பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு சட்டமுன் வரைவு மக்களவையில் 19.3.2013 அன்று நிறைவேற்றப்பட்டது. இதன்படி பாலியல் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொந்தரவு செய்யும் நோக்கில் பெண்களைப் பின்தொடர்வது, பாலியல் நோக்கத்துடன் பார்ப்பது, அமிலம் வீசுவது உள்ளிட்ட குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இருவரும் சம்மதத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கான வயது வரம்பு 16 ஆக குறைக்கப்படவில்லை. 18 ஆகவே நீடிக்கிறது.
அமில வீச்சுக்கு 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். பாலியல் வன்முறை, குழுவாக பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகளுக்குக் குறையாமல் தண்டனை கிடைக்கவும், ஆயுள் தண்டனையாக நீட்டிக்கவும் சட்டமுன் வரைவு வழிவகை செய்துள்ளது.
ஏற்கெனவே பாலியல் வன்முறை வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்கள் மீண்டும் அதே போன்ற குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். தொந்தரவு தரும் நோக்குடன் பெண்களைப் பின்தொடர்வது, பாலியல் நோக்கத்துடன் பார்ப்பது போன்ற குற்றங்களில் இரண்டாவது முறையில் ஈடுபடுவோர் ஜாமீனில் வெளியே வர முடியாது.
அமிலம் வீசுவது மிகக் கடுமையான குற்றம், இதில் பாதிக்கப்படுபவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எதிர் நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு என்று சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது. பாலியல் வன்முறைக்கு உள்பட்டவர்கள், அமிலத் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவமனைகள் முதல் உதவி மற்றும் சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ள வேண்டும். சிகிச்சை அளிக்க மறுத்தால் தண்டனை அளிக்கப்படும். பெண்களைப் பின் தொடர்வது, பாலியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது போன்றன முதல்முறையாக தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளன. இப்படி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள சூழ்நிலையில், பெண்களின் மீதான வன்முறை எப்படி இருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. மாறிவரும் சமுதாயச் சூழ்நிலையில், பாலுறவு பற்றிய கருத்துகள் பலதரப்பட்டவையாக உள்ளன.
வன்புணர்வு மட்டும் அல்லாமல், மனைவியுடன் கொள்ளும் உறவுகூட அவள் சம்மதத்துடன்தான் நடைபெற வேண்டும்; இல்லையேல், அது குற்றமாகக் கருதப்பட வேண்டும் என்ற குரல்களும் உரத்துக் கேட்கின்றன.
பெண்ணானவள் தனித்து ஆண் துணையில்லாமல் வாழ முடியாது; மனுநீதியின்பால் வகுக்கப்பட்ட எல்லாச் சட்டங்களும் ஒழிக்கப்பட வேண்டும். அவளது கணவனுடன்கூட பாலுறவிற்கு மறுத்துரைக்கும் உரிமைகள் அவளுக்குண்டு. அவளது மனக்குமுறல்களை எடுத்துரைக்க அவளுக்கு உரிமை உண்டு. அவள் மதிக்கப்பட வேண்டும். இந்தியர்கள் பெண்களை ஒரு பொருளாகத்தான் நடத்துகிறார்களேயொழிய, ஒரு மனித உருவாக நடத்துவதில்லை. அவளால், தந்தை, கணவன் அல்லது மகன் ஆகியோரது பாதுகாப்பின்றி சுதந்திரமாக வாழமுடியும் என்று முன்னாள் பெண்களுக்கான அமைப்பின் தலைவரான (Former Chairperson Womens’ Commission) ஆர். ராமாத்தாள் கூறியுள்ளார்.
வன்புணர்வு என்றால் என்ன? இந்திய தண்டனைச் சட்டம் 375ஆவது பிரிவு வன்புணர்வு பற்றிச் சொல்கிறது.
1. அவளுடைய விருப்பத்திற்கு மாறாக,
2. அவளுடைய சம்மதம் இன்றி,
3. அவளுக்குப் பிடித்த ஒருவரின் மரண பயம் காட்டியோ, துன்புறுத்தியோ சம்மதம் பெறுதல்,
4. அவள் சட்டப்படி மணந்து கொண்டுள்ள கணவன் அல்ல என்று தெரிந்திருந்தும், அவள் அவனைக் கணவன் என்று நம்பி இருக்கும் சமயத்தில், அவளுடைய சம்மதத்துடன்,
5. அவள் சரியான மனநிலையில் இல்லாதிருக்கும்போதோ அல்லது போதை வயப்பட்டிருக்கும்போதோ அவளது சம்மதத்துடன்,
6. அவள் 16 வயதுக்குட்பட்டிருக்கும் பட்சத்தில், அவளது சம்மதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்,
அவை வன்புணர்வாகக் கருதப்படும்.
ஆனால், பதினைந்து வயது நிரம்பாதிருக்கும் மனைவியுடன் அவள் கணவன் கொள்ளும் உறவானது, வன்புணர்வாக மாட்டாது-. (இந்தக் கருத்தானது மறுதளிக்கப்பட வேண்டும்; மாற்றப்பட வேண்டும்.)
ஒரு மனிதன் யாரையாவது தாக்கினால், அது, தண்டனைக்குரிய குற்றமாகும். அவன் அதே செயலை மனைவியிடம் செய்யும்போதும், அது கொடுஞ்செயல்தானே!
ஒரு மனிதன் ஒருவரைக் கடும் வார்த்தைகளால் வைது, காயப்படுத்தினால், அது தண்டனைக்குரியது.
அதேபோலத்தான் ஒருவன் தன் மனைவியைப் பொதுஇடத்திலோ அல்லது வீட்டிலோ வையும்போது அது கொடுஞ்செயலாகிறது.
குடும்பக் கொடுமைச் சட்டத்தின் கீழ் (Domestic Violence Act) தண்டனைக்குரியதே.
ஒரு மனிதன் ஒருவரை சைகையின் மூலம் அச்சுறுத்தினால், அது குற்றமாகும். அதுபோலவே, அவன் மனைவியைப் பயமுறுத்தினாலும் அது குற்றமே.
அதைப்போலவே, மற்றொரு பெண் அல்லது சிறுமியுடன் உறவுகொள்வது தண்டனைச் சட்டம் 376ஆவது பிரிவின்படி தண்டிக்கத்தக்க குற்றமாகும். அதைப்போலத்தான் மனைவியைக் கட்டாயப்படுத்தித் தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு கணவன் செய்தலும் ஆகும்.
சம்மதத்துடன் உறவு கொள்ளும்போது, எதுவும் குற்றமல்ல; சம்மதம் இல்லாதபோது அச்செயல், அந்த நபர் சிறுமியாகவோ, வேறொரு பெண்ணாகவோ அல்லது மனைவியாகவோ இருந்தாலுமே, குற்றமாகி விடுகிறது. அதுவே நாட்டின் சட்டம். உடலுறவின்போது, பெண் அதில் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளாதபோது, அது கணவனேயாக இருந்தாலும், அவளைத் துன்புறுத்தி, அதன் காரணமாக கட்டாயத்தினால் அவள் இணங்கியிருந்தாலும்கூட அச்செயலின் விளைவாக அவளுக்கு வலி, கேடு மற்றும் விருப்பத்துக்கு மாறாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது காரணமாக அது வன்புணர்ச்சிபாற் கொண்டு வரப்பட வேண்டும்.
உடலுறவிற்கு அணுகும்போது, மனைவி மறுதளித்தால் அதற்கான மாற்று, அவளிடமிருந்து தள்ளி இருத்தல் அல்லது மணமுறிவு பெறுதலே ஆகும். அதற்காக அவன் அவளை எவ்வழியிலும் கட்டாயப்படுத்தக் கூடாது.
திருமணமென்பது ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல்தான். அதற்கு அப்பால் யாதொன்றுமில்லை. திருமணமென்பது ஒரு வளர்ச்சி பெற வேண்டிய இணக்கம் (Sense) தான். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வதற்குத்தான். ஒருவரை அடக்கித் துன்புறுத்த அல்ல. பல அவமானங்களையும், அடக்குமுறைகளையும் சந்திக்கும் பெண்ணிற்குத் திருமணம் ஒரு தண்டனையாக அமையக் கூடாது. அதுவும் வன்புணர்ச்சிக்கு இணையான வல்லுறவாக அது அமையக் கூடாது. ஆனால், இஸ்லாமியச் சட்டம் என்ன சொல்கிறது?
இஸ்லாமியச் சட்டப்படி (The Muslim Personal Law) பெண்ணிற்குத் தரவேண்டிய சீதனம் (மெகர்) கேட்கப்பட்டும்கூட கொடுக்கப்படாவிட்டால், மனைவி அவனைப் புறக்கணிக்கலாம்; சமைக்க மறுக்கலாம்; துணி துவைக்க மறுக்கலாம்; ஏன் எதையும் செய்ய மறுக்கலாம்; ஆனால், அவள் பாலுறவு வாழ்வை மறுக்க முடியாது. கணவன் அழைக்கும்போது அவள் போய்த்தான் ஆகவேண்டும்.
இது குறித்து தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் மீனா கந்தசாமி, ஒரு பெண்ணுக்குப் பாலியல் விருப்பம் உண்டு என்று ஒப்புக்கொள்ளும் சமுதாயம் மட்டுமே, அவளுக்குச் சில நேரங்களில் அந்த விருப்பங்கள் இல்லை என்று ஒப்புக்கொள்ளும்.
இங்கே பெண்ணுக்கு அவள் ஆசையை வெளிப்படுத்தும் இடமும் இல்லை, வேண்டாம் என்று சொல்லிவிடக் கூடிய வாய்ப்பும் இல்லை என்று நடப்பு உண்மையை உடைத்துப் பேசுகிறார். இது குறித்த தனது கட்டுரை ஒன்றில் தான் குறிப்பிட்டுள்ள கருத்தைப் பின்வருமாறு எடுத்து வைக்கிறார். ஓர் இரவு நேரத்தில் கட்டாயப்படுத்தப்பட்ட உறவின் காரணமாக இரத்தப் போக்கு ஏற்பட்டு நீங்கள் மருத்துவமனைக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
உங்கள் கணவர் அவரது ஆண் தன்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்ததற்காக வாழ்த்துக் கூறும் புன்னகையை மருத்துவர் உதிர்ப்பதை எதிர்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு வேண்டியிருக்கும். இதற்காக நீதிமன்றம் செல்ல இயலாது. இந்திய குற்றவியல்/ஆண் குறியியல் சட்டத்தில் (Indian Penal/Penile Code) திருமண உறவில் பாலியல் வன்முறையின் மீது நடவடிக்கை எடுக்க பிரிவே இல்லை. கடந்த டிசம்பரில், தில்லி மாவட்ட நீதிபதி ஜே.ஆர்.ஆர்யன் என்பவர் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், இந்திய குற்றவியல் சட்டம் திருமண உறவுக்குள் பாலியல் வன்முறை என்ற பார்வையையே ஏற்றுக் கொள்ளவில்லை. கட்டாயத்தினாலோ, தனது விருப்பத்திற்கு மாறாகவோ தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டார் என்று கணவன் மீது மனைவி புகார் தெரிவித்தாலும் அது குற்றமாகாது என்று தெரிவித்துள்ளார். சட்டபூர்வமாகச் சொல்வதானால் உன் கணவன் உன் உடலின் உரிமையாளன். திருமணம் என்பது இலவசப் பாலுறவுக்காக ஆணுக்குக் கிடைத்த லைசன்ஸ் மற்றும் திரும்பத் திரும்பச் செய்யப்படும் பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்கும் வழி! என்கிறார் மீனா கந்தசாமி.
திருமணத்தை கிரிமினல் குற்றம் ஆக்க வேண்டும் என்ற பெரியார், பெண்ணின் பாலியல் தேர்வையும் 80 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தினார். பெரியாரின் சிந்தனையை இன்று உலகம் பேசுகிறது.
தொகுப்பு: செல்வா
சமா இளவரசன் உதவியுடன்