இராவண லீலா வழக்கு குறித்த தீர்ப்பு பற்றி சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன். மேலும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது:
இரண்டாவது சாட்சி இராஜாராம் என்பவர் (புட்செல் டி.எ.ஸ்.பி.) தனது சாட்சியத்தில், 25-.12.74 அன்று திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் இராமன், சீதை, லட்சுமணன் ஆகியோரது உருவங்களுக்குத் தீயிடப் போவதாக அறிந்து
அங்கு சென்றதாகவும், அந்த சம்பவம் இந்துக்களின் மனதை புண்படுத்தும் என்று கருதி அங்கு காவல் பணியில் இருந்ததாயும், இது விபரமாகத்தான் தனது மேல் அதிகாரிக்கு என்.பி.3 தகவல் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். அவர் எ.ஓ.1 சவுக்குக் கம்புகளை கைப்பற்றியுள்ளார்.
மூன்றாவது சாட்சியான இராமச்சந்திரன் என்பவர் சென்ட்ரல் கிரைம் பிரிவில் ஆய்வாளர். அவர் சம்பவத்தன்று ஸ்தலத்திற்குச் சென்று சம்பவத்தைக் குறித்து எக்.பி. 4, 5 போட்டோக்கள் எடுத்ததாயும் (எக்.பி. 6, 7 ஆகியவைகள் நெகடிவ்கள்) எக்.பி. 7 பெரியார் நினைவு மலரை கைப்பற்றியதாயும் சாட்சியத்தில் கூறியுள்ளார்.
நாலாவது சாட்சியான சுப்ரமணியம் என்பவர் இந்த வழக்கு சம்பந்தமாக அரசாங்கத்திடமிருந்து எச்.பி.8 உத்தரவு பெற்று எதிரிகளின்மீது மேலே கூறியவாறு குற்ற இயல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளார். சாட்சிகள் சொன்னதுபற்றி எதிரிகளைக் கேட்டபோது அவர்கள் தனித்தனியாக வாக்குமூலங்கள் கொடுத்திருக்கிறார்கள்.
மேற்படி சாட்சியங்களையும் ஆவண சான்றுகளையும் பரிசீலனை செய்து பிறகு கீழ்க் கோர்ட்டில் எதிரிகள் மேற்கூறிய சட்டப் பிரிவுகளின்படி குற்றவாளிகள்தான் என்று தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்கு ஏற்கெனவே கூறியவாறு தண்டனையும் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து எதிரிகள் இந்த மேல் முறையீடுகளைச் செய்துள்ளனர்.
ஆகவே, இந்த மேல்முறையீட்டில் எதிரிகள் ஒரு சட்ட விரோதமான கும்பலில் இருந்தார்களா என்றும், ஒரு வகுப்பாரின் மதத்தையோ அல்லது மதநம்பிக்கையையோ புண்படுத்தும் பொருட்டு ஒரு குரோதமான உட்கருத்துடன் நடந்து கொண்டார்களா என்றும் பார்க்க வேண்டும்.
நீதிபதி தனது தீர்ப்பில் தொடர்ந்து கூறியதாவது:
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லா எதிரிகளும் திராவிடர் கழகம் என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அந்த இயக்கம் தந்தை பெரியார் என்று அழைக்கப்-படும் ஈ.வெ. ராமசாமி பெரியார் அவர்களால் நடத்தப்பட்டு வந்தது என்பதும், எக்.பி.7 பெரியார் நினைவு மலர் என்ற புத்தகத்தின் மூலம் நன்கு புலனாகிறது. மேலும் அந்த இயக்கம் சமுதாயத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவதற்காகவும், அதற்குத் தடையாய் இருக்கும் மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பதற்காகவும், மூடப்பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் இதிகாசங்களையும், புராணங்-களையும் கீழ்மட்டத்தில் உள்ள மக்கள் மத்தியில் விமர்சித்தும் பல்லாண்டுகளாக பொதுக்கூட்டங்களில் பேசியும், புத்தகங்களில் எழுதியும் வந்துள்ளது. அவர்களுடைய கருத்துகள்படி இராமாயண காவியத்திலுள்ள சில பாத்திரங்களின் நடவடிக்கைகள் மனித வாழ்க்கைக்கு ஒவ்வாததாக உள்ளது என்று கூறப்படுகிறது. இது விஷயமாக இராமாயண
கதா-பாத்திரங்கள் என்று ஒரு புத்தகம் பல நாட்களுக்கு முன்பே வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது பல மொழிகளிலும் வெளியிடப்பட்டு இருக்கிறது என்றார் நீதிபதி. இது விஷயமாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டு அந்த வழக்கில், ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு தனது கொள்கை-களையும், கருத்துகளையும் சொல்லுவதற்கும், எழுதுவதற்கும் உரிமை இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் தந்தை பெரியார் அவர்கள் சுமார் 50 ஆண்டு காலமாக தன்னுடைய கொள்கைகளை வற்புறுத்தி வந்துள்ளார். ஆயுட்காலத்தில் அவர் சீர்திருத்தக் கொள்கைகளைப் பேசியும் எழுதியும் வற்புறுத்தி வந்துள்ளார். அவர் மறைவுக்குப் பிறகு அவர் வழி வந்த தொண்டர்கள் அவர் கொள்கைகளை கடைப்பிடித்துச் செயலாற்றி வருகிறார்கள். எதிரிகளின் வாக்குமூலத்தின்படி அவர்கள் இந்திய தலைநகர் டில்லி மாநகரில் ஆண்டு-தோறும் இராமலீலா மைதானத்தில் கொண்டாடப்-படும் இராமலீலா என்ற விழாவில் இராமாயண கதாபாத்திரங்களான இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோருடைய உருவங்கள் தீயிட்டுக் கொளுத்தப்படுவதாயும், அது ஆண்டுதோறும் நடந்து வருவதாயும் அதேபோல் செய்வது தென்னிந்திய மக்களின் மனதைப் புண்-படுத்துகிறது என்று தெரிவிக்கும் பொருட்டு சென்னை பெரியார் திடலில் இராவண லீலா என்ற விழா கொண்டாடப்பட்டது என்றும் கூறியிருக்கிறார்கள். இராமலீலா விஷயமாக தாங்கள் இந்திய அரசுக்கு பல கடிதங்கள் எழுதியும்கூட அரசு தக்க நடவடிக்கை எடுக்காததால் தங்களுடைய கொள்கைகளை வலியுறுத்துவதற்காக, தாங்கள் போற்றி வந்த இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித்து ஆகியவர்களுக்கு விழா எடுக்க இராவண லீலா என்ற விழா கொண்டாடி அதில் தாங்களே செய்த இராமன், சீதை, லட்சுமணன் ஆகியோருடைய பொம்மைகளுக்கு தங்களுடைய இடமான பெரியார் திடலிலேயே தீயிட்டு விழா கொண்டாடியதாக சொல்லி-யிருக்கிறார்கள். ஆகவே, தாங்கள் எந்த வகுப்பாரையும் புண்படுத்த வேண்டும் என்ற உட்கருத்துடன் இதனைச் செய்யவில்லை என்று கூறுகிறார்கள். எதிரிகள் மீது சாட்டப்பட்ட குற்றங்களைக் குறித்து விசாரிக்கப்பட்ட சாட்சிகளில் முதல் சாட்சியான பிரேம்குமார் என்பவர் மில்லில் வேலை செய்து வருபவர்.
அவர் விடுதலை பத்திரிகையில் இராவண லீலா விழா பெரியார் திடலில் 25.12.74 அன்று நடக்க இருப்பதாக அறிந்து அன்று தன் நண்பருடன் சென்று பெரியார் திடலில் மேற்படி விழா நடந்ததை கண்டதாக சாட்சியம் அளித்திருக்கிறார். ஆனால், அவர் தனது குறுக்கு விசாரணையின்-போது, தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றும், மத உணர்ச்சி இல்லை என்றும் இந்த விழாவினால் தனது உணர்ச்சி ஒன்றும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
2-ஆவது சாட்சி பாதுகாவலுக்கு இருந்தவர். அவர் இந்த விழாவிற்கு அனுமதி வழங்கப்-பட்டது என்று கூறியுள்ளார். 3ஆவது சாட்சி வேப்பேரி காவல் நிலைய குற்றவியல் பிரிவு ஆய்வாளர். அவர் இந்த வழக்கில் நடவடிக்-கைகள் எடுத்திருக்கிறார். 4ஆவது சாட்சி அரசாங்க உத்தரவின்படி எதிரிகளின்மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த சாட்சிகள் யாரும் இந்த வழக்கில் விசாரிக்கப்படவில்லை.
ஆகவே, இந்த வழக்கில் உள்ள சாட்சியங்-களை பரிசீலித்துப் பார்க்கும்போது எதிரிகள் எந்த சட்ட விரோதமான கும்பலிலும் இருந்து கொண்டு எந்த ஒரு வகுப்பினரின் மத உணர்வுகளையும் திடுக்கிடும் வகையில் புண்-படுத்தும் பொருட்டு வேண்டுமென்றே குரோதமான உட்கருத்துடன் அந்த வகுப்பாரின் மதநம்பிக்கை-களை நிந்திக்கிற வகையில் நடந்துகொள்ளவில்லை என்பது நன்கு புலனாகிறது என்றார் நீதிபதி.
நீதிபதி மேலும் கூறும்போது,:
இந்த சம்பவம் அரசாங்க அனுமதியுடன் திராவிடர் கழகத்திற்குச் சொந்த இடமான பெரியார் திடலில் முன்னறிவிப்புடன் குறிப்-பிட்ட நேரத்தில் நடந்திருக்கிறது. ஆனால், அந்த சம்பவம் யாருடைய மனத்தையாவது புண்படுத்தியதாக சாட்சியங்கள் இல்லை, இந்த விழாவானது, டில்லியில் நடந்த இராம லீலா என்ற விழாவிற்குப் போட்டியாக ஒரு விழாவாக நடந்திருக்கிறது.
மேலும் இந்த நிலையில்லாது மாறிக் கொண்டிருக்கும் உலகத்தில் மனித சமுதாயமும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. அவ்வாறு ஒரு காலத்தில் ஏற்பட்ட கருத்துகள் பிற்காலத்தில் ஒப்புக்கொள்ள முடியாததாக இருக்கலாம். மனித சமுதாயத்தில் பல்வேறு மக்கள் பல்வேறு சிந்தனைகள் உள்ளவர்களாக இருக்கலாம். இவைகளைப் பற்றி ஒரு மனிதன் சிந்திப்பதற்கும், பேசுவதற்கும், எழுதுவதற்கும் உரிமை உள்ள இந்த அமைப்பில் எதிரிகளுடைய இயக்கமானது தங்களுடைய கருத்துகளை வெளியிடும் பொருட்டு இராவண லீலா என்ற விழாவினை ஏற்பாடு செய்து அதை அவர்களுக்கு உகந்த முறையில் கொண்டாடி இருக்கிறார்கள். உண்மையிலேயே மேற்படி சம்பவத்தால் இந்து மதத்தில் ஒரு சார்பாருக்கு மனம் புண்பட்டு இருக்குமானால் அங்கு கலவரங்களும், எதிர்ப்புகளும் இருந்திருக்கும். அப்படி ஒன்றும் அங்கு கலவரங்களோ, எதிர்ப்புகளோ இருந்ததாக யாதொரு சாட்சியங்களும் இல்லை. இரண்டாவது சாட்சி இந்த விழாவிற்கு போலீசார் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் சம்பவம் நடந்தது 25.12.1974. ஆனால், இந்த வழக்குத் தொடர அரசாங்கம் உத்தரவிட்ட தேதி 26.3.1976. சுமார் 15 மாதங்களுக்குப் பிறகுதான் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த கால தாமதம் விளக்கப்படவில்லை என்றார் நீதிபதி.
நீதிபதி மேலும் கூறியதாவது:
ஆகவே, மேலே கூறிய காரணங்களுக்காக எதிரிகள் ஒரு சட்டவிரோதமான கும்பலில் இருக்கவில்லை என்றும் அவர்கள் ஒரு வகுப்பாரின் மதத்தையோ அல்லது மத நம்பிக்கையையோ புண்படுத்தும் வகையில் ஒரு குரோதமான உட்கருத்துடன் நடந்து கொள்ள-வில்லை என்றும் கருதி அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று தீர்மானிக்கிறேன்.
முடிவாக அந்த மேல்முறையீடுகள் ஏற்றுக்-கொள்ளப்படுகிறது, எதிரிகள் குற்றவாளிகள் இல்லை என்று தீர்மானிக்கப்படுகிறார்கள். கீழ்க்கோர்ட்டில் அவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் 143, 295 (ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ்க் குற்றவாளிகள் என்று கருதி தண்டிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எதிரிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். அபராதம் செலுத்தியிருந்தால் திருப்பித்தர உத்தரவிடப்-படுகிறது. இந்த தீர்ப்பு, சுருக்கெழுத்தாளரிடம் தமிழில் சொல்லப்பட்டு; அவரால் தமிழில் எழுதப்பட்டு; என்னால் சரி பார்க்கப்பட்டு 1977ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் நாளான இன்று நீதிமன்றத்தில் வழங்கப்-படுகிறது. இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இராவண லீலா அப்பீல் வழக்கில் தீர்ப்பு!
நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இராவண லீலா வழக்கு அப்பீல் தீர்ப்பு வெளிவந்து விட்டது. திராவிடர் கழகத் தோழர்கள் – தந்தை பெரியார் தொண்டர்கள் மேற்கொள்ளும் எந்த முற்போக்கான நடவடிக்கையையும் அய்யோ மனம் புண்படுகிறதே! – மனம் புண்படுகிறதே! என்று போலி கூச்சல் போட்டு, அதன்மூலம் அரசியல் சட்டத்தை நமக்கு எதிராகப் பயன்படுத்தி வந்த பூச்சாண்டிகளுக்கு எல்லாம் ஒரு சரியான முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட கழகத் தலைவர் அம்மா மற்றும் 13 பேர்களும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
உண்மையில் சொல்லப்போனால் நமது இயக்க வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பாக இது அமையப் போகிறது என்றால் அது மிகையாகாது.
அரசாங்க அனுமதியுடன் நடத்தப்பட்டதே!
இந்த வழக்கில் உள்ள சாட்சியங்களைப் பரிசீலித்துப் பார்க்கும்போது, எதிரிகள் எந்த சட்டவிரோதமான கும்பலிலும் இருந்து கொண்டு, எந்த ஒரு வகுப்பினரின் மத உணர்வுகளைத் திடுக்கிடும் வகையில் புண்படுத்தும் பொருட்டு வேண்டுமென்றே குரோதமான உட்கருத்துடன், அந்த வகுப்பாரின் மத நம்பிக்கைகளை நிந்திக்கின்ற வகையில் நடந்து கொள்ளவில்லை என்பது நன்கு புலனாகிறது என்று தெளிவாய் குறிப்-பிட்டுள்ளார் நீதிபதி உயர்திரு. சோமசுந்தரம் பி.எஸ்ஸி. பி.எல்., அவர்கள்.
1. சட்ட விரோதமான கூட்டம் (unlawful Assembly) என்று அக்கூட்டத்தைக் கூறியதேகூட தவறான சொல் என்பதை அவர் நன்கு தெளிவுபடுத்தியுள்ளார். காரணம், இந்த சம்பவம் அரசாங்க அனுமதியுடன் திராவிடர் கழகத்திற்குச் சொந்த இடமான பெரியார் திடலில் முன்னறிவிப்புடன் குறிப்பிட்ட நேரத்தில் நடந்திருக்கிறது. ஆனால், அந்த சம்பவம் யாருடைய மனத்தையாவது புண்படுத்தியதாக சாட்சிகள் இல்லை. இந்த விழாவானது டில்லியில் நடந்த ராமலீலா என்ற விழாவிற்குப் போட்டியாக நடந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
2. முன் அறிவிப்புடன், அரசாங்க அனுமதி பெற்று நடக்கும் ஒரு காரியம் எப்படி சட்ட விரோதமான கூட்டத்தினர் புரியும் புண்படுத்தும் காரியம் ஆகும்?
மனம் புண்பட்டிருந்தால், கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களில் ஒரு சிலராவது ரகளை செய்து, எதிர்ப்புக்குரல் கொடுத்திருப்-பார்களே? நடந்ததாக யாராவது கூறமுடியுமா? மேலும் மத உணர்ச்சியைப் புண்படுத்துவது என்பதைவிட படுமுட்டாள்தனமான வாதம் வேறு ஒன்றும் இருக்கவே முடியாது என்பது நமது கருத்தாகும்.
யூதருக்கும், முஸ்லீம்களுக்கும் பன்றிக்கறி, மத உணர்வுப்படி ஆகாத ஒன்று. அதை நாட்டில் விற்பனை செய்வதால் அவர்கள், தங்கள் மத உணர்ச்சி புண்பட்டு விடுகிறது என்று கூறினால் அதனைத் தடை செய்ய அரசு தயாரா?
அது மட்டுமா? குடும்பக் கட்டுப்பாடு என்பதேகூட மத உணர்ச்சிகளுக்கு மாறானது-தான். எல்லாம் அவன் செயல் என்று கூறிடும் அடிப்படையில், ஈ எறும்பு முதல் இந்த உலகின் சகல ஜீவராசிகளையும் ஆண்டவனே படைத்திருக்கிறான் என்பது மதவாதிகளின் வாதம். ஆனால், குடும்பக் கட்டுப்பாடு – குழந்தைப் பேற்றை அடக்கி ஆளுதல் என்பது மத உணர்ச்சியைப் புண்படுத்துவதுதானே!
மத உணர்ச்சிகளுக்கு விரோதமானது அல்ல!
இப்படி எத்தனையோ அடுக்கலாமே. மாரியாத்தாள் போடும் முத்தை (அம்மையை) தடுக்கும் பெரியம்மை ஒழிப்புகூட மத உணர்ச்சியைப் புண்படுத்துவது அல்லவா? இதைப்பற்றி மிகவும் ஆணித்தரமான வகையில் நீதிபதி அவர்கள் தமது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
மேலும் மாறிக்கொண்டிருக்கும் உலகத்தில் மனித சமுதாயம் வளர்ந்துகொண்டே இருக்கிறது. அவ்வாறு ஒரு காலத்தில் ஏற்பட்ட கருத்துகள் பிற்காலத்தில் ஒப்புக்கொள்ள முடியாததாக இருக்கலாம். இவைகளைப் பற்றி ஒரு மனிதன் சிந்திப்பதற்கும், பேசுவதற்கும், எழுதுவதற்கும் உரிமை உள்ள இந்த அமைப்பில், எதிரிகளுடைய இயக்கமானது தங்களுடைய கருத்துகளை வெளியிடும் பொருட்டு இராவண லீலா என்ற விழாவினை ஏற்பாடு செய்து அதை இவர்களுக்கு உகந்த முறையில் கொண்டாடி இருக்கிறார்கள். உண்மையிலேயே மேற்படி சம்பவத்தால் ஒரு சார்பாருக்கு மனம் புண்பட்டு இருக்குமானால், அங்கு கலவரங்களும் எதிர்ப்புகளும் இருந்திருக்கும். அப்படி ஒன்றும் அங்கு கலவரங்களோ, எதிர்ப்புகளோ இருந்ததாக யாதொரு சாட்சியங்களும் இல்லை என்று மிகவும் அழகாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்ர்!
3. இந்த விழாவிற்கு காவல்துறை அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் சம்பவம் நடந்தது, 25.12.74. ஆனால், இந்த வழக்குத் தொடர அரசாங்கம் உத்தரவிட்ட தேதி 26.3.76 சுமார் 15 மாதங்களுக்குப் பிறகுதான் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தக் கால தாமதம் விளக்கப்படவில்லை என்கிறார் நீதிபதி!
உணரவேண்டிய முக்கியமான உண்மை!
ஒரு முக்கியமான உண்மையை இதன்மூலம் தமிழ்ப் பெருமக்கள் உணர வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில் வழக்குத் தொடர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்ற-போதிலும்-கூட, சட்ட இலாகாவின் அறிவுரைப்-படி இதில் வழக்கு ஏதும் தொடர வாய்ப்பில்லை என்று கூறப்பட்ட காரணத்தால், சட்டத்திற்குப் புறம்பாக எப்படி அழி வழக்குப் போடுவது என்று தயங்கித்தான் தி.மு.க. அரசு, இந்த வழக்குத் தொடர அனுமதி வழங்காமல் தயங்கி நின்றது.
1976 ஜனவரி 31ஆம் தேதி தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஜனாதிபதி ஆட்சி என்ற பெயரால் திருமதி இந்திராகாந்தி அம்மையார் பார்ப்பன ஏகாதிபத்திய ஆட்சியை இரண்டு பார்ப்பன அட்வைசர்களைக் கொண்டு நடத்த ஆரம்பித்த நேரத்தில்தான், திராவிடர் கழகத் தலைவர்களைப் பழிவாங்க வேண்டும்; தொல்லை கொடுக்க வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையுடன் இதற்கு அரசினரால் சட்ட இலாகா கருத்தே மாற்றப்பட்டு அனுமதி (Sanction) தரப்-பட்டிருக்க வேண்டும் என்று நாம் கருதுகிறோம்.
மத உணர்ச்சி மதநம்பிக்கையைப் புண்படுத்தும் முறையிலோ, குரோதமான உட்கருத்துடனேயோ எதிரிகள் எவரும் செயலாற்றவில்லை என்று நீதிபதி தெளிவாக்கி-யுள்ளார்! இதேபோலத்தான் சேலத்தில் இராமனைச் செருப்பாலடித்ததாகப் போடப்பட்ட ஒரு வழக்கிலும் சேலம் மாவட்ட மாஜிஸ்திரேட் தீர்ப்பு எழுதினார் என்பதை இந்த நேரத்தில் நாம் நினைவூட்டுவதும் அவசியம். தந்தை பெரியார் அவர்களது சிலைபீட வாசகங்களில் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள் தமது மனதைப் புண்படுத்துவதாக உள்ளது என்று போடப்பட்ட ரிட்மனுவினைத் தள்ளிய ஜஸ்டிஸ் திரு. இஸ்மாயில் அவர்கள் இதுபோலவேதான் குறிப்பிட்டு மனம் புண்படும் வாதங்களால் பலன் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டார்!
இனிமேலாவது மதவாதிகள் இந்த மனம் புண்படுகிறது என்ற புரட்டு வாதத்தைக் கைவிடுவார்களாக!
– கி.வீரமணி
– நினைவுகள் நீளும்…