வீரத்தை விதைத்து விடைபெற்றார் சாவேஸ்

ஏப்ரல்-01-15

வெனிசூலா நாட்டு மக்கள் மட்டுமல்ல. உலகையே ஒரு பூகம்பத்தைப் போல் குலுக்கிய சம்பவம்…. மார்ச் 6 அன்று நடந்தேறியது. வெனிசூலா நாட்டு மக்கள் தனக்குப் பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியினை அறுத்தெடுத்த ரணவேதனையைவிட, பெரிய வேதனையாக அக்குழந்தையைப் பிரித்துக்கொண்டு சென்ற இயற்கையை எண்ணி கண்ணீர் மல்க அழுதபடியே இருந்தனர்.

இப்படி பலரது கண்களில் கண்ணீரை மட்டுமல்ல, வீரச்சுவடுகளையும் பதித்துவிட்டுச் சென்ற மாமனிதர்.. ஹூயூகோ சாவேஸ். லத்தின் – அமெரிக்கா நாடுகளில் ஒன்றான  எண்ணெய் வளம் அதிகமுள்ள  வெனிசூலாவில் 1954ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி பிறந்தவர் சாவேஸ். சாதாரண ஆசிரியரின் மகனாகப் பிறந்த இவர், பள்ளிக்காலங்களில் விளையாட்டுகளில் ஆர்வமுடையவராக விளங்கினார். கூடைப்பந்து (பேஸ்கெட்பால்) போன்ற விளையாட்டுகளில் முதன்மையானவராக திகழ்ந்ததால் சாவேஸ் தகுதியின் அடிப்படையில் இராணுவத்தில் சேர்க்கப்பட்டார். பின்னர் தனது திறமையால் பதவி உயர்வு அடைந்து லெஃப்டினெண்ட் கர்னல் ஆனார்.

தனது வாழ்க்கை முழுவதும் இடதுசாரி இயக்கங்களையும், அதன் கொள்கைகளையும் நோக்கிய பயணமாகவே அமைத்துக்கொண்ட சாவேஸ், தனது நாட்டின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா சுரண்டுவதையும், எண்ணெய்க் கிணறுகளை அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் நிறுவனங்கள் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வதையும், அவர்களாக கொடுப்பதை அமெரிக்காவின் குட்டி தேசங்களாகிய தென் அமெரிக்காவில் இருக்கும் கியூபா, வெனிசூலா நாடுகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அதிகார ஏகாதிபத்திய காலனி ஆதிக்கத்தைக் கண்டு வெகுண்டு எழுந்தார்.

தனது நாட்டில் அம்பது சதவீதத்திற்கும் மேல் மக்கள் சாப்பாட்டிற்குப் போராடுவதையும், மிக பின்தங்கிய ஏழைகளாக வாழ்வதையும் சகித்துக்கொள்ள முடியாத சாவேஸ்,  முன்னாள் வெனிசூலாவின் போராளியான சீமோன் பொலிவாரை முன்மாதிரியாகக்கொண்டு தனது நாட்டின் அரசுக்கு எதிராகச் செயல்படும் அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளை எதிர்த்துப் போராட ஆரம்பித்தார்.

இராணுவத்தில் இருக்கும் தனது சகாக்களோடு அரசைக் கவிழ்க்க முயன்று முதன்முறையாக தோல்வியைச் சந்தித்தார். பின்னர் புதுக் கட்சி ஒன்று ஆரம்பித்து மக்களுக்காகப் போராடுபவர் என்ற நம்பிக்கையை மக்களின் மனதில் நிலைநாட்டி, தன் நாட்டின் அரசை மண்ணைக் கவ்வச்செய்து 1999 ஆம் ஆண்டு வெனிசூலா நாட்டின் அதிபர் ஆனார் சாவேஸ். இதுவே அவர் கண்ட முதல் வெற்றி.

பதவிக்கு வந்ததும் முதலில் ஏகாதிபத்திய நாடுகளிடம் இருந்த எண்ணெய்க் கிணறுகளை தன் நாட்டின் அரசுடைமை ஆக்கினார். அதன் மூலம் வரும் வருமானங்களை மக்களின் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தினார். லத்தீன் – அமெரிக்கா மக்களின் கல்வியறிவு, மருத்துவம், ஏழை நலத்திட்டங்களுக்கு இந்த வருவாய் பயன்படுத்தப்பட்டது. மக்களின் பக்கம் சாவேஸ் இருந்ததால், சாவேஸின் பக்கம் மக்கள் தானாகச் செல்ல ஆரம்பித்தனர்.

கியூபாவை சோஷலிசப் பாதையில் அழைத்துச் சென்ற ஃபிடல் காஸ்ட்ரோவை தனது தந்தை என்று கூறிக் கொண்டவர் சாவேஸ்.. காஸ்ட்ரோவின் கொள்கைப்படியே அமெரிக்காவின் ஆதிக்க சக்தியை லத்தீன் அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையுடனே செயல்பட ஆரம்பித்தார் சாவேஸ். இதற்காக இவர் பல எதிர்ப்புகளை எதிர்க்கொண்டு சிறைவாசம் வரை சென்றார். ஆனால், மக்களிடம் இவருக்கு இருந்த நற்பெயரால் அவரது சிறைவாசத்தைத் தடைசெய்யச் சொல்லி வெனிசூலா மக்கள் வீதி வரை வந்து போராட ஆரம்பித்தார்கள். சாவேஸுக்காக அவர்கள் நடத்திய 72 மணிநேரப் போராட்டம் தேசத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தது.

அடக்குமுறை அரசாங்கம் மக்களுக்கு அஞ்சியது. அதனால், சாவேஸ் விடுவிக்கப்பட்டு மீண்டும் அதிபரானார். தொடர்ந்து நான்கு முறை அதிபராக பதவியேற்ற ஹுயூகோ சாவேஸ். கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார். ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து வெற்றி கண்ட சாவேஸ் புற்று நோயை எதிர்த்து வெற்றிகாண முடியாமல் கடந்த மார்ச் மாதம் 6 ஆம் தேதி தன் உயிரிழந்தார்.

தன் சொந்த நாட்டின் வளங்களைச் சுரண்டிய அமெரிக்க அரசை எதிர்த்து இறுதிவரைக் கடுமையாகப் போராடிய சாவேஸின் இறப்பிற்கு அமெரிக்க அரசே இரங்கல் தெரிவிக்க வேண்டிய அளவுக்கு அவருடைய செல்வாக்கு இருந்தது. சாவேஸின் மரணம், வெனிசூலா நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றும், அவரைப் போர் மனிதன் என்றும் ரஷ்ய அதிபர் புட்டின் புகழாரம் சூட்டியிருக்கிறார். உலக நாடுகளின் தலைவர்கள், ஒரு போராளிக்காக ராயல் சல்யூட் அடித்து சாவேஸை இறுதி ஊர்வலத்தில் வழி அனுப்பினார்கள்..

மக்களின் கண்ணீர் அலையில்.. நனைந்தபடியே சாவேஸ் தன் இறுதிப் பயணத்தை மேற்கொண்டார். வெனிசூலா நாட்டையும், அதன் மக்களையும் அந்நிய நாடுகள் அடிமைப்படுத்த முடியாது. ஏனெனில், என் மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் போர்க்குணத்தைக் குடியேற்றியுள்ளேன் என்ற பெருமிதத்துடன் அவரது முகம் வானத்தை நோக்கியிருந்தது.

போராளிகளுக்கு மரணம் கிடையாது. அழியாத வரலாறு உண்டு. சாவேஸ் மீது நமக்கு ஒரு வருத்தம் உண்டு. சிங்களப் பேரினவாதத்தால் அழிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நில்லாமல், அமெரிக்க எதிர்ப்பு உலக அரசியல் காரணங்களால் ராஜபக்சேவுக்கு ஆதரவு நிலை எடுத்தவர் என்பதை நாம் பதிவு செய்யாமல் இருக்க முடியாது.

–  பிரதீபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *