இணையதளம் – shakespeare.palomar.edu
வில்லியம் ஷேக்ஸ்பியரையும் அவரது படைப்புகளையும் தெரிந்துகொள்ள பல இணையதள முகவரிகள் உள்ளன. மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்குள் சென்றால், ஷேக்ஸ்பியர் படைப்புகளான நகைச்சுவை, துன்பியல் நாடகங்கள், வரலாறு, கவிதை ஆகியன பிரித்துத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. படிக்க விரும்பும் படைப்பினைச் சொடுக்கினால் படித்துப் பயன்பெறலாம். shakespeare.palomar.edu/works.htm என்ற முகவரியில் பதிப்புகள் பிரித்தளிக்கப்பட்டு, புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தொடர்புடைய ஆய்வு வழிகாட்டியும் இடம் பெற்றுள்ளது.
செவ்வாழை – சைமன் ஜார்ஜ், செல்பேசி: 9840345234
மரம், செடி, கொடிகளை வளர்ப்பதில் குழந்தைகளுக்கு உள்ள உணர்வோடு ஒன்றிய ஆர்வம் காட்டப்பட்டுள்ளது. சாலையில் கிடக்கும் வாழைக்கன்றை எடுத்து வந்து நட்டு வைத்து, தினமும் நீர் ஊற்றிக் கண்ணும் கருத்துமாக வளர்த்து, கனவிலும் நினைவிலும் வாழைமரமாகவே வாழ்ந்து வருகிறான் குமரேசன் என்னும் சிறுவன்.
அவனது அக்கா வாழைமரம் வளர்ப்பதில் ஈடுபாடு இல்லாததுபோல் வெளிக்காட்டினாலும், வாழைப்பழங்களை ஓவியமாக வரைந்து ஒவ்வொரு பழத்திலும் தனது பெயரினைப் பதிக்கிறாள். நண்பர்களிடம் கலர் கலரா வாழைப்பழம் காய்க்கும் என்று பெருமையடிக்கும் குமரேசன் செவ்வாழைப் பழங்களைச் சாப்பிட்டானா என்பதை குறும்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளுள் ஒன்றின் கரு எடுத்தாளப்பட்டுள்ளது.
நூல்
நூல்: பெரியாருடன் வீரமணி தேதி சொல்லும் சேதி
ஆசிரியர்: இரா. கலைச்செல்வன்
வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
84/1, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 7.
தொலைப்பேசி: 044 – 26618163 பக்கம்: 226 விலை: ரூ.100/-
கற்கும் ஆர்வம், கேட்கும் திறன், இளமைத் துடிப்பு, பேசும் திறன், எழுதும் ஆற்றல், உயர் பண்பு, சிறந்த ஆளுமைக் குணம் முதலான பரிமாணங்களோடு சிறந்து விளங்கும் வீரமணியார் வளர்ந்து வந்த விதம் துளித்துளியாய் கொடுக்கப்பட்டுள்ளது.
பெரியார் பாசறையில் வளர்ந்து தமிழக அரசியல் வரலாற்றையே புரட்டிப்போட்ட பெரியாரின் தலை மாணாக்கர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் முதலானோர், பெரியார் _ வீரமணி உறவுநிலை கண்டும் வீரமணியார் நிர்வாகத்திறம் கண்டும் வியந்து போற்றியுள்ள நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன.
மேலும், சுயமரியாதை, ஜாதி மறுப்புத் திருமண நிகழ்வுகள் குறித்த பதிவுகளும் அங்கம் வகித்துள்ளன.
பொதுநலன், பொதுப்பணி விரும்பும் இளைஞர்கள் நூலை வாசித்து முடிக்கும் தருவாயில், நேர்மை, உழைப்பு, காலம் தவறாமை, பணிவு, துணிவு முதலிய குணங்களே நம்மைத் தலைமைப் பண்பிற்கு உயர்த்தும் எனும் உணர்வு நிலையை -_ உயர்வு நிலையை அடையச் செய்திருப்பதே பெரியாருடன் வீரமணி தேதி சொல்லும் சேதி.
-மூ. அய்யனார், முனைவர் பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.