ஜின்னாவின் உண்மைக் கதை
பாகிஸ்தானின் தந்தை ஜின்னா பற்றிப் பல நூல்கள் வந்துள்ளன. பா.ஜ.க.வின் ஜஸ்வந்த் சிங் ஜின்னா குறித்து எழுதிய நூல் பரபரப்பைக் கிளப்பியதுண்டு. இந்த நூல் பரபரப்புக்காக எழுதப்பட்டதல்ல;ஒரு பொதுவுடைமைச் சிந்தனையாளரின் பார்வையில் ஜின்னாவின் பங்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்துத்துவக் கருத்தாளர்களால் வில்லனகாச் சித்தரிக்கப்படும் ஜின்னா பற்றி, டி.ஞானையா என்ற மதச் சார்பற்ற பொதுவுடைமைவாதி எழுதியுள்ளது இன்றைய காலகட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.`ஜின்னாவின் உண்மை வாழ்க்கையும் அவருடைய அரசியல் பரிணாம வளர்ச்சியும் சுவாரசியமாகவிருப்பதாலும் வரலாற்று உண்மைகள் பெரும்பாலும் இருட்டடிப்புக்கும்,திரித்துக் கூறுவதற்கும் புரட்டல்களுக்கும் ஆளாவதும் உண்மைதான் என்பது ஜின்னாவைப பற்றிய சித்திரங்கள் நிரூபிக்கின்றன என்பதாலும் ஜின்னாவின் உண்மைக் கதையை நாம் ஆர்வத்துடன் வெளியிடுகிறோம் என்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
காவி பயங்கரவாதம் தலையெடுக்கும் காலத்தில் இந்நூல் அனைவராலும் படிக்கப்படவேண்டியது அவசியம்.
நூல்: காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா
உண்மைச் சித்திரம்
ஆசிரியர்: டி.ஞானையா,
வெளியீடு: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், 96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை-_41.
பக்கங்கள்:232 ரூ.175
குறும்படம் – போதி விருக்ஷா
இன்றைய இளைய தலைமுறையினர் பொதுவாகவே பொழுதுபோக்குகளில் ஆழமான அறிவுடனும், சமூக மேம்பாடுகளில் மேம்போக்கான அறிவும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த சூழலில், அவர்களது பெற்றோர்களின் கடமை என்ன என்பதைப் பற்றி இந்த போதி விருக்ஷா குறும்படம் பேசுகிறது.
அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்த குறும்பட படைப்பாளர்களுக்கிடையே ஓர் அறிவுத் தேடல், ஒரு மாற்றம் இருப்பதை இப்பொழுது காண முடிகிறது. அந்த வகையில், இந்த குறும்படம் சமூக மாற்றத்திற்கான துடிப்பை மிகச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறது. புத்தர் சிலையை பராமரித்துக் கொண்டிருக்கும் ஒருவர், தனது மகனின் மேம்போக்குத்தனத்தைக் கண்டிக்கிறார். இறுதியில், ஈழப் பிரச்சினையை தொட்டுக்காட்டி முடிக்கிறார். மகனின் மனம் மாறியதா? இந்தக் குறும்படத்தை பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இயக்குநர்: மகாராஜன் சண்முக சுந்தரம்
தொடர்பு எண்: 95000 45988.
வலைத்தளம் – www.devaneyapavanar.com
பாவாணர் ஒரு படப்பிடிப்பு : திராவிட மொழிநூல் யிறு தேவநேயப் பாவாணரின் வாழ்வையும் தமிழ்ப் பணியையும் எடுத்துச் சொல்லும் வலைத்தளம்.பாவாணரின் மகன் மணிமன்றவாணன் உருவாக்கியுள்ள இத்தளத்தை பாவாணரின் பெயரன் இம்மானுவேல் தேவநேயன் வடிவமைத்துள்ளார்.அகரமுதலித்திட்டம்,தமிழ்ச்சொல்லாக்கம் மற்றும் பாவாணரின் சிறப்புகளைத் தளம் விவரிக்கிறது.பாவாணரின் அரிய ஒளிப்படங்கள் இதுவரை பலரும் பார்த்திராதவை.தமிழ் காத்த மூத்தவர்கள் பலரின் குரலை நாம் கேட்கும் வாய்ப்பைப் பெறாதநிலையில்,பாவாணரின் குரலை இத்தளம் வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது.ஒவ்வொரு பக்கத்திலும் பொன்மொழிகளும் மிளிர்கின்றன.“தமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் அயலாரால் நேர்ந்த கேடுகளைத் தடுக்க இனவொற்றுமை யில்லாது போனதே கரணியம்எனும் பாவாணரது பொன்மொழி அதிலொன்று.இன்றையதலைமுறை அறிய வேண்டிய வலைத்தளம் இது.