பாவத்தோடோ ஈடுபடவேண்டுமானால், அது கட்டாயத்தால் ஏற்படும் பயத்தினால்தான்.

கடைவீதிக்குப் போவோம். அங்கே, வியாபாரத்தின் பொருட்டு, எத்தனை வகைக் கோமாளித்தனங்களைப் பார்க்கலாம் தெரியுமா? ஏதோ பீடியோ, ஜாடியோ என்று சொல்லிக்-கொண்டு, வயிற்றைப் பிடித்துக்கொண்டு அலறும் சில அவலட்சணமான உருவங்களைப் பார்க்கலாம். முகத்திலே ஒரு பக்கத்திலே நாமம்; மற்றொரு பக்கத்தில் விபூதி, அடி புருவத்தின் பக்கத்தில் குங்குமம். வலது கைப்புறத்திலும், வலது கால் புறத்திலும் ஒருவகை உடுப்பு. தேகத்தின் மற்றொரு பக்கத்தில் இன்னொரு-வகை உடுப்பு. குரலோ, தொண்டை கிழிந்து போகும்படியாக, அவ்வளவு ஆபாசமான குரல். இத்தனை கோமாளித்தனங்களும் பசி என்ற கட்டாயத்தால் அல்லவா?

எத்தொழிலை எடுத்துக் கொண்டாலும், இந்தக் கட்டாயக் கோமாளித்தனம் செழித்-தோங்கியிருப்பதைக் காணலாம்.

பழைய காலத்து நாடகங்களில் விதூஷகன் என்று தனியாக ஒரு பாத்திரம் இருப்பதைப் பார்க்கலாம். அச்சுப்பிழை அட்டவணை இல்லாத புஸ்தகம் புஸ்தகத்தில் சேர்ந்ததா என்று வேடிக்கை செய்வதுண்டு. அதுபோல தனி விதூஷகன் _ அதாவது, தனி விகடகவி இல்லாத நாடகத்தைப் பண்டைக் காலத்தில் பார்க்க முடியாது. நாடக மேடையில், இந்தப் பேர்வழி ஒதுக்குப்புறமாக, ஒரு மூலையில் நின்றுகொண்டு, மேடையில் வந்து நடிக்கும் பாத்திரங்களோடெல்லாம் உல்லாசமாகப் பேசிக்கொண்டேயிருக்க வேண்டியது!

இதைக் கொடுமை என்றே சொல்ல-வேண்டும். ஒரு மனிதனை விதூஷகனாக _ அதாவது கோமாளியாக இரு என்று கட்டா-யத்துக்கு ஆளாக்குவது மகாபாவமாகும்.  கட்டாயக் கோமாளித்தனத்துக்குப் பலியாகும் இந்தப் பேர்வழிகளைக் கண்டால், அவர்களிடம் யாருக்குத்தான் அனுதாபம் ஏற்படாது?
நாடகத்தில் மாத்திரமல்ல, ராஜசபையிலும் விகடகவி இருப்பதுண்டு. ராஜ அங்கங்களில் விகடகவியும் ஓர் அங்கமாம்! பண்டைக் காலத்து அரசர்களுக்கு பொழுது போவது, சாப்பிட்டது ஜீரணமாவது, கஷ்டமாம். இந்த இரண்டுக்கும் சிரிப்பு தக்க ஔஷதமல்லவா? அரசனுக்கு ஜீரணம் ஆவதற்கும், பொழுது போவதற்கும் ஆதரவா-யிருக்கும் விதூஷகன்பாடு எப்பொழுதும் திண்டாட்டமே! அவன் கட்டாயக் கோமாளியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறதல்லவா?

எப்பொழுது பார்த்தாலும், எப்படியாவது சிரிப்பு மூட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்று ஒருவன் கட்டாயப்படுத்தப்பட்டால், அவன் விகடகவியாக இருக்க முடியாது. அவன் கட்டாயக் கோமாளியாகிவிடுகிறான். அரண்-மனை விதூஷகன் சேவகனுக்குச் சமானமாக ஆகிவிடுகிறான்.

விதூஷகன் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருக்-கிறான். ஒரு பெண் வருகிறாள். பெண்ணுக்கும் விதூஷகனுக்கும் சம்பாஷணை.

பெண்: விதூஷகரே! மகாராஜா எங்கே?
விதூஷகன்: இருக்கிற இடத்தில் இருப்பார்.
பெண்: எப்படி அந்த இடத்தைக் கண்டுபிடிக்கிறது?
விதூஷகன்: தேடிப் பார்த்து!
பெண்: உங்களுக்குத் தெரியாதா?

விதூஷகன்: தெரிந்தாலும், உனக்கு எதற்காகச் சொல்லவேண்டும்? இவ்வாறே கசாமுசாவென்று பேசிக்கொண்டு போய், விதூஷகன் கோமாளித்தனமாய், அந்தப் பெண்ணுக்கு முத்தம் கொடுக்கிறான். பெண் பாவனைக் கோபம் காண்பிக்கிறாள். உனக்கு என் முத்தம் பிடிக்காவிட்டால், அதைத் திருப்பிக் கொடுத்துவிடு என்று விதூஷகன் பல்லைக் காட்டுகிறான்.

ராஜசபை விதூஷகன் கட்டாயத்துக்கு ஆளாகி, அவன் அபத்தமான கோமாளித்-தனங்களை எல்லாம் செய்ய நேரிடுகிறது. கட்டாயம் என்பது ஆவேசமாகுமா? சித்திர-வதை செய்து உண்மையை, குற்றம் சாட்டப்-படுபவனிடமிருந்து வாங்கிவிடலாம் என்று நினைப்பது எவ்வளவு அபத்தமானது? விதூஷகனிடமிருந்து கட்டாயமாய் விகடத்தை எதிர்பார்ப்பது அவ்வளவு அபத்தமாகும்.

கட்டாயக் கோமாளித்தனம், ஒரு விசித்திர-மான நிகழ்ச்சி. நாடு காப்பதற்காக, அரசாங்கம் ராணுவத்தை உண்டாக்குகின்றது. ராணு-வத்தைச் சேர்ந்த சிப்பாய்கள், கற்பனை எதிரியை மனதில் நினைத்துக்கொண்டு, நடை முதலியவைகளைப் பழக்கிக் கொள்ளுகிறார்கள். போர்க் காலங்களில் தவிர, சாதாரண காலங்-களில்கூட இந்த வீரர்கள், பல சந்தர்ப்-பங்களில், பல சமயங்களில், கோமாளிகளைப் போல நடந்துகொள்ளுவதை நீங்கள் பார்க்கலாம். கட்டாயப் பழக்கத்தால், போர்க்காலத்துக்கும் சமாதானத்துக்கும் வித்தியாசம் இவர்களுக்குத் தெரிவதில்லை-போலும்!

சிரிப்பை உண்டாக்கி, துக்கத்தைப் போக்கடிக்க வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும். சிரிப்பைப் பார்த்து, எதிரே வரும் ஆபத்தும் பயந்து விலகிப் போகும். ஆனால் சிரிப்பை உண்டாக்குவதற்காக, கட்டாயக் கோமாளித்தனத்தில் இறங்கிவிடுவது கூடுமா?

வாழ்க்கையின் எல்லாத் துறையிலும் கட்டாயக் கோமாளிகள் இருக்கிறார்கள். எழுத்-தாளர்களிலும் ஆசிரியர்களிலும்  கட்டாயக் கோமாளிகள் இருக்கிறார்கள். படாடோபமாகப் பெரிய பெரிய வார்த்தை-களைத் தடபுடலாகப் பிரயோகம் செய்து, கட்டுரைகளோ, கதைகளோ எழுதினால், வாசக நண்பர்களைப் பிரமை தட்டும்படிச் செய்து மயக்கிவிடலாம் என்று சில எழுத்தாளர்கள், பச்சைக் குழந்தைகளைப்போல எண்ணிக்-கொண்டு இருக்கிறார்கள். இவர்கள், நாளுக்கு நாள், தங்கள் எழுத்தின் சுருதியை துரிதப்-படுத்திக் கொண்டே போய், கோமாளித்-தனமான முறையில் எழுதும்படி நேரிடுகிறது.

-சின்னஞ்சிறு சொற்களை, வைரத்தைப்போல தக்க இடத்தில் பதித்து, எழுத்தைப் பிரகாசிக்கச் செய்ய முடியும் என்பதை நமது பாரதியார் சந்தேகத்துக்கு இடமில்லாமல் காண்-பித்திருந்தும், படாடோபத்தில் ஆசை வைத்து,  கட்டாயக் கோமாளித்தனமான எழுத்தில், பல எழுத்தாளர்கள் இறங்கிவிடுகிறார்கள். படாடோபத்தால் எதிரியைப் பயமுறுத்த எண்ணி, தாங்கள் கோமாளிகளாகி விடுகிறார்கள். இது ஒருவகைக் கட்டாயக் கோமாளித்தனம். எழுத்தில், இன்னொருவகைக் கோமாளித்-தனம் இருக்கிறது. வாசக நண்பர்களுக்கு இன்பம் ஊட்ட வேண்டுமென்ற நல்ல எண்ணத்-துடன், சிலர் விகடமாக எழுதத் துணிகிறார்கள். விகடம் என்பது சந்தையில் காசு கொடுத்து வாங்கக்கூடிய  பொருள் அல்ல. சமயம், சந்தர்ப்பம், ஜனங்களின் மனோநிலை, எழுத்தாளனுடைய உற்சாகங்-கொண்ட சக்தி, விஷயம் _ இவைகளைப் பொறுத்திருக்கிறது விகடம்.

சில விஷயங்களைக் கேலி செய்யவே படாது. சில பேர்வழிகளைப்பற்றி விகடம் செய்யக்-கூடாது. சில ஸ்தாபனங்களைப் பற்றிச் சில்லறைத்-தனமாகப் பேசக்கூடாது. உண்மை என்பது என்ன என்று உலகத்தில் இன்னும் நிர்ணயமாகாவிட்டாலும், அதைப்பற்றிக் கேலி செய்வது தவறு. தாய் தகப்பன்மார்களைப் பற்றி விகடம் செய்யலாகாது. சயன்ஸ் சம்பந்தமாக உழைக்கும் ஸ்தாபனங்கள் சில்லறைத்தனமாகப் பேசப்படாது. பேசினால், அது கட்டாயக் கோமாளித்தனமாகும்.

விகடத்தையும் குறிப்பாகச் சொன்னால்தான் ரஸமாயிருக்கும். கள்குடியன், ரோட்டில் தள்ளாடி நடந்து, கீழே விழுந்துவிடுகிறான் என்பதைச் சொல்ல வேண்டும் என்று வைத்துக் கொள்ளுவோம். இதைச் சிரிப்புண்டாக்கும்-படியாகச்  சொல்லவேண்டு-மென்று நினைத்து, இப்படி ஒருவர் எழுதினால், அது ரஸமா யிருக்குமா என்று பாருங்கள்.

ஆறுமுகம், மாலை வேளையில் சர்க்காருக்குச் செலுத்த வேண்டிய கட்டாய வரியைக் கொடுத்துவிட்டு, ஆனந்தபுட்டியில் நுழைந்தான், வீட்டுக்கு டான்ஸ் ஆடிக்-கொண்டே போனான். டான்ஸைக் காட்டிலும், பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்துகொண்டு போனால், உடலுக்கு உறுதி. வழியும் சுருங்கும் என்று நினைத்து, ரோட்டை, உடம்பால் அளக்க ஆரம்பித்தான்.

இந்த மாதிரி எழுதிக்கொண்டே போனால், எழுத்து கட்டாயக் கோமாளித்தனமாகத்தான் முடியும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டாயமில்லாத கோமாளித்தனத்துக்கு ஒரு சிறு கதை. இருட்டி இரண்டு நாழிகை இருக்கும். செட்டியார் வீடு. அந்த வீட்டில் திருட, திருடன் வாயில்பக்க சாளரத்தில் ஒளிந்து கொண்டிருக்-கிறான். இதை செட்டியார் பார்த்துவிட்டார். பெண்சாதியைக் கூப்பிட்டு, தன் வாய் நாறுகிறதென்றும் வாய் கொப்பளிப்பதற்கு நீர் வேண்டும் என்றும் சொன்னார். அந்த அம்மாள் ஒரு குடம் நீர் கொண்டு வந்தாள். அந்த நீர் முழுதையும், செட்டியார் திருடன் பேரில் காறிக் காறித் துப்பினார். இந்த மாதிரி அய்ந்தாறு குடம் ஆயிற்று. பெண்சாதிக்குக் கோபம் வந்தது. அவள் கோபித்துக் கொண்டாள். செட்டியார் அவள் பேரில் தூ என்றார். அவளுக்கு அடங்காத கோபம். அட பைத்தியமே, நீ, நான் தொட்டுத்தாலி கட்டின பெண்சாதி, தூ என்று ஒரு தரம் காறித் துப்பினால் பொறுக்க-மாட்டேன் என்கிறாய். இதோ நிற்கிறான் பொறுமைசாலித் திருடன். நான் ஆறு குட நீரையும் காறி அவன் பேரில் உமிழ்ந்தும், அவன் பொறுமையை இழக்காமல் இருக்கிறான் என்று செட்டியார் சிரித்துக் கொண்டே சொன்னார்.

இதைத்தான் ரஸமான கோமாளித்தனம் என்று சொல்லலாம். கட்டாயக் கோமாளித்-தனத்-தால், சந்தோஷம் உண்டாகாது, உற்சாகம் உண்டாகாது. உயிரே நீடித்து இருக்குமோ என்பது சந்தேகம்.

(நன்றி: புதிய பார்வை மே 16-31 2013)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *