இனியனும் அரசியும் ஒரே கிராமத்துவாசிகள். ஒரே பள்ளியில் படித்தவர்கள். நண்பர்களாய்ப் பழகியவர்கள். கல்லூரிதான் மாற்றம். நட்பில் மாற்றமில்லாச் சந்திப்புகள். இனியன் முதுகலைப் பட்டதாரி. வேலை தேடும் வேலை. இளங்கலைப் பட்டத்துடன் ஆசிரியப் படிப்பின் இறுதியாண்டு மாணவி அரசி. தேர்வு முடிந்த இறுதி நாள்.
தற்செயலாக, நேரமிருந்தால் வா என்று தனது இல்லத்திற்கு இனியனை அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்று வந்தான். பேசினார்கள்…. பேசினார்கள்…..
படிப்பின் போக்குப் பற்றி, பணி தேடும் பணி பற்றி, தங்களின் நட்பின் ஆழம் பற்றித் தொடர்ந்து இருவரின் உரையாடல், நேரம் போனது தெரியவில்லை. ஒரு மணி நேரம் கடந்திருக்கலாம். கடைவீதி சென்ற பெற்றோர் திரும்பினர். வீட்டினுள்ளே வரக்கூடாத பையனைப் பார்த்த தந்தை, தலையில் ஆயிரந்தேள் அயராது கொட்டியது போல் பரபரவென நின்றார். தாயோ, என்ன நடக்குமோவென வெடவெடுத்து நின்றார். பத்து வயது தங்கையோ எதையுமறியாது அடுப்படிக்குள் நுழைந்தாள்.
ஏய்! உன்னையெல்லாம் இங்கே யார் நுழையவிட்டது? போ வெளியே என்றார் கடுமையுடன் தந்தை. அப்பா! இதிலென்னப்பா இருக்கிறது? ஒன்றாகப் படித்தோம்; பழகினோம்; நட்பானோம். வரச் சொன்னேன். வந்தான். இதிலென்ன தப்பு? யதார்த்தமாகக் கேட்டாள் அரசி. தம்பி! நீங்கள் தயவுசெய்து வெளியே போங்கள். குடும்பத்துக்குள் கலவரத்தை ஏற்படுத்தாதீர்கள் என்றாள் தாய்.
எழுந்தான். போய் வருகிறேன் என்ற இரு சொல்லோடு நடையைத் தொடர்ந்தான் இனியன்.
யாரும் சாப்பிடவில்லை. ஒருவரோடு ஒருவர் பேசவில்லை. மன்னியுங்கள். உங்கள் ஜாதிப் பெருமைக்கு நான் எந்தவிதக் கேடும் இழைக்கமாட்டேன் என மகள் அரசி தானாக முன் வந்து பேசியதால் வீடு இயல்பு நிலைக்குத் திரும்பியது.
வழக்கமாக வீதியில் சந்தித்தார்கள். நடந்தவைகளுக்காக அரசி வருத்தம் தெரிவித்தாள் இனியனிடம். வாரமொன்று கடந்தது. அப்பாவின் திடீர் அறிவிப்பு. மாப்பிள்ளை வீட்டார் இன்று வருகிறார்களென்று.
வந்தார்கள். அமர்ந்தார்கள். பேசினார்கள். ஜாதிச் சடங்கு, சம்பிரதாயங்கள் அடிப்படையில் தொடர்ந்தது சொல்லாடல்கள்.
வந்தவர்க்குப் பெண்ணைப் பிடித்துப் போய்விட்டது. வாய்விட்டுத் தெரிவித்ததால், மகிழ்ந்தார் அரசியின் தந்தை; ஜாதி காப்பாற்றப்பட்டது என்பதற்காக. தவறாக நினைக்காதீர்கள். மருமகளுக்குக் கூடப் படித்த பையனோடு ஏதோ….. தவறான பேச்சு வார்த்தை இருக்கிறதாமே! அது உண்மையா? என்றார் வருங்கால மாமியார்.
அப்படியெல்லாம் ஏதுமில்லை. கூடப்படித்தவர்களோடு சரளமாகப் பேசுவாள். அவ்வளவுதான். என் பொண்ணு நல்ல ஒழுக்கமான பெண் என்றார் அரசியின் தந்தை.
ஒழுக்கமா! கீழ் ஜாதிப் பயலை வீட்டுக்குள்ளேயே கூட்டி வந்து, உட்கார வைத்து நாட்கணக்கில் பேசியிருக்கிறாள். உண்மையா, பொய்யாவென்று உங்கள் பெண்ணையே கேளுங்கள் என்றான் வேகத்துடன் மாப்பிள்ளை.
விரைந்து வந்த அரசி, உண்மைதான். பேசினேன். அதிலென்ன தப்பு? நான் நேர்மையானவள். அவனும் அப்படியே. நாங்கள் எந்தத் தவறிலும் ஈடுபடவில்லை. நம்புங்கள் என்றாள்.
அக்கம் பக்கத்தார் சொல்கிறார்களே. உங்கள் குழந்தைதானே, அக்காளும் அவனும் பூட்டிய வீட்டுக்குள் இருந்தார்கள். அப்பா கோபப்பட்டுத் திட்டினார் என்று சொன்னாள் என்றாள் வந்தவள்.
வெகுளித்தனமாய்த் தங்கை வீதியில் பெருமை அடித்துக்கொண்டு விட்டாள் விளைவை அறியாமல்.
நம்புங்கள். மாப்பிள்ளைக்கும், நம் ஜாதி ஜனங்களுக்கும் எந்தவிதத் துரோகமும் இழைக்கமாட்டாள் என்றார் அரசியின் தந்தை.
அவள்தான், பேசினேன் அதற்கென்ன? என்கிறாளே. தெரிந்தே சாக்கடையில் விழுவதா? வா அம்மா, போகலாம் என நடையைக் கட்டினான் மாப்பிள்ளையாய் வந்தவன்.
நெடுமரமாய் நின்றனர் அரசியின் பெற்றோர். மரியாதையாய்ப் பேசுங்கள். சாக்கடையாம், யார் சாக்கடை? ஜாதிப் பெருமை பேசி என் தந்தை நின்றதால் நானும் என் உள்ளத்து ஆசைகளை எரித்துச் சாம்பலாக்கி உங்களைக் கட்டிக்கச் சம்மதித்தேன். ஜாதிப் பெருமை தேடி வந்த நீங்களோ, ஒழுக்கம் பற்றி உரையாடல் நடத்துகிறீர்கள். நான் பேசினதற்கே கெட்டுப் போயிருப்பாளோ என நினைத்தால் நாளை எதற்கெல்லாம் ஒழுக்கங்கெட்டவள் எனச் சான்றிதழ் தருவீர்கள்? தெரியாமல்தான் கேட்கிறேன். நீங்கள், இதற்குமுன் எங்கேயாவது ஒழுக்கங்கெட்டுத் திரிந்தீர்களாவென எந்தப் பெண்ணாவது எங்கேயாவது கேட்கிறார்களா? அது என்ன பெண்ணிடம் மட்டும் அந்தச் சோதனை? ஆண்கள் ஒழுக்கமானவர்கள்தான். அதுவும் உயர் ஜாதியென்றால் ஒழுக்கமே ஆடையென அணிந்தவர்கள் என்பதை நாங்கள் வினாத் தொடுக்காமலேயே நம்ப வேண்டும். நம்பிக் கழுத்தில் கட்டுடா, வெட்டுடா என நீட்ட வேண்டும் அப்படித்தானே எனப் பொரிந்து தள்ளினாள் அரசி.
போதும், நிறுத்தம்மா என்றார் மாப்பிள்ளையின் தந்தை. பொறுக்கமாட்டாதவராய் போங்கய்யா என்று விரட்டினார் அரசியின் தந்தை. உங்கள் ஜாதிப் பெருமைக்காக நான் வாங்கிக் கட்டிக் கொண்ட பட்டம் பார்த்தீர்களா அப்பா. நான், ஒழுக்கங்கெட்டவளாம். சாக்கடையாம். பரவாயில்லை அப்பா. உங்கள் சுய கவுரவத்தை எனக்காகத் தானம் செய்ய வேண்டாம். இன்னும்கூட உங்கள் ஜாதியிலேயே வேறொரு மாப்பிள்ளையைப் பாருங்கள். கட்டிக்கொள்ள நான் தயார் என்றாள் அரசி.
என்னை மன்னித்து விடம்மா. ஜாதிப் பெருமையைவிட ஒழுக்கம்தான் மேலானது என்பதைத் தெரிந்து கொண்டேன். ஒழுக்கம் உடைமை குடிமை என்பார் திருவள்ளுவர். வெளியே போ என்றவுடன் போனாரே அந்த நேர்மையைப் பாராட்டுகிறேன் அம்மா. அம்மா….. அரசி….. அந்தத் தம்பியின் செல்பேசி எண்ணைத் தாம்மா என்றார் தந்தையார்.
எண்ணைத் தந்தாள். தொடர்பு கொண்டார். நீயே வரச் சொல்லும்மா என்று செல்பேசியை மகளிடம் தந்தார். உடனே புறப்பட்டு வாருங்கள், உங்கள் அம்மா, அப்பாவுடன் என்றாள். வந்தார்கள். வரவேற்பு தடபுடலாக நடந்தது.
மன்னித்து விடுங்கள் தம்பி. மேல்ஜாதி என் ஜாதி என்று கூச்சலிட்டேன். உங்கள் நட்பால் என் பெண் பெருமைதான் அடைந்துள்ளாளேயொழிய சிறுமைத்தனம் பெறவில்லை. நீங்கள் சம்மதித்தால் என் பெண்ணையே தங்களுக்குத் தர விரும்புகிறேன் என்றார் அரசியின் தந்தை. பெற்றோர் தலையாட்டச் சம்மதித்தான் இனியன்.
ஜாதிக்காரன் வந்து இழிவாய்ப் பேசுவதைக் காட்டிலும் அவர்களில்லாமல் மணம் முடிக்க ஏற்பாடாகியது. தன் நண்பன் உதவியோடு மன்றல் நிகழ்வில் கலந்துகொண்டு திருமகள் இறையன் தலைமையில், பார்வதி, வெற்றிச்செல்வி முன்னிலையில் மனோரஞ்சிதம்மை அறிவுரையுடன் அரசியும் இனியனும் இணையராயினர்; வாழ்க்கையில் எல்லா நிலையிலும் பாதுகாப்பாயினர்.
– மா.பால்ராசேந்திரம்