அன்றைக்கே அணு ஆயுதம்:
சென்னையில், ஒரு திருமணமண்டபம்; மகாபாரத உபந்யாசம்! பாரதப்போரின் 10ஆவது நாளில் நடந்த போர் நிகழ்ச்சிகளைப் பற்றி உபந்யாசார் பேசினார்; இல்லை உளறினார். அந்தக்காலத்தில், எந்தக் காலத்தில்? துவாபரயுகத்திலேயே நம் முன்னோர்கள் அணு ஆயுதம் பற்றி அறிந்து வைத்திருந்தார்கள்.
அவற்றைப் போரில் பயன்படுத்தினார்கள் _ என்று பேசிக்கொண்டே போனார்; பெருமிதம் அடைந்தார்; பூரிப்புக் கொண்டார்; புல்லரித்துப் போனார். இது உண்மையா? சரியா? ஆய்வு செய்வோமே!
எப்படி? எப்படி? நம்புவது எப்படி?
மகாபாரதப் போர் மிகப்பெரிய அளவில் நடந்ததற்கான தடயங்கள், சான்றுகள் இதுவரை அகழாய்வுகள் மூலம் கிடைக்கவில்லை.
இப்போர் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது 5000 ஆண்டுகளுக்கு முந்திய துவாபரயுகம் என்கிறார்கள்.
மெய்யாகவே கி.மு. 850 ஆண்டுகளுக்கு முன்தான் பாரதப்போர் நடந்ததாக வரலாற்றுப் பேரறிஞர் டி. தர்மானந்த கோசாம்பி வரலாற்று ஆய்வு நெறி நின்று ஆய்ந்து கூறியுள்ளார்.
குருசேத்திரப் போரில், கவுரவர் பக்கம் 11 அக்ரவுணி சேனைகள்; பாண்டவர் பக்கம் 7 அக்ரவுணி; ஆக, 18 அக்ரவுணி சேனைகள் போரிட்டனவாம்.
ஓர் அக்ரவுணி என்றால் 21870 தேர்கள 21870 யானைகள்; 65610 குதிரைப்படைகள்; 1,09,350 காலாட்படை வீரர்கள் இருக்க வேண்டும்.
போரில் பங்கு பெற்றவர் ஏறத்தாழ 40 லட்சம் வீரர்கள் _ 40 லட்சம் வீரர்களும், யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிற்பதற்கு இடம் ஏது? எவ்வளவு இடம் வேண்டும்? எத்தனை பரப்பளவுள்ள போர்க்களம் வேண்டும்?
இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்தால் நம்மால் நம்ப முடியவில்லை; இல்லை.
இதனைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தமது கீதையின் மறுபக்கம் நூலில் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
கண்ணனைத் தேடியலையும் மன்னன்:
குருசேத்திரத்தைச் சுற்றிலும் மேட்டுப் பகுதிகள் இருக்கின்றன. இங்கிருந்து, 2 கல் (Mile) தொலைவில் அஸ்திபூர் என்ற ஓர் இடம் இருக்கிறது.
இங்குதான் பாரதப் போரில் உயிரிழந்த போர்வீரர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன என்பது அய்தீகம். இப்போதே அந்த அஸ்திபூருக்குப் போனால் ஓர் அஸ்திக்குறியைக்கூட பார்க்க முடியாது. – (டி.கே.வி. இராஜன். நூல்: கண்ணனைத் தேடி)
எதுவும் கிடைக்கவில்லை:
மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அரசர்களின் கல்வெட்டுகளோ, செப்பேடுகளோ, காசுகளோ இதுவரை எதுவும் நமக்குக் கிடைக்கவே இல்லை. -_ என்கிறார் மய்ய அரசு தொல்பொருள் துறையின் மேனாள் இயக்குநர் _ தலைவர் (Director General) பி.பி. லால் அவர்கள். வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதம் என்றே நினைத்து விற்பனை செய்யாதீர் மதியை:
குருசேத்திரம் என்று சொல்லப்படும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணன் – அர்ஜூனன் சிலைகள்
மகாபாரத நினைவு பற்றிய எந்தத் தடயங்களும் குருசேத்திரப் பகுதியில் அதாவது புதுடில்லியில் இருந்து 150 கி.மீ. வடமேற்கில் கிடைக்கவில்லை.
வரலாற்று அறிஞர் ஆர்.சி. டட் (R.C. Dutt) என்பவர், மகாபாரதத்தில் உள்ள போர் நிகழ்வுகள் அனைத்தும் அப்பட்டமான கற்பனைகளே! _ என்கிறார். இந்தப் போர் நடைபெற்றிருந்தால் நிச்சயம் ரிக் வேதத்திலோ அல்லது வேறு வேதகால இலக்கியங்களிலோ குறிப்பிடாமல் இருந்திருக்க முடியுமா? என்பது ஆராய்ச்சியாளர்களின் கேள்வியாகும். _ என்கிறார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள். _ (நூல் _ கீதையின் மறுபக்கம்)
குருசேத்திரப் போர் என்பது அப்பட்டமான கட்டுக்கதையே தவிர, வேறில்லை. _ என்கிறார் டி.டி. கோசாம்பி அவர்கள். (நூல் – An Introduction to the study of Indian History. Page-4)
பங்காளிச் சண்டையா? பாரதப் போரா?
குருசேத்திரப் போர் என்று அப்படியே ஏதாவது நடைபெற்றிருந்தாலும்கூட, அது ஒரு குடும்பச் சண்டையாக மட்டும்தான் இருந்திருக்க முடியுமே தவிர, மற்றபடி வேறில்லை! _ என்று வரலாற்று அறிஞர்கள் டி.சி. சிரிக்கர் (D.C. Sirkur), எச்.டி. சங்காலி (H.D. Sankali),என்னும் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டிரிக்கா – வெறும் டிரிக்கா (H.D. Sankali)
இந்நிலையில், கு-ருசேத்திர நிலப்பரப்பில் பெரிய அளவில் போர் நடந்ததற்கான தடயங்கள் இதுவரை கிடைக்கவில்லை! என்றாலும், இப்பகுதியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட ஆயுதங்கள், மண்பாண்டங்கள் போன்றவற்றை ஆராய்ந்து பார்த்தபோது அவற்றில் அணுக்கதிர் இயக்கம் காணப்படுவதாகவும் அவை பாரதப் போரில் பயன்பட்டிருக்க வேண்டும் என்கிறார் இவ்வாய்வில் ஈடுபட்ட இயற்பியல் பேராசிரியர் (Physics Prof.). ஸ்வதேஷ் குமார் டிரிக்கா என்பவர்.
அய்யிரண்டு ஆண்டுகளுக்கு முன் அங்கமெல்லாம் நெளிது
டில்லிப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைப் பேராசிரியராகப் பணி புரிந்தவர் இவர். Dean of Students Welfare என்னும் உயர் பதவியையும் வகித்து வந்தவர்.
10 ஆண்டுகள் நானே குருசேத்திரத்தில் ஒரு மாதம் தங்கி நடத்திய ஆய்வின் முடிவுதான் இது -_ என்கிறார் டிரிக்கா.
இவரது ஆய்வு முடிவைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
நமது புதைந்த நாகரிகம் _ என்னும் தலைப்பில் கண்காட்சிகளையும் சென்னைத் தொலைக்காட்சியில் தொடர் நிகழ்ச்சிகளையும் அளித்தவரும், கண்ணனைத் தேடி _ என்னும் நூலின் ஆசிரியருமாகிய டி.கே.பி. இராஜன் என்பவர் குருசேத்திர மண்ணில் பேராசிரியர் டிரிக்கா நடத்திய ஆராய்ச்சியினை மீண்டும் ஏன் நடத்திப் பார்க்கக் கூடாது என்று எண்ணினார்; அதற்காகத் திட்டமிட்டார்.
அணுக்கரு இயக்கத்தை அளக்க கைகர் முல்லர் கவுண்டர் (Goiger Muller Counter) மற்றும் சின்டி லேஷன் கவுண்டர் (Scientilation Counter) ஆகிய கருவிகள் தேவை.
அணுவியலறிஞர் ஆதரவு:
கல்பாக்கம் அணு ஆற்றல் நிலைய இயக்குநர் திரு. சி.வி. சுந்தரம் அவர்களின் பரிந்துரையால் டில்லியிலுள்ள அணு ஆற்றல் நிலையத்தில் இருந்து இக்கருவிகள் கிடைத்தன. இராஜனோடு குருசேத்திரத்துக்கு வந்திருந்து, இக்கருவிகளை இயக்கி 7 இடங்களை ஆய்வு செய்து பார்த்தார் அணுவியல் அறிஞர் முனைவர். ஸெக்ஸேனா அவர்கள்.
இதற்குமுன் டி.டிரிக்கா, சுவாமி ஓமாநந்த சரஸ்வதி என்பவர்களின் ஆய்வுகள் பற்றி ஸெக்ஸேனா அறிந்து கொண்டார்.
அவர் அறிந்து கொண்டவை:
குருசேத்திரம், அதைச் சுற்றியுள்ள அமின், பிவோலா, கைத்தால், கால்யாத போன்ற மகாபாரதத்தோடு தொடர்புடைய பல இடங்களுக்குச் சென்று அங்குள்ள மேட்டுப் பகுதிகளிலும், சில இடங்களில் தோண்டிப் பார்த்து, கதிரியக்கத்தை அளந்தார் டிரிக்கா. இங்கெல்லாம் கதிரியக்கம் மிகவும் அதிகமாக(?) இருந்தது என, தன் அறிக்கையில் டிரிக்கா கூறியுள்ளார்.
இதைத் தவிர, டில்லிக்கு அருகே உள்ள நெருல்லா இடத்திலிருந்த தனியார் பொருட்காட்சி நிலையத்தில் குருசேத்திரப் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட பானை ஓடுகள், சிலைகள், கத்திகள் (வேல்கள்) போன்றவற்றைச் சுவாமி ஓமாநந்த சரஸ்வதி என்பவர் சேமித்து வைத்திருந்தார்.
நம்ப முடியவில்லை, இல்லை!
ஜி.எம். கவுன்டர் (G.M. Counter) இதனைப் பயன்படுத்திப் பார்த்தபோது, இப்பொருளிலிருந்து அளவுக்கு மீறிய அணுக்கதிர் இயக்கம் வெளிப்படுவது தெரிகிறது என்று தன் அறிக்கையில் கூறியிருந்தார் டிரிக்கா.
இவரது ஆய்வில் நம்பகத்தன்மை இல்லை.
அவர்கள் கண்டெடுத்த கத்தி, மண்பானைகள் முதலியவை எல்லாம் மகாபாரத காலத்து _ அவர்கள் கருத்துப்படி 5000 ஆண்டுப் பொருள்கள் என்பதை அவர் மெய்ப்பிக்கவில்லை.
கார்பன் டேடா (Carbon Data) என்ற அறிவியல் ஆய்வு மூலம் மெய்ப்பித்துக் காட்ட வேண்டாமா அவர்?
காரணங்களின் தோரணங்கள்:
மேலும், இவரது (டிரிக்கா) ஆய்வைப் பல அறிவியலாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் நம்பத் தயாராக இல்லை.
இதற்கான முக்கியக் காரணங்கள்:
1. இதற்கான ஆராய்ச்சி விவரங்களைப் புகழ்பெற்ற அறிவியல் இதழ்களில் (Science Magazines) டிரிக்கா வெளியிடவில்லை.
கால விக்ஞான் என்கிற சாதாரண இந்தி இதழிலேயே வெளியிட்டது அய்யப்பாட்டுக்குரியது.
2. இந்த ஆய்வுக்கு ஜி.எம். கவுன்டர் என்ற கருவியை மட்டும் பயன்படுத்தினால் போதாது.
அதைவிட ஆற்றல் வாய்ந்த (Scientilation Counter) மற்றும் மண் ஆய்வு போன்றவற்றை முறையாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
அவர் இவற்றைப் பயன்படுத்தவில்லை.
பயணம் – அதனால் ஏற்பட்ட பயன்கள்:
குருசேத்திரத்திற்கு உந்து வண்டியில் (Car) பயணம் செய்யும்போது இராஜனிடம் பேரா. ஸெக்ஸேனா சொன்னார்:_ இயற்கையாகவே எல்லா இடங்களிலும் அணுக்கதிர் இயக்கம் காணப்படும்.
தோரியம் என்ற தாதுப் பொருளினால் கதிரியக்கம் அதிகமாகவே வெளிப்படும்.
சென்னை நகருக்குள் சோதனை செய்தால் இதுவே குறைவாகவே இருக்கும்.
ஆகவே, குருசேத்திரப் பகுதியில் இயற்கையாகவே காணப்படும் கதிரியக்கத்தின் அளவைத் தெரிந்து கொண்டுதான் இந்தச் சோதனைகளை நாம் நடத்த வேண்டும்.
இந்தப் பகுதியிலுள்ள கதிரியக்க அளவு ஜி.எம். கவுன்டரில் 2 துடிப்பு (Pulse) இருக்கும். இதுவே சின்டிலேஷன் கவுண்டரில் 200கு.
அவசரப்பட வேண்டாம், அய்யா!
குருசேத்திரப் பல்கலைக்கழகத்துக்கு முதலில் சென்றனர். பேராசிரியரின் இசைவைப் பெற்றுக் கொண்டு, தொல்பொருள்துறைப் பொருட்-சாலைக்குள் முதலில் நுழைந்தனர்.
மகாபாரதத்தில் பயன்பட்டதாகக் கருதப்படும் சாம்பல் நிறப் பானை ஓடுகளில் இரண்டினை எடுத்து (Index.No-1) AC DMX (32) (K.K.54) அவற்றை சின்டிலேஷன் கவுண்டருக்கு அருகில் கொண்டு போகும்போதே மீட்டரின் முள் போராட்டத்துடன் ஆடி 400 _ பல்ஸை எட்டியது.
வியப்போடு ஸெக்ஸேனாவைப் பார்த்தனர்.
அவசரப்பட வேண்டாம்! இந்த அறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் தொல்பொருள்களிலிருந்து வெளிப்படும் அத்தனை கதிரியக்கமும் ஒரே சமயத்தில் இந்தக் கருவியைத் தாக்குவதால்தான் இத்தனை பல்ஸ் காண்பிக்கிறது. பொருட்காட்சிச் சாலைக்கு வெளியே இந்தப் பானை ஓடுகளைச் சோதனை செய்யலாம்! வாருங்கள்!! என்றார் அவர்.
ஓடுகளில் ஒன்றுமே இல்லை!
வெளியே இருந்த ஒரு மரத்தடிக்குச் சென்று அந்தப் பானை ஓடுகளில் அணுக் கதிரியக்கம் எத்தனை இருக்கும் என்று பேரார்வத்தோடு பார்த்தபோது, ஒன்றுமே இல்லை என்று தெரிந்தது. அதாவது பல்ஸ் நார்மல் (Pulse Normal).
ஆகவே, இந்தப் பானை ஓடுகள் பிரம்மாஸ்திரம் (இதுதான் அணு ஆயுதமாம்) வெடித்த பிறகு, அதாவது போர் நடந்த பல ஆண்டு ஆன பிறகு, தயாரிக்கப்பட்டு இருக்கலாம் அல்லவா? _ என்று கேட்டனர்.
என்னை வம்பிலே இழுத்துவிடாதீர்!
இந்த வம்பில் என்னை இழுத்து விடாதீர்! இந்தப் பானை ஓடுகளில் கதிரியக்கம் இல்லை, என்றுதான் சொல்வேன்; சொல்ல முடியும்; உங்கள் கற்பனைக்கெல்லாம் நான் பொறுப்பல்ல -_ என்றார் ஸெக்ஸேனா புன்னகை மன்னனாக.
மகாபாரதப் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன _ என்பதை உறுதி செய்யச் சென்ற டி.கே.பி. இராஜன் அவர்களுக்கு இது பெருத்த ஏமாற்றம்!
சின்னச்சின்ன ஆசை!
இருந்தாலும், மற்றோர் ஆசை, இராஜனுக்கு இருந்தது; அதையும் கண்டறிய முனைந்தார். சுவாமி ஓமாநந்தா சரஸ்வதி என்பவரால் குருசேத்திரத்திலிருந்து, தோண்டி எடுக்கப்பட்ட கத்திகள் (வேல்கள்), சிலைகள் போன்றவற்றில் எக்கச்சக்கம் ஆக வெளிப்படுவதாக பேரா.டிரிக்கா கூறியிருந்தாரல்லவா?
ஏன் அந்தப் பொருள்களையும் சோதனை இட்டால் என்ன? என்ற ஆசை அல்லது ஆர்வத்தோடு அந்தச் சாமியாரைத் தேடி டில்லியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள நெருல்லா _ சென்றார்.
ஏமாறச் சொன்னது நானா?
என்ன ஏமாற்றம்! சுவாமிஜி தனது சேகரிப்பை ரோடாக் என்னும் இடத்திலுள்ள குருகுலத்துக்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே எடுத்துச் சென்றுவிட்டார் என்றும், அவர் தற்போது அங்கு இல்லை. அதனால், அவரைப் பார்க்கும் வாய்ப்பே இல்லை என்றும் தெரிய வந்தது. என் செய்ய? எல்லாமே தோல்வி!
ஆக, மகாபாரதப் போர் உண்மையில் நடந்ததுதானா? என்பதும், அதில் அணு ஆயுதங்கள் பயன்பட்டனவா? என்பதும் அறிவியல் முறையில் மெய்ப்பிக்க நடந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலே முடிந்து விட்டன!
போரில் அணுக் கதிரியக்க ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்னும் ஆர்வலர்களுக்கு ஏமாற்றத்தின் மேல் ஏமாற்றமே மிஞ்சியது; எஞ்சியது.
எவனாக இருந்தால் எமக்கென்ன?
அதற்கு நாம் என்ன செய்ய முடியும்-? அறிவியல் நடைமுறையை, அதன் ஆய்வை, ஆய்வு முடிவை எந்தக் கொம்பனும் மீற முடியுமா? முடியாது!
இதனை, இனியும் பேசிவரும் – இல்லை உளறும் பேச்சை இனி எவன் நம்புவான்? எப்படி நம்புவான்?
– பேராசிரியர் ந.வெற்றியழகன்