ஆண்கள் தங்கள் குறிப்பிட்ட வயது தொடங்கும்போது வெள்ளி விழா, அறுபதாம் ஆண்டு விழா, மணி விழா, பவள விழா என்று சிறப்பித்துக் கொண்டாடி குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் சூழ மகிழ்வர்.
அப்போது, பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, தங்கள் இணையருடன் இணைந்து விழாவினைச் சிறப்பிக்க வேண்டும். இப்படியொரு சூழலில், தங்கள் இணையருக்கு -_ மனைமாட்சியருக்கு விழா எடுத்து மாண்பு செய்து பெருமைப்படுத்தியுள்ளனர் சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் வெள்ளையாம்பட்டு சுந்தரம், எஸ்.நடராஜன் குடும்பத்தினர்.
மனைவிக்கு மணிவிழா! இல்லத்தரசிக்கு இனிய விழா!…. எனத் தொடங்கும் கவிதை பொன் விழா, வைர விழா, முத்து விழா கொண்டாட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவிக்கிறது. பாராட்டுக்குரியவர்கள் இந்த இரண்டு பதிப்பாளர்களும்!
இந்த நேரத்தில் இத்தகைய விழாக்களுக்கான தொடக்கத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி வைத்தது திராவிடர் கழகம் என்ற வரலாற்றினையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கவிஞர் முகவை ராஜமாணிக்கம் அவர்களது இணையரின் 60ஆம் ஆண்டு விழாவை திராவிடர் கழகம் தனது சொந்தச் செலவிலேயே (அழைப்பிதழ் முதல் நிறைவு வரை) நடத்திக் காட்டியது.
அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களே முன்னின்று நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்ற (பழைய) கட்டிடத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து, பெரியார் பேருரையாளர் இறையனார் தனது இணையர் திருமகள் அவர்களின் 60ஆம் பிறந்தநாளை பூட்கைப் பெருவிழா என்று கொண்டாடினார். பெரியார் தொண்டர்கள் பல இடங்களிலும் இத்தகைய விழாக்களை நடத்தி வருகிறார்கள். நாமும் தொடரலாமே!