தேவை : உலகின் மனிதநேயப் பார்வை

மார்ச் 16-31

உலகின் பல பகுதிகளிலும் போர்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அவை மதம், இனம், மொழி, அதிகாரம், பணவெறி, நிலவளம் (எண்ணெய்) போன்ற காரணங்களால் நடக்கின்றன. ஆயுத விற்பனைக்காகவும் போர்கள் உருவாக்கப் படுகின்றன. இந்தக் காரணங்களில் ஒன்றான இனபேதத்தால் இலங்கையில் நடந்த போர் மற்ற எல்லாப் போர்களைவிடவும் கொடூரமானது என்பதை இப்போதுதான் உலகம் கவனிக்கத் தொடங்கியிருக்கிறது.

 

ஆரிய ஹிட்லருக்குப் பிறகு இன்னொரு ஆரிய சிங்கள இனவெறியன் ராஜபக்ஷேவின் கோர முகத்தை, பச்சிளம் சிறுவன் பாலச்சந்திரன் அம்பலப்படுத்திவிட்டான்.  ஈழத்தமிழர் போராட்டத்தின் இணையற்ற நாயகன் பிரபாகரனின் மகன் 12 வயதே ஆன பிஞ்சு. அந்தப் பிஞ்சின் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தெடுத்த படம் இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது.  உலகப் போர்கள் கண்டிராத அடாத அக்கிரமங்களைச் செய்த ராஜபக்ஷேவின் கொடூர மனத்தை உலகம் அறியச் செய்த லண்டனின் சேனல் 4 ஆவணப் பட இயக்குநர்  கேலம் மாக்ரே ஈராக்கில் கூட்டுப் படைகளின் போர்க்குற்றங்கள் குறித்து 3 புலனாய்வுப் படங்களை எடுத்தவர். “இலங்கையில் நடந்த அதிகமான போர்க்குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை பற்றி உலகுக்குத் தெரியவே இல்லை. எனவே, இது பற்றி நாம் மேலும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இது புலனாய்வுப் பத்திரிகையியலின் ஒரு முக்கிய நடவடிக்கை மட்டுமல்ல, என்னுடைய பணிகூட என்கிறார் கேலம் மாக்ரே.

இனவெறுப்பு, பித்தலாட்டம், கொடுங்கோன்மை, நம்பிக்கைத் துரோகம், வஞ்சகம் என என்னென்ன தீய குணங்கள் உண்டோ அத்தனையும் கொண்ட ஒரே மனித(?)மிருகம் ராஜபக்ஷேவின் சிங்கள அரசு வழக்கம்போல சேனல் 4 எடுத்த இந்தப் படத்தைப் பொய்யானவை என்று கூறியுள்ளது. ஆனால், இதனை மறுத்துள்ள கேலம் மாக்ரே, “படுகொலைகள், பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் ஆகியவற்றைக் காட்டும் காட்சிகள், படங்களை போரன்சிக் டிஜிட்டல் இமேஜ் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஒரு முன்னணி தடயவியல் மருத்துவர் ஆகியோரை வைத்து நன்கு ஆராய்கிறோம். டிஜிட்டல் நிபுணர்கள் ஒவ்வொரு காட்சியையும் ஆய்வு செய்கிறார்கள். அதில் ஏதேனும் வெட்டி ஒட்டும் வேலைகள் செய்யப்பட்டுள்ளதா, மாறுதல் ஏதும் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். ஒளியின் திசை, பிம்பத்தில் குளறுபடி ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்தார்கள். அதில் எந்த ஏமாற்று வேலையும் செய்ததற்கு ஆதாரம் இல்லை. இடங்கள், தேதி, காட்சிகள் ஆகியவற்றை நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலத்துடன் ஒப்பிட்டும் பார்த்துக் கொண்டோம் என்று கூறும்  அவர் அதன் பின்னரே இப்படத்தை வெளியிட்டுள்ளார்.

முதல்படம் எடுக்கும்போது இலங்கைக்கு நேரில் சென்று வந்துள்ள மாக்ரே அங்கு சிலரைச் சந்தித்துள்ளார். இதனையடுத்து அயல்நாடுகளுக்குத் தப்பிவந்த சிலரைப் பார்த்துப் பேசியுள்ளார். வெளிப்படையாகப் பேச மறுக்கும் அவர்கள் இலங்கையில் வாழும் தங்களின் உறவினர்களை எண்ணி அஞ்சுவதாகக் கூறுகிறார். சிங்கள அரசின் அராஜகங்களைப் பேசும், எழுதும் சிங்களப் பத்திரிகையாளர்களே கொல்லப்படும் போது, காணாமல் போகும்போது தமிழர்கள் எப்படிப் பேச முன்வருவார்கள்?

தமக்குக் கிடைத்த காட்சிகள் பலவற்றைப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு மனதை நெகிழவைப்பது என்று கூறியுள்ள மாக்ரே, “இறந்து போனவர்களை விட வாழ்பவர்களைக் காண்பதுதான் மிகத் துயரமான அனுபவமாக இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து அனுபவிக்கும் துன்பம் இருக்கிறதே.. அது அதைவிடக் கொடுமையானது என்கிறார்.

“உலகத்தின் மனசாட்சி இறுகிவிடவில்லை என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தைப் பார்க்கும் மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். ஏதாவது செய்யவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்கிறார்கள். இன்னும் நம்பிக்கை மிச்சம் உள்ளது. போரின் கடைசிக் கட்டத்தில் நடந்தது என்ன என்று இன்னமும் முழுவதும் தெரியவில்லை. சில சர்வதேச சுதந்திரமான விசாரணைகள் தேவைப்படுகின்றன. நாங்கள் பதில்களைத் தேடுகின்றோம். ஆனால் பத்திரிகையாளர்கள் உண்மையைத் தேடும் பணியைத் தொடங்கவே முடியும். எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாது.

எல்லா போர்களும் மோசமானவை. ஆனால், இந்த அளவுக்குக் கொடுமைகள் எதிலும் நடக்கவில்லை. நான் பல போர்கள் பற்றி செய்தி சேகரித்துள்ளேன். சில பொதுவான அம்சங்கள் இருக்கும்தான். போர் முடிந்தபின்னால் சாதாரண மக்கள் யாருமே சாகவில்லை என்றார்கள். இப்போது பல்லாயிரம் பேர் இறந்தார்கள் என்று ஒப்புக் கொள்கிறார்கள். மெதுவாக உண்மை அவர்களைச் சுற்றி வளைக்கும். எங்கள் ஆதாரங்களை நாங்கள் பரிசோதித்துள்ளோம்.

உண்மையில்லாத எதையும் எங்கள் படத்தில் சேர்க்கவில்லை. இது பயங்கரமான போர். அதிலும் கடைசி சில மாதங்கள் மிகக் கொடுமையானவை. அமைதியும் சமாதானமும் திரும்ப வேண்டு மானாலும் உண்மையும் நீதியும் தேவை. பன்னாட்டு மக்கள் சமூகம் ஒரு பாடத்தை நிச்சயம் கற்றுக் கொள்ளும் என்று நினைக் கிறேன். அய்.நாவும் சர்வதேச சமூகமும் இப்போரைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டன. அய்.நாவின் ஒவ்வொரு உறுப்பு நாடும் ஏற்றுக்கொண்ட அடிப்படைக் கடமை பாதுகாக்கும் பொறுப்பு. அதைச் செயல்படுத்துவதில் அனைவரும் தவறிவிட்டனர். இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தவிர்க்க வேண்டுமென்பதை உலக சமூகம் உணர வேண்டிய நேரம் இது, என்று அந்திமழை (மார்ச் 2013) மாத இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் ஆணித்தரமாக தனது படத்துக்கான வாதங்களை அடுக்கியுள்ளார்.  கேலம் மாக்ரேயின் இந்த வலிமை வாய்ந்த ஆயுதத்தை ராஜபக்ஷே நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். தமிழகத்தை மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் தமிழர்கள் மற்றும் பல நாட்டு மக்களின் கோபம் சிங்கள அரசின் மீது திரும்பியுள்ளது.

இதன் உச்சமாக இலங்கை மீது அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டு வர இருக்கிற நிலையில், அய்.நா. மனித உரிமைகள் ஆணையமே இலங்கை மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

38 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை, அய்.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை கடந்த (பிப்ரவரி) மாதம் 11 அன்று நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்தில் சமர்ப்பித்தார். இலங்கையின்  போர்க் குற்றங்கள், தற்போது இலங்கை செயல்படுத்தி வரும் திட்டங்கள் உள்பட அதில் கூறப்பட்டு உள்ள சில முக்கிய விவரங்கள் இவை:- இலங்கையில் போர் நடந்த சமயத்தில் பெரியவர்களும், சிறுமிகளுமாக பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, மீண்டும் அவர்களது இடத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு சரியாகச் செயல்படுத்தவில்லை.

இந்த நிலையில், அங்கு போர் முடிவுக்கு வந்த பின்னரும் ஆள் கடத்தல் சம்பவங்கள் தொடர்கின்றன. தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இன்னமும் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஏன் திரும்பப் பெறப்படவில்லை? அதிகாரிகளும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிரந்தரமாக இருப்பார்களா? அல்லது வெளியேறிவிடுவார்களா? என்று அறிவிக்கப்படவும் இல்லை. மேலும், அவர்கள் அரசு நிர்வாகத்திலும் பங்கெடுத்து வருகிறார்கள். சிறுபான்மைத் தமிழர்கள், நிர்வாகத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.

ராணுவம் வாபஸ் பெறப்படாததுடன், மேலும் மேலும் ராணுவம் குவிக்கப்படுவதாலும், அதிகாரிகள் நிர்வாகத்தில் ஈடுபடுவதாலும், அங்கு வசிக்கும் தமிழ்ப் பெண்கள், சிறுமிகள் மத்தியில் பாலியல் பலாத்கார அச்சம் நிலவுகிறது. பொதுமக்களும் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்துடன் உள்ளனர். உள்நாட்டுப் போருக்குப்பின் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள், மீள் குடியமர்த்துதல் போன்றவை சரியாக நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசின் தேசிய செயல் திட்டத்திலும் அவை புறக்கணிக்கப்பட்டுள்ளன. சிறுபான்மைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. சிறுபான்மைத் தமிழர்களின் பல போர் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன. நிறையச் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. மனித உரிமைகள், மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதாகச் சொன்ன இலங்கை அரசு அது குறித்து முழுமையாக விசாரணை நடத்தவில்லை. புலம் பெயர்ந்தவர்களைக் குடியமர்த்தும் பணியை முழுமையாகச் செயல்படுத்தவில்லை. இலங்கை அரசு நியமித்த குழு சமர்ப்பித்த (கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு) பரிந்துரைகளில் ஒரு சிலவற்றை மட்டுமே இலங்கை அரசு நிறைவேற்றி உள்ளது. ஆகவே, சில பரிந்துரைகளைச் செயல்படுத்தும்படி இந்த ஆணையம் இலங்கைக்கு வலியுறுத்துகிறது. 2006-இல் அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும்.

சிறுபான்மையினரான தமிழர்களை மறு குடியமர்த்தும் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். சிறுபான்மையினரான தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்க வேண்டும். நேர்மையான நடவடிக்கைகளால் மட்டுமே அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும்.  தமிழர்களின் பகுதியில் குவிக்கப்பட்டு உள்ள ராணுவத்தினரை வாபஸ் பெற வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை விசாரிக்க சிறப்பு ராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்க்க இலங்கை அரசு சர்வதேச உதவியை நாடலாம்.

போருக்குப் பின்னால் காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச விசாரணை தேவை. இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.- – இது அய். நா. மனித உரிமை ஆணைய அறிக்கை தரும் சில தகவல்கள். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை சிங்கள ராஜபக்ஷே அரசு பதில் கூறவில்லை.

இந்தச் சூழலில்தான் தமிழகத்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள டெசோ அமைப்பு ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை முன்வைத்து இயங்கி வருகிறது; இந்திய அரசை அசைத்துப் பார்த்துள்ளது.

டெசோ சார்பில் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் கருத்தரங்கம் 7.3.2013 அன்று டில்லியில்  நடைபெற்றது. கருத்தரங்கில், டெசோ உறுப்பினர்கள் தி.க.தலைவர் கி.வீரமணி,தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின்,திராவிட இயக்கதமிழர் பேரவை சுப.வீரபாண்டியன்,விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்,காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத்,ஞானதேசிகன்,சுதர்சன நாச்சியப்பன்,என்.எஸ்.வி. சித்தன்,ராம்விலாஸ் பஸ்வான் அவர் களின் லோக்தளக் கட்சி செயலாளர், சரத்பவாரின் தேசியவாதி காங்கிரஸ் சார்பில் மாநிலங்கள் அவை உறுப் பினர் சுப்ரீயா சூலு, டாக்டர் ஷாபீர், தேசிய மாநாட்டுக் கட்சியினர், மனித உரிமை அமைப்புப் போராளி  சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நிகழ்த்திய உரையின் சுருக்கம்:

இந்தக் கூட்டமானது தமிழ் ஈழ ஆதரவாளர்களால் கூட்டப்பட்டுள்ளது. பன்னாட்டு சகோதரத்துவம், மற்றும் மனித நேயத்தின் அடிப்படையில், இலங்கையின் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவினால் அரங்கேற்றப்பட்டுள்ள அராஜகத்தை, சொந்த நாட்டுக் குடிமக்கள் மீதே அரசு இயந்திரத்தை ஏவிவிடப்பட்ட கொடுங்கோன்மையை, போர்க் குற்றத்தை, ஆய்வு செய்து அதற்கான ஒரு தீர்வை அளிக்க வேண்டும். அது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையாம்! அந்தக் கூற்றின் பின்னே ஒளிந்து கொள்ளப் பார்க்கிறார் ராஜபக்ஷே!
இன வேறுபாட்டின் காரணமாக, இலங்கையின் மக்கள்தொகையின் ஒரு பகுதியை, கொத்துக்கொத்தாக, முற்றிலுமாக அழித்து ஒழிப்பதுதான், இறையாண்மை உள்ள நாட்டின் செயலும் உரிமையும் என்று கொள்ளலாமா? அது ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அல்ல. அது ஒரு திட்டமிட்ட, வெளிப்படையான இன அழிப்பு. இறையாண்மை கொண்ட நாடுகள்கூட பன்னாட்டுச் சட்ட விதிகளுக்குட்பட்டுச் செயல்பட வேண்டியவைதான்.

சிங்கள அரசின் உச்சகட்டக் கொடுமையை, போர்க் குற்றங்களை, மனிதத் தன்மையற்ற செயல்களை உலகிற்கு எடுத்துக் கூற விழைந்த எத்தனையோ சிங்கள மனிதாபிமானிகளும், இதழாளர்களும், சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். சிலர், கண்டுபிடிக்க இயலாத அளவிற்குக் காணாமல் அழிக்கப்பட்டுள்ளனர்.

2009இல் இலங்கையின் கடைசித் தாக்குதல் ஆரம்பிக்கப்படுவதற்கு முன், அங்கு பணியிலிருந்த அய்.நா. சபையின் அதிகாரிகள் ராணுவத்தால் காலி செய்யச் சொல்லப்பட்டுள்ளனர். அதன் மூலம் அய்.நா. அதன் கடமையைச் செய்யத் தவிர்க்கப்பட்டுள்ளதுடன், அதற்கான பாதுகாப்பு ஆணைகளையும் நிறைவேற்ற முடியவில்லை.

உலக அரங்கில், இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களால், அய்.நா., ராஜபக்ஷே அரசால் நிறைவேற்றப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்குமாறு சுதந்திரமான மூன்று சட்ட வல்லுநர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்தது. அதன் அறிக்கை ஒரு நடுநிலையானதாகவும் முழுமையானதாகவும் உள்ளது.

அது இலங்கை அரசு, சொல்லிக் கொண்டிருப்பதற்கு முரணாக நிகழ்வுகள் உள்ளன. காப்பாற்றும் முயற்சியில், ஒரு உயிருக்குக் கூட இழப்பேற்படாத முறையில் செயல்பட்டதாக ராணுவம் கூறுகிறது. உண்மையில் பன்னாட்டு மனித உரிமைச் சட்டத்தையும், பன்னாட்டு மனிதநேயச் சட்டத்தையும் ராணுவமும் புலிகளும் புறந்தள்ளி உள்ளனர்.

போர் நடந்தபொழுது, அய்.நா. சபையின் செக்ரட்டரி ஜெனரல் பான்- கீ மூன், ஒரு சுதந்திரமான அமைப்பை ஏற்படுத்தி போர்க்களத்தில், குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அது போலவே, இலங்கை அதன் சொந்தப் புலனாய்வுகளை நடத்த வேண்டும். இருதரப்பும், ஏதும் செய்யவில்லை. அறிக்கை கொடுக்க அய்.நா.சபை அதிக காலம் எடுத்துக் கொண்டது, இலங்கைக்குச் சாதகமாய்ப் போய்விட்டது.

இதனிடையில், பன்னாட்டு அமைப்புகளின் செயல்பாடுகளிலிருந்து பாதுகாப்புப் பெற, இலங்கை அரசு, அய்க்கிய நாடுகள் சபையுடன் கூடிய உறவை சில சிறப்பு முயற்சிகளினால் பலப்படுத்திக் கொண்டது. ஈழப் போரின் இறுதியில் பங்கெடுத்துக் கொண்ட ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா, இலங்கையின் அய்.நா. துணைத் தூதராக நியமிக்கப்பட்டதால் பாதுகாப்புப் பெற்றார். பல ராணுவ அதிகாரிகள், ஈழ இறுதிப் போரில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் இன்று உலகம் முழுவதும் அய்.நா. அமைதிக் காப்பாளர்களாகப் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். அய்.நா.வின் அமைதி காக்கும் குழுவில், மேஜர் ஜெனரல் சில்வா 10 உறுப்பினர்களில் ஒருவராக நுழைந்து கொண்டு உள்ளார்.

அய்.நாவின் மனித உரிமைக் குழுத் தலைவர் நவி பிள்ளை, போர் இறுதியில் பல பன்னாட்டுப் போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாகவும் அதற்கு சில்வா பதிலளிக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். அதே போல பல பிரச்சினைகளுக்குரிய இலங்கையின் பிரிகேடியர்களும் ஜெனரல்களுமான ராணுவ அதிகாரிகள் உலகம் முழுவதும் அரசுத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் ஒரு சில அரசுகளே அவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இதனிடையில் அய்.நா.வில் பணிபுரிந்த பல தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள பல தமிழர்கள் பன்னாடுகளுக்கும் புலம் பெயர்ந்துள்ளனர்.

மனித உரிமை பற்றி வாய் கிழியப் பேசும் சில மேலைநாடுகள் இலங்கையில் இன ஒழிப்பு நடந்தபோது, தங்கள் கண்களை மூடிக்கொண்டன. தன்னைத்தானே ஆய்ந்து இலங்கை வெளிப்படுத்திய அறிக்கை, போருக்குச் சாதகமான அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. அறிக்கை எப்படியிருக்கும்?

ஆயினும் அந்த விசாரணை சில உண்மைகளை, பலியானவர்கள் எண்ணிக்கை அதிகமென்றும், சில மருத்துவமனைகள் குண்டுகளால் தகர்க்கப்பட்டன என்பதையும் ஒப்புக்கொண்டு உள்ளது. ஆயினும் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தாத இடத்தில் (ழிஷீ யீவீக்ஷீமீ ஞீஷீஸீமீ) திட்டமிட்டு குண்டுகளை வீசவில்லை என்றும் போராளிகள் வீசி இருக்கலாம் என்றும் சொல்லியுள்ளனர். பெண்கள் மீதான வன்முறைப் புணர்ச்சி பற்றியோ, வெள்ளைக் கொடி பிடித்து சரண் அடைய வந்த போராளிகள் புலி யும் நடேசனும் கொல்லப்பட்டதையும் குறிப்பிடவில்லை. போர்த்தளபதி பொன்சேகா, ராஜபக்ஷேயின் சகோதரர் உத்தரவின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

சில மேலைநாடுகள் இலங்கையை ஆரம்பத்தில் ஆதரித்தன. ஆனால், பிறகு மிகவும் சங்கடப்பட்டுள்ளன. இலங்கையில் நிலவும் சந்தேகத்திற்கிடமான ஜனநாயக ஆட்சிமுறையும் காரணம்.

