அன்னையார் நடத்திய போராட்டாங்கள் – கி.வீரமணி
திருச்சியில் கூடிய மத்திய நிர்வாகக்குழுக் கூட்டத்தின் முடிவுக்கேற்ப, அய்யா தந்தை பெரியார் விட்ட பணியை _ களத்தில் நின்று முடிக்க முனைந்த பணி _ அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் அப்போராட்டத்தின் முதல் கட்டம் 1974 ஏப்ரல் 3ந்தேதி அறிவிக்கப்பட்டு, போராட்ட வீரர், வீராங்கனைகள் பட்டியலையும், ஊர்களில் கைதாகி சிறைசெல்லும்முன்பு நீதிமன்றங்கள் முன்பு (தேவைப்படும்) வாக்குமூலம் எப்படி ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பது போன்ற எல்லா விவரங்களும் அன்னையாரின் ஆணைக்கிணங்க நாங்கள் வெளியிட்டு ஆயத்தப்படுத்தினோம்.
இதை ஆதரித்து, தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (என்று தனிக்கட்சி கண்ட) முதுபெரும் தியாகி கம்யூனிஸ்ட் தோழர் மணலி சி. கந்தசாமி அவர்கள் இக்கிளர்ச்சிக்கு (அஞ்சலகங்கள் முன் மறியல் செய்து, அர்ச்சகர் சட்டச் செயலாக்கத்தினை விரைவுபடுத்திடும் முயற்சியை) தனது முழு ஆதரவு உண்டு என்று தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. (26-_3_1974) கழகத் தலைவர் அன்னையார் அவர்கள் சென்னை அண்ணா சாலையில் கழக முக்கியஸ்தர்களுடன் அஞ்சல் அலுவலகம் முன் அறிவித்தபடி, ஏப்ரல் 3 அன்று காலை அறப்போரான _ மறியல் போரைத் துவக்கி கைதானார்கள்.
நான், கழகத் தலைவர் ஆணையிட்டபடி, திருச்சி தெப்பக்குளம் அஞ்சல் நிலையமுன் மறியல் போர் நடத்தி கழகத் தோழர்களுடன் கைதானேன்.
இதுபோலவே மாநிலத்தின் முக்கிய ஊர்கள் அனைத்திலும் பல்லாயிரவர் கைதாகினர். முதல் கட்டம் அய்யா இல்லாத நிலையில், வெற்றிகரமாக முதல்முறையாக நடந்தது.
போராட்டம் நிறைவைத் தொடர்ந்து அம்மா அவர்கள் அயரமாட்டோம், அயரமாட்டோம் என்னும் தலைப்பில் ஒரு தலையங்க அறிக்கை வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில் ஆதரவு காட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, முதல் கட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுவிட்டது. இனி அடுத்த கட்டமாக, சென்னைக்கு வருகிற மத்திய அமைச்சர்களுக்கு எதிராக _ அரசியல் சட்டத் திருத்தத்தை வலியுறுத்தி கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது அடுத்த கட்ட நடவடிக்கையாக அமைந்தது!
இந்தப் போராட்டம் _ விளைவு பற்றி விவாதிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் 8_4_1974 அன்று ஒத்திவைப்புத் தீர்மானங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் கே.டி.கே.தங்கமணி, எச்.வி.அண்டே ஆகியோர் கொண்டுவந்து, அதற்கு முதல்அமைச்சர் கலைஞர் பதில் அளிக்கும்போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனியே _ அனைத்துச் சாதியினர் அர்ச்சகராக ஒரு தீர்மானத்தைக் கொணர்ந்து நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவோம் என்று உறுதிமொழி அளித்தார்கள்.
அதன்படியே 15_4_1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள், திராவிடர் கழக கோரிக்கையை ஆதரித்து, ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
இத்தீர்மானம் எதிர்ப்பே இன்றி ஏகமனதாக நிறைவேறிற்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நாடாளுமன்றத்திலும் இத்தீர்மானத்தின் எதிரொலியை கழகம் அன்னையார் தலைமையில் நடத்திய அறப்போராட்டத்தின் தாக்கத்தினாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர்கள் _ (பிரதமராக திருமதி இந்திராகாந்தி அவர்கள் இருந்த காலம் அது) தமிழக அரசினைக் கலந்து எவ்வகையில் அச்சட்டத்திருத்தம் இருக்க வேண்டும் என்று ஆய்வு செய்து ஆவன செய்வோம் என்று ஆக்கபூர்வமான பதிலை அளித்தனர்.
தந்தை பெரியாருக்குப் பின் நடைபெற்ற முதல் கிளர்ச்சியே நாடு முழுவதிலும் ஒலித்ததோடு, நல்லதோர் விளைவுகளையும் ஏற்படுத்தியது என்பது பெரியாருக்குப் பின் இந்த இயக்கம் இருக்காது என்று ஆருடம் சொன்ன அவசரக்கார ஆரியத்திற்கு தக்க பதிலடியாக அமைந்தது!
திராவிடர் கழகம் என்றாலே போராட்டம், பிரச்சாரம் என்ற கடிகாரத்தின் பெண்டுலம் ஆடுவதைப் போன்ற செயல்முறைதானே! அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை _ அதன் முடக்கப்பட்ட நிலையை மாற்றி, எழுந்து நடமாடச் செய்ய 1974 ஏப்ரல் 3ஆம் தேதி திருச்சியில் கூடிய திராவிடர் கழக பொதுக்குழு முடிவுக்கேற்ப முதல் கட்டமாக அஞ்சல் அலுவலக முன் மறியல் முடிந்து, இரண்டாம் கட்டமாக மத்திய அமைச்சர்கள் சென்னை வரும்போது கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நமது அறப்போரின் அடுத்தகட்டம் _ 6.5.1974 அன்று எனது தலைமையில் தொடங்கப்பட்டது. சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் ரகுராமய்யா (பாதுகாப்புத்துறை அமைச்சர்) அவர்களுக்கு கறுப்புக் கொடிகாட்டும் போராட்டம் நடைபெற்றது. அண்ணா சாலையில் சுமார் 500க்கு மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் கறுப்புக் கொடிகாட்டும் போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, 2வது முறையாக 26.5.1974 அன்று சென்னைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் ஒய்.பி.சவான் அவர்களுக்கு எதிராக அண்ணா சாலை _ தேனாம்பேட்டை பாரதிதாசன் சாலை சந்திப்புக்கு அருகில் அன்னை மணியம்மையார் முன்னிலையில் கறுப்புக்கொடி காட்டும் கிளர்ச்சி நடைபெற்றது. சுமார் 1000 பேருக்குமேல் தாய்மார்கள், தோழர்கள், (நாங்கள்) எல்லோரும் கலந்துகொண்டோம்.(படம்)
31.5.1974ல் (மூன்றாவது முறையாக) சென்னை வந்த மத்திய அமைச்சர் போலோ பஸ்வான் சாஸ்திரி அவர்களுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்ட ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தன; அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர், சமூகநீதிப் போராளி, முன்னாள் பீகார் முதல் அமைச்சர் (பிறகு நமது அழைப்பை ஏற்று அம்மாவுக்குப் பின் கழகம் நடத்திய சமூகநீதி மாநாட்டில் பெரியார் திடலில் கலந்துகொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது) ஆவார். தொடர் கிளர்ச்சிகள் காரணமாக இந்தப் போராட்டத்தின் நோக்கம் போதிய அளவுக்கு மக்களுக்குச் சென்று விட்டதால், இதுபற்றி தமிழக முதல் அமைச்சர் கலைஞர், கழகத் தலைவருக்கும், கழகத்திற்கும் ஓர் அன்பு வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, நிறுத்திக் கொள்ளப்பட்டது!
சென்னைக்கு வந்த 2, 3 மத்திய அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டி, அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் சட்டத்திற்கான சட்டத்திருத்தம் பற்றி மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், நேரில் சந்தித்து டில்லியில் கூறும் வாய்ப்பு எங்களுக்கு உண்டு என்பதால் இதோடு இதனை நிறுத்திக் கொள்ள கேட்டுக்கொண்டு ஓர் அறிக்கை விடுத்ததை, கழகத் தலைவர் அன்னையார் ஏற்று, வேறுவகையில் போராட்டம் தேவைப்பட்டால் நடத்துவது, அதுவரை தொடர் பிரச்சாரத்தை நடத்துவது என்றும் அறிக்கைவிடுத்ததையடுத்து மேலும் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் கைவிடப்பட்டது.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் அரசியல் சட்டம் திருத்தப்பட ஆவன முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று உள்துறை இணையமைச்சர் ராம் நிவாஸ்மிர்தா, தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதுபற்றி _ தக்க வகையில் சட்டத்தை திருத்துவது பற்றி பரிசீலிக்கும் என்று நாடாளுமன்றத்தில் கேள்விக்குப் பதில் அளிக்கையில் கூறினார்.
அஞ்சலக மறியல் போராட்டம், மத்திய அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி போராட்டம் என்பவைகள் எப்படி கைமேல் பலனைத் தந்தது பார்த்தீர்களா?
அன்னையார் உடல்நலம் தளர்ந்திருந்தபோதும், உறுதியான, பண்பான, அய்யாவிடம் கற்ற அனுபவங்களைப் பெற்ற தலைமையானபடியால் மிக அருமையாக இயக்கத்தினை சரியான வழியில் உறுதிமொழியேற்றபடி, அய்யா அவர்கள் போட்டுத் தந்த பாதையில் சிறப்பாக வழிநடத்திச் சென்றார்கள்.
கழகத் தோழர்கள் மகிழ்ந்தார்கள்; மக்கள் வியந்தார்கள்; இன எதிரிகளோ, அதிர்ந்தார்கள்! அதிர்ந்தார்கள்! கழகம் வலிவோடும், பொலிவோடும் வளர்ந்து திருப்புமுனையை அடைந்தது!
நம் அறிவு ஆசானை எப்படிக் கண்ணை இமை காப்பதுபோல, அய்யா அவர்களுக்கு சிற்சில நேரங்களில் அவரது முதுமைக்கு ஒத்துவராத உணவு வகையறாக்கள் மீது, ஒரு குழந்தை ஆசை படுவதைப்போல் வந்தபோதுகூட, ஒரு கண்டிப்பான செவிலியர் போல் பாதுகாத்து வந்தாரோ, அதேபோல அய்யா மறைவுக்குப் பின்னரும், அவர் கட்டிக்காத்து அன்னையாரிடம் ஒப்படைத்த நமது இயக்கத்தையும் காத்தார்கள். தோழர்களிடம் பாசம், பரிவு -காட்டிய அதேநேரத்தில், கண்டிப்பு காட்டவேண்டிய நேரத்தில் சமரசம் ஆகாத கண்டிப்புடன் நடந்து, தான் ஒரு சிறந்த தலைவர் என்பதை எப்படி இரண்டு மாதங்களிலேயே வெளிஉலகுக்குக் காட்டினார் என்பதை, கட்டுப்பாட்டுக்கு விரோதமாக நடந்த குமாரபாளையம் (சேலம்) கழகக் கிளை கலைக்கப்பட்ட நிகழ்ச்சியை (சென்ற கட்டுரையில்) சுட்டிக்காட்டி விளக்கியிருந்தேன்.
தந்தை பெரியார் அவர்களது 5 லட்ச ரூபாய் அருட்கொடையினால் நிறுவப்பட்ட _ வளர்ந்த _ திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி என்ற அரசினர் கலை அறிவியல் கல்லூரியின் அழைப்பை ஏற்று, அன்னையார் சென்று மாணவ, ஆசிரியர்களுக்கும் அறிவுரை, அறவுரை கூறி, ரூ.10 ஆயிரத்திற்கு ஓர் அறக்கட்டளையை நன்கொடையாகத் தந்து அதன்மூலம் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவிட வழி செய்தார்கள். அன்னையாருடன் எனக்கும் அழைப்பு வந்ததை ஏற்று (2.3.1974 அன்று) விழாவில் உரையாற்றி திரும்பினேன்.
இதற்கிடையில் நமது அய்யாவின் சமூகநீதி _ ஜாதி _ தீண்டாமை ஒழிப்பினை உள்ளடக்கிய அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆகும் சட்டம் செயல்படவேண்டியதுபற்றி, பேராதரவு பெருகியது.
5.3.1974 அன்று கர்நாடக சட்டமன்றத்திலும் இம்மாதிரிச் சட்டம் கொண்டுவரவேண்டும் என்பதை அந்த அரசு (தேவராஜ் அர்ஸ் அவர்கள் தலைமையில் நடந்த அரசின்) வருவாய்த் துறை அமைச்சர் ஹட்சி மஸ்தி கவுடா அவர்கள் இது மாநில அரசின் கொள்கை என்று கட்சி வேறுபாடின்றி வரவேற்றார்; கர்நாடகத்திலும் பெரியார் குரல் எதிரொலித்தது!
11.3.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒலித்து, இதற்கு மத்திய அரசைக் கலந்து ஆவன செய்வோம் என்று முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அனைத்துக் கட்சியினர் கவன ஈர்ப்புக்கு கேள்விகள் வந்த நிலையில் பதிலளித்து, உறுதி தந்தார்கள்.
16.3.1974 அன்று தமிழக சட்டமன்ற மேலவையிலும் இந்திரா காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அதனை அனுசரித்தே பதில் அளித்தார். சட்டமன்ற மேலவையிலும் பெரியார் குரல் கேட்ட வண்ணமே இருந்தது!
நமது கழகத்தின் போராட்டத்தினை வரவேற்று முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் மணலி கந்தசாமி அவர்கள் தலைமையில் இயங்கிய தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆதரவுக் கரம் நீட்டி தீர்மானம் நிறைவேற்றி நம் கழகத் தலைவருக்கு அனுப்பினார்கள்.
8.4.1974 அன்று தமிழக சட்டமன்றத்தில் நமது போராட்டம் பற்றி விவாதிக்க வேண்டி உறுப்பினர் கே.டி.கே. தங்கமணி, எச்.வி. ஹண்டே ஆகியோர் ஒத்திவைப்புத் தீர்மானங்களை கொண்டுவந்தபோது, முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் இது அரசின் முக்கிய கொள்கை, ஆர்வத்துடன் செயல்பட்டு, பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற இவ்வரசு பாடுபட உறுதியாக இருக்கிறது என்று பதில் அளித்து பதிவு செய்தார்கள்!
தந்தை அவர்கள் ஈரோட்டில் மாணவர்கள் _ இளைஞர்களுக்குப் பிரச்சாரப் பயிற்சி வகுப்பு நடத்தி பயிற்சி அளித்து பக்குவப்படுத்திடும் பணியைச் செய்து வருவார்கள் ஆண்டுதோறும். அதனால் பயன்பெற்று பணி செய்ய ஆயத்தப்படுத்தப்பட்டவர்கள் எங்களைப் போன்ற பல கழகப் பேச்சாளர்கள்.
அன்னையாரும் 18.5.1974 அன்று திருச்சி பெரியார் மாளிகையில் மாணவர் பிரச்சாரப் பயிற்சிப் பணியை துவக்கி நடத்திட ஆணையிட்டு, எனது முன்னிலையில் 18.5.1974 முதல் துவங்கி 25.5.1974 வரை நடத்தி, கொள்கை நாற்றங்காலில் அப்பயிர்கள் வளரும்படிச் செய்யப்பட்டது! இதில் 48 மாணவக் கண்மணிகள் பங்கேற்றனர். பின்னாளில் நல்ல பேச்சாளர்களாயினர்!
அய்யாவின் ஒப்புதல் பெற்று, திருச்சி சிந்தனையாளர் கழகத்தின் சார்பில், பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் நூலை தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் தொகுப்பாசிரியாக இருந்து, குடிஅரசு, விடுதலை, பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக நூல்களிலிருந்து தந்தை பெரியார்தம் எழுத்துக்கள், உரைகளை பல்வேறு தலைப்புகளில் (காலவரிசைப்படி இருக்காது என்றபோதிலும்) புரவலர் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அவர்கள் ஆதரவோடு, தலைவர் பொறியாளர் திரு. கே.எம். சுப்ரமணியம், அதன் செயலாளர் து.மா. பெரியசாமி, நோபிள் பிரஸ் கோவிந்தராஜ் ஆகியோரின் உழைப்புடன் வெளியிட்டார். அவ்வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் வெளியிட, அன்னை மணியம்மையார் முதல் நூலைப் பெற்றுக்கொண்டார். மூன்று தொகுதிகளை முறையே அமைச்சர் என்.வி. நடராசன், துணைவேந்தர் நெ.து. சுந்தரவடிவேலு, செட்டிநாட்டரசர் எம்.ஏ. முத்தையச் செட்டியார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வாழ்த்துரையில் நானும் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
அப்போதே அன்னை மணியம்மையார் அவர்கள் பெரியார் களஞ்சியம் என்ற தொகுதிகள் பல்வேறு தலைப்புகளில் கடவுள், மதம், பெண்ணுரிமை, ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, இப்படி காலவரிசைப்படுத்தி -(ஆய்வாளர்களிடமிருந்து பாதுகாக்க அதுவே சரியான முறையாக இருக்கும் என்பதால்) அன்னை மணியம்மையார் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார அறக்கட்டளை சார்பில் வெளியிடப்படும் என்று அறிவித்து, பல தொகுதிகள் வருவதற்கும் வழிவகுத்தார்.
– நினைவுகள் நீளும்…