நூல்: இந்தியாவில் மட்டுமே சாதிகள் இருப்பது ஏன்?
ஆசிரியர்: ஆங்கிலத்தில்: டாக்டர். வெ. கண்ணு(ப்பிள்ளை) அய்.பி.எஸ்., (ஓய்வு)
தமிழில்: மு. குமரேசன்
வெளியீடு: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம் 96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை-600041
செல்பேசி: 9444244017 பக்கங்கள்: 160 விலை: ரூ.120/-
நூலிலிருந்து…
கட்டுண்டு கிடக்கும் இந்து மனம்
இந்துக்களின் சமூகப் பழக்க வழக்கங்களையும், நடத்தையையும் மதமே வழிநடத்துகிறது. மதத்தின் இந்தச் செல்வாக்கு, அடிப்படையில் மனம் சார்ந்தது. ஏனெனில், செயல்கள் எண்ணங்களின் விளைவே. இந்து மனத்தின் மீது உருவாக்கப்பட்ட முதன்மையான பாதிப்பு அடிமைத்தனம். முதலில் அது பணிய வைக்கப்பட்டது. பிறகு தன் வயமிழந்தது, இறுதியாய் அடிமையாக்கப்பட்டது. கட்டளைக்கு முழு மனத்துடன் கீழ்ப்படிய அது தயாராக உள்ளது. ஒரு வழிகாட்டியின் பின்னால் கண்களை மூடிக்கொண்டு எங்கும் பின்தொடர அது தயாராக உள்ளது. தனது சுதந்திரத்தை இழந்ததால் அது பார்வையையும் இழந்துவிட்டது. முன்னும் பின்னும் என்ன இருக்கிறது என்றுகூடப் பார்க்காது. அந்த மனம் முழுவதும் கற்பனையால் நிரம்பியிருக்கிறது. தனது சுற்றுப்புறம் பற்றிய எந்த உணர்வும் இல்லை. அவனுக்குக் கற்பனையும் உண்மையும் ஒன்றுதான். அவனது உலகம் முழுவதும் கற்பனையானது, உண்மை அல்ல. எதை நம்ப வேண்டுமென்று சொல்லப்படுகிறதோ அதை அவன் நம்புகிறான். கேள்வி கேட்பதில்லை, முடிவுகள் பற்றிய குழப்பமும் அவனுக்கில்லை. தானே விரும்பி அடிமைத்தனத்தை ஏற்கும் ஒருவன், அதிகபட்ச அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறான். காரண காரியங்களை அறிதல், முடிவெடுத்தல், நியாய உணர்வு, பொது அறிவு என எல்லாவற்றையும் ஏன் அறிவார்ந்த ஆண்மையையே விட்டுக் கொடுத்துவிடும் ஒருவன், விடுதலை பெறாத தென்அமெரிக்க கறுப்பின அடிமையைக் காட்டிலும் வலுவான விலங்குகளால் கட்டப்படுகிறான்.
இந்து மனதின் அப்பாவித்தனமும் அடிமைப்பண்பும் அதிகாரத் தாகம் கொண்ட தந்திரசாலிகளான பிராமணர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தன. அவர்கள் தங்கள் திறமையைக் காட்டத் தயங்கவில்லை. அவர்கள், மக்கள் தங்கள் கட்டளைகளுக்கு ஆட்டு மந்தையைப்போல் கீழ்ப்படிவதைக் கண்ணுற்றனர்.
அவர்கள் பிற இனத்தவரோடு தங்களை அய்க்கியப்படுத்திக் கொள்ளவில்லை. பிற இனத்தவர் தங்களைத் தீண்டுவதே தங்களை மாசுபடுத்துவதாகக் கருதி விலகி நின்றனர். உலக வரலாற்றில் எங்கும் காணப்படாத மிக உயர்ந்தபட்ச கொடுமை இதுவாகும் (1881 மறுபதிப்பு 1974:மிமிமி, 225_226). இந்துக்களின் மதம் சார்ந்த மனப்பான்மையை எவ்வாறு பிராமணர்கள் வர்ணாசிரம மற்றும் ஜாதிய முறைகளை நிறுவப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதையும், தங்கள் நாட்டின் சக மனிதர்களது அப்பாவித்தனம், அறியாமை, கல்லாமை மற்றும் அடிமை மனப்பான்மையைத் தங்கள் நலனுக்காக அவர்கள் பயன்படுத்திக் கொண்டதையும் ஷெர்ரிங் விளக்கினார்.
எதையும் கடவுளுக்கு அர்ப்பணித்துவிடும் ஒரு இந்துவின் மதம் சார்ந்த மனப்பான்மை அவனுக்கு நன்னெறியை, தனது சக மனிதனை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதைப் போதிக்கவில்லை. மதநம்பிக்கை மனிதர்களுக்குள்ளிருந்து உன்னதங்களை வெளிக்கொணரவில்லை. (குஷ்வந்த் சிங் 2002 : 50, 51). இந்தியர்களின் அடிமை மனப்பான்மையே அவர்களது சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் எதிரொலிக்கிறது. இந்துமதம், மரபு வழியான மூடநம்பிக்கைகளையும், பிறரைக் கொடுமைப்-படுத்தும் மனப்பான்மையையும் வளர்க்கின்றது. அறிவு வளர்ச்சியைத் தடுக்கிறது.
மத்திய காலத்தில், அய்ரோப்பாவில், மக்கள் மத குருக்களின் பிடியில் இருந்தபோது, அங்கு அறியாமையும், சமத்துவமின்மையும் இருந்தன. தேசத்தின் அதன் மக்களின் வாழ்க்கையில், மதமே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஜெர்மானிய மதச் சீர்திருத்தம், 1789இல் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சி, 19ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி ஆகியவற்றால் அய்ரோப்பாவில் அறிவு வளர்ச்சியும் நவீனத்துவமும் வளர்ந்தன. சிறுபான்மையாகிவிட்ட மடாலயங்கள் மதநம்பிக்கையைத் திணிப்பதில் வெற்றி பெற இயலவில்லை. ஆனால், இந்தியாவில் மக்கள்-தொகையில் (1931 கணக்கெடுப்பின்படி) 6.4 விழுக்காடேயான பிராமணர்கள், பிராமண இந்துத்துவத்தை உருமாற்றி, புத்துயிரூட்ட முடிந்தது. பொய்யான மரபு, போலிப் பண்பாடு என்னும் போர்வைகளில் வர்ணாசிரமத்தையும், ஜாதி முறையையும் திணிக்க முடிந்தது. உலகில் வேறெங்கும் பூசாரிகள் இந்த அளவுக்கு எல்லையற்ற சமூக அதிகாரங்களையும், உரிமைகளையும், மக்கள் மத்தியில் மதிப்பும் துய்க்க இயலவில்லை. இன்றைய சமத்துவ, ஜனநாயக சமூகத்திலும் இது தொடர்கிறது-. எல்லா விஷயங்களிலும், தனிநபர் சார்ந்த, சமூக மற்றும் மத விஷயங்களில் அப்பூசாரிகளது ஆலோசனை கேட்கப்படுகின்றது. அவரது கூற்றே சட்டமாகிறது, எவ்விதக் கேள்வியோ மாற்றமோ இன்றி அவரது வார்த்தை சட்டமாக ஏற்கப்படுகிறது.
வடமேற்குப் பிராந்தியம் மற்றும் ஔத் பகுதியின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்பார்வை-யாளராகப் பணியாற்றிய ஜே.சி. நெஸ்ஃபில்ட் (J.C. Nesfield ICS) என்னும் அய்.சி.எஸ்., அதிகாரி, இந்தியாவின் ஜாதி முறை அமைப்புக் குறித்து ஆழ்ந்த ஆய்வுகளை நிகழ்த்தினார். அவர் சரியாகவே சொன்னார்:_ நாம் இரு உண்மைகளை ஏற்போமானால், இந்தியாவில் ஜாதி முறை தோன்றியது எவ்வாறு என்பது பற்றிப் புரிந்து கொள்ளுவது அரிதல்ல. ஒன்று, ஜாதி என்பது தொழில் அடிப்படையில் இயற்கையான வேலைப் பிரிவினையின் அடிப்படையில் உருவானது, பிறப்பின் அடிப்படையிலோ அல்லது உறவின் அடிப்படையிலோ அல்ல. இரண்டாவது, பிராமணன் பிற எல்லா வகுப்பினரது மனங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்தினான். அவர்கள் அறியாமை-யிலும் மூடநம்பிக்கைகளிலும் ஆழ்ந்திருந்த-தால் அவர்களுக்கு தங்கள் பூசாரிகள் சொல்வதை ஏற்பதைத் தவிர வேறு வழியிருக்க-வில்லை. கருணையற்ற ஆக்கிரமிப்பாளரைக் காட்டிலும் அதிகப் பங்கினை மக்களை அடிமையாக்குவதில் பூசாரிகளும், மதகுருக்களும் ஆற்றியுள்ளனர். ஒரு கொடுங்கோல் அரசனை மக்கள் ஒரேநாளில் வீழ்த்தி விடலாம். ஆனால், மூடநம்பிக்கைகளால் இருண்டுவிட்ட மனம் தனது பார்வையை இழந்து விடுகிறது. இந்துக்களின் மூடநம்பிக்கை என்னும் ஆடையைப் பிராமணர்களே தயாரித்துத் தருகின்றனர்.
*****
ஜாதி உருவாக்கம் பற்றிப் பதிவுகள் ஏதும் இல்லை
ஜான் பீம்ஸ் ரிச்மாண்ட் (John Beames Richmond). இவர் இந்தியாவின் வடமேற்குப் பிராந்தியத்தில் பணியாற்றிய நீதிபதியும் ஆட்சியரும் ஆவார். அவர் கூறுகிறார்: வடமேற்குப் பகுதிகளில் வாழும் மக்கள், துரதிருஷ்டவசமாகத் தங்கள் கடந்த கால வரலாறு பற்றிய நல்ல வழிகாட்டிகள் அல்லர். உயர் வகுப்பினரின் அலாதிப் பெருமித உணர்வும், கீழ் ஜாதியினரின் அறியாமையும் துன்பங்களும் முற்கால இந்தியாவின் வரலாற்றுப் பதிவுகளைப் பெரிதும் மாற்றி விட்டன. குறிப்பாக, முகம்மதியர் ஆட்சிக்கு முன்னர், அதுபற்றி ஆய்வு செய்பவரை அவை குழப்பவும் தவறடையவும் செய்கின்றன.
அவர் மேலும் கூறுகிறார். அப்போது ஒருங்கிணைந்த இந்தியா என்னும் உணர்வு இருக்கவில்லை. ஜாதியின் பெயரால் சமூகப் பிரிவினைகள் வளர்ந்தன. வேற்றுமைகள் உருவாக்கப்பட்டு அதிவேகமாக வளர்ந்தன. ஒவ்வொரு சிறு பிரிவு அல்லது குடும்பமும் தன்னைத் தனியொரு ஜாதியாக நிறுத்திக் கொண்டது. இதன் தொடர்ச்சியாய் மக்கள் தங்களது உண்மையான தோற்றுவாய் எதுவென்பதை மறந்து போய், தங்களைச் சுற்றியுள்ள சூழலுக்குக் காரணமாக்க, விசித்திரமான, சலிப்பூட்டும் கட்டுக் கதைகளை உருவாக்கிக் கொண்டனர். தொலை தூரத்திலிருந்து வந்த அடுத்தடுத்த தலைமுறைகளைச் சார்ந்த அயல்நாட்டவர்க்கு இச்சூழல் தீர்க்க முடியாத சிரமங்களைத் தந்ததில் வியப்பில்லை. இத்தகு சமூகப் பிரிவினைகள் அவர்கள் நாட்டில் இல்லை. அவர் மேலும் கூறுகிறார்:_ பிராமணர்களின் அற்புதமான, கவித்துவமான மத மற்றும் தத்துவப் படைப்புகளில் ஏற்கத்தக்க வரலாற்றுத் தொடர்புகள் இல்லாத நிலையில், அவை என் போன்ற ஆராய்ச்சி-யாளர்களுக்குப் பயனற்றவையே. முஸ்லிம்கள் வந்து சேரும் வரை வரலாறு என்ற வார்த்தை அதன் உண்மையான அர்த்தத்தில் இந்தியாவில் பயன்படவில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்-தான் வேண்டும் (இந்தியாவின் வடமேற்குப் பிராந்திய மக்களின் மரபும் பண்பாடும் என்ற நூலின் முன்னு-ரையில், 1844 பிப்ரவரி 9 VI to IX).
ஜாதி பற்றிய ஏற்கவியலாத புள்ளி விவரங்கள்:
ஜான் பீம்ஸ் ரிச்மாண்ட் நீண்டகால அனுபவம் பெற்ற ஆங்கிலேய நிர்வாகி. அவர் இந்திய மக்களின் நடத்தை, நம்பிக்கைகள், மதம் சார்ந்த மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை இருபதாண்டு-களுக்கும் மேலாக அவதானித்துத் தனது கருத்துகளை 1844ஆம் ஆண்டிலேயே பதிவு செய்துள்ளார். ஜாதி பற்றிய அவரது கருத்துகள் உண்மையானவையும், மதிக்கத்தக்கவையுமாகும். மக்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள், அவர்கள் தங்கள் மூலத்தை மறந்துவிட்ட நிலையில், வேத காலத்திலிருந்து நெடுங்காலம் கடந்து விட்டது என்ற நிலையில், அவர்கள் தரும் தகவல் பொய்யாக இருப்பது இயல்பே. அவர்கள் தங்கள் ஜாதியின் தோற்றுவாயை மிகைப்படுத்திக் கொண்டனர். தாங்கள் கீழ் ஜாதியைச் சார்ந்தவர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொள்ள எவரும் விரும்ப-வில்லை. இலக்கியங்களிலும், மத நூல்களிலும் ஜாதி பற்றிய நம்பத்தகுந்த தகவல் ஏதுமில்லை. எனவே, சமூகக் குழுக்கள் தங்கள் சுயநலத்திற்காகத் தந்த, ஏற்கவியலாத, மிகைப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஜாதி அமைப்பை உருவாக்கியது முற்றிலும் பொய்யானதாகும். இருந்தபோதும், ஆங்கிலேயர்கள் புள்ளி விவரச் சேகரிப்பை வலியுறுத்தினர். அவற்றை நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியாக வகைப்படுத்தினர். ஆனால், கலாச்சாரம், மரபு, மத அனுஷ்டானங்கள் மாநிலத்துக்கு மாநிலம் மட்டுமின்றி ஒரே மாநிலம் அல்லது மாவட்டத்திற்குள்ளேயே மாறுபட்டிருந்தன. ரிச்மாண்ட் சரியாகவே கூறினார்; ஜாதிகள் பற்றிய புள்ளி விவரச் சேகரிப்பு சமூக மோதல்களுக்கும், பொய்யான கோரிக்கைகளுக்கும் இட்டுச் சென்றது. வரலாற்று ஆவணங்கள் இல்லாத நிலையில், நம்ப முடியாத கட்டுக் கதைகளும், பிராமணர்களின் மதநூல்களும் சமூகக் குழுக்களை வகைப்படுத்தப் பயனற்றவையே. ஆனால் ஆங்கிலேயர்கள், இந்தியாவை ஆளும் நோக்கத்துடன், புள்ளி விவரங்களைச் சேகரித்து பிராமணர்கள் தந்த ஏற்கவியலாத மதத் தகவல்களின் அடிப்படையில் சமூகக் குழுக்களைப் பிரித்து வகைப்படுத்தினர்.
வருணப் பிரிவினை குறித்த எதிர்மறை அறிவு
வருணப் பிரிவினை என்பது பிராமணர்கள் உருவாக்கிய பொய்யான கோரிக்கை. அடுக்குகளைக் குறிக்கும் வருணம் என்ற சொல் ரிக் வேத மந்திரங்களில் எங்கும் இல்லை. வருணம் என்பது ஒரு பாலிமொழிச் சொல். (பிளண்ட் அய்சிஎஸ் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: 1911: 324) வேதகாலத்தில் பேச்சு மொழியாக இருந்த புராதன சமஸ்கிருத மொழியிலும் அச்சொல் இல்லை. கி.மு. 6ஆம் நூற்றாண்டில் அசோகர் காலத்தில் அது வழக்கு மொழியாக இருந்தது. அவரது காலத்தில் எல்லா அரசு ஆவணங்களும் பாலிமொழியில் இருந்தன. வருணப் பிரிவினை பொய்யான தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
சத்திரியர் என்ற வார்த்தையும் மந்திரங்களில் இல்லை. மந்திரங்களில் காணப்படும் ஜென்யா என்ற வார்த்தைக்கு சத்திரியர் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
ரிக் வேதத்தில் ஒரு பாடலில் காணப்படும் ஜென்யா என்ற வார்த்தை பிற பாடல்களில் பிற வேதங்களில் எங்கும் இடம் பெறவில்லை.
அதேபோல் வைசியர் மற்றும் சூத்திரர் என்னும் வார்த்தைகளும் ஒரே ஒரு ரிக்வேதப் பாடலில் மட்டுமே உள்ளன. வேறெங்கும் இல்லை (அரவிந்த் சர்மா, 2000 135).
வருணம் என்ற சொல்லுக்கு வண்ணங்கள் என்பது பொருள் _ பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் பிரிவுகளுக்கும் அதுவே அடிப்படை. அவை வகுப்புகள். அச்சொல் எவ்வகையிலும் ஜாதிகளைக் குறிக்கவில்லை (பிளண்ட், மக்கள்தொகை அறிக்கை 1911, 324). பிராமணர்களின் நிறம் வெண்மை, சத்திரியர் சிவப்பு, வைசியர் மஞ்சள் மற்றும் சூத்திரர் கறுப்பு நிறத்தவர்[மகாபாரதத்தில் பிருகு முனிவரின் உரையாடல் குறித்த டாக்டர் முயிரின் கருத்தை மேற்கோள்காட்டி ஜான்வில்சன், 1877 (மறுபதிப்பு 1976:268)]. சூரியனின் வெப்ப மண்டலப் பகுதியில் உள்ள இந்தியாவின் கடுமையான பருவ நிலை, மனிதர்களின் நிறத்தைப் பெரிதும் பாதிக்கிறது. அதற்கும் சமூக அடையாளங்களுக்கும் தொடர்பில்லை. தென்னிந்தியாவில் பிராமணர்-களிலும் கறுப்பு நிறம் கொண்டவர்கள் இருந்தனர். வருணம் என்ற சொல்லுக்கு மனிதனின் குணத்தின் வண்ணம் என்று பொருள் என சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டி.எம்.பி. மகாதேவன் கூறுகிறார்.
இலங்கையில் பணியாற்றிய பிரெஞ்சு தொல்பொருளியல் ஆணையாளர் ஆர்தர் மௌரிஸ் ஹோகார்ட் (Arthur Maurice Hocart) இலங்கையிலுள்ள தென்னியத் தமிழர்களிடையே நிலவிய ஜாதிய அமைப்பை ஆய்வு செய்தார். அவர் கூறுகிறார்:_ முற்காலத்தில் நான்கு வண்ணங்கள் மட்டுமே இருந்தன. வண்ணங்கள் நான்கு அடிப்படைச் சமூக மய்யங்களின் குறியீடுகளாக இருந்தன. அவை வண்ணங்கள், இனங்கள் அல்ல. கடவுள்கள் மற்றும் அரக்கர்களிடையேயான போர்தான் ரிக் வேதத்தில் விவரிக்கப்படுகிறது. வெற்றி பெற்றவர்களின் கோட்பாட்டோடு பொருந்துகிற இனக் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டு மற்றவை தள்ளப்படுகின்றன. பி.டி. சீனிவாச அய்யங்காரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.