கலைஞர் – 90

ஜூன் 01-15

இந்திய அரசியல் வரலாறு காணாத அதிசயமாய் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் கலைஞர். இந்த ஜூன் 3இல் 90 அகவையையைத் தொட்டிருக்கிறார். கலைஞரின் வாழிவில் நடந்த சுவையான நிகழ்வுகள் சில இங்கே :

வாரியாரைத் திணறடித்த மாணவர்

திருவாரூர் கோயில் கதாகாலட்-சேபத்தின் போது திருமுருக கிருபானந்த வாரியார் உயிர்க்கொலை செய்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். உயிர் உள்ளவைகளை உயிரோடு இருக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மாணவர் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது தங்களுக்குத் தெரியாதா-? என்றார்.

வாரியார்: கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி போன்றவைகளைப் பறித்துத்தான் சாப்பிடுகிறோம். இது உயிர்க்கொலை ஆகாது. ஆட்டையும், மாட்டையும் கொலை செய்து சாப்பிடக்கூடாதென்பதற்காகத்தான் ஆண்டவன் தாவரங்களைப் படைத்தார். தளதளவென்றிருக்கும், வாழைமரத்தை வெட்டி, வாழைத்தண்டை உண்பதும், தழைத்து நிற்கும் கீரைத் தண்டைப் பிடுங்கிச் சாப்பிடு-வதும், உயிர்க்கொலை அல்லவா? நமக்குத்தான் தாவரங்களை ஆண்டவன் படைத்தார் என்றால் சிங்கம், புலி போன்ற மிருகங்களுக்காக எவைகளைப் படைத்தார்? என்று அந்த மாணவர் கேட்டதும், வாரியார் திக்குமுக்-காடினார் _ திகைத்தார். தன் கையில் அணிந்திருந்த _ முருகா! முருகா! எனப் போட்டிருந்த தங்கச் சங்கிலியைத் தடவிக் கொண்டார். வெள்ளிக் கூஜாவில் வைத்திருந்த தண்ணீரைக் குடித்தார்.

மேலும் தர்க்கம் நடவாமல் இருக்க, கோயில் அறங்காவலர் வடபாதிமங்கலம் மைனர் வி.எஸ். தியாகராச முதலியார் சில பிரமுகர்களை அனுப்பி அந்த மாணவரை வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். 1943ஆம் ஆண்டு நடந்த இந்த வாக்கு-வாதத்தின் விளைவாகத் திருவாரூர் இளைஞர்-களிடையே உற்சாகமும், பெரியோர்களிடையே பரபரப்பும், தி.க. தோழர்களிடையே மேலும் நெருக்கமான தொடர்பும், ஒற்றுமையும் ஏற்படுத்திவிட்ட அந்த மாணவர்தான் இன்றைய கலைஞர் என்கிறார் டாக்டர் இரா.விஜயராகவன்.

மூச்சுக்கு மூச்சு நகைச்சுவை

இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற _ சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர். 2004இல் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்தபோது டாக்டர் ஒருவர் தம் பிடிக்கச் சொல்லிவிட்டு, மூச்சை நிறுத்துங்கள் என்றாராம். உடனே கலைஞர், மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கேன் என்றாராம். டாக்டர் குழுவே வாய்விட்டுச் சிரித்ததாம்.

சோதனை முடிந்த பிறகு, இப்போது மூச்சை விட்டுவிடுங்கள் என்றாராம் டாக்டர்.

மூச்சை விட்டுவிடக்கூடாது என்பதற்காகத்-தானே உங்களை அழைத்திருக்கிறோம் என்றாராம் கலைஞர்.

மீண்டும் விழுந்து விழுந்து சிரித்ததாம் டாக்டர் குழு. இதைக் கலைஞர் எனக்குச் சொன்னபோது மட்டுமல்ல, இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

வள்ளுவனுக்குக் கோட்டமும், சிலையும் அமைத்தவர், குறளோவியம் வரைந்தவர் குறள் நெறியில்தானே செல்வார்.

வசனத்தை மாற்றமுடியாது; நடிகையை மாற்று

குறவஞ்சி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம். வில்லனிடம் சிக்கிய இளம்பெண், அவனிடமிருந்து தப்பிட அவள் எவ்வளவோ முயற்சிக்கிறாள். பயனில்லை. இந்தக் கட்டத்தில் அவள், கடவுளே! உனக்குக் கண்ணில்லையா? என்று சொல்லிக் கதற வேண்டும். இளம்பெண்ணாக நடித்த நடிகை, இந்த வசனத்தைச் சொல்ல மாட்டேன். வேறு ஏதாவது மாற்றுங்கள் என்றார் திடீரென்று.

நல்லவேளையாக அப்போது செட்டில் கலைஞர் இல்லை.நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம், பயனில்லை. கடவுளைத் தூஷிக்கும் அந்த வசனத்தை நான் பேசமாட்டேன் என்று அடியோடு மறுத்து விட்டார். பக்கத்து செட்டில் வேறொரு படப்பிடிப்பில் இருந்த பண்டரிபாய், நிலைமையை உணர்ந்து, இது ஆண்டவனிடம் முறையிடுவது போல்தானே தவிர, தூஷிப்பதாகாது. அந்த வசனத்தைப் பேசி நடியும்மா! என்று எவ்வளவோ சொல்லியும், அவரது அறிவுரைக்கும் அந்த நடிகை இணங்கவில்லை.

அந்த நேரம் பார்த்து, கலைஞர் எதேச்சையாக வந்து விட்டார். நிலைமையை விளக்கினோம். என்ன, அந்த வசனத்தைப் பேசி நடிக்க மாட்டீர்களா? என்று கலைஞர் கேட்டார்.

வேறு ஏதாவது மாற்றி எழுதுங்கள். பேசுகிறேன்! என்று கலைஞரிடமே கூறிவிட்டார் அந்த நடிகை.

என் வசனத்தையே மாற்றச் சொல்கிற அளவுக்கு இருக்கிற நீங்கள் இந்தப் படத்தில் நடிக்கவே தேவையில்லை. உங்களை மாற்றி வேறு யாரையாவது போட்டுக் கொள்கிறோம். நீங்கள் வீட்டுக்குப் போகலாம்! என்று கூறிவிட்டார் கலைஞர்.

இந்த நடிகையைப் போட்டு அய்யாயிரம் அடி வரை எடுத்திருக்கிறோமே…… என்று அச்சத்துடனேயே கலைஞரிடம் சொன்னேன். அந்த ஃபிலிமைக் கொளுத்திவிட்டு, இந்த காரெக்டருக்கு வேறு நடிகையைப் போட்டுப் படம் எடுங்கள் என்று கூறிவிட்டுப் போய் விட்டார். தன்னுடைய உயிரான எழுத்துகளை நம்மைவிட உயர்வாக மதிப்பவர் கலைஞர்  என்பதற்கு இது ஓர் உதாரணம் என்கிறார் மாயூரம் சௌந்தர்.

தொகுப்பு : சபீதா ஜோசப்
நன்றி : கலைஞர் 100 – நக்கீரன் வெளியீடு

 

கலைஞர் மொழி :

பிழைப்பு

வயிற்றுப் பிரச்சினையை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும் எனக் கருதுவது வாழ்வாகாது! அதற்குப் பெயர் பிழைப்பு! வாழ்க்கை அல்ல!

ஆண்டவன்

புலிக்கு ஆட்டை இரையாகப் படைத்தவனுக்குப் பெயர்தான் ஆண்டவன் என்றால்…..
ஆண்டவன் அவ்வளவு இரக்கமற்றவனா?

அனுதாபம்

ஒருவன் சாணத்தை எடுத்து நம்மீது வீசுகிறான். அது நமது சட்டையில் படுகிறது.
அப்போது நமக்கு ஏற்பட வேண்டியது ஆத்திரமல்ல. அதற்குப் பதிலாக சாணம் வீசியவன் தன் கையையல்லவா கறைப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்ற அனுதாபம்தான் ஏற்பட வேண்டும்.
இழிமொழிக்கு இழிமொழி எதிர்த்துக் கூறிவிடுவது சுலபம்! அதைத் தாங்கிக் கொள்வதுதான் கடினம்!
அந்தக் கடினமான வேலைக்கு நம்மை நாமே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

புகழ்

புகழே! நீ பனிக்கட்டி, உன்னைக் கைக்குள்ளே வைத்துக் கெட்டியாகப் பிடித்திருந்தாலும் நீராகக் கரைந்து மறைந்து விடுகிறாய், புகழே! நீ ஒரு மதுக்கலயம், உன்பால் விழுந்தவர்கள் எழுந்ததே இல்லை! புகழே! நீ நிழல், உன்னைப் பற்றிக் கவலைப்படாதவர்களைத் தொடர்ந்து கொண்டே இருப்பாய்!

தகுதி

மனிதர்கள் பேசுகின்ற வார்த்தைகளிலேயிருந்து அவர்களின் தகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *