காக்கும் கடவுள்?
பெருத்துப் போய்
கோயிலின்
உண்டியல் வயிறுகள்,
கசங்கிய கச்சையில்
ஏழை பக்தனின்
யாசக பிரார்த்தனை.
ஆண்டாண்டு காலமாய்
கல்லாகவே இருப்பதை
எப்படி நம்புவது ?
காக்கும் கடவுளென்று …….
– செல்வன்
வேறுபாடு
உண்டு கொழுத்தவன்
திண்ணையைத் தேடுவான்
ஊரை ஏய்ப்பவன்
கோவிலை நாடுவான்.
– கவிமுகில்
வருமோ வாட்டம்
பல தெய்வம் உண்டென்று
பக்தராய் எங்கும் கூட்டம், அதில்
குல தெய்வம் எமதென்று
குடும்பம் குடும்பமாய் ஓட்டம்
சில தெய்வம் உண்டென்று
சிந்தனையில் இல்லை நாட்டம்
உள தெய்வம் அறிவென்று உணர்ந்தால்
ஒரு நாளும் வருமோ வாட்டம்!
– ஆல.தமிழ்ப்பித்தன், புனல்வேலி
எதற்கிந்த கவனம்?
கவனத்தில்
குறைவாய் கவனிக்கப்பட்டு
காலமானவரின்
இறுதிச் சடங்கில்
ஒலித்தது ஒரு குரல்
கவனமாய் உடை
தேங்காயை என்று!
_ மலர்மன்னன், முசிறி
சமத்துவம்
சமத்துவம் பேசும் நண்பன்
தன் தந்தை வருவதைப் பார்த்ததும்,
டேய் வெளியே போய் நில்லு என்கிறான்…..
எனக்குப் பின் கூடவே
ஒளிந்துகொள்கிறது அவன்
ஜாதியும், சமத்துவமும்……
…………….
தெருவில் விளையாடும்
குழந்தைகளுக்கு
எப்படியோ தெரிந்திருக்கிறது
நாமமும், பட்டையும்
போடாத குழந்தைகள்
தன் நண்பர்கள் இல்லையென்று……
– தாய்சுரேஷ், கடத்தூர்
சமத்துவக் குழந்தை
நிலா காட்டி சோறூட்டும் தாயின் இடுப்பில் அமர மறுத்து,
கதை சொல்லி சோறூட்டும்
ஆயாவின் மடியையே விரும்புகிறது
சமத்துவக் குழந்தை…….
– தாய்சுரேஷ், கடத்தூர்
வழியில்லை
சிலருக்கு
கோவணத்திற்கே
வழியில்லை! – அந்தக்
கோயிலை இடிக்கவும்
வலுவில்லை.
– கவிமுகில்
குடிசை வீட்டுப் பையன்
பணக்கார வீட்டுப் பிள்ளை
ருசி பார்த்த அய்ஸ்க்ரீம் பந்தை
திருப்பி அடித்து அடித்தே
அவனைவிட மிக உயரப் பறந்தான்……..
குடிசை வீட்டுப் பையன்…..!
– தாய்சுரேஷ், கடத்தூர்
கயவன் யார்?
கல்லுக்குப் பூப்போடடு
கற்பூர மேற்றி
வணங்க வைத்தவன் யார்?
வடித்த கல்லை வணங்கென்று
முட்டாளாய் ஆக்கிவிட்ட
தன்னலத் தறுதலையாம்
ஆரியனன்றி வேறு யார்?
– கவிமுகில்