கிரிக்கெட்டை தடை செய்ய வேண்டும்

ஜூன் 01-15

கிரிக்கெட்டைத் தடை செய்ய வலியுறுத்தி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம்

அய்.பி.எல். கிரிக்கெட் என்ற கொள்ளை லாபக் குபேரர்களின் பெரும் வாணிபத்தில், சூதாட்டம் கற்பனை செய்ய இயலாத எல்லைக்குச் சென்று, இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து, காவல்துறை கைது நடவடிக்கைகளைத் தொடரும் நிலையில், விசாரணையில் வெளிவரும் பல செய்திகள் பலரை திடீர்க் கோடீசுவரர்களாக்கியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

சென்னையில் கைது செய்யப்பட்ட சூதாட்டக் கும்பலின் தலைவர் பிரசாந்த் என்பவர் கூறிய தகவல் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது!!

1997ஆம் ஆண்டிலிருந்தே அவர் இந்த கிரிக்கெட் சூதாட்டத் தொழிலை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்!

அதாவது 16 ஆண்டுகளாக இது எவ்வித சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாகாமல் ஜாம் ஜாம் என்று வேகமாக நடைபெற்று, காவல்துறை துணையோடு ஆட்சியிலிருப்போர் பலரின் கூட்டுறவோடு, குறிப்பாக கிரிக்கெட் ஜாம்பவான் (ஜாம்பவன் என்றால் அனுமாரின் தந்தை _ – புராணப்படி)களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வந்துள்ளது என்பதுதானே பொருள்?

அப்போது 16 ஆண்டுகளுக்குமுன் இந்த அய்.பி.எல். ஆட்ட முறை இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியானால், கிரிக்கெட் ஆட்டத்தின் மீதே திட்டமிட்டே வெற்றி தோல்விகள் உடன்படிக்கை அடிப்படையில் இச்சூதாட்டங்கள் முன்பும் நடந்திருக்கின்றன என்பதுதானே அர்த்தம்?

இதில் இன்னொரு மாபெரும் வெட்கக்கேடு, ஒழுக்கக்கேடு _- தமிழ்நாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் இவருக்கு வலக்கரமாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. (அவர்கள் இவர் பெயர் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்; மேலும் முக்கியப் புள்ளிகள் மூவர் இவருக்குப் பக்கத்துணையாக இருந்துள்ளனராம்!)

சாதாரண டிராவல்ஸ் நடத்திய இவர் பல கோடிகளில் புரளத் துவங்கினாராம்!

கிரிக்கெட் சூதாட்டம்  விஷச் செடிகளாக உலகம் முழுவதும் பரவி விட்டது. என்னை ஜெயிலுக்கு அனுப்புவதன்மூலம் அதை அழித்துவிட முடியாது என்கிறார் இந்தப் பிரசாந்த்; இவருக்கு சென்னை சூதாட்டக் கிளப்புகளிலும் தொடர்பு உள்ளதாம்!

இதற்கிடையில் _- நெருக்கடி அவப்பெயரிலிருந்து மீளுவதற்குக் கிரிக்கெட் சங்கத்துக்காரர்கள் சில தந்திர உபாயங்களை  _ நடவடிக்கைகளை எடுத்துத் தப்பித்துக் கொள்ள முயலுகின்றனர் போலும்!

அதோடு மத்திய அரசு அமைச்சரும் கிரிக்கெட் அய்.பி.எல். சூதாட்டத்தைத் தடுக்க தனி சட்டம் கொண்டு வருவதாகக் கூறுவதே, ஒரு திசை திருப்பல் ஆகும்! இப்போதுள்ள சட்டங்கள் போதாதா?

ஒவ்வொரு அய்.பி.எல். அணி விளையாட்டுக்-காரர்களையும் கண்காணிக்க தனித்தனி ஊழல் தடுப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று பி.சி.சி.அய். தலைவர் கூறியிருப்பதும் நடைமுறைக்கு உகந்த தடுப்பு முறையாகத் தெரியவில்லை;

அவரே எங்களால் சூதாட்டத்தைத் தடுக்க முடியாது என்றும் கை விரித்து கருத்துக்கூறிய நிலையில், இந்த வியாபாரத்தை எப்படியும் நடத்தி லாபம் பெறவே முதலாளித்துவ (கார்ப்பரேட் கம்பெனி போதை முதலாளிகள்) சக்திகள் முயற்சிக்கும்.

முதற்கட்டமாக இந்த அய்.பி.எல். என்ற விளையாட்டுக்காரர்களை ஆடு, மாடுகளை ஏலம் போட்டு வாங்குவதைப் போன்ற மறைமுகக் கொத்தடிமை முயற்சிக்கு _- மனித உரிமை மீறல், ஊழல், சூதாட்டம், கருப்புப் பணம் லஞ்ச லாவண்யம் எல்லாவற்றுக்கும் ஊற்றாக விளங்கும் இந்த அய்.பி.எல். என்ற கிரிக்கெட் விளையாட்டையே முற்றாக உடனடியாக தடை செய்ய வேண்டும்; இதுதான் ஒரே வழி.

இதில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளைக் காட்டி தப்பிக்க இயலாதபடி சரியான குற்றப் பத்திரிகை விலை போகாத வழக்குத் தேவை!

ஓர்ந்து கண்ணோடாத நீதிபரிபாலனம் மூலம் பொது ஒழுக்கச் சிதைவைத் தடுத்து, விளையாட்டின் உயர்ந்த உன்னதத் தத்துவங்களை நிலை நிறுத்துவது அவசர அவசியமாகும்.

இதற்காக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தைத் திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி எல்லா மாவட்டத் தலைநகர்களிலும் கடந்த 24ஆம் தேதி வெள்ளியன்று எழுச்சியுடன் நடத்தியது. (திருச்சி மற்றும் ஈரோட்டில் மட்டும் 25ஆம் தேதி)

கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிக்கும் நமது அறப்போர் அதோடு முடிவடையாது; அது தடை செய்யப்பட்டு ஒழிக்கப்படும் வரை பிரச்சாரப் போர் _- அறப்போர் _- தொடர் மழையாகப் பெய்வது உறுதி! உறுதி!!

கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *