– சி.இராஜாராம்
மனுதர்மம் எழுதப்பட்ட காலத்தில் நான்கு முக்கிய ஜாதிகளுக்குள்ளும், ஜாதி விட்டுச் ஜாதியில் ஏற்பட்ட திருட்டுத் திருமண உறவால் பல புதிய ஜாதிகள் உருவாயின. இப்படிப்பட்டவர்களை ஜாதியிலிருந்து ஒதுக்கி வைக்க எந்த முறையைக் கையாள்வது என்று ஜாதி வெறியர்களுக்குத் தெரியவில்லை. இவர்களுக்கு எந்தத் தொழில், சமூகப் பணிகளை வழங்குவது என்று தெரியாத காரணத்தால் மனு என்பவன் ஜாதி முறையை விளக்கிப் புதிய கோட்பாடுகளை நிர்ணயிக்க மனுஸ்மிருதி என்ற நூலை எழுதினான். மனுவின் காலத்தில் தீண்டாமையே இல்லை. தூய்மையற்ற மக்களை மனு சண்டாளர்கள் என்றுதான் அழைத்தான். இவர்கள் அடிமைகள். மனுஸ்மிருதி நான்கு வர்ணத்தை நாட்டுச் சட்டமாக்கியது. பார்ப்பனர்களுக்கு ஆதரவாகப் பல சட்டங்களை இறைவனின் வாக்கு என்ற வகையில் வெளியிட்டுள்ளான். (மனு நூல், மனு என்பவரால் கி.மு. 185ல் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.)
அசுத்தமான தொழில் புரிந்தவர்களும், ஓர் இனமாகத் தனித்து வாழ்ந்தவர்களும், பின்னர் போரில் தோற்றுப் போனவர்களும், கடவுள் நம்பிக்கை அற்றவர்களும், புத்த மதத்தவர்களும், வேதத்தை ஒத்துக் கொள்ளாதவர்களும், பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களும், சமூக வாழ்வில் வராத நாடோடி மக்களும், மேல்ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட கீழ்ஜாதி ஆண்களும் அவர்களது சந்ததிகளும் மனுஸ்மிருதி மூலம் தீண்டப்படாதவர்களென்று ஒதுக்கப்பட்டனர்.
கேடுகெட்ட இந்த நால்வர்ண அமைப்பின் காரணமாக இந்துக்களில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் எந்த நேரடி நடவடிக்கையிலும் இறங்க முடியாதவர்களாக முடக்கப்பட்டு விட்டார்கள். அவர்கள் ஆயுதம் தாங்க முடியாது. ஆயுதம் இல்லாமல் அவர்களால் கிளர்ச்சி செய்ய முடியாது. அவர்கள் எல்லோருமே கலப்பை பிடிப்பவர்கள். இன்னும் சொல்லப்போனால், கலப்பையை மட்டுமே பிடிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர்கள். கலப்பையைக் கொழுவாக வாளாக மாற்றிக் கொள்ள அவர்களுக்கு எப்போதுமே அனுமதி அளிக்கப்பட்டதில்லை. அவர்களிடம் துப்பாக்கி இல்லை. எனவே, அவர்களை அடக்கி ஒடுக்க விரும்பிய அனைவருக்குமே இவ்வாறு செய்வது சாத்தியமாயிற்று. அப்படியே நடக்கவும் நடந்தது.
நால்வர்ண அமைப்பின் காரணமாக தாழ்த்தப்பட்ட ஜாதியினரால் கல்வியறிவு பெற முடியவில்லை. எனவே, தங்கள் விடிவுக்கான வழியைப் பற்றிய எண்ணவோ, அறியவோ அவர்களால் முடியாமல் போனது. தாழ்த்தப்பட்ட நிலையில்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். அந்த நிலையிலிருந்து வெளியேறுவதற்கான வழி அவர்களுக்குத் தெரியாது. அதற்கான கருவியும் அவர்களிடம் இல்லை. எனவே, நிரந்தரமான அடிமைகளாக இருப்பதே தங்கள் தலை எழுத்து என்று அவர்கள் சரணாகதி அடைந்துவிட்டனர்.
டில்லியில் தேசிய சிறுபான்மை கமிஷனின் அய்ந்தாவது கூட்டத்தில் மத்திய அமைச்சர் சசிதரூர் பேசும்போது நம் நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் அவர்களிடையே இன, மொழி, பிராந்திய அடிப்படையில் பல வேறுபாடுகள் உள்ளன. அதனால்,இந்துக்களில் சிறுபான்மையினர் உள்ளனர். இக்காரணத்தால் எந்த சமூகத்தைச் சேர்ந்தவரும் தங்களை பெரும்பான்மையினர் என்று கூற இயலாது. கர்நாடகாவிலும், மேற்கு வங்கத்திலும் உள்ள பிராமணர்கள் ஒரே மாதிரியான நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் பிராந்திய அடிப்படையில் அவர்களிடையே வேற்றுமை காணப்படுகிறது. நம் நாட்டில் 22 மொழிகளும், 22 ஆயிரம் பேச்சு வழக்குகளும், 85 அரசியல் கட்சிகளும் உள்ளன. இதனால் எதையும் பொதுமைப்படுத்திக் கூற முடியாது. நம் அனைவரிடமும் வெவ்வேறு கொள்கைகளும், கருத்துகளும் இருக்கின்றன. இதை அனைவரும் மதிக்கின்றோம். அந்த வகையில் நாம் அனைவரும் சிறுபான்மையினரே என்றார்.
40, 45 ஜாதி அமைப்புகளை உள்ளடக்கி ஒரு மிகப்பெரிய ஜாதிக் கூட்டணியை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறுகிறவர்களே கேளுங்கள். ஜாதியை வைத்து ஆட்சி செய்ய நினைக்கிறவர்களுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 24.11.2008ஆம் தேதி இவ்வாறு பேசியிருக்கிறார். பிரித்தாளும் அரசியல், சிலர் ஆட்சிக்கு வர உதவியாக அமையும். ஆனால் நாட்டின் எதிர்காலத்தை இருளில் தள்ளிய செயல்லுக்கு அவர்கள் பொறுப்பேற்றாக வேண்டும். ஜாதியைச் சொல்லி மதத்தைச் சொல்லி அதிகாரத்தைக் கைப்பற்றிச் சில காலம் ஆட்சி புரியலாம். ஆனால்,நாட்டை பிற்போக்குப் பாதையில் அழைத்துச் செல்ல முயற்சிப்பதாக அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார். இந்தக் கருத்தை அடக்கி ஆள நினைக்கும் ஜாதி வெறியர்கள் உணரவேண்டும்.
கலப்பு மணம் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று ஆதிக்க ஜாதியினர் பேசுகின்றனர். கலப்பு இல்லாத குலம் ஏது? மனித இனங்களில்! 1. நீக்ரோ _ ஆஸ்திரேலிய வகை அல்லது, ஆப்பிரிக்க _ ஓஷனிய வகை அல்லது நிலநடுக்கோட்டு வகை. 2. அய்ரோப்பிய வகை அல்லது அய்ரோப்பிய ஆசிய வகை. 3. மங்கோலிய வகை அல்லது ஆசிய _ அமெரிக்க வகை என்று உலக மனித இனங்களே கலந்துக் கிடக்கிறது. கலப்பற்ற ஒரு மனித இனம் எங்கும் இல்லை. உலகம் தோன்றிய முதலாய் உலகின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா இனங்களுக்கிடையிலும் கலப்பு இருந்தே வந்துள்ளது. குறிப்பாக இந்துக்களுக்கு இது முற்றிலும் பொருந்தும். இந்திய சமூகத்தில் அந்நியர் கலப்பு என்னும் நூலில் திரு. பந்தார்க்கர் கூறுகிறார்.
அந்நியக் கலப்பு இல்லாத ஜாதியோ, வகுப்போ இந்தியாவில் இல்லவே இல்லை. சத்திரிய வகுப்பினரிடையே மட்டுமல்ல; தங்கள் ஜாதி எவ்வித அந்நிய ரத்தக் கலப்புக்கும் ஆளாகவே இல்லை என்கிற ஆனந்த மாயையிலே ஆழ்ந்து கிடக்கிற பார்ப்பன ஜாதியிலும் கூட, அந்நிய ரத்தக்கலப்பு இருக்கவே செய்கிறது என்கிறார்.
இனத் தூய்மையில் நம்பிக்கை கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் கூட வெவ்வேறு இனங்களை (Races) வெவ்வேறு உயிரினங்கள் (Species) என்று கூறுவதில்லை. அவை ஒரே மனித இனத்தின் பல்வேறு வகைகள் மட்டுமே. வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மனிதர்களும் தங்களுக்கு இடையில் மணம் புரிந்து தலைமுறையைப் பெருக்க முடியும். அந்தத் தலைமுறையும் இனப்பெருக்கம் செய்யும் திறன் உள்ளதாக இருக்கும், மலடாக இருக்காது என்கின்றனர். ஜாதி வெறிப்பிடித்தவர்கள் இந்த அறிவியல் உண்மையை புறந்தள்ளியே வைக்கின்றனர்.
பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த மக்கள், தமக்குள் கலப்பு மணம் புரிவதைத் தடுக்கும் எதிர்மறை அமைப்பாகவே ஜாதி அமைப்பு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த எந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நேரடியாகத் தேர்ந்தெடுக்கிற அமைப்பாக அது இல்லை. அப்படித் தேர்ந்தெடுக்கிறவர்களை ஆதிக்க ஜாதியினர் விடுவதாகவும் இல்லை. கவுரவக் கொலைகள் நடத்தி தன் ஜாதி கவுரவம் காப்பாற்றுபவர்களாகவே உள்ளனர். இப்படிப்பட்டவர்களை கேட்பதற்கு நாதியற்றவர்களாகவே நாமும் இருக்கிறோம். என்ன செய்வது மாரிசின் (Morris) வார்த்தைகளில் கூறுவதானால் இந்து மதத்தில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்களை மிதிக்கின்றனர். வலுத்தவன் இளைத்தவனை அடித்து நொறுக்குகின்றான். கொடியவர்களுக்கோ அச்சம் என்பதே இல்லை. அன்பு மனம் கொண்டவர்களுக்கோ துணிச்சல் இல்லை. அறிவாளிகளுக்கோ பிறர்மேல் அக்கறை இல்லை.
தங்கள் அந்தஸ்தை ஜாதிகள் மிகவும் அக்கறையோடு காப்பாற்றி வர எண்ணுகின்றன. ஜாதிகளைத் தகர்த்தெறிவதற்கான உண்மையான வழி ஜாதி மறுப்பு மணமே என்பதை அறிந்த ஜாதி வெறியர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்துவிடக் கூடாது என்பதில் கண்டிப்போடு இருக்கின்றனர்.
ரத்தக் கலப்பு மட்டுமே எல்லாரும் நம்மவரே என்கிற உணர்வை உருவாக்கும். சமூகத்தை ஒன்றிணைக்க பல்வேறு காரணிகள் ஏற்கெனவே இருக்கும் பட்சத்தில் திருமணம் என்பது சமூகத்தில் ஒரு சாதாரண நிகழ்ச்சியாகவே இருக்கும். ஆனால் சமூகமென்பது பல்வேறு கூறுகளாக பிளவுபட்டுள்ள நிலையில் இந்தக் கூறுகளை இணைக்கும் சக்தியாக திருமணம் மட்டுமே இருப்பதால் அது அவசரத் தேவையாகிறது.
கலப்பு மணத்தை நடைமுறைப் படுத்தும் ஒரு சம்பிரதாயம் புலைப்பேடி சம்பிரதாயம். இது ஒரு காலங்கடந்து போன சம்பிரதாயம் தான்! என்றாலும் கூட, நம் சமூகத்தில் காணப்படும் மேடு பள்ளங்களை அகற்ற மனிதகுலம் தேர்ந்தெடுத்த சில அற்புதமான மார்க்கங்களும் இதனுள் அடங்கி இருக்கிறது.
இச்சம்பிரதாயங்கள் சுமார் 500 ஆண்டுகாலமாவது வழக்கில் இருந்திருக்க வேண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்கள்தான் இப்புலைப்பேடி காலமாகக் கருதப்பட்டு வந்தது (இதுபோல வண்ணாப்பேடி, பறைப்பேடி காலமும் இருந்து வந்திருக்கிறது). புலைப்பேடி என்றால் புலையர்கள் பிடித்துக் கொள்ளல் அல்லது புலையர் அச்சம் என்பது. அப்புலைப்பேடி சம்பிரதாயத்தைப் பற்றி கி.பி.1517இல் இந்தியாவுக்கு வந்திருந்த பெர்போசா என்ற போர்ச்சுக்கீசியர் குறிப்பிட்டிருப்பதாவது, …………. புலையர்கள் ஆண்டுதோறும் சில மாதங்களில் தங்களால் முடிந்த அளவு மேல் ஜாதியினரான நம்பூதிரி _நாயர் குலப்பெண்களைத் தொட முயலுகிறார்கள். ராத்திரிக் காலங்களில், ரகசியமாக அவர்களை நெருங்கிச் சென்று தொந்தரவு பண்ண எத்தனிப்பதுண்டு.
அந்தி நேரங்களில், அப்பெண்களைத் தொடுவதற்காக வேண்டி நாயர்கள் அல்லது நம்பூதிரி குலத்தவர்கள் வாழும் வீட்டோரமாகச் சென்று, புலையர்கள் ஒளிந்திருப்பர். மேல்ஜாதிப் பெண்கள் இம்மாதிரி தொல்லைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள, கூடிய மட்டும் முயற்சிக்கவும் செய்கிறார்கள். இவற்றுக்கிடையே அவர்கள் ஏதாவது ஒரு நாயர் அல்லது நம்பூதிரி குலத்தைச் சேர்ந்த பெண்ணைத் தொட்டுவிட்டால், அதை வேறு எவராவது கவனிக்கவில்லையென்றாலும் கூட, தொட்ட புலையர்கள் பிறரைக் கூவி அழைத்து, இதைத் தெரிவிக்கிறார்கள். அதன் பிறகு அப்பெண் திரும்பத் தன் வீட்டுக்குள்ளே நுழைய முடியாது. அந்தப் புலையனுடன் அவன் வீட்டுக்குப் போவதைத் தவிர அவளுக்கு வேறு வழி கிடையாது. குடும்பத்தினர் பார்த்தால் அவளைக் கொன்று போடுவார்கள். எனவே, அப்பெண் தன்னைத் தொட்ட அதே புலையன் அல்லது வண்ணான் அல்லது பறையனோடு ஓடிப்போய் விடுகிறாள் (டி.எச்.பி.செந்தாரச்சேரி, 1989; 174). மேற்கண்ட தீண்டலின் மூலம் தங்கள் குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்களுக்குத் தீங்கு ஏதாவது ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்தான் அப்பெண்கள் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இச்செயல்களுக்கு அவர்களுடைய அடிமனதில் உறைந்து கிடக்கக் கூடிய ஆசார சம்பந்தமான நம்பிக்கைகளும் காரணமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. அது மட்டுமன்றி அவர்களுடைய உறவினர்கள் இதையறிந்து வந்து பிடித்துக்கொண்டு போய் கொன்றுவிடுவார்கள் என்பதால் இம்மாதிரி செய்யத் துணிகிறார்கள்.
இது சம்பந்தமாக மலபாரிலுள்ள பொன்னானிக் கரையிலிருந்து ஷெய்க் சைனூதின் தரும் சேதி (காலம் 17ஆம் நூற்றாண்டு). ஓர் ஆண்டில் சில பிரத்தியேக ராத்திரிகளில், தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஆண்கள், உயர்ந்த ஜாதியிலுள்ள பெண்கள் இருக்கும் அறைக்குள் நுழைந்தாலோ _ அவளுடன் உடலுறவு கொண்டாலோ (இதன் மூலம் அவள் கர்ப்பம் தரித்துவிட்டாலும் கூட) அப்பெண் கெட்டுப் போனதாகத்தான் பொருள். இந்நிலைமையில் அந்தப் பெண்ணை அந்நியர்கள் பிடித்துக்கொண்டு போய் விற்பனை செய்து விடுவார்கள் அல்லது அப்பெண் நம்மிடம் (இஸ்லாமியர்களிடம்) வந்து சேருவாள் அல்லது கன்னியாஸ்திரியாகிவிடுவாள்.
இதுபோல, உயர்ந்த ஜாதியிலுள்ள ஆண்கள் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த பெண்களுடன் உடலுறவு கொண்டாலும்கூட மேற்குறிப்பிட்டவைகளில் ஏதாவது ஒன்றை அவன் மேற்கொள்ள வேண்டிவரும் (இந்த இடத்தில் சைனூதின் அவர்களால் குறிப்பிடப்படும் மலபார் அன்றைய சென்னை மாகாணத்தின் அரவணைப்பிலிருந்த பகுதி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்) _ கலாகவுழுதி மலையாள வாரப்பத்திரிகை, டிசம்பர் 7, 1997.
இனி, இதுபோல இவற்றைப் பற்றி ஆய்வு செய்த டாக்டர் சேலநாட்டு அச்சுதமேனன் குறிப்பிடுவதாவது: தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தெருவழியாக நடந்து செல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியைத் தொடர்ந்து காடுகளில் திருவிழாவும் வேலையும் (வேல் கொண்டு குத்தி நடத்தும் சடங்கு) நடைபெறக் கூடிய வேளைகளில், புலையர்களுக்கு ஒருவகை சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.
அவ்வேளைகளில் தாழ்த்தப்பட்டவர்கள், மேல்ஜாதியினர் குளிக்கக்கூடிய குளத்தில் குளிக்கலாம். காவுகளுக்குள் கடந்து சென்று அவர்கள் அர்ச்சனை நடத்திக் கொள்ளலாம்! வேண்டுமானால் அப்போதே அவர்கள் வழியில் காணக்கூடிய மேல்ஜாதிப் பெண்களைத் தொட்டுக் கொள்ளலாம்! அப்படி அவர்களால் தொடப்பட்ட பெண்கள், அந்த ஆண்களுடனேயே போய்விடவேண்டும். பிறகு அப்பெண்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி செல்லக்கூடாது என்பது அன்றைய கொச்சி, திருவிதாங்கூர் வழக்கம்.
இப்படி அவர்களுக்கு சர்வ சுதந்திரம் கொடுக்கப்பட்ட நாட்களன்று முன்கூட்டிய அந்நாட்டு ஜனங்களுக்கு முரசறைந்து அறிவிப்பார்கள். இந்த முரசறைவதன் நோக்கம் என்னவெனில், விருப்பமுள்ள மேல்ஜாதிப் பெண்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், விருப்பமில்லா மேல்ஜாதிப் பெண்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக் கொள்ள இந்த அறிவிப்பு துணைசெய்தது எனக் கொள்ளலாம்.
புலைப்பேடி மாதங்களைத் தவிர, வலம் வரும் அரசர்களைத் தரிசிக்கச் செல்லும் வேலைகளிலும்கூட, முடிந்தால் மேல்ஜாதிப் பெண்களை கூட்டிக் கொண்டு போவதற்குரிய அனுமதி தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் வரை இப்புலைப்பேடி சம்பிரதாயம் மலபாரில் இருந்து வந்தது. ஆனால், அதே வேளையில், இது திருவிதாங்கூரில் கொல்ல வருடம் 871இல், (கி.பி.1695) உண்ணி கேரளவர்மா என்ற அரசரால் தடை செய்யப்பட்டது.
இந்த சம்பிரதாயத்தின் தொடக்கம் எப்படியிருந்த போதிலும், இதிலிருந்து ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, நிலவுடைமைக் காலத்தில் குடும்ப சுகத்தில் அதிருப்தியான மேல்ஜாதிப் பெண்களும், மறுமணத்தைத் தங்கள் கனவில்கூட காணமுடியாத விதவைப் பெண்களும் இச்சந்தர்ப்பத்தைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தியிருக்க வேண்டும்.
வர்ணாசிரம தர்மத்தின்படி அறுபது அடி தூரத்திற்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தலித் மக்களும்கூட, தங்களுக்கு சாதகமான இச்சம்பிரதாயத்தை மிக நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம்! இதனால் ஜாதி சமத்துவமும் கூடவே வர்ணங்களும், ஒன்று மற்றொன்றுடன் கலந்து வர்ணவேதம் அல்லது ஜாதிபேதம் நீங்கிவிடுமோ என, அன்றைய நிலவுடைமைவாதிகளும், ராஜாவும், மேல்ஜாதிக்காரர்களும் பயப்பட்டு இப்புலைப்பேடி சம்பிரதாயத்தை தடைசெய்திருக்கின்றனர்.
எது எப்படி இருந்தபோதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் பிற ஜாதியினரோடு கலப்பதை எந்தக் காலத்திலும் ஆதிக்கம் புரிவோர் அங்கீகரிப்பதில்லை. தனிமனித சுதந்திரம் இங்கே தடை செய்யப்படுகிறது. விரும்பி சேருவோரை வெட்டிப் பிரிக்க தயங்குவதில்லை. ஜாதி, இன பேதமற்ற சமத்துவ சமுதாயம் என்றுதான் அமையுமோ?
உதவிய நூல்கள்:
1. தீண்டாமையைத் தீயிடு -_ பேராசிரியர் டாக்டர் ப. சீனிவாசன்
2. தலித் முரசு, அக்டோபர் 2007.
3. ஜூனியர் விகடன்
4. தலித் பண்பாடு _ சில பார்வைகள் _ ஏ.எம். சாலன்