நூல்
நூலின் பெயர்: இளமை எனும் பூங்காற்று
ஆசிரியர்: சுப. வீரபாண்டியன்
வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் ரோடு, சென்னை–14. தொலைபேசி: 044–43993029
பக்கங்கள்: 184 விலை ரூ. 110/-
இசை, கவிதை, நாட்டியம், வீரம், விஞ்ஞானம், மருத்துவம், தேசப்பற்று, சினிமா, விளையாட்டு, அரசியல்….. என்ற துறைகளில் சாதித்தவர்களைத் தன்னகத்தே கொண்டுள்ள கருத்துப் பெட்டகம். ஒரு தலைப்பைப் படித்ததுமே பல புத்தகங்களைப் படித்து நிறைய செய்திகளைத் தெரிந்து கொண்ட உளப் பூரிப்பை உண்டாக்குகிறது.
நாம் அறிந்த பிரபலங்களைப் பற்றிப் படிக்கும் போது, சோதனைகளைக் கடந்துதான் சாதனைகளை ஒருவரால் படைக்க முடியும் என்ற எண்ணப் பிரதிபலிப்பை மனதில் பதிய வைத்து, சாதனைகளை நிகழ்த்தத் துடிப்போருக்கான ஊன்றுகோலாக – கலங்கரை விளக்கமாக மிளிர்கிறது. 21 புத்தகங்களைப் படித்த இன்பத்தை மனதிற்குத தந்து பூங்காற்றாக மனதை வருடியும் புயல் காற்றாக நெருடியும செல்வதே இளமை எனும் பூங்காற்று.
தகவல் தளம் www.indiapost.gov.in/pin
அஞ்சல் குறியீட்டு எண் அறிய முன்பெல்லாம் அஞ்சல் அலுவலகம்தான் செல்லவேண்டும் அல்லது அதற்கென இருக்கும் புத்தகத்தை வாங்கி வைத்திருக்க வேண்டும். ஆனால்,இப்போது உங்கள் வீட்டிலிருந்தே இணையத்தில் www.indiapost.gov.in/pin என்ற தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம். இந்திய அஞ்சல் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான இதில் எண் தேடும் வசதியும் உள்ளது. ஊரின் பெயரை இங்கிலீஷில் குறிப்பிட்டால் உடனே அவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண்ணை அறியலாம்.
இணையதளம்
www.ilakkiyam.com
தமிழ் இலக்கியம் குறித்த இணையதளம்.இயல்,இசை,நாடகம் என தனித்தனியே பகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பயன்படுத்தத்தக்க வகையில் சங்க இலக்கியம், திருக்குறள், அவ்வையார் பாடல்கள் உள்ளிட்ட முக்கிய நூல்கள் யுனிகோட் தமிழ் எழுத்துருவில் வழங்கப்பட்டுள்ளன. இசைப்பிரிவில், நாட்டுப்புறப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. வீரபாண்டிய கட்டபொம்மன் போர்ப் புறப்பாடு, ஜாக்சன் துரையுடன் வாதம் செய்தல் ஆகிய திரைக்காட்சிகளும், பராசக்தி நீதிமன்ற உரையாடல், மனோகரா, வீர சிவாஜி வசனங்கள் எழுத்துவடிவிலும் அளித்துள்ளது அருமை.
குறும்படம்
அறிவிருந்தால்… -_ ஜெ.பாலா
செல்பேசி : 9095568365
இந்தியாவின் எதிர்காலத் தூண்களாம் குழந்தைகளைக் கோவிலின் பின்புறமுள்ள வேப்ப மரத்தடியில் அமர வைத்து வேப்பிலை வைத்தியம் செய்து விபூதி பூசி பண வசூல் செய்கிறார் காவி உடை அணிந்த மனிதர்.
வீட்டிற்கு வரும் அவர் தண்ணீர் குடிக்கும்போது இருமல் வருகிறது. காணிக்கை வந்த பணத்தை எடுத்துக் கொண்டு மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கிறார்.
ஒலியின்றி (Sound) ஒளிக்கு (Video) மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து காண்போர் கண்களை நிறைத்து மனதில் பதித்து உணர வைக்கப்பட்டுள்ளது.