2010 ஏப்ரல் 4ஆம் தேதி தமிழகத்திலிருந்து அமெரிக்கா திரும்பும் பயணம் ஆரம்பித்தது. எதிர்பாராத விதமாக மும்பையில் ஒரு இரவு லீலாபெண்டா விடுதியில் தங்க நேர்ந்தது. அய்ந்து நட்சத்திர விடுதியான லீலாவின் உரிமையாளர் கேப்டன் கிருஷ்ணன் நாயரைச் சந்தித்தோம். அவரிடம் நான் எழுதிய ‘Thirukkural Stories for children’ புத்தகத்தை அன்பளிப்பாக அளித்தோம். வயது எண்பதைத் தான்டிய அவர் இன்னும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார். இயற்கைச் சூழலோடு அவர் அமைத்த விடுதி சிறிய கேரளநாடு மாதிரிதான் உள்ளது. அவரும் இந்தச் சேவைக்காக சமீபத்தில் பத்மபூசன் விருது வாங்கியுள்ளார். அவரிடம் பெரியாரை, வைக்கம் போராட்டம், பெரியார் இன்டர் நேசனல் அமைப்புப்பற்றி அளவளாவினோம். அவர் மிக ஆர்வத்துடன் நிறையக் கேள்விகள் கேட்டார்.
அடுத்த நாள் மும்பையிலிருந்து கிளம்பி 16 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு அமெரிக்கா வந்து சேர்ந்தோம். விமான நிலையத்திலிருந்து ஓசியன் ரீப் என்ற விடுதியைச் சென்றடைந்தோம். கடலிலிருந்து நிலத்துக்குள் கொண்டுவரப்பட்ட கால்வாய் ஓரத்தில் அமைந்திருந்தது. அந்தக் கால்வாயின் வழியாகக் கொண்டுவரப்பட்ட சகல வசதிகளுடன் கூடிய மிகப் பெரிய படகு வீடுகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. படகு வீட்டினை நிறுத்துபவர்கள் நாள் வாடகையாக நிறையக் கட்டணம் செலுத்த வேண்டுமாம்.
தன்னைப் பார்க்க வருபவர்களைக் கவர்ந்து மனதிற்குப் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுப்பதே பகாமசுத் தீவு. இத்தீவின் முக்கிய வருமானமே சுற்றுலாப் பயணிகளிடமிருந்துதான் என்பதால், மிக்க அன்புடனும் மரியாதையுடனும் பயணிகளைக் கவனிக்கின்றனர்.
பகாமசு கடற்கரையின் மணலும் கடலும் ஓர் அற்புதமான இயற்கையின் படைப்பு என்றுதான் சொல்ல வேண்டும். வெள்ளைவெளேர் என்ற மாவு மாதிரி உள்ள மணல், சுற்றிலும் அழகிய நீல நிறக் கடல். கரையிலிருந்து ஒரு மைல் தூரம்வரை கடலின் தண்ணீர் அளவு இடுப்பளவுதான். பெரும்பாலும் அமைதியான சிறு அலைகளுடன்தான் கடல் அசைந்து கொண்டிருந்தது. சில நேரங்களில் திடீரென பள்ளங்கள் அடி நீரோட்ட வேகத்தில் தோன்றி ஆபத்தை உண்டாக்குமாம். பெரும்பாலான பகல் நேரத்தினைக் கடற்கரையில்தான் கழித்தோம்.
படகை நடுக்கடலுக்குக் கொண்டு சென்று, சுற்றுலாப் பயணிகளுக்கு மிதவைகள் கட்டிவிட்டுக் கடலில் இறக்கிவிட்டார்கள். நீர் மூழ்கிக் கண்ணாடி அணிந்தபடியே கடலில் மிதந்து கொண்டு பவளப்பாறைகளின் அழகையும், பலவகையான அழகிய மீன்களையும், கடல் ஆமைகளையும் பார்த்து மகிழ்ந்தோம்.
குதிரை ஏற்றத்திற்கு முதல் நாளே பணம் கட்டி அனுமதிச் சீட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதால், மருத்துவர் சோம இளங்கோவன் இதற்கான ஏற்பாட்டினைச் செய்திருந்தார். அடுத்த நாள் குதிரை லாயத்திற்குச் சென்றால், அங்கிருந்த குதிரைகளின் கண்காணிப்பாளர்கள் குதிரையில் ஏறுவதற்கு உதவி செய்து, எப்படி குதிரையினை வழிநடத்திச் செல்வது என்று கற்றுக் கொடுப்பார்கள், அத்தீவில் உள்ள ஊசி இலைக் காட்டிலும், கடற்கரையிலும் குதிரையினை ஓட்டிச் செல்ல வழி நடத்துவர்.
அடுத்த நாள் அந்தக் காட்டில் நெருப்புப் பிடித்ததால் குதிரை ஏற்ற நிகழ்ச்சி ரத்தாகிவிட்டது. இதனால் மருத்துவர் சோம இளங்கோவன் ஏமாற்றத்தில் சிறிது மனம் வருந்தினார். தீவில் வறண்ட நிலைமை இருப்பதால் திடீரென நெருப்பு தானாகவே பற்றிக் கொள்வது சகஜம்.
இத்தீவிற்கு நாங்கள் பலமுறை சென்றுள்ளோம். எத்தனைமுறை சென்றாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டி பரவசத்தில் ஆழ்த்துவதாக உள்ளது. ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு பொழுதுபோக்கு இருக்கும்.
இம்முறை டால்பின் மீனைத் தொட்டுப் பார்த்துப் பழகும் அனுபவம் கிடைத்தது. எனது பேத்தியைத் தூக்கிக்கொண்டு சுமார் நான்கடி தண்ணீரில் நின்றேன். டால்பின் மிதந்து கொண்டே நம்மிடம் வந்து, அதன் முதுகையும் வயிற்றையும் தடவ அனுமதியளித்து நின்றது. டால்பினின் பயிற்சியாளரும் உடனிருந்து உதவி செய்தார்.
மருத்துவர் சோம இளங்கோவன் நீச்சல் பயின்றவர் என்றதால் டால்பின் மீன்களுடன் நீந்தினார். டால்பின்கள், மனிதர்களுடைய கட்டளைகளைப் புரிந்துகொண்டு நீந்தி, குதித்து, நடனம் ஆடி, நமக்கு வாலை ஆட்டி நன்றி தெரிவித்து மகிழ்ச்சியூட்டி ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
பகாமசு தீவில் வாழும் மக்கள் கடற்கரையை, கடல் நீரை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தீவையும் சுத்தமாக வைத்துள்ளனர். வண்ண வண்ண மீன்கள் கடற்கரை ஓரத் தண்ணீரில் நீந்தி காண்போர் கண்களுக்குக் குளிர்ச்சியூட்டுகின்றன. ஆக்சிஜன் பீப்பாயை அணிந்து கொண்டு கடலின் ஆழத்தில் உள்ள பவளப் பாறைகளை யும், சுறாமீன்களையும் கண்டு ரசிக்கலாம்.
இத்தீவின் இன்னொரு சிறப்பு, விணீஸீரீக்ஷீஷீக்ஷீமீ யீஷீஸீமீமீ என்ற ஒரு வகையான செடியாகும். இதன் வேர்கள் கடற்கரை ஓரமாக காடு மாதிரி வளர்ந்து காட்சியளிக் கின்றன. இவை கடல்நீரைச் சுத்தப்படுத்துவதிலும், கடற்கரை மண் அரிப்பு ஆகியவற்றிலும் முக்கியப் பங்காற்று கின்றன.
இங்குள்ள காடுகளில் சில குகைகள் உள்ளன. அக்குகைகளில் குடி தண்ணீர் கிடைக்கிறது. இருநூறு ஆண்டு களுக்கு முன் லுகாயா என்ற செவ்விந்திய மக்கள் குகையினுள் வாழ்ந்து வந்துள்ளனர். இத்தீவினை ஆக்கிரமித்த ஸ்பானியர்கள் இந்த மக்களை முற்றிலுமாக அழித்துள் ளனர். இம்மக்களின் சந்ததிகளுள் ஒருவர்கூட இன்று இல்லை. இங்கிருக்கும் கறுப்பு இன மக்கள் இச்செய்தியினை மிகவும் வேதனையுடன் பேசினார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் பெரும்பாலான நாடுகளில் நடந்துகொண்டுதான் வருகின்றன. இதற்கு வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, இந்தியா, திபெத், பர்மா, ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற பல நாடுகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம். நேர்மை மனம் படைத்த மனிதர்கள் தங்களால் முடிந்த அளவு இந்த அநியாயங்களைத் தடுக்க – குறைக்க பாடுபட்டுக் கொண்டுதானே வருகின்றனர்.
எல்லா இடங்களையும் பார்த்துவிட்டு கலைப்பொருள்கள் விற்பனை செய்யும் கடைக்குச் சென்றோம். பகாமசுவின் கலைப்பொருள்கள் ஓலையில், மரத்தில் நேர்த்தியுறச் செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து ரசித்தோம். மனம் கவர்ந்த சில பொருள்களை வாங்கிக் கொண்டு விமான நிலையம் வந்தடைந்தோம்.
– டாக்டர் சரோஜா இளங்கோவன்