திரைப்பார்வை

திரைப்பார்வை மே 01-15

புதுமுக நடிகர் என புது அத்தியாயம் படைத்திருக்கிறது கௌரவம்….

திரைப்படங்கள் இன்றைய காலகட்டத்தில் பிரமாண்டமாகவும், வர்த்தகரீதியில் லாபம் சம்பாதிக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்-படுகின்றன. அதில் சில படங்கள் வெற்றி பெறவும் செய்கின்றன. சில தோல்வி-யடைந்தும் உள்ளன.

பிரம்மாண்டமாய் எடுக்கப்படுகின்ற படங்கள் ஏன் வெற்றி பெறுகின்றன என்றால், இன்றைய சமுதாயம் அதைப் போன்ற ஒரு மாய பிம்பத்தைத்தான் விரும்புகிறது. திரையில் கதையில்லாமல் எடுக்கப்படுகிற பல படங்கள் வெற்றி பெற்றாலும், கதையை சொல்லுகிற படங்கள் அதுவும் சமூக சிக்கல்களைச் சொல்லுகிற சில படங்கள் மட்டும்தான் வெற்றியடைகின்றன.

இந்தச் சூழலில் தற்போது வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கிற கௌரவம் திரைப்படம், நாட்டில் சமூகத்தில் குறிப்பாக தமிழகத்தில் நிலவுகின்ற -_ நிலவிய ஜாதிய சிக்கல்களை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. ஓர் அழகான கிராமத்தில் மேல்ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை, தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஓர் இளைஞன் காதலிக்கிறான்.

இருவரும் பொறியியல் கல்லூரியில் படித்தபோது வளர்ந்த காதல், திருமணம் வரை செல்வதை இயக்குநர் ராதாமோகன் படத்தில் கதையாக சொல்லியிருக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு தன்னுடன் படித்த இளைஞனைத் தேடி அவனுடன் படித்த பட்டணத்து நண்பன் (ஹீரோ) வருகிறான். தன் நண்பனைப்பற்றி அவனது பெற்றோரிடம் விசாரிக்கிறான்.

அப்போது அவனது நண்பனும், அதே கிராமத்தைச் சேர்ந்த மேல்ஜாதி பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்வதற்காக ஊரை விட்டு ஓடிவிட்டது தெரிய வந்ததைத் தொடர்ந்து ஹீரோ தன் நண்பனைத் தேடும் படலத்தைத் தொடங்குகிறான்.

தன் நண்பனின் தந்தை தன் மகனை எப்படியாவது தேடி கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு கேட்கும் காட்சி அந்தக் கணத்தில் நம் அனைவரையும் கண்கலங்கத்தான் வைக்கிறது. இதனையடுத்து ஹீரோ அந்தக் கிராமத்திலேயே குடில் அமைத்து தேடுதலைத் தொடங்குகிறான். இதற்கு அந்தக் கிராமத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்புகிறது.

குறிப்பாக அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தும் எதிர்ப்பு வலுக்கிறது. போலீசாரும் எதிராகவே இருக்கிறார்கள். தங்களது எதிர்ப்பைக் காட்ட  மேல்ஜாதி-யினர் தாழ்த்தப்பட்ட  மக்கள் வாழும் வீடுகளைச் சூறையாடுகிறார்கள். இருப்பினும் ஹீரோ பயங்கொள்ளாமல் தொடர்ந்து தேடுதல் பணியில் நண்பர்களுடன் ஈடுபடுகிறான். தேடுதல், மாணவர்கள் மத்தியில் போராட்ட வடிவமாக மாறுகிறது. இது ஒரு புதுமை.

இதனிடையே அவனுக்கு சட்டரீதியில் உதவ பொதுவுடைமைவாதியான நாசரின் மகள் உதவி செய்கிறார். நண்பனின் கிராமத்து வீட்டில் வளரும் சிறுவன் வரைந்த ஓவியத்தை வைத்து, தன் நண்பனும்  அவன் காதலித்த பெண்ணும்  கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருக்கலாம் எனக் கருதி, சிறுவன் வரைந்த ஓவியத்தில் சுட்டிக்காட்டியுள்ள கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடத்தில் தோன்றி பார்த்த-போது அவர்களது உடல் கிடைக்கின்றன. இதையடுத்து வழக்கு, நீதிமன்றம் என குற்றவாளிகளைக் கண்டு அறியும் படலம் என  தொடர்கிறது கதை……

உணர்ச்சிமிகுந்த கதையோடு தொடங்கும் திரைக்கதை கொஞ்சம் மெதுவாகத்தான் நகர்கிறது என்றே சொல்ல வேண்டும். இது படம் பார்த்தவர்களுக்கு கொஞ்சம் ஃபோராக இருந்தாலும் நேர்த்தியான உயிரோட்டமான கதை. அனைவரையும் உட்கார வைக்கிறது.

உலகில் எங்கும் இல்லாத வருணாசிரம ஜாதிக் கொடுமைகள் நம் நாட்டில் நிலவுவதையும் அதனால் மனிதர்கள் தனது மனிதநேயத்தையும், அன்பையும் அடமானம் வைத்துவிட்டு, தான் பெற்ற பிள்ளையையோ, தங்கையையோ வெட்டிக் கொல்லுகின்ற மனநலப் போக்கு இங்குதான் அதிகம் நிலவுகின்றது.

அந்த நிகழ்வுகளை தத்ரூபமாக, தைரியமாக அதுவும் அந்த மண்வாசனையோடு நேர்த்திக் குறையாமல் திரைப்படத்திற்கு உரிய பாணியில் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. குறிப்பாக பெண்ணைப் பெற்ற தந்தையான பிரகாஷ்ராஜ் நடிப்பு மிக நேர்த்தி.ஜாதிய பிரச்சினைகளுக்கு எதிராக மாணவர் போராட்டம். என்ற ஒரு புதிய கோணத்தை இயக்குநர் ராதாமோகன் படத்தில் சொல்லி-யிருக்கிறார்.மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் காட்சி உண்மை-யிலேயே சற்று உணர்ச்சியைத்தான் வரச் செய்கிறது.

இசையமைப்பாளர் தமனின் இசையில் பாடல்கள் நம்மைப் படத்துடன் ஒன்ற வைக்கிறது. திரைப்படத்தில் இதுபோன்ற கதைகளையும், சமூக பிரச்சினைகளையும் எடுத்துக்காட்ட முடியும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி என்றே கூறவேண்டும்.

வர்த்தகத்திற்காக எடுக்கப்படும் படங்களைத் தாண்டி அடித்தளத்தில் வாழும் மக்களின்  வாழ்வுக்காக எடுக்கப்பட்ட படம்தான் இந்தக் கௌரவம் திரைப்படம். இதுபோன்ற சமூக பிரச்சினைகளைச் சொல்லும் படங்களால் திரைத்துறையே கௌரவம் அடையும் என்பதில் அய்யமில்லை.

– இரா.கருணாகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *