– கு.ப.விசுனுகுமாரன்
டமாரம் ஒலிக்கும் ஓசை கேட்டது…
உயர் ஜாதியைச் சேர்ந்த சுமார் அய்நூறு அறுநூறு தலைக்கட்டு கிராமமும் புரிந்து கொண்டன.
அடுத்து, அடுத்து மாதம் பிறக்கப் போகிறது.
பங்குனி மாதம் வந்தாலே முப்பிடாதி அம்மனுக்கு பத்து நாளும் மேளதாளம், சப்பரத்தில் முப்பிடாதி
அம்மன் பவனி வருவது கண்கொள்ளா காட்சி…..
ஊர் ஜனங்கள் முப்பிடாதி அம்மனுக்கு நடத்தப்படும் விசேஷங்களை பேசினார்கள். பத்து நாளும் முப்பிடாதி அம்மன், கடுவாய், புலி சிங்கம், தம்பிரான், வெட்டும் குதிரை, தட்டுத் தேர் போன்ற சப்பரங்களில் காலை, மாலை, இரவில் ஊர் வீதியில் ஊர்வலம் வருவதும் அம்மனுக்கு தாம்பூலத் தட்டில் ஊதுவர்த்தி, தேங்காய், வெற்றிலை, கொரட்டுப் பாக்கு, சூடம் வைத்து, தரிசனம் செய்வதும், அருள் பெறுவதும், கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
கனத்த நீட்டான இரண்டு மூங்கில் மத்தியில், சப்பரத்தை வைத்து கயிறு கொண்டு கட்டி, சாமியை சப்பரத்தில் அமர்த்தி மூங்கிலோடு சப்பரத்தைத் தூக்க முன்னால் நான்கு பேர், பின்னால் நான்கு பேர், தீவட்டி பிடிக்க நான்கு பேர் மொத்தம் பன்னிரண்டு பேரும், அவ்வூரில் குடியிருக்கும் கீழ்ஜாதியினர்…. பயலுவ பன்னிரெண்டு பேருக்கும் அன்று தான் உயர்ஜாதியினர் பயன்படுத்தும் பொதுகுளத்தில் குளிக்க அனுமதி….! மற்ற காலங்களில் தனியாக ஒதுக்கப்பட்ட குளம். ஜவ்வாது சந்தனமும் இவனின் உடம்பில் மணப்பது முப்பிடாதி அம்மன் திருவிழாவில்.
கோயிலின் உச்சத் திருவிழா பங்குனி உத்திரம் அன்று ஊற்றப்படும் சாமி கஞ்சியை பனை ஓலையில் முடித்த, கோப்பையில் வாங்கி குடிக்க எல்லா ஜனமும் கோவில் முன் கூடிக்கிடக்கும்.
முப்பிடாதி அம்மன் திருவிழாவில்… கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் மான் கொம்புச் சண்டை, சிலம்புச் சண்டை முதலியவைகள் நடைபெறும் தலைமுறை தலைமுறையாய் நடக்குது எந்த பிரச்சனையும் இல்லாமல் ஊர் தர்மகர்த்தா புண்ணியத்தில்!
இந்த வருஷம் தர்மகர்த்தாவை மாத்தனும்னு சொல்விட்டானுவ. என்ன நடக்குப் போகுதோ? என பேசிக் கொண்டார்கள் உயர்ஜாதி ஜனங்கள்.
அன்று இரவு ஏழு மணியளவில்.
முப்பிடாதி அம்மன் சன்னதி முன் கூடினார்கள். அம்மனை தரிசித்து உட்கார்ந்து இருந்தனர் ஜனங்கள்.
தர்மகர்த்தா, விழாவுக்கு கூடியிருந்த விழாக்குழு உறுப்பினர்களையும், ஜனங்களையும் பார்த்து இருகை கூப்பி வணங்கி போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார் _ கூட விழா உறுப்பினர்களும்.
பின்பு….
போன வருடம் நடத்திய விழாவின் வரவு செலவு, மீதி கையிருப்பு, புதிய வரி, நன்கொடை வசூல் பணம் ஜனங்கள் முன் வாசிக்கப்பட்டது.
கணக்கில் தில்லு, முல்லு இருப்பதாகச் சிலரும், ஒரு பகுதியினரும் முணுமுணுத்தனர்.
இந்த வருட திருவிழா நிகழ்ச்சிகள், புதிய வரிகள், எந்தெந்த வயசை தாண்டிய பசங்களுக்கு போடணும் என கணக்கிடப்பட்டது.
இந்த தடவை கரகாட்டம் ஆட அம்சா வேண்டாம். அவமக அல்லிராணியை, போடுங்க என்று ஒரு சிலரின் குரல்!
அம்மன் சப்பரத்தில் பவனி வரும்போது வாசிக்கப்படும் நாதஸ்வர மேளதாளம் வாசிக்க முத்துச் சாமி குழுவினரை போடுங்க என சொல்ல கூடியிருந்த ஒருவர் பதில் சொன்னார். முத்துசாமி குழுவினரை போட்டால் வழக்கமாகப் பத்து நாள் திருவிழா ஒதுக்கப்படும். அய்யாயிரத்தைவிட மேலும் அய்யாயிரம் வேண்டும் பார்த்து செய்யுங்க.
அது சரிதான் என்று கூட்டத்தில் கூடியிருந்த நாலு, அய்ந்து பேர் மொத்தமாக ஒரு குரலில்…?
பதினைந்து வருடமாக, ஒரே தர்மகர்த்தாவே இருந்து வருகிறார். கணக்கு வழக்கு சரியில்லை, நடவடிக்கையும் சரியில்லை.
புதிய தர்மகர்த்தாவை தேர்ந்தெடுத்து விழாவை நடத்துங்க. ஜனங்களுக்கு இப்போதிருக்கும் தர்மகர்த்தாமேல் அவ நம்பிக்கை.
டேய்! அய்யாக்குட்டி, யாரை புதிய தர்மகர்த்தாவாகப் போடலாமென நினைக்கிறாய்? என கூட்டத்தில் கேட்கப்பட்டது!
ராமசாமியைப் போடலாமே என கூட்டத்தில் கூடிய ஒரு பகுதியினரின் குரல்.
அப்போது, சொல்வது சரிப்பா, திருவிழா நடத்த இன்னும் அறுபது நாளு இருக்கு. கணக்கை புதிய தர்மகத்தாவிடம் ஒப்படைத்து திருவிழா நடத்தினால் எல்லாம் ஏடாகூடாமாகி விடும். இந்த தடவை திருவிழாவை இருக்கிற தர்மகர்த்தாவை வைத்து நடத்தி விடுவோம்.
இதுவும் நல்ல யோசனைதான் என கூட்டத்தினர் வரவேற்றனர். புதிய தர்மகர்த்தாவை திருவிழா முடிந்து தேர்ந்தெடுப்போம். தர்மகர்த்தா நாராயணன் நாற்காலியை விட்டு எழுந்தார். ஜனங்கள் முன் பேசினார். எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. புதிய தர்மகர்த்தாவை தேர்ந்தெடுத்தால்தான், புதிய புதிய நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கும். நானே பதினைந்து வருஷமாக இந்த முப்பிடாதி அம்மன் கோவிலுக்கு தர்மகர்த்தாவாக இருக்கிறேன். இதுவரை அம்மன் வகையில் என் சார்ந்த விஷயத்திற்கு பத்து பைசா எடுத்தது கிடையாது. கூட்டத்தில் பேசிய மாதிரி கிடையாது. நான் வேணும்னா என் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்! என்று சொல்லி முடிக்க…!
வேண்டாம்! வேண்டாம் என்று கூடியிருந்தவர்களில் ஒரு சிலரிடம் சலசலப்பு.
ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். இந்த தடவை சாமி சப்பரம் தூக்கப் போவது அந்த கீழ்ஜாதிப் பசங்க பனிரெண்டு பேர் கிடையாது. நம்ம ஜாதிப் பசங்கதான்.
என்னவாம் கேக்கறீங்களா?
ஆண்டாண்டு காலமாக அவங்க குடியிருக்கும் வீதிவழியாகத்தான் சாமி சப்பரம் ஊர்வலம் போவுது. இந்த வருஷம் சாமி சப்பரத்தை அவங்க வீதியில் நிறுத்தி, அர்ச்சணை செய்யப் போறாங்க. நாம் அந்த கீழ்ஜாதிக்காரர்களை சப்பரத்தை தூக்குவதற்கும், எடுபிடி வேலைக்கும், வேடிக்கை பார்க்கவும்தான் வைத்திருக்கிறோம் தாத்தா _ பாட்டன் காலந்தொட்டு … ஆனால் இந்த தடவை சாமி தூக்குறது பன்னிரெண்டு பேரும் அவங்க வீதிக்கு வந்தவுடன் சப்பரத்தை இறக்கி வைத்து அர்ச்சணை செய்யப் போறாங்களாம்?
அப்படியா? எப்படி அந்த பயலுவலுகளுக்கு தைரியம் வந்துச்சு?
ஏம்பா.. காலம் கலிகாலமாச்சு…
நாம சாமி சப்பரத்தை தூக்கி அவங்க வீதி வழியாக போக வேண்டாம். பாதையை மாற்றி சப்பரத்தை தூக்கிப் போவோம். என்ன சொல்லுறீங்க…? கூட்டத்தில்… சாமி குத்தமாகாதா? சாமி குத்தத்தால் நம்ம கிராமத்தில் கலவரம் நடக்கணுமா?
அப்போ நாம அந்த நூறு தலைக்கட்டு உள்ள கீழ்ஜாதிப் பசங்களுக்கு பயந்து நடக்கணுமா?
என்ன செய்ய, அரசாங்கம் அவங்கபக்கம். ஆனா, அரசாங்கம் தலையீடு இல்லாம திருவிழா நல்லபடியாக நடக்கணும்.
சரிங்க, உங்க யோசனைப்படி நடக்கட்டும். கூடியிருந்த ஜனங்கள் மொத்த குரலில் தர்மகர்த்தாவின் பேச்சை நம்பினார்கள்.
புதிய வரிகள், புதிய நிகழ்ச்சிகள், வரிவசூல், நன்கொடை, பரிசு முதலியன வாசிக்கப்பட்டது.
கூட்டம் நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு கலைந்தது. பொழுது புலர நான்கு மணி நேரம் இருந்தது.
நாட்கள் குறைய, குறைய மேல்ஜாதிப் பசங்களுக்கும், கீழ்ஜாதிப் பசங்களுக்கும் இடையே மோதல் தொடங்கியது.
திருவிழாவிற்கு இனி 20 நாட்களே இருந்தது. கோவிலுக்கு வெள்ளையடிக்கும் பணியும், வரிவசூல் பணியும் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.
மாடசாமி தர்மகர்த்தாவை அவர் வீட்டில் பார்த்தான். நம்மூரில் உண்மையாகவே அந்த கீழ்ஜாதிப் பசங்க செய்யப் போவது நிஜமா? எனக் கேட்க.
அது எப்படிடா மாடசாமி அந்த கீழ்ஜாதிப் பசங்களுக்கு அவ்வளவு தைரியம் இருக்கா? எல்லாம் என் ஏற்பாடு… எனச் சொல்ல மாடசாமிக்கு திகைப்பு.
டேய்….!
இந்த முப்பிடாதி அம்மனுக்கு யார் யாரெல்லாம் தர்மகர்த்தான்னு சொல்லு. முப்பது வருஷங்களில் முன்னாடியும், பின்னாடியும், என் முப்பாட்டன், பாட்டன், தாத்தா அப்புறம் நானு. அதற்கப்புறம் என் புள்ளைதான் வரனும்! வேறு எவனாவது வரலாமா? சொல்லுடா மாடசாமி?
நம்ம பாரம்பரியம் என்னாகும்…
அந்த கீழ்ஜாதி பயலுவலுக்கு அய்டியா கொடுத்தது அவனுகளை உசுப்பிவிட்டது, ஏற்றிவிடுவது எல்லாம் நானு. அதுவும் என் வீட்டில் வேலை செய்யும் ஏ-க்கி மாடன் மூலம் அவங்க ஜாதியில் உள்ளவனுக்கு எல்லாம் இந்த பிரச்சனையை கிளப்பச் சொன்னேன்.
என்னை தர்மகர்த்தா பதவியிலிருந்து நீக்க வேணும்னு நம்ம பயலுவ ஆறுமாசத்திற்கு முன்னே பேசிக்கிட்டானுவ. இந்த வருஷ முப்பிடாதி அம்மன் திருவிழா புதிய தர்மகர்த்தா தலைமையில் நடக்கணும்னு நம்ம ஜாதிப் பயலுவ பேசிக்கிட்டானுவ.
இந்த விஷயத்தை ஏன் உன்னிடம் தைரியமாகச் சொல்லுகிறேன் தெரியுமா?
நீ என் மச்சான் இந்த விஷயத்தில் மாப்பிள்ளைக்கு துரோகம் செய்ய மாட்டே?
அதுசரி மச்சான் இந்த வருஷ திருவிழா உங்க தலைமையில் நடக்கப் போகுது. ஆனால் அந்த கீழ்ஜாதிப் பயலுவ நீங்க கொடுத்த தைரியத்தில சப்பரத்தை நிறுத்தி அர்ச்சனை பண்ண நினைச்சானுவனா?
இந்த நாராயணன் தர்மகர்த்தா எந்த பிரச்சனையும் மூக்கனாங்கயிறு போட்டு வச்சிருப்பான் தெருஞ்சுக்கோ!
சரி மாப்பிள்ளை இந்த வருஷம் இப்படி பண்ணிட்டா அடுத்த வருஷ திருவிழாவிற்கு எப்படியும் புதிய தர்மகர்த்தா தானே…?
டேய்…! நடக்க விட மாட்டேன் ஜாதியே கூட இல்லாம ஆக்கிவிடுவேன் மனசில் வச்சுக்கோ!
இந்த வருஷ திருவிழாவில் பிரச்சனை கிளம்பிச்சுன்னா நடக்குறதே வேற…
சரி மாப்பிள்ளே! நான் வரேன்…
திருவிழாவிற்கு இன்னும் அய்ந்தே நாட்கள்…
அந்த கீழ்ஜாதியில் சலசலப்பான பேச்சுகள். டேய்! சப்பரத்தை அவங்க ஜாதிக்காரனை தூக்க விடக் கூடாது, ஆண்டாண்டுக்கும் சாமி சப்பரத்தை தூக்க நாம அடிமைப் பட்டுக்கிடக்கிறோம். தர்மகர்த்தா தன் சுக வாழ்விற்கு நம்ம ஜாதிக்காரன்களைப் பலியாடாய் ஆக்கிட்டான் …!
நம்ம நூறு தலைக்கட்டுக்காரர்களால் அவர்களை எதிர்க்க முடியுமா?
டேய்! நம்ம அர்ச்சனை செய்யப் போகிறோம். இல்லை சப்பரத்தை தூக்க உரிமை கேட்கிறோம். இது தாத்தன்_ பாட்டன் உண்டுபண்ணிவிட்ட பழக்கம். இந்தப் பிரச்சனை கோர்ட்டுக்குப் போனா நம்ம பக்கம்தான் நியாயம் கிடைக்கும்.
பிரச்சனை ஊர்முழுக்க மாறி மாறி (பூகம்பமாய்) பரவ ஆரம்பித்தது.
டேய் விஷயம் தெரியுமா?
சொன்னாத்தானே தெரியும்.
நம்ம தர்மகர்த்தா, பதவியிலிருந்து நீக்காமல் இருப்பதற்கு அந்த கீழ்ஜாதிப் பசங்களை காரணம் சொல்லி தம் பதவியை தக்கவைச்சுக்கிட்டாரு.
ஊர் ஜனங்கள் பேசுவது தர்மகர்த்தா காதில் மாறி, மாறி விழுவதுமாய இருந்தன. தன் சொந்த, பந்த உறவுளுடன்… தர்மகர்த்தா யோசனையில் ஈடுபட்டார்.
நாளை பொழுது விடிந்தால் மங்களகரமான மேளதாள முழக்கத்தோடு பூஜை திருவிழா ஆரம்பம்.
ஊர் ஜனங்கள் அமைதியில்லாமல்
ஒரு பகலின் பாதி கழிந்திருக்கும் திடீரென டாமல், டமால் வெடி சத்தம் …
ஊரின் உள்ளே வராத போலீஸ் அன்று திபுதிபுவென புகுந்தது.
கோவிலுக்கு வெடிகுண்டு வைத்ததாக கீழ் ஜாதி பயலுவ அய்ம்பது பேர் கைது…!
பாவம் முப்பிடாதி அம்மன் அறியாத அந்த கீழ்ஜாதிப் பயலுவ பலி ஆடு ஆகிவிட்டிருந்தனர்.