ஆன்மீகத்தின் பெயரால் மதப் பிரச்சாரம்

பிப்ரவரி 01-15

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : பெண்கள் இரவு 9.30க்கு மேல் பயணிக்கக் கூடாது என சொல்லுபவர்கள் ஆண்கள் மட்டும் போக சம்மதிப்பதேன்? பயணிக்கும் சூழல் இரு சாராருக்கும் வரத்தானே செய்யும். இதில் பாரபட்சம் ஏன்? பாதுகாப்புக் கொடுப்பது அரசின் கடமைதானே? – இ. பியூலா, ஆற்காடு

பதில் : தந்தை பெரியார் அவர்கள் வன்மை ஆண்களுக்கே சொந்தம். மென்மை பெண்களுக்கே என்று காலங்காலமாக சிலர் எழுதியும் பேசியும் வந்த காரணத்தால், சரி பகுதியான பெண்கள் இப்படி பலவீனமானவர்களாக சித்தரிக்கப்பட்ட கொடுமை; ஆண் ஆதிக்க மனப்பான்மையின் வெளியீடு இது!

கேள்வி : பார்ப்பன ஊடகங்களால் தூக்கி நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடி லோக் ஆயுக்த நியமனத்தை எதிர்க்க வேண்டிய பயம் ஏன் வந்தது? – எஸ். உமா, பெரம்பலூர்

பதில் : போகப்போகப் புரியும்; இந்தப் புனிதரின் திரை கிழியும்! பிறகு உண்மை தெரியும்!

கேள்வி : சுற்றுலாத்துறை வளர்ச்சி என்ற போர்வையில் ஆன்மீக துறைகளுக்கு கோடிக்கணக்கில் நிதியை தமிழக முதல்வர் ஒதுக்கி வருகிறாரே? – ஜி. நளினி, பெரம்பலூர்

பதில் : வன்மையான கண்டனத்திற்குரிய ஒன்றாகும். ஆன்மீகம் என்ற பெயரால் அப்பட்டமான மதப் பிரச்சாரமே அது!

கேள்வி : பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதின் மூலம் குற்றச் செயல்கள் அதிக அளவில் குறைவதற்கு சந்தர்ப்பம் ஏற்படும் என நினைக்கிறீர்களா?
_ எஸ். கலியபெருமாள், திருவப்பூர்

பதில் : நிச்சயம் கிடையாது; வாழ்நாள் தண்டனை வருந்தவும், அக்குற்றவாளிகள் திருந்தவும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.

கேள்வி : பக்தர்களில் சிலர் சபரிமலையில் தோன்றுவது மகர விளக்கு என்றும், பலர் மகர ஜோதி என்றும் கூறுகிறார்கள். இதில் எது உண்மை? – சி. சுவாமிநாதன், ஊற்றங்கரை

பதில் : இரண்டும் உண்மை இல்லை என்பதே உண்மை. முன்பே பொன்னம்பலமேடு வெளிச்சம் கண்டறியப்பட்டது. பக்தி வியாபாரம் அவ்வளவே.

கேள்வி : கறுப்பர் இன நிறவெறி புரட்சியில் சிறைப்பட்ட நெல்சன் மண்டேலாவுக்குப் பின் அவர் காதல் மனைவி வின்னி மண்டேலா, தாய்மை பெற்றவளே வா! நம்மால் முடியும். இடது கரத்தில் தனையனை எடு! வலது கரத்தில் ஆயுதம் எடு! இன வெற்றி உன்னால் முடியும் உறுதி என்றார். இத்தகைய புரட்சிப் பெண் வின்னியை உலகுணர்ந்தாலும் வரலாறு கண்டுகொள்ளவில்லையே ஏன்? இதைப்பற்றி தங்கள் கருத்து? – திங்கள் நகர் நூர்தீன், நெய்யூர்

பதில் : அதற்கு முக்கிய காரணம் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு -_ விலகல் காரணமாக இருக்கக் கூடும். உண்மைகள் கண்டறிய முயற்சிக்கலாம்.

கேள்வி : பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வருமா? ராகுல் காந்தி காங்கிரசின் துணைத் தலைவராகி விட்டாரே? – அ. தமிழ்க்குமரன், ஈரோடு

பதில் : வரும்; ஆனால் வராது என்ற வடிவேல் பாணி பதிலையா எதிர்பார்க்கிறீர்கள் எம்மிடமிருந்து? நிச்சயம் முன்கூட்டியே வராது. திட்டமிட்டபடி 2014இல்தான் வரும் என்றே தெரியவருகிறது.

கேள்வி : பொங்கல் விழாவின்போது ஜல்லிக்கட்டு மாடுவிரட்டல் என வைத்து மாடுகளை பயமுறுத்துவதும், அவை மிரண்டு போய் மக்களை காயப்படுத்துவதும், சில வேளை இன்னுயிரையும் பறித்துக் கொள்வதும் நாகரீகமா? _த. அன்பரசி, காஞ்சி

பதில் : கலாச்சாரம் – என்ற பெயரில் இது மிருகவதைச் சட்டம் -_ மனிதவதையாகவும் ஆகி வருவதில் வாக்குவங்கி அரசியல்வாதிகள் தடுக்க மறுக்கிறார்களே!

கேள்வி : தனியார் துறையில் இடஒதுக்கீடு -_ ஜாதியற்றோருக்கான சிறப்பு இடஒதுக்கீடு (ஜாதி ஒழிப்பு இணையர்களின் பிள்ளைகளுக்கானது) என்று இருமுனைகளில் கழகம் அடுத்த போராட்டக் களத்தை அமைக்குமா? – சீர்காழி கு.நா. இராமண்ணா, சென்னை

பதில் : தலைமைச் செயற்குழு முடிவாகவே இவ்வேலைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதே!

கேள்வி : காதல் எந்த வயதில் வந்தால் நல்லது? +2 படிக்கும்போதே காதலிப்பது ஏற்கக் கூடியதா?        _ எம். செல்வி, குன்றத்தூர்

பதில் : +2 படிப்பிற்குப் பிறகு வருவதே விரும்பத்தக்கது. சின்னத்திரை, பெரியதிரையின் தாக்கம் பிஞ்சில் பழுக்க வைக்கும் கொடுமைதான் பிஞ்சு மாணவ வயதில் கோளாறு ஏற்படுவது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *