சிறுகதை – என்று தணியும்?

பிப்ரவரி 16-28

நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு நாள் குறிச்சு நாலு மாசம் ஆச்சு. எருமை மாட்டுமேல மழைபேஞ்ச மாதிரி மசமசன்னு இருக்கீங்களே… என்று சிடுசிடுத்தாள் வடிவு.

வார்த்தைய அநாவசியமா கொட்டித் தொலைக்காதே. நான் ஒண்ணும் சும்மா இல்லே. அதே தேதியில ஊர் பூரா கல்யாணம் நடக்குது. எங்கடா மண்டபம் கிடைக்கும்னு நாயா அலஞ்சு தேடிப் பிடிச்சு இப்பத்தான் அட்வான்ஸ் கொடுத்துட்டு வாரேன் என்றான் கார்மேகம் நிதானமாக.

வாடகை எவ்வளவுனு சொல்லலையே…?

கொஞ்சம்தான். அம்பதாயிரம்..

ஆத்தாடி! அம்பதாயிரமா? தாங்க முடியுமா? ஒரு நாள் வாடகைக்கே இவ்வளவு போச்சுன்னா பந்திச் செலவு, பத்திரிகைச் செலவு, பட்டு, நகை, நட்டுனு நிறைய செலவு இருக்கே. கையக் கடிக்கிற செலவுன்னா தாங்கிக்கலாம். கழுத்தைப் பிடிக்கிற செலவுன்னா…?

என்ன பண்றது வடிவு. பூவிழி நமக்கு ஒரே பொண்ணு. எம்.ஏ. படிச்சு முடிச்சவளுக்கு இன்ஜினியர் மாப்பிள்ளைதான் வேணும்னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்து சம்பந்தம் பேசிட்டோம். செலவைப் பார்த்து பயந்தா முடியுமா? குறைஞ்ச வாடகை மண்டபம் எதுவும் கிடைக்கலே.

தலை சுத்துதுங்க

அதுக்குள்ளேயுமா? இன்னும் அழைப்பிதழ்கூட ரெடியாகலே….

நீங்க எப்ப ரெடி பண்றது. ஊர் ஊரா கொண்டு போய்க் கொடுக்கிறது? என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ இன்னும் ரெண்டு நாள்ல பத்திரிகைய என் கண்ணுல காட்டணும்…

நீயும் நானும் கலந்து பேசாம மேட்டர் எப்படி ரெடியாகும்? உறவுக்காரங்க ஒருத்தரை விடாமப் போட்டாகணும். என் பேரு போடலே, உன் பேரு விட்டுப் போச்சுனு மல்லுக்கு நிப்பாங்க. அதோட நம்ம வீட்டு அழைப்பா, இரு வீட்டார் அழைப்பாங்கிறதையும் பேசி முடிக்க வேண்டியிருக்கு….

உங்களுக்குக் கூடமாட இருந்து ஒத்தாசை பண்ண ஒருத்தர் இருந்தா உதவியா இருக்கும். ஒத்தையிலே அலையுறீங்க. உங்க அணுக்கத் தோழர் புகழேந்தி எங்கே ஆளையே காணோம்? நிச்சயம் பண்றப்போகூட இருந்தாரே? பிசினஸ் சம்பந்தமா வெளியூர் போயிருக்கான். கல்யாணத்துக்கு முதல் நாள் கண்டிப்பா வந்து நிப்பேன்னு போன் பண்ணிட்டான். அதுவும் நல்லதுக்குத்தான். முற்போக்கு, பகுத்தறிவுன்னு குறுக்கே மறுக்கே எதையாவது சொல்லிக்கிட்டிருப்பான். எனக்குச் சரின்னு பட்டாலும் உனக்கும் சரின்னு படணும். நாம ரெண்டு பேரும் ஏத்துக்கிட்டாலும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏத்துக்கணும். அவன் சொல்வதை காதில் வாங்கியும் வாங்காமலும் அடுப்படிக்குள் நுழைந்தாள் வடிவு. மாடியில் மணப்பெண் பூவிழி தோழிகளுடன் அரட்டை அடிக்கும் சத்தம் கீழேயும் கேட்டது.

மினி அச்சகம் ஒன்றில் ஒப்படைத்து மெய்ப்பு பார்த்து வழவழப்பான மஞ்சள் வண்ணத்தாளில் அச்சிடப்பட்டு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தன அழைப்பிதழ்கள். உறைக்குள் திணிக்கப்பட்டதும் நான்கு மூலைகளிலும் மஞ்சள் குழம்பைத் தடவினாள் வடிவு. வெளியூர்களுக்கு அனுப்பியதுபோக சுற்றுப் பட்டிச் சொந்தங்களுக்கு அழைப்பிதழ்கள் போய்ச் சேரவேண்டும். வீடுகளைத் தேடிப்பிடித்து வெற்றிலை பாக்குத்தட்டில் பத்திரிகை இணைத்து அடக்க ஒடுக்கமாக இரு கைகளால் நேரில் கொடுப்பதுதான் மரியாதை என்பது எழுதப்படாத விதி. மலைத்து நிற்காமல் மறுநாளே டூவீலரை கார்மேகம் உயிர்ப்பித்தபோது வடிவு பின்னால் உட்கார்ந்துகொண்டாள்.

நடுவப்பட்டி, நாகலாபுரம் நோக்கிப் பறந்தபோது, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து விலகி கிராமத்துப் பாதைக்குத் திரும்பினான். போகிற போக்கில் இடப்பக்கமும் வலது பக்கமும் பார்த்துக் கொண்டிருந்த வடிவு கணவனின் முதுகைச் சுரண்டினாள். என்ன என்று அவன் கேட்பதற்குள் இதென்னங்க மாயமா இருக்கு. ரெண்டு பக்கமும் பச்சைப் பசேல்னு பட்டு விரிச்சாப்ல வயக்காடுக இருக்குமே. ஒன்னையுமே காணோம். வீடுகளும், பங்களாவுமா இருக்கு? என தனது ஆச்சரியத்தை, ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.
அதை ஏன் கேக்குறே.. கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயிகளை இப்ப கண்டு பிடிக்கவே முடியலே. விவசாயம் கட்டுபடியாகாம பொன் விளையும் பூமிய ரியல் எஸ்டேட்காரங்ககிட்ட வந்த விலைக்கு வித்துட்டு பட்டணத்துப் பக்கம் கொத்த வேலை, கூலி வேலைன்னு போயிட்டாங்க. கேட்கவே மனசு கஷ்டமா இருக்கு. அப்படின்னா இப்ப யாரைப் பார்க்கப் போறோம்?

பிறந்த மண்ணை விட்டுப் போக மனசு இல்லாம காலந்தள்ளிக்கிட்டிருக்கிற மிச்ச சொச்சங்களை…

வாடிப்போனது வடிவின்முகம். அந்தப் பசுமை மண்ணிலிருந்து வந்தவளாயிற்றே. அழவேண்டும்போல் இருந்தது அவளுக்கு. கனத்த இதயத்துடன் அவர்கள் கிராமத்திற்குள் நுழைந்தபோது எதிர்ப்பட்ட எல்லோரும் பாசம் கலந்து பார்வையை, புன்சிரிப்பை சிந்தியபோது பரவசத்தில் திளைத்தார்கள் இருவரும்.
போஸ்ட்மேன் மாதிரி ஒவ்வொரு வீட்டிலும் அழைப்பிதழை நீட்டிவிட்டு கம்பி நீட்டத்தான் நினைத்திருந்தான். நடந்ததோ வேறு. சாப்பிட்டுத்தான் போக வேண்டும் என்றும், காப்பியாவது குடிச்சுத்தான் ஆகணும் என்றும், டேய் ஓடிப்போய் சோடா கலர் வாங்கிட்டு வாடா என்றும், அவர்கள் கொடுத்த அன்புத் தொல்லையில் இருவரும் மிரண்டு போனார்கள். பத்திரிகையை வாங்கி கையில் வைத்துக்கொண்டே கல்யாணம் என்னிக்கி? எப்போ? எங்கே? மாப்பிள்ளை யாரு? என்ன பண்றாரு? எத்தனை பவுனு? போன்ற கேள்விக் கணைகளை அடுக்கடுக்காகக் கேட்டு வறுத்தெடுத்தார்கள். இத்தனை அலம்பல்களையும் தட்டிக் கழித்து அவர்களிடமிருந்து மீள்வது அவ்வளவு எளிதாகப்படவில்லை அவர்களுக்கு.

வந்த வேலை முடிந்தது. பொழுதும் சாய்ந்துவிட்டது. அங்கிருந்து வீட்டை நோக்கி வந்தபோது பொறுமை கடலினும் பெரிது என்று சொன்ன புண்ணியவான் வேறு யாரும் இல்லே. அழைப்பிதழ் கொடுத்து அலுத்துப் போன ஒரு அப்பாவியாகத்தான் இருக்கும் என்று கணவன் சொன்னதை அங்கீகரிப்பதுபோல் வடிவும் ரசித்துச் சிரித்தாள்.

விரைந்து வந்துகொண்டிருந்த டூவீலர் சற்று வேகம் குறைந்தது. கொஞ்சம் வேகமா போங்க என்றாள் வடிவு. இன்னும் சில நொடிகளில் அது நிற்கப் போவது தெரியாமல்.

ஏன் நிறுத்திட்டீங்க?

நான் எங்கே நிறுத்தினேன். அதா நின்னுபோச்சு. அவசரத்துல பெட்ரோல் போட மறந்துட்டேன் என்று அசடு வழிந்தான். வண்டியை விட்டு இறங்கி அவன் முன்னால் வந்து நின்றவள் இப்படி விவரங்கெட்டதனமா நடந்து என் உசிரையும் வாங்கணுமா என்று கொதித்தவள் சுட்டெரிக்கும் பார்வை ஒன்றை அவன் மீது வீசிவிட்டு விடுவிடுவென நடந்தாள். இன்னும் ஒரு கிலோ மீட்டர்தான். பெட்ரோல் போட்டுக்கலாம் என்ற அவனது அவலக் குரலையும் சட்டை செய்யவில்லை. வியர்க்க விறுவிறுக்க  டூவீலரைத் தள்ளிக்கொண்டு வருவதை பரிதாபப்பட்டுத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. நெடுஞ்சாலை கண்ணில்பட்டதும் அங்கு நின்று கொண்டிருந்த மினிப் பேருந்தில் ஓடிப்போய் ஏறிக்கொண்டாள்.

வீடு வந்து சேர்ந்தபோது சிறிது நேரத்தில் கார்மேகமும் வந்து சேர்ந்தான். நல்லா வண்டியத் தள்ளினீங்களா? செலவு ஆனாலும் பரவாயில்லே. முகூர்த்தம் முடியுறவரைக்கும் ஒரு ஆட்டோவோ, காரோ கைவசம் வச்சுக்கணும். உங்களை நம்புனா அவ்வளவுதான் என்று கடுப்பை வெளிப்படுத்தியபடி வீட்டிற்குள் நுழைந்தாள். டூவீலரை ஒதுக்குப்புறமாய் நிறுத்திவிட்டு நிமிர்ந்தபோது ஹரோ ஹோண்டா ஒன்று அவன் முன்வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி வந்த இருவரும் கார்மேகத்தை நோக்கி பவ்யமான கும்பிடு ஒன்றைப் போட்டனர்.

உங்களைப் பார்க்கத்தான் வந்தோம். நாங்க கல்யாண சமையல் ஸ்பெசலிஸ்ட்டுங்க. ஒரு கேங்கே எங்ககிட்ட வேலை செய்யுது. கல்யாண வீடுன்னு தெரிஞ்சு வந்தோம் என்றார் முன்சீட்டுக்காரர்.

இதுக்கும் கம்பெனி ஆரம்பிச்சுட்டீங்களா? இருக்கட்டும். உங்க போன் நம்பரைக் கொடுத்துட்டுப் போங்க என்றான் கார்மேகம். தயாராய் வைத்திருந்த விசிட்டிங் கார்டைக் கொடுத்துவிட்டு வாட்ட சாட்டமாக இருந்த முன்சீட்டுக்காரரைச் சுட்டிக்காட்டி சார் இவரை சாதாரண சமையல்காரர்னு நினைச்சுராதீங்க. பிரபல வாரப் பத்திரிகையிலே சமையல் குறிப்புகள் எழுதி பிரபலமானவரு. டி.வி.யில கூட சமையல் கலை பத்தி பேச அழைச்சிருக்காங்க என்று அறிமுகம் செய்தார் பின்சீட்டுக்காரர்.

இதே நாள்ல நிறைய திருமணங்கள் நடக்குமே. யார் கிட்டேயும் அட்வான்ஸ் வாங்கலையா?

நல்லா கேட்டீங்க. ஏற்கெனவே மூணு பெரிய இடத்துக் கல்யாணத்துக்கு கைநீட்டி அட்வான்ஸ் வாங்கிட்டோம். உங்களோடது நாலாவது.

அதெப்படிங்க முடியும்?

சென்னையில ஒருத்தர் பதினைஞ்சு சாப்பாடு ஓட்டல் நடத்தறாரு. வெளியூர்லேயும், வெளிநாட்டுலேயும் கூட நடத்துறாரு. அதோட ஒப்பிட்டா நாங்க சாதாரணம். இன்னும் இதே ஊர்ல பத்துக் கல்யாணத்தைச் சமாளிக்கணுமா? நாங்க ரெடி. அவர்களை வீட்டிற்குள் அழைத்துப்போய் இருக்கையில் அமர்த்தியபோது வடிவும் அங்கே வந்தாள்.

எத்தனை வேளை விருந்து? ஒவ்வொரு விருந்துக்கும் எத்தனை பேரு வருவாங்க? வெஜிடேரியனா? அசைவமா? உங்க டேஸ்ட், உங்க எதிர்பார்ப்பு இதெல்லாம் தெரிஞ்சுகிட்டோம்னா என்னென்ன வாங்கணும்னு லிஸ்ட் தந்துருவோம். குறிச்ச நேரத்துல ரெடி பண்ணி சுத்தமான யூனிபார்ம்ல எங்களோட கேட்டரிங் சர்வர்கள் வந்து அசத்திருவாங்க.

அட அவ்வளவெல்லாம் எதுக்குங்க. சாதாரண உடையில பந்தி பரிமாறினா போதாதா?

நான் சொல்றதை தப்பா எடுத்துக்கப்படாது. இப்ப இதுதான் பேசன். சப்ளை பண்றவங்க சுத்தமா இருந்தாதான் சாப்பிடுறவங்க முகம் சுழிக்காம சாப்பிடுவாங்க., பாய் விரிச்ச தரையில உட்கார்ந்து கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்னு பாடி சாப்பிடுற காலம் இல்லிங்க. யாரும் கீழே உட்காரமாட்டாங்க. ஒவ்வொரு ரவுண்டுக்கும் டேபிள்ல ரோல் பேப்பர் மாத்தணும். துடைக்க வேண்டியதில்லே. எவர்சில்வர் டம்ளரே ஆனாலும் தண்ணீர் குடிக்க யோசிக்கிறாங்க. மினரல் வாட்டர் பாட்டில்களுக்கு வந்தாச்சு. பெரிய மண்டபம். பிரமாதப்படுத்திருவோம்.

நாங்க கலந்து பேசிட்டு போன் பண்றோம் என்று சொல்லி பேரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தாள் வடிவு. பின்சீட்டுக்காரர் தலையைச் சொறிவதைப் பார்த்தவள் அட்வான்ஸ் எல்லாம் விவரங்களோட நேரில் வந்து தருவாங்க என்றாள்.

ரொம்ப சந்தோசம் என்று சொல்லி எழுந்தவர்கள் பணிவாக வணக்கம் போட்டதும் வெளியேறினார்கள். ஹீரோ ஹோண்டா உறுமும் சத்தம் கேட்டது.

நம்மள மிட்டாமிராசு, ஜமீன் பரம்பரைன்னு நெனச்சுட்டாங்களா? சர்க்கார் சம்பளத்துல ஏதோ வண்டி ஓடிக்கிட்டிருக்கு. போற போக்கைப் பார்த்தா சமையலே பல லட்சங்களை சாப்பிட்டுரும்போல இருக்கே என்றாள் பெருமூச்சு விட்டபடி.

மறுநாள் காலை தேநீருடன் வந்தவள் கணவனை எழுப்பினாள். அதை வாங்கி ருசித்துக் கொண்டிருந்தவனிடம் மாப்பிள்ளை அழைப்புக்கு பட்டாசு வெடிக்கணும். கொட்டு மேளம் கேட்கணும் என்றாள்.

பத்தாயிரம் வாலா பத்து சொல்லிட்டேன். கொட்டாவது மேளமாவது. நாதஸ்வரக் கச்சேரிக்கே ஏற்பாடு பண்ணிட்டேன். மதுரையிலேயிருந்து வாராங்க. பொன்னுத்தாயின்னு பேரு.

பொன்னுத்தாயா? பூவும் பொட்டும் வச்சுக்க வகை இல்லாதவ சுபகாரியத்துக்கு கச்சேரி பண்றதா? எனக்குப் பிடிக்கலே. வேண்டாம்னு சொல்லிருங்க. ஒருவித ஒவ்வாமை அவள் முகத்தில் இழையோடியது.
ஏன் பதறுரே? நீ நினைக்கிற பொன்னுத்தாயி இப்ப உயிரோட இல்லே. இந்தப் பொண்ணு சுமங்கலியுமில்லே, அமங்கலியுமில்லே. கல்யாணம் ஆகாத டீன் ஏஜ் பொண்ணு. விசாரிச்சுட்டேன் என்றவன் தொடர்ந்து பெண்ணுக்கு எதிரி வேற யாருமில்லே என்று முணமுணுத்தது அவள் காதில் விழவில்லை.

அந்த நாளில் வண்ண விளக்குகள், மாவிலை தோரணங்கள் என மண்டபம் களை கட்டியிருந்தது. திருமண நிச்சயத்தின்போது எடுக்கப்பட்ட மணமக்களின் நெருக்கமான காட்சியை புத்தம் புது திரைப்படக் காதலர்களைப் போல் டிஜிட்டல் பேனரில் வடித்து நுழைவு வாயிலில் வைத்திருந்தார்கள்.

காரிலும், ஆட்டோவிலும் வந்து கொண்டிருந்தவர்களை லைவ்ஆக டி.வி. பெட்டிகள் காட்டிக்கொண்டிருந்தன. மணமேடைக்கு அருகே ஒளி ஒலி அமைப்புகளுடன் மற்றொரு மேடை தயாராக இருந்தது. நாதஸ்வரத்தை ஏந்தியபடி மேடை ஏறிய பொன்னுத்தாய் தலைநிறைய பூவும், தழையத்தழைய பட்டுப் புடவையும், நெற்றிப் பொட்டும் அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாள். பக்கத்து மேடையில் மணமக்கள் வந்து அமர்ந்ததும் ரெட்டைத் தவிழ்கள் கம்பீரமாய் முழங்கின. எடுத்த எடுப்பில் நாளாம் நாளாம் திருநாளாம்.. நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம் என்ற புகழ்பெற்ற திரைப்பாடலின் இசை அச்சரச் சுத்தமாக காற்றில் மிதந்துவர கூட்டம் ஆர்ப்பரித்து கையொலி எழுப்பியது. அதனைத் தொடர்ந்து காருகுறிச்சி, திருவாடுதுறை, திருவெங்காடு எல்லோரும் இசை வெள்ளத்தில் வந்து போனார்கள்.

ஒன்றுக்கு இரண்டு புரோகிதர்கள். ஒருவர் மாற்றி ஒருவர் எதையோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். நெருப்புக் குண்டத்தின் புகை, மண்டபத்தைக் கவ்வியிருந்தது. பலரும் சங்கடத்தில் நெளிந்தார்கள். ஆஸ்த்துமா அபிமானிகள் இடத்தைக் காலி செய்துக் கொண்டிருந்தார்கள் மணமகள் கழுத்தில் மாப்பிள்ளை மூன்று முடிச்சு போடும்வரை காத்திருந்த கூட்டம் அச்சதை அரிசியை வீசி எறிந்து விட்டு பந்திப் பகுதியில் முண்டியடித்துக் கொண்டிருந்தது.

பந்தி முறைகள், நிர்வாக மேலாண்மை தெரிந்த புகழேந்தி தானாக முன் வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தான். சீருடைப் பணியாளர்களைக் கண்காணிக்கவும், வேலை வாங்கவும் அவனால் முடிந்தது.

இரு வீட்டாரின் உறவும் நட்பும்! ருசித்துச் சாப்பிடுவதைக் கண்டுகளிக்க ஆவலுடன் அங்கே வந்தாள் வடிவு. ஒரு ஓரமாய் நின்றபடி கண்களைச் சுழலவிட்ட அவளது பார்வையில் எது பட்டதோ தெரியவில்லை. திகைத்துப் போய் அப்படியே சிலையாய் நின்றுபோனாள். வாய் எதையோ உளறிக்கொண்டிருந்தது. அவளைத் தேடிவந்த கார்மேகமும் அவள் நிலைகண்டு ஓடிவந்தான். என்ன வடிவு? ஏன் இப்படி நிக்கிறே? என்றாள். உடல்மொழியால் அவள் பார்த்த காட்சியைச் சுட்டினாள். அவள் சுட்டிய திசையில் கூர்ந்து கவனித்தபோது அது ஒன்றும் கண்களைப் பெரிதாக்கும் சமாச்சாரம் இல்லை என்பது அவனுக்குப் புரிந்தது.

பந்தியில் பரிமாறப்பட்ட கேசரி, அல்வா, குலோப்ஜான், அய்ஸ்கிரீம் போன்ற இனிப்பு வகைகளும், எண்ணெய்ப் பலகாரங்களும் சர்க்கரை வியாதிக்காரர்கள் கொலஸ்ட்ரால் பேர்வழிகளின் கருணையால் குப்பைக் கூடைக்குப் போய்க்கொண்டிருந்தன. அவளது அதிர்ச்சிக்கு அதுதான் காரணம்!
தூரத்திலிருந்து பார்த்துவிட்ட புகழேந்தி அங்கே விரைந்து வந்தான். நிலைமையைப் புரிந்துகொள்ள அதிகநேரம் பிடிக்கவில்லை. அவர்களைக் கைத்தாங்கலாக மண்டப வாயிலுக்கு அழைத்து வந்தான். சுழலும் விசிறி முன்னே அவள் உட்கார்ந்தாள். சிறு கூட்டமும் சேர்ந்துபோக, என்னப்பா கார்மேகம் இவங்க ஏன் இப்படி இருக்காங்க? என்று கேட்டான் நண்பன்.

அவதான் சொல்லணும்..

போத்தல் நீரை கொஞ்சம் கொஞ்சமாகப் பருகிக் கொண்டிருந்த வடிவு மெல்ல வாய்திறந்தாள். சிக்கனமா சேர்த்து வச்ச கைக்காசும், கடன் வாங்கிய ரொக்கமும் லட்சக்கணக்குல செலவாகியிருக்கு. அலைச்சல், மன உளைச்சல்னு ஒரு பக்கம் இருந்தாலும் செலவைப் பத்திக் கவலைப்படாம பெரிய வேலைக்காரர்களை வச்சு ருசியா செஞ்சுவச்ச பண்டங்கள் உண்ணாமக் கொள்ளாம குப்பைத் தொட்டிக்குப் போறதைப் பார்த்தேன். வயிறு எரியுது! மனசு கிடந்து அடிச்சுக்குது என்றாள் முந்தானையால் முகம் துடைத்தபடி. நடப்பது ஒன்றும் புதிதல்ல, நாட்டு நடப்பே அதுதான் என்பதை எப்படிச் சொல்லி புரியவைப்பது? தெளிந்த நீரோடையாய் மனந்திறந்தான் புகழேந்தி.

தேவை இல்லாத தொல்லைகளை விலைக்கு வாங்கணும்னே ஆடம்பரமா நடத்திக்கிட்டிருக்கோம். மொத்தமா பணத்தைக் கொடுத்து முட்டுற மாட்டை வாங்குவாங்களா? யார் யாருக்கோ எப்பவோ எழுதுன மொய்ப் பணத்தை திரும்ப வசூல் பண்ணணும்னு நினைக்கிறது பைத்தியக்காரத்தனம் இல்லையா? இப்ப ஆகியிருக்கிற செலவை மொய்ப் பணம் சரிக்கட்டிருமா? சினிமாக்காரங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஆடம்பரம் தேவைப்படலாம். அவங்களுக்கு விளம்பரமும் கிடைக்கலாம். நம்மை மாதிரி உள்ளவங்க யோசிக்க வேணாமா?

என் ஆதிக்கத்தில் இம்மாதிரி இருக்குமானால், என் மகளும் இன்னாரும் இன்ன தேதியில் மணமக்களாக ஆகிவிட்டார்கள் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன் என்றுதான் பத்திரிகையில் போடுவேன் இப்படிச் சொன்னது யார் தெரியுமா?

யாரு…?

6.9.1961இல் பட்டுக்கோட்டை அழகிரி மக்களோட திருமண விழாவில தந்தை பெரியார் சொன்னது. கல்யாணம்னு கடன்பட்டு காலமெல்லாம் கண்ணீரும் கம்பலையுமா சீரழிஞ்சு போகவேண்டாம்னு அப்படிச் சொன்னாரு.

சரியாகத்தான் சொல்லியிருக்காரு. என் புத்திய…  என்று இழுத்தவள் அத்தோடு நிறுத்திக்கொண்டாள்.

பண்டங்கள் ஒண்ணும் வீணாப் போகலே அங்கே பாருங்க என்று கை காட்டினான் கார்மேகம். அங்கே பந்தியில் நிரம்பி வழிந்த குப்பைக் கூடைகளைச் சுமந்து வந்து ஓரிடத்தில் கொட்டிக் குவித்துக் கொண்டிருந்தார்கள். பத்துக்கும் மேற்பட்ட சிறியவர்களும் பெரியவர்களும் ஒருவரை ஒருவர் இடித்தபடி போட்டி போட்டுக்கொண்டு தேடி எடுத்து சுவைத்துக் கொண்டிருந்தார்கள்.

வெளியில் நடப்பவை எதையும் கண்டுக்கொள்ளாமல் மாப்பிளையும் பொண்ணும் எவ்வித கூச்சமும் அச்சமும் இன்றி பூமாலைகளும், வியர்வையுமாய் உரசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். அதில் எத்தனை எத்தனை வண்ணக் கனவுகள் வந்து போயினவோ…!

– சிவகாசி மணியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *