வேடிக்கையா?
வாடிக்கையா?
சிலைக்கும் சிலையற்றதுக்கும் வேடிக்கை
சிதறும் மனிதஉடல்கள் வாடிக்கை
கொலையும் கொலைவெறியும் மதமானது
குண்டுகள் வெடிப்பதால் நிஜமானது.
மக்காத கொடிய நச்சுக்குப்பையால்
மதமென்ற மரத்தை நட்டுவிட்டான்
மனிதக் குருதியால் நீர்பாய்ச்சி
மடமையின் உச்சத்தைத் தொட்டுவிட்டான்.
மடமை உண்டாக்கிய மதங்கள் மானுடப் பயிர்களை எரிக்கின்றது
குலத்தை ஒழிப்பது கோடாரிக்காம்புகள்
குவலயத்தை அழிப்பது கேடான வேதங்கள்.
மனநோயாளி செய்யும் குற்றத்திற்கு
மன்றத்தில் தண்டிக்கச் சட்டமில்லை
மனநோயாளி யாக்கும் மதங்களை
மண்ணைவிட்டு அகற்றத்தான் திட்டமில்லை
அய்ந்துவேளை தொழுகை நடத்துவோர்க்கும்
ஆறுகால பூசைகள் செய்வோர்க்கும்
ஆரம்ப முதலே போராட்டம்
ஆறாய் ஓடுதே குருதியோட்டம்.
மனிதன் வணங்கும் வழிபாட்டிடம்
மனித உயிர்களின் பலிபீடம்
கொலையை கலையாய் கையாளுகிறான்
தலைகொய்ய அலையாய் அலைகிறான்
கடவுளுக்குப் பலிகொடுத்துத் துதிப்பவன்
கடவுளுக்கே பலிகிடாவாக ஆகிவிட்டான்
கடவுளைக் கற்பித்தலும் பரப்புவதும்
கயவன் செய்யும் செயல்தானே.
மனித இரத்தம் குடித்தவர்கள்
மாண்புகளாய் உலா வருகிறார்கள்
புனிதன் என்று பெயரிட்டு
புவியை ஆட்சி செய்கிறார்கள்.
– மின்சாரம் வெ.முருகேசன், விருதுநகர்
Leave a Reply