டங்ஸ்டன் இழை கடவுள்
ஃபியூஸ் போன பல்பை எரிய வைக்க முடியாத கடவுளை
திட்டிக்கொண்டிருந்த போது
அல்லா தன்னை மரணத்திலிருந்து காப்பாற்றினாரென்று மகிழ்ந்தான் நண்பனொருவன்
என்னிடம் கோபித்துக்கொண்டு போன சூரியன்
திரும்ப வரும்வரை இந்த ஃபியூஸ் போன பல்பை
உயிர்தெழுவதற்கு உதவுமாறு தொழுதேன் அல்லாவிடம்
இந்த இரவில் யார் வெளிச்சம் கொடுத்தாலும் அவன் உன்னதமானவனென்றேன்
அந்த பல்ப் எரியவில்லை தொழுகைக்கு பின்னும்
இருள் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை
இருளை கண்ணாடி போல உடைக்க முடியாது
வெளிச்சத்தை தரும் அமுத சுரபி யாரிடமிருக்கிறது
அறியாமை போல பரவியிருக்கும்
கரிய இருளின் சருகுகளை கூட்டித்தள்ள வேண்டும்
இருள் மாமிசமாகிறது பசித்தவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்
அது எல்லோரையும் வசீகரிக்கும் வார்த்தையாகிறது
நான் வெளிச்சத்தின் உணவுக்காக காத்திருக்கின்றேன்
சிலுவை சுமந்த மனிதனின் பிதாவின் மேல் என் கோரிக்கை விழுகிறது
நீண்ட நேரமாகியும் அந்த பல்பு எரியவில்லை
நான் சூரியனுக்காக காத்திருக்கத் தொடங்கினேன்
அந்த தெருவழியே வந்த தாமஸ் ஆல்வா எடிசன் சொன்னார்
கொண்டு வா அந்த உயிரற்ற பல்பை டங்ஸ்டண் இழைகள் பொருத்தப்பட்டது இனி எரியுமென்றார்
டங்ஸ்டன் இழை இராத்திரி நேரங்களின் கடவுளானது இப்படித்தான்
– கோசின்ரா