அய்.நா. சபையின் வல்லுநர் குழுவின் அறிக்கை மேல்நடவடிக்கைக்காக அய்.நா. மனித உரிமைக் குழுவிடம் அளிக்கப்பட்டது. 2009இல் அந்த அறிக்கை இலங்கையின் புதிய நண்பர்களால் திருடப்பட்டு விட்டது. சீனாவும், சில அணி சேரா நாடுகளும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதையே எதிர்த்தன.

2012 மார்ச் மாதத்தில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற நீர்த்துப் போன தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.

இலங்கையுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டுக் கொண்டு வந்த அந்தத் தீர்மானத்தில் போர்க்குற்றம் என்ற சொல்லே இடம் பெறவில்லை.

இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி மனித உரிமை ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் முயற்சி செய்தனர். ஜெனிவாவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அவர்கள் தாக்கப்பட்டு மரண எச்சரிக்கை விடப்பட்டனர்.

இவ்வளவும் அய்.நா. கட்டிடத்திற்குள்ளேயே நடந்தது. இதைக் கண்டு நொந்துபோன மனித உரிமைகளுக்கான அய்.நா. ஹை கமிஷன் இதுவரை கண்டிராத _ ஒத்துக்கொள்ள முடியாத மிரட்டல்களும், தொந்தரவுகளும் தாக்குதல்களும் பற்றி ஒரு அறிக்கைவிட வேண்டியதாயிற்று.
இதிலிருந்தே இலங்கை எவ்வாறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்திருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

இவ்வளவு முயற்சிகள் எடுத்தும் இதுவரையிலான பலன் ஏதுமில்லை. தமிழர்களுக்கான அதிகாரப் பரவல், பகிர்ந்துகொள்ளுதல் பற்றி மௌனமே காணக்கிடக்கிறது. மாறாக, தமிழர்களின் வாழ்க்கை மிகவும் கேவலமடைந்து வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக, பழையனவற்றைத் தோண்ட வேண்டாம் புதியனவற்றில் கவனம் செலுத்துவோம் என்று விடுக்கும் செய்திகள் வேடிக்கையாக உள்ளன.

இரண்டு லட்சம் இடம் பெயர்க்கப்பட்ட தமிழர்கள் இலங்கைக்குள்ளேயே உள்ளனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 40 ஆயிரம் போர் விதவைகள் உள்ளனர். 1,65,000 பேர் போரில் உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வளவெல்லாம் இருந்தும்கூட, 2011இல் இலங்கையின் ராணுவ பட்ஜெட் செலவு இதுவரை அத்தீவின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு உயர்ந்து உள்ளது. தமிழர்களுக்குப் புது வாழ்வளிப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு ராணுவ வீரன் என்ற கணக்கில் ஆள் சேர்த்துக் கொண்டுள்ளது, இலங்கை.

பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனைக் கொன்றுள்ள கொடுமையைப் பற்றி என்ன சொல்ல?

டெசோ மூலம் செய்து வரப்படும் முயற்சிகள் உலகம் முழுதும் எடுத்துச் சொல்லப்படுகின்றன.
ஸ்டாலின் தலைமையில் வந்த டெசோ தூதுக்குழு அய்.நா. மனித உரிமைக்குழுத் தலைவரைச் சந்தித்து விவரங்கள் அளித்துள்ளது. இப்பொழுது ரஷ்யா, சீனா முதலிய நாடுகளின் தூதர்களிடமும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முடிவாக, ஈழத் தமிழர்க-ளுக்கு நீதி கிடைக்க வேண்டும். நம்முடைய காலத்தில் இப்பாதகச் செயல்கள் நடந்துள்ளன. இவற்றிற்குக் காரணமான ராஜபக்ஷேவையும், அவரது கூட்டத்தாரையும் நீதியின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுப்போம். அதற்காகக் குரல் கொடுப்போம்! தமிழரை வாழ வைப்போம்!

உலக மக்களின் மனிதநேயப் பார்வை ஈழத்தமிழரின் பக்கம் திரும்பவேண்டும் என்னும் கோரிக்கையை டெசோ டெல்லியில் விதைத்துள்ளது.

– புது டெல்லியிலிருந்து அன்பன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *