சிறுகதை – பெரிய (அ)ம்மை

பிப்ரவரி 01-15

உச்சி வெயில் மண்டைய புளக்கிறாப்புல அடித்துக்கொண்டு இருந்தது. எட்ட மட்டும் பார்க்கும்போது கானல் மழை கண்களுக்கு விருந்தளித்து. எங்கும் ஒரே வெட்கை, அனல் காற்றின் சீற்றம். அந்த ஊரைச் சுற்றி கருவேல மரங்கள் அடர்த்தியாய் பாதுகாப்பு; அரண்போல் இருந்தது.

கருப்பாய் பாட்டி மட்டும் வீட்டின் முன் உள்ள அடர்த்தியான வேப்ப மர நிழலில் கட்டில் போட்டு அதன்மீது உக்கார்ந்த வண்ணம், வெற்றிலையை மென்று கொண்டு காதில் உள்ள தந்தட்டிகள் இரண்டும் ஆட தெருவை கூர்ந்து பார்த்தவண்ணமாய் இருந்தாள்.

ஒருத்தியக்கூட கண்ணால காணலயே, எல்லா இவளுகளுமா வேலக்கி போயிட்டாளுக விருதா கூறுகெட கழுதக. வாரம் தவறாம வேல வேலனு போறாளுக, வாரம் முடிஞ்ச கடன உடன வாங்கி கஞ்சி குடிக்குதுக, மிச்ச மீதி எவளாவது வச்சு இருக்காள்களா? கஞ்சிக்கு செத்த கழுதக என்று மனசுக்குள் எண்ணியவாறு தொலைவில் தன் இடுங்கிய கண்களால் தெருவை துலாவினாள்.

எவளோ ஒருத்தி வர்றது மாதிரி தெரியுதே..? அட மூதேவி முக்காடு போட்டுட்டுள வர்ற, விருத சாவஞ் செத்த சிறுக்கி என மனசில் எழும் கோபத்தை… அது எவடி முக்காடு போட்டுட்டு வர்றவா! எனக் கத்தினாள்.
வெயிலின் கொடூரத்தை தணித்த முக்காடுத் துணியை மெல்ல விலக்கினாள்.

அட இவளா? இவ ரெம்ப வாய்கொழுப்புக் காரியே இவட்ட நம்ம பேச்சு எடுபடாதே. சரி வரட்டும் இன்னைக்கு இவ கூடதான் பொழுது போகணும்னு இருந்தா அத யாராலதான் மாத்த முடியும்.

அருகில் வந்த தமிழரசியை உற்றுப் பார்த்த கருப்பாயி பாட்டி அட கிறுக்கு பய புள்ள நீயாடி? ஒரு வாத்த நாந்தானு சொல்லக்கூடாது. ஆமா உடம்புக்கு முடியலயா? ஒரு வடிய இருக்குறாப்புல தெரியுதே.

கடுப்பெடுத்த வெயில்ல நடந்து வந்ததுக்கும் வேப்பமர நிழல்ல வந்து நின்னதும் போன உசிரு திரும்பி வந்தது போல இருந்தது தமிழரசிக்கு. அந்த ஊரிலே படிச்சவளுனு கணக்கெடுத்து பாத்தா இவ ஒருத்திதான்.

கருப்பாயி பாட்டிக்கு தமிழரசிய பாத்தாலே பிடிக்காது. ஏன்னா இவ பேச்ச கேக்குறதே இல்ல தமிழரசி எதுக்கெடுத்தாலும் பதிலுக்கு பதிலு பேசுவா. ஏன்ன? பாட்டி பழைய பல்லவியே பேசுவா? எதுக்கெடுத்தாலும் அந்தக் காலத்துல நாங்களலெல்லாம் என தற்பெருமை பேசி தனது பகட்டுத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவா.

ஏம் புள்ள இந்தக் கொளுத்து கொளுத்துதே வெயிலு. மழகிழ ஏதாச்சும் வருமா?

ஏம் பாட்டி உனக்கு தெரியாத எனக்குத் தெரியப் போகுது

போன வாரம் சாமிட்ட குறிகேட்டப்போ கார்த்திகை மாசம் மழ பெய்யும்னு சொன்னது. இப்போ…

அடப் போ பாட்டி, நீ ஒன்னு. எந்தச் சாமியும் இன்னைக்கு மழ பெய்யும்னு கரெக்டா சொன்னது கிடையாது.

நாளு நட்சத்திரம் பாக்குறாங்க மழ வர்றதுக்கு மட்டும் வானிலை அறிக்கை வாசிக்கிறாரே ரமணன் அவரத்தான் எல்லா நிருபர்களும் கேக்குறாங்க, உனக்குத் தெரியாத நீதான் டி.வி. பாக்குறது இல்லையே? உனக்கு எங்க தெரியப் போகுது.

பேசிக்கொண்டே இருந்த கருப்பாயி பாட்டி திடீர்னு கட்டில விட்டு கீழே இறங்கி வாசல்ல கிடந்த வெலக்க மாத்த எடுத்து…

சீக்… கழுதே மூதேவி எங்கே வர்ரே… எனக் கூவிக் கொண்டு, வீர்ரென்னு சுழன்று வரும் சூறாவளிக் காத்த நோக்கி திட்டத் தொடங்கினாள்.

தமிழரசிக்கு ஒரே சிரிப்புதான் அந்த உடல் நிலையிலும் குழுங்கி குழுங்கி சிரித்தாள்.

ஏண்டி சிரிக்கிற என்னப் பாத்த பயித்தியக்காரிய தெரியுதா? என்று சொல்லியவாறு விலக்குமாறை கீலே போட்டுவிட்டு மீண்டும் கட்டில் மேல் வந்து உக்கார்ந்தாள். அதற்குள் அந்த சூறாவளிக் காத்து அவர்களை கடந்து சென்றுவிட்டது.

பிறகு என்ன பாட்டி, சூறாவளிக் காத்தப் போயி. இந்த திட்டு திட்டுறேயே?

உனக்கென்னடி தெரியும் நீயோ சின்னக் கழுத. அற்ப ஆயுசுகள போனதுக, இப்படி ஆவியா அலையுதக. அதப் பத்தி உனக்கென்ன தெரியும்! நீ ரெம்ப மெத்தப் படிச்சவ. ஓன்ட இதச் சொன்னா அததக்கு காரணத்த சொல்லி, ஏம் வாய அடச்சுப்புடுவ. சரி அத விடு நீ இன்னைக்கு வேலக்கி போகலையா? எனப் பேச்சை வேறு பக்கம் திசை திருப்பினாள்.

வேலக்கி போக முடிஞ்சா எதுக்கு ஓம் வீட்டு வாசல்ல தேடி வர்றேன் என்று மனசுக்குள் எண்ணியவளாய்…

போகல பாட்டி என்றவள், அப்படியே ஒருக்களித்து படுக்க முயன்றாள், அதற்குள் _ ஏண்டி எனக் கேட்டாள் பாட்டி.

இவ விட மாட்டா போலிருக்கே என நினைத்துக் கொண்டு சொல்லித் தொலையவேண்டியதுதான்.
உடம்பு பூராம் அனலாக் கொதிக்குது பாட்டி உடம்புக்கே ஒன்னுஞ் சரியில்ல அதான் போகல, செத்த நேரம் இங்க குத்தவச்சுட்டு போகலாம்னு வந்த; நீ என்னடான கேள்வி மேல கேள்வி கேட்டு தொணதொணனுக்கிட்டு இருக்கேயே என்றவாறு தலைக்கு கையை தலையணையாக்கி சேலையை இழுத்து மூடி, படுக்க முயன்றாள். வேப்ப மர நிழல் தாலாட்ட தொடங்கியது.

பாட்டிக்கு கோபம் உச்சி மண்டைக்கு சுர்ரென்று ஏறியது. அங்கிட்டு இங்கிட்டுனு அலைஞ்சிட்டு வர்றாள்க இங்கே வந்தவுடனே மல்லாந்து படுக்க துடிக்கிறாள்க. இவளுக்காகவா தன்னால கஷ்டப்பட்டு இம்புட்டு பெரிய வேப்ப மரத்த வளத்து வச்சுருக்கேன் என மனசுக்குள் கருவிக்கொண்டு

ஏண்டி புள்ள நா ஒருத்தி குத்துக் கல்லாட்டம் ஒத்த முனியா ஒக்காந்து இருக்கேனே, என்ன பாட்டி செய்யுற ஏதுபாட்டி ஒரு பேச்சுக்காவது ஒரு வாத்த கேட்டியா புள்ள, பொசுக்குனு வந்தவுடனே படுக்கப் போறீயே

இங்க வந்ததுக்கு பதில வீட்டுலயே முடங்கி கெடந்துருக்கலாம் என்று எண்ணியவளாய்.

உனக்கென்ன பாட்டி குறைச்சல், எங்கள மாதிரி குறுக்கொடிய வேல செஞ்சாக் கஞ்சி குடிக்கிற; இந்த வயசிலயும் நகைக்கு பஞ்சமில்ல, மாசம் புறந்தா டானு பென்சன் பணம் வந்துவிழுது. வேல வேலக்கு பசிச்சாலும் பசிக்காட்டாலும் சோறு, செத்த நேரம் இந்த நிழல்ல கண்ணயர்லாம்னு வந்தேன். நீ என்னடான பேச்சுத் துணைக்கு ஆள் கிடைச்சுட்டாப்புல, சும்மா தொணத் தொணனு கேள்வி மேல கேள்வி கேட்டு தொலைக்கிறேயே? என்று வெளிப்படையாகவே சலித்துக் கொண்டாள்.

அப்பொழுது வேகமாக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு ஓடிவந்தது ஒரு நாய்; வந்தவுடன் நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து படுத்த வண்ணம் கேஸ் கேஸ் என இளைத்த வண்ணமாக இருந்தது.

பாட்டிக்கு வந்ததே கோபம் பக்கத்தில் கிடந்த கம்பை எடுத்து வீசி எறிந்தது. சேடு எங்க வந்து இங்க வந்து படுக்கிற என்றாள்.

ஏம் பாட்டி அந்த வாயில்லாத ஜீவன்ட கோபத்தக் காட்டுற அதுபாட்டுல ஒரு ஓரத்துல படுத்துட்டு போகட்டுமே?

அந்த நாயி மறுகி நின்னு திரும்பி பார்த்தது!

ஆமான்டி கண்ட கண்ட நாயிக வந்து படுக்கிறதுக்க இவ்ளோ பெரிய வேப்ப மரம் வளர்த்து வச்சிருக்கேன். ஏம் பாட்டி சாடை மாடையா என்னையும் வையிற மாதிரி தெரியுதே என்றவாறு ஒரு கையை தரையில ஊண்டி எழுந்தாள், தமிழரசி.

திடீர்னு பாட்டி கட்டுல விட்டு கீழே இறங்கி,
ஆத்தா என்ன மன்னிச்சுடு ஆத்தா தெரியாத்தனமா ஏதாவது பேசியிருந்தா நீதான் சகிச்சு மன்னிக்கணும், என்றவாறு தமிழரசியின் காலில் விழுந்து தோப்புகரணம் போட்டாள்.

தமிழரசிக்கு ஒன்றும் புரியவில்லை இந்த கிழவிக்கு கிறுக்கு புடிச்சிருச்சா?

ஏம் பாட்டி ஏங்கால்ல விழுற? என கொஞ்சம் அச்சத்துடனே கேட்டாள்.

தாயி என்ன மன்னிச்சுடுதாயி ஓம் மேல அம்மா விளையாடி இருக்காமா?

என்ன ஏம் மேல அம்ம விளையாடியிருக்காளா? ஏ உடம்பு என்ன மைதானமா விளையாட என கூறியவாறு தன் முகத்தை தடவிப் பார்த்தாள். அப்பொழுதுதான் அவளுக்கு புரிந்தது.

இருக்கண்குடி மாரியாத்தா முத்து போட்டு இருக்காபுள்ள பேசாம வீட்டுக்கு போ வெளியில எல்லாம் வரக்கூடாது என்றாள் கருப்பாயி பாட்டி.

தமிழரசிக்கு சிரிப்புதான் வந்தது. ஏம் பாட்டி என்ன இங்க உக்கார வேணாம்னு சொல்லு போயிடுறேன். அதுக்காக இப்படி கதையெல்லாம் உடாதே.

இல்ல தாயி பெரிய மனுசி சொல்லுறேன். பேசாம வீட்டுக்கு போ தாயி.
போறேன்.

நா ஒரு கேள்வி மட்டும் கேக்குறேன். அதுக்கு மட்டும் பதில சொல்லு நா இங்க இருக்கல ஏங் வீட்டுக்கே போயிடுறேன்.

கருப்பாயி பாட்டி விழித்தாள் என்ன கேக்கப் போற என பயபக்தியுடன் நின்றாள்.

ஏம் பாட்டி இந்த வெயில் காலத்துல மட்டும் வர்ற அம்மா மழை காலத்துல வர மாட்டேனுங்கிறாளே ஏம் பாட்டி மழையினா ஆத்தாவுக்கு அலர்ச்சியோ?

கருப்பாய் பாட்டி பேசவில்லை. வாயடைத்து போய் நின்றாள்.

தமிழரசியோ வீறு விறுனு வீட்டுக்கு நடந்தாள்.

– பள்ளபட்டி
(அ)ம்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *