இந்திய தத்துவங்களில் கடவுள் மறுப்பு – 9

ஏப்ரல்-01-15

சோம பானம் என்பதென்ன?

– சு.அறிவுக்கரசு

ரிக் ஒன்பதாம் மண்டலம் முழுவதும் போதைதரும் சோமபானம் பற்றிப் புகழ் உரைகளாகவே உள்ளன. இதனை மூன்று வேளையும் 365 நாளும் பருகிப் போதையில் மிதந்தனர் ஆரியர் என்பதை ரிக் வேதத்தால் உணரலாம். சோமம் என்பது கஞ்சாதான். கஞ்சா இலையுடன் பாலும் தேனும் கலந்து தயார் செய்யப்படுவது சோம பானம். கஞ்சாவை திபெத் நாட்டில் இன்றளவும் சோமராஜா என்றுதான் சொல்கிறார்கள். குடிப்பழக்கம் இம்மண்ணில் உருவாக்கப்பட்டு வேர் ஊன்றப்பட்டதே ரிக் வேதமோதிகளால்தான்_ ஆரியப் பார்ப்பனர்களால்தான்.

டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் எழுதிய பாரதீய தர்சனம் நூலின் 62, 63ஆம் பக்கங்களில் கண்டுள்ள செய்தி இதற்குத் தக்க ஆதாரமாகும். … பூஜை செய்யவேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருந்த சரளமான இயல்புடைய ஆரியர்கள், ஆத்மாவை உற்சாகப்படுத்தி உயர்த்துவதற்கும், சாதாரண நிலையில் செய்யமுடியாத செயல்களைச் செய்வதற்குமுரிய ஊக்கமும் திறமையும் மனிதர்களுக்கு உருவாக _ தற்காலிகமாக ஒருவகை வெறி ஏற்படுத்த ஒரு திரவத்திற்கு முடியுமெனக் கண்டதோடு அதை திவ்யமான ஏதோ ஒன்று எனக் கருதத் தொடங்கினர். அதனை உட்கொள்கிற மனிதர்களுக்கெல்லாம் தெய்வீக சக்தி அளிக்கிற ஒரு தேவதையாக அவர்களது நோக்கில் அந்தப் பானம் தெரிந்தது … என்று தொடர்ந்து எழுதுகிறார்.

சுமார் 120 பாடல்கள் சோம பானம் பற்றிய பாடல்களாக உள்ளன.

வேதத்தைக் கையாள்வதற்கான விதிமுறைகளைக் கூறுவதைப் பிரமாணம் என்கிறார்கள். வேதங்கள் புனிதமானவை. அவற்றை விமர்சிப்பதோ குறைகூறுவதோ கூடாது என விதித்துவிட்டனர். ஆனாலும், வேதத்தைத் தூக்கிப் பிடித்தபோதே, அதனை எதிர்ப்பதற்கும் நிலை உருவாகிவிட்டது. உலகாயதக் கருத்துகளின் தந்தையான பிரகஸ்பதி மூத்த ரிஷியாவார். இந்திரன், வருணன் போன்ற இயற்கையை வழிபடும் நிலையை மாற்றி பிரம்ம வழிபாடு எனப் புதிய முறையைப் புகுத்தியபோது, கடவுள் இல்லை என்ற நிலையும் உருவானது. இந்தப் பிரம்மத்தை ஓங்கி ஒலித்தவை உபநிடதங்கள்.

இந்த உபநிடதங்கள் எத்தனை என்பதே யாருக்கும் தெரிவதில்லை. 144 என்று சிலரும் 183 என்று சிலரும் 365 என்று சிலரும் கூறுகின்றனர். ஒருசிலர் ஒரே அடியாக 1180 என்றும் கூறிவிட்டனர். ஆனால், மலையாள மண்ணில் காலடி எனும் ஊரில் ஆர்யாம்பாள் எனும் பார்ப்பன விதவைப் பெண்ணின் மகனான ஆதிசங்கரன் பத்து உபநிடதங்களை மட்டுமே கூறி விவாதிக்கிறார். அவை, இவை:
ஈசாவாஸ்யம், கேனம், கடம் (கடோபநிசதம்), பிரசன்னம், முண்டகம், மாண்டூக்யம், தைத்ரியம், அய்தரேயம், சாண்டோக்யம், பிரகதாரண்யம்

இந்த உபநிடதங்கள் வேதக் கருத்துகளின் விளக்கமாகவும் பிரமாணக் கருத்துகளின் மறுப்பாகவும் உள்ளன. வேதத்தையும் பிரமாணத்தையும் விளக்கிக் கொண்டு வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளப் பின்வரும் உதாரணத்தைக் காணலாம். வேதங்கள் தற்காலச் சட்டங்கள் (ACT) போல. பிரமாணங்கள் அந்தச் சட்டங்களை அமல்படுத்த உருவாக்கப்படும் விதிகள் (RULES) போல! விதிகளை எழுதியவர்கள், தத்தம் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப வகுத்து எழுதிவிட்டார்கள் போலும்! ஆகவே, அவற்றை எதிர்த்து விளக்கம் அளிக்க உபநிடதங்கள் எழுதப்பட்டிருக்கலாம். குரு, சீடனுக்குச் சொல்லித்தருதல் எனும் பொருளில் (அமர்ந்து கேட்பது) உபநிடதம் அமைந்துள்ளது. ரகசியம் எனும் பொருள்கூட இச்சொல்லுக்கு உண்டு.

ஈசாவாஸ்யம் எனும் உபநிசத்தில் எல்லாம் கடவுள் மயம் எனக் கூறப்பட்டுள்ளது. கேன உபநிசத்தில் யார் அறிந்தார்களோ அவர்கள் அறியவில்லை என்கிற குழப்பமான சொல் உண்டு. (அதனால்தான் தற்காலத் தமிழில் கேனப்பயல் எனும் சொலவடை உள்ளதோ?) கடம் எனும் குரு உபதேசித்ததால் கடோபநிசதம் எனப்படுகிற உபநிசத்தில் ஆன்மாவை அறிந்தபின் பிறப்பதில்லை. சாவதில்லை. அவன் எங்கிருந்தோ வந்தவனும் அல்ல. அவன் பிறப்பற்றவன். நிரந்தரமானவன். உடல் அழிந்தாலும் அவன் அழிவதில்லை. என்றெல்லாம் ஆத்மா பற்றிக் கூறப்படுகிறது.

பிரசன்ன உபநிசதம் என்பது காய்கறிகளை மட்டும் உண்டுவந்த பப்பில்லாத முனிவரால் உருவானது. கடவுளின் இச்சா சக்தியால் மக்களைப் படைத்தது என்பது இதன் சாரம். ஓம் என்பது அஉம் என்பது. இம்மூன்றையும் தனித்தனியாக தியானித்தால், அமிர்தம் கிடைக்குமாம். மூப்பின்மை கிட்டுமாம். அச்சமின்மை ஏற்படுமாம். சாந்தமும் ஏற்படுமாம்.

முண்டகம் என்றால் மொட்டை அடித்தல். மொட்டையடித்து சன்யாசி ஆகும் நிலை வேதம் கூறும் நான்கு நிலையில் இறுதிநிலை. பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்பவை மனித வாழ்விற்குரிய நான்கு நிலைகள் என்பது வேதம். சன்யாசத்தை வலியுறுத்துவதால் முண்டக உபநிசதம் எனப்படுகிறது. பிரம்மா தம் மூத்த மகனுக்குச் சொன்னதாம். இந்த உபநிசத்தில் வருவதுதான் இந்திய அரசின் முழக்கமான சத்யமேவஜயதே என்பது.

மிகக்சிறிய உபநிசதம் மாண்டுக்ய உபநிசதம் ஆகும். கடவுள் என்பது தனியாகக் கிடையாது எனக்கூறும் ஆதிசங்கரனின் அத்வைதத்திற்கு ஆதிசங்கரனின் குரு கவுடபாதர் இதன் உரைமூலம் விதை போட்டார் என்பர்.

தைத்ரிய உபநிசதம் என்பது வேதம் படித்து முடித்தவன் அதன் பிறகு ஆற்ற வேண்டியவை பற்றிக் கூறுகிறது. மகிதாஸ் அய்தரேய என்பார் படைத்த அய்தரேய உபநிசதம் பிரம்மஞானம் அல்லது உணர்வுதான் ஆத்மா என்கிறது.

சாண்டோக்ய உபநிசதம் என்பது உத்தாலக ஆருணி என்பவர் படைத்தது. இவர் யாக்ஞவல்கியரின் குரு. சாமவேதத்திற்கு விரிவுரை என்ற வகையில் இவர் படைத்தது. இதயத்தின் சூட்சுமமான பிரம்மத்தைத் தொழவேண்டும். உடலுக்குள் சூட்சுமமான தாமரை இல்லம் இருக்கிறது. அதற்குள் இருப்பது சூட்சுமவானம். அதற்கும் உள்ளே இருப்பதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இரண்டு நட்சத்திர லோகங்களும் பூமியும் அதன் உள்ளே கலந்திருக்கின்றன. நெருப்பும் காற்றும் சூரியனும் சந்திரனும் மின்னலும் விண்மீன்களும் ஆகிய எல்லாமே அங்கே உள்ளன என்கிறது இந்த உபநிசதம்.

பிரக்தாரண்ய உபநிசதம் என்பது யஜூர் வேத சதபத பிரமாணத்தின் கடைசிப் பாகம் ஆகும். ஆரோக்கியமான குழந்தை பெறவேண்டும் என்றால் கருவுற்ற பெண்கள் காலையில் இறைச்சி, எருது இறைச்சியையும் (MUTTON AND BEEF) சாப்பிட வேண்டும் என்கிற இந்த உபநிசதம். (காலையிலேயேவா?) பிரம்மத்தை அறியும் ஆற்றல் பார்ப்பனர்களுக்குக் கிடைக்கவில்லை. அதனால்தான் சத்திரியர் ஆளவந்தவர்கள் ஆனார்கள் எனும் கருத்து இதில் உள்ளது.

வேதங்கள் குறை இல்லாதவை. குறை சொல்லப்படக் கூடாதவை. அதன் தத்துவங்கள் பற்றிக் கேள்வி கேட்கக் கூடாதவை. அதுபோலவே நால்வருணக் கொள்கைபற்றியும் கேள்வி கேட்கக் கூடாது என்று ஆக்கிவைத்து விட்டனர்.

பார்ப்பனரின் உரிமைகளைப் பற்றி சத்திரியன் கேள்வி கேட்கக்கூடாது. வைசியன் பெற்றுள்ளதைவிட அதிக உரிமைகள் சத்திரியனுக்குத் தரப்பட்டன. சூத்திரனுக்குள்ள உரிமைகளைவிடக் கூடுதலான உரிமைகள் வைசியனுக்கு உண்டு. சூத்திரனுக்கு உரிமை ஏதும் கிடையாது. மற்ற மூன்று வருணத்தார்க்கும் ஊழியம் செய்வது மட்டுமே அவனுக்குரியது. எந்த ஊதியமும் எதிர்பார்க்கக் கூடாது.

நான்கு வருணப் பெண்களுக்கும் கல்வி தரப்படக்கூடாது. பெண்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

இந்த வகையான வேத, பிரமாணக் கொள்கைகளை ஏற்க முடியாத சிந்தனையாளர்கள் எதிர்க்கத் தொடங்கினர். வேதங்களுக்கு விளக்கமாகவும் பிரமாணக் கொள்கைகளுக்கு மறுப்பாகவும்தான் உபநிசத்கள் உருவாக்கப்பட்டன எனக் கருதப்பட்டது. ஆனால், அறிவார்ந்த உபநிசத்கள் ஒழிக்கப்பட்டு வேதப் பிரமாணங்களை ஆதரிக்கக்கூடிய உபநிசத்கள் மட்டுமே காணக் கிடைக்கின்றன. அவற்றைப் புரோகிதவர்க்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வந்த நிலையில் எழுந்த அறிவுக்கருத்துப் புரட்சிதான் சாருவாகம். வேதங்கள், பிரமாணங்கள், உபநிசத்கள் முதலிய எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தித் தம் வாதங்களை வைத்தனர் சாருவாகர்கள். அவர்தம் வாதங்களை எதிர் கொள்ளத்தக்க அறிவும் திராணியும் அற்று வேதமோதிகள் பங்கப்பட்டனர்.

கண்ணுக்குத் தெரிவதை (பிரத்யட்சம்) மட்டுமல்லாது அது அறிவாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டால்தான் உண்மை என்றாகும் எனும் தத்துவம் உலகாயதம்.

அதைப்போலவே சமணம், பவுத்தம், சாங்கியம் ஆகிய மூன்றும் அறிவுத் தத்துவங்கள். வேதங்கள், பிரமாணங்கள், உபநிசத்கள் ஆகியவற்றிற்கு எதிர்ப்பான தத்துவங்கள்.

வேதங்கள் இம்மண்ணுக்கு உரியவை அல்ல. ஈரான் பகுதியில் வாழ்ந்த சதம் வம்சத்தினர் கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்கு வந்தேறி வேதத்தைப் புகுத்திவிட்டனர்.

ரிக்வேதம் கூறும் தாய், தந்தைக் கடவுளான தியவ், பிருத்வி ஆகியவை ஆரிய இனம் சார்ந்த ஸ்லாவ் இனத்தாரின் கடவுளாகவும், கிரேக்கக் கடவுளாகவும் ரோமானியக் கடவுளாகவும் இருந்தன. செக்கோஸ்லாவியா எனும் நாடாக இருந்து பிரிந்துபோன ஸ்லாவாகியா நாட்டு ஸ்லாவ் மக்கள் வழிபட்ட கடவுள். அங்கெல்லாம் அவை மாஜி கடவுள்களாகி விட்டன. அவை இந்திய மக்களிடையே ஆரியர்களால் திணிக்கப்பட்ட கடவுள்கள். திணிக்கப்பட்டதை ஏற்க மறுத்தனர் இம்மண்ணின் மக்கள். அவர்களின் எதிர்ப்புக் கருத்துகளே கடவுள் மறுப்புத் தத்துவங்களாக அன்றைய காலத்திலேயே கருதப்பட்டன. அவற்றை அழிக்க முயன்று அந்நூல்களை மட்டுமே அழிப்பதில் வெற்றி கண்டனர் வேதமோதிகள்.

மேலைநாட்டுத் தத்துவ அறிஞர் காண்ட் என்பவருக்குச் சமமாகப் பேசப்படும் தருமகீர்த்தி முட்டாள்தனத்தைப்பற்றிக் கூறியுள்ளார். அறிவிலித்தனத்தின் அய்ந்து பண்புகள் என கீழ்க்காண்பவற்றைக் குறிப்பிடுகிறார்.

1.    வேதங்களை ஒப்புக் கொள்ளுதல்.

2.    அனைத்தையும் படைத்ததாகக் கடவுளை ஏற்றுக்கொள்ளுதல்.

3.    புனித நதிகளில் குளித்துப் பாவங்களைப் போக்கிவிடலாம் என நம்புதல்.

4.    ஜாதிகளை ஏற்றுக் கடைப்பிடித்தல்

5.    பாவங்களைப் போக்கிக் கொள்ள நோன்பு கடைப்பிடித்தல்.

இத்தகைய முட்டாள்களின் நம்பிக்கையைக் கைவிட்டவர்களின் கருத்துகள் கடவுள் மறுப்புத் தத்துவங்கள் எனப்படுகின்றன.

இப்படிப்பட்ட கருத்துகள் ரிக்வேதத்தில் கூடச் சிதறிக் கிடக்கின்றன. விரதம் இருக்கும் பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) ஆண்டு முழுக்கத் தூங்கிக் கிடக்கிறார்கள் என்றும் அவர்கள் கூறும் வேதகோஷங்களை மாணவர்கள் திரும்பக் கூறுவது என்பது மழைக்காலத்தில் தவளைகள் கூட்டமாகக் கூடிக் கூச்சல் இடுவதைப் போல இருக்கிறது என்றும் (பிரிவு 7 பாடல் 103) கூறுகிறது. வேதங்களில் கூறப்பட்ட நியமங்களைக் கடைப்பிடிப்பது வேதமோதிகளுக்கே வேடிக்கையாகவும் நையாண்டியாகவும் இருந்திருக்கின்றன.

– (ஆய்வோம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *