– அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்
கோயிலில் பக்தர்கள் பொங்கல் வைக்கிறார்கள். கடவுள் சாப்பிடுவது இல்லை. ஏன் தெரியுமா? வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடக்கும்போது எந்தத் தாயாவது சாப்பிடுவாளா? உலகில் கோடிக்கணக்கான பக்தர்கள் பட்டினி கிடக்கும்போது கடவுள் எப்படிச் சாப்பிடுவார்? – சுகி சிவம்
புதிய விளக்கம்:
சரியான சப்பைக்கட்டு வாதம் இது. உலகில் பலபேர் சாப்பிடாமல் கிடக்கும்போது எனக்கெதற்குப் பொங்கல் வைக்கிறீர்கள் என்றல்லவா கடவுள் மறுத்திருக்க வேண்டும். உண்மையில் கடவுள் வந்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டால் பக்தர்கள் கோயிலில் பொங்கல் வைக்கமாட்டார்கள். வீட்டிலேயே பொங்கல் வைத்து ருசித்துச் சாப்பிடுவார்கள்.
கோயிலில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செய்வதில் பல ரகசியங்கள் இருக்கின்றன. மற்ற நேர்த்திக்கடன் எல்லாம் கோவில் சொத்தாகிவிடும். பொங்கல் நேர்த்திக்கடன், முழுவதும் தங்கள் சொத்தாகி விடும். இதில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது. கோயிலில் சர்க்கரைப் பொங்கல்தான் வைக்கிறார்களே தவிர, தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று வைப்பதுபோல உப்புப் பொங்கல் வைப்பதில்லை. அதனால், கோயிலில் சர்க்கரைப் பொங்கல் வைப்பவர்கள் அனைவருமே இனிப்பு விரும்பிகளாகத்தான் இருப்பார்கள்.
வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடந்தால் அம்மா சாப்பிடாமல் பட்டினி கிடப்பதுபோல் கடவுள் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட வராதது இருக்கட்டும். தாய் குழந்தைக்கு அன்போடு ஊட்டிவிடுகிறாளே, அதுபோல கடவுள் வந்து பக்தர்களுக்கு ஊட்டிவிடலாம் அல்லவா?
குழந்தை அளைந்து கெடுத்த உணவைத் தாய் சாப்பிடுகிறாள். சில கோயில்களில் பொங்கல் பிரசாதத்தை எல்லாம் குப்பையில் கொட்டப் பார்த்திருக்கிறேன். அதையாவது சாப்பிட வரலாம் அல்லவா?
கடவுள் என்பது ஒரு நம்பிக்கைதானே. அப்படி ஒரு சக்தி எங்கும் இல்லை. இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு ஆன்மீகவாதிகள் கதை அளப்பதெல்லாம் பக்தர்களை மூளைச் சலவை செய்வதற் காகவே தவிர, வேறு காரணம் இல்லை.
குழந்தைத் திருமணங்கள் : தமிழகத்தில்
பெண்ணுக்கு 18 வயதிலும் ஆணுக்கு 21 வயதிலும் திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ள போதிலும் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் குழந்தைத் திருமணங்கள் வினோதமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ஜவ்வாது மலைக்கு அருகிலுள்ள நம்மியம்பட்டு, ஜமுனாமாத்தூர் கிராமங்களில்.
வயதுக்கு வந்த (12-15 வயது) பெண்கள் மணப்பெண் போல் அலங்காரம் செய்துகொண்டு நம்மியம்பட்டு கிராமத்தில் புதன்கிழமை நடைபெறும் சந்தையிலும், திங்கட்கிழமை ஜமுனாமாத்தூரில் நடைபெறும் சந்தையிலும் கூடுகிறார்கள். அப்போது 16லிருந்து 20 வயதுக்குள் இருக்கும் ஆண் பிள்ளைகள் வர, அவர்களுக்குள் பார்வைப் பரிமாற்றம் நடைபெறுகிறது. பின்பு, இருவரும் சேர்ந்து பையனின் வீட்டிற்குச் செல்கின்றனர். மூன்று அல்லது ஆறு மாதங்கள் வரை இருவரும் ஒன்றாக – கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு, விரும்பினால் திருமணம் செய்து கொள்வார்களாம். இல்லையென்றால், அந்தப் பெண் அம்மா வீட்டிற்கு வந்துவிடுவாளாம்.
வாழ்க்கையைத் தொடர விரும்பினால், திருமணம் செய்து வைப்பதற்கும் விரும்பவில்லை என்றால் பிரித்து வைப்பதற்கும் 14 வயது நிரம்பிய தலைவர் செத்தியராஜ் இருக்கிறார்.
தாத்தாவுக்குப் பின் பேரன் நாட்டாரா வர வேண்டும் என்று 9 வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு செத்தியராஜ்க்கும் நாட்டாரா பட்டம் கட்டியிருக்கிறார்கள். சுற்றியுள்ள 18 கிராமங்களில் உள்ள மக்களில் யார் திருமணம் செய்தாலும் இந்த நாட்டாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, இவர் கையால் தாலி எடுத்துக் கொடுத்தால் மட்டுமே மாப்பிள்ளை தாலி கட்டுவாராம். கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு என்று வந்தால் பிரித்து வைத்துவிடுவாராம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடாக 5,000 ரூபாய் வரை வாங்கிக் கொடுப்பார்களாம்.
இதனால் கைக்குழந்தைகளுடன் போராடிக் கொண்டிருக்கும் பெண்களும் இளம் விதவை களும் அதிகம் காணப்படுகின்றனர். சிறு வயதி லேயே திருமணம் செய்து கொள்வதால் ஆண்கள் குடும்பப் பொறுப்பைச் சமாளிக்க முடியாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மரணமடைவதாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இது நடப்பது மிகவும் தலைக் குனிவானது அல்லவா? ஆண்டாண்டு கால வழக்கம் என்றும்,கடவுள் கட்டளை என்றும் சொல்லி இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதை நியாயப்படுத்த முடியாது.அதற்கு சட்டமும் இடம் கொடுக்காது. அரசும் அதிகாரிகளும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?