ஆசிரியர் விடையளிக்கிறார்

ஏப்ரல்-01-15

கேள்வி : இலங்கையில் நடக்கும் வன்முறையை நிறுத்த முயல்வது பக்கத்து நாடான இந்தியாவின் கடமையல்லவா? பின் ஏன் இந்திய அரசு பயந்து மாய்கின்றது? – ஜே.அய்.ஏ.காந்தி, எரும்பி

பதில் : இந்திய அரசு – மத்திய அரசுக்கு – ஏனோ சிங்கள இலங்கை அரசின்மீது இவ்வளவு பரிவு, பாசம். வெளியுறவுக் கொள்கையே தமிழர் விரோதிகளாக உள்ள அதிகாரவர்க்கத்தினரால் உருவாக்கப்பட்டு, மக்களுக்குச் சம்பந்தமில்லாத அறிவு ஜீவிகளால் செயல்படுத்தப்படுவதால்தான் – மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. மனம் இல்லை; காரணம், அவாள் நம் இனம் இல்லை!

கேள்வி : விவசாயிகள் பாராட்டு விழா என்ற பெயரில் கோடிக்கணக்கான பணம் ஊதாரித்தனமாக வீணடிக்கப்படுவது சரியா? – ஜி.சாந்தி, திருவள்ளூர்

பதில் : அது அ.தி.மு.க. அமைச்சர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் வாணவேடிக்கை! விவசாயிகளின் காய்ந்த வயிறும், பூனை தூங்கும் அடுப்பும் டெல்டா பகுதியில் மாறவில்லையே!

கேள்வி : அரசியல்வாதிகள் – ஆன்மீகவாதிகள் இவற்றில் யார் அதிகம் மக்களை வளைப்பவர்கள்? – பி.கிருபாசிறீ, எடையூர்

பதில் : இரண்டாம் வகையினரே, அரசியல்வாதிகளும் இவர்களிடம் சரண் அடைந்து பயன் பெறுகின்றனரே!

கேள்வி : நல்ல ஆட்சி அளித்திட்டால் செய்த தவறுகளை மக்கள் மன்னித்து விடுவார்கள் என்று கூறி பாவ மன்னிப்புக் கோரியுள்ளாரே நரேந்திர மோடி?
– ஜி.நளினி, ஆவூர்

பதில் : அது சரி….. மோடி ஆட்சி நல்ல ஆட்சி என்று யார் சொல்வது – மோடிதானா?

கேள்வி : முன்னாள் விடுதலைப்புலி அமைப்பைச் சேர்ந்த கருணா என்ற தமிழன்தான்  இலங்கையில் தமிழர்கள் அழிவுக்குக் காரணமானவன் என்பதை யாரும் பேசாமல் மற்றவர்களைப் பற்றிக் குறை சொல்வதேன்?
– எம்.கே.பி.சண்முக சுந்தரம், கீழ்வேளூர்

பதில் : காட்டிக் கொடுக்கும் அய்ந்தாம்படை வீபீஷணர்கள், அனுமார்கள்தான் எதிரிகளைவிட மோசமானவர்கள் -மிகவும் வெறுக்கத்தகுந்தவர்கள். துரோகிகளில் கருணா, டக்ளஸ் தேவானந்தாக்கள் போன்றவர்கள் பட்டியல் உண்டு!

கேள்வி : இந்தியாவில் இப்போது ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றால் இலங்கைப் படுகொலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்திருப்பார்களா?
– ந.பொற்கோ, ஆற்காடு

பதில் : நிச்சயம் – நமது இந்திய சுதேசி அரசைப் போல் இருக்காது. பிரிட்டன், காமென்வெல்த் போட்டியைக்கூட இலங்கையில் நடத்த மறுத்துள்ளது; அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் அமெரிக்கத் தீர்மானத்தில் – இலங்கைக்கு எதிராகத்தானே 25 நாடுகள் ஒன்றாக வாக்களித்து அதன் மனிதநேயத்தைக் காட்டத் தவறவில்லையே.

கேள்வி : பாலச்சந்திரனைக் குண்டுக்கு இரையாக்கிய மிருக மனம் படைத்த  சிங்கள அரசுமீது நம் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன்? தமிழினம் என்றாலே…… இந்தியப் பேரரசுக்கு இளக்காரந்தானா?

– தி.பொ.சண்முக சுந்தரம், திட்டக்குடி

பதில் : கைப்புண்ணுக்குக் கண்ணாடியா வேண்டும்?  அது வடநாட்டான் உயிர் அல்லவே; அப்பாவி நாதியற்ற தமிழர் உயிர்தானே அய்யா……!

கேள்வி : தீர்க்கதரிசி தந்தை பெரியார் விரும்பிய திராவிட நாடு வெற்றி பெற்றிருந்தால் இன்று ராஜபக்ஷேக்கள் வாலாட்டுவார்களா? பார்ப்பன – வடநாட்டானை நாம் கெஞ்ச வேண்டிய நிலை வந்திருக்குமா? – – இல.சங்கத்தமிழன், செங்கை

பதில் : எல்லோரும் பெரியாரைத்தான் பிணி தீர்க்கும் மருத்துவர் என்று உணரும் காலம் மிக வேகமாக வந்த வண்ணம் உள்ளதே!

கேள்வி : பாலியல் வன்கொடுமைக்குக் கொண்டு வந்த சட்டம் நிறைவை அளிக்கிறதா? – ச.அன்புமணி, காஞ்சி

பதில் : பெரும் அளவுக்கு நிறைவை அளிக்கிறது. வெறும் உணர்ச்சிகளால் சட்டங்கள் உருவாக்கப்படுவது நல்லதல்ல; அறிவுப்பூர்வமாக அமைதலே சாலச் சிறந்தது.

கேள்வி : தமிழ்நாட்டில் நடைபெறும் மாணவர்கள் போராட்டங்கள் டெசோவின் தாக்கம் என்று கூறலாமா? – பி.சுஜித், சென்னை

பதில் : உண்மையை மறைக்காமல் கூற எவர் முன்வந்தாலும் அவர் உங்களைப் போல்தான் கூறுவார் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *