கோவிலில் கல்!
ஏறத்தாழ அனைத்து சித்தர்களும் உருவ வழிபாடு (விக்ரஹ வழிபாட்டை) எதிர்த்து வந்துள்ளார்கள். அவர்களுடைய பாடல்களை படித்தால் அன்றைய தமிழர்கள் உருவ வழிபாடு செய்யாதவர்கள் என்றும், உருவ வழிபாடு முறை தமிழரிடத்தில் பார்ப்பனரால் புகுத்தப்பட்டது என்பதும் விளங்கும்.
சித்தர் கணபதிதாசர் – 15
கல்லிலே தெய்வமில்லைக் கருத்திலே தெய்வம் நெஞ்சே
63 உருப்படுங் கல்லும் செம்பும் உண்மையாய்த் தெய்வமென்றே
மருப்புனை மலரைச்சூட்டி மணியாட்டி தூபங்காட்டி
விருப்பமுற்றலைந்தாய்…
75 மித்திர குருக்கள் சொல்லைமெய்யென்று கல்லை வைத்துப்
பத்திர புட்பஞ்சாத்திப்பணிந்திடும் பாவை நீதான்.
சிவவாக்கியர் -421
ஒரு கல்லை இரண்டாக உடைத்து ஒரு கல்லை
வாசலில் போட்டு படியாக மிதிக்கிறீர், மறு கல்லை
நட்டு வைத்து பூ போட்டு அர்ச்சனை செய்கிறீர். இதில்
எந்த கல்லில் கடவுள் உள்ளான் என்று கேட்கிறார்.
ஒசை உள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்துமே
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துரீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல் சொல்லுமே
463 செங்கல் செம்புகல்லெலாம் சிறந்து பார்க்கும் மூடரே
496 நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
உருவ வழிகாட்டுக்காக எந்தெந்த பொருள்களில்
கடவுள்/தேவர் உருவங்கள் செய்து வழிபடுகிறார்கள் என்று எள்ளி
நகையாடுகிறார்.
510 கட்டையால் செய்தேவரும் கல்லினால் செய்தேவரும்
மட்டையால் செய்தேவரும் மஞ்சளால் செய்தேவரும்
சட்டையால் செய்தேவரும் சாணியால் செய்தேவரும்
வெட்டவெளியதன்றி மற்றவேறு தெய்வம் இல்லையே
522 கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில்
வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில்
தொல்லை அற்றிடப்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர்
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே
பாம்பாட்டி சித்தர் 92
உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி?
உலகத்தின் மூடர்களுக்குண்டோ உணர்ச்சி?
புளியிட்ட செம்பிற் குற்றம் போமோ? அஞ்ஞானம்
போகாது மூடருக்கென்று ஆடுபாம்பே!
அகஸ்தியர் ஞானம் 5
வாடுவார் நாமமென்றும் ரூபமென்றும் வையகத்திற் கற்செம்பைத் தெய்வமென்றும்
நாடுவார் பூரணத்தையறியார் மூடர், நாய்போலே குரைத்தல்லோ வொழிவார்காணே
வால்மீகர் 4
ஓமப்பா கல்செம்பைத் தெய்வமென்றே
உருகுவார் பூசிப்பார் கிரியையென்பார்
மற்றொரு கவிஞர் நம்மவர் வணங்கும் கடவுள் எங்கே இருக்கிறார், வணங்குபவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற வேதனையில் பல்லாண்டுகளுக்கு முன்பே கீழ்க்கண்டவாறு இடித்துக் -கூறுகிறார்:
இருட்டறை தனிலே இட்டதோர் கல்லதை
எட்டநின்றே வணங்கிடும் மட்டிகாள்கேளீரோ
உள்ளத்தில் அல்லவோ உறைகின்றான் ஆண்டவன்
உருவச்சிலையிலே எங்கே இருக்கின்றான்
எனவே ஆன்மீகவாதிகள் சித்தர்கள் கூறியவற்றை நன்கு சிந்தித்தால் கோயிலில் இருப்பது கடவுளல்ல; கல்தான் என்பதை உணர்ந்து கோயிலுக்குப் போவதையும் பார்ப்பனப் புரோகிதனுக்கு தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொட்டி அழுவதையும் தவிர்ப்பார்கள் என நம்புவோமாக.
_ ஆர்.டி.மூர்த்தி, புத்தூர், திருச்சி -_ 17.