இந்தியத் தத்துவங்களில் கடவுள் மறுப்பு (5)
பவுத்தம் சிதைக்கப்பட்டது எப்படி?
மனிதர்களைக் கடவுள் படைத்தது என்றால் -_கொலைகாரன், கொள்ளைக்காரன், திருடன் என்று எப்படி மாறினார்கள்? யார் மாற்றியது? கடவுள் காரணி அல்ல என்றால் பின் யார்? அவனவன் செயல்கள் காரணி என்றால் உலகையும் உயிர்களையும் இயக்குவது கடவுள் என்பது தவறுதானே! படைத்தது ஏன் ஒழுக்கமானவர்களாகப் படைக்கவில்லை? தாரதம்மியத்தோடு படைத்தது என்றால் அது எப்படி தயை உள்ள கடவுளாகும்? விருப்பு வெறுப்பு உள்ள சாதாரண மனிதர் போலத்தானே, அதுவும் காட்சியளிக்கிறது? என்ற கேள்விகளைப் பவுத்தம் கேட்டது.
கடவுள் உண்டா என்பதல்ல பிரச்சினை. கடவுள்தான் உலகைப் படைத்ததா என்பது கூடப் பிரச்சினை இல்லை. உலகத்தைக் கடவுள் எப்படிப் படைத்தது என்பதுதான் பிரச்சினை எனக் கேள்வி எழுப்பிய பவுத்தம் இதற்கு அறிவுப்பூர்வமான விடையை, விளக்கத்தைக் கேட்டது. ஒருவரும் தரவில்லை என்பதே உண்மை. இன்றுபோலவே அன்றும், அது நம்பிக்கை, நீங்களும் நம்புங்கள் என்றது வைதீகம். மறுத்தது உலகாயதம், சாருவாகம் போலவே, பவுத்தமும்!
கடவுளை மட்டுமல்லாது ஆத்மா என்பதையும் பவுத்தம் மறுத்தது. அனாத்மவாதம் என்று பவுத்தத்தைக் கூறுவர். அநித்யம் (நிலையாமை), துக்கம் (நிறைவின்மை), அநாத்தம் (ஆத்மா இன்மை) என்ற மூன்று பிரிவுகளில் பவுத்தத்தை அடக்கலாம். மனமானாலும் மனம்தான் எனப்படுகின்ற ஆத்மாவானாலும் அல்லது அறிவே எனக் கூறினாலும் அதுவும் நிலையானது அல்ல. மாறுதலுக்கு உட்பட்டதே. உலகில் மாறாதது எதுவுமில்லை. மாறிக்கொண்டே இருப்பதுதான் மாறாததாக இருந்துவருகிறது என்பதுதான் அனாத்மவாதக் கொள்கையாகும்.
இத்தகைய முற்போக்குத் தத்துவத்தை விட்டு வைக்குமா பிற்போக்கு வைதீகம்? சாருவாகம், உலகாயதம், போல இதனை முற்றாக ஒழிக்கமுடியாத சனாதனம் பவுத்தத்தைப் புரட்டிப் போட்டுவிட்டது. கடவுள் மறுப்புத் தத்துவமான பவுத்தத்தில் ஆத்திக எண்ணங்கள் நுழைக்கப்பட்ட நிலை அசோகர் காலத்திற்குப் பின் உருவாகிவிட்டது. மனிதனின் செயல்களின் விளைவாகவே எல்லாம் என்பதற்குப் பதில் சிந்தனையின் விளைவுதான் செயல் என்கிற கருத்து திணிக்கப்பட்டது. மனிதனின் செயல்கள் அவனது தேவைகளின் காரணமாகச் செய்யப்படுகின்றன என்பது மறைக்கப்பட்டது. அவனது எண்ணங்களின் விளைவாக உண்டாகின்றன எனும் கருத்து நுழைக்கப்பட்டது.
புத்தர் மறைந்து நூறு ஆண்டுகள் கடந்த நிலையில் புத்தர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எண்ணம் முதலில், கடவுள் காரணி என்கிற கொள்கைக்காரர்கள் தலைதூக்கித் தம் கருத்துகளின் பக்கம் முழுகூட்டத்தாரையும் ஈர்க்க முயன்றனர். தோற்றனர். என்றாலும் தம் நச்சுக் கருத்துகளைத் தூவிவிட்டனர். தம்மை மகாசங்கிகள் என்று அழைத்துக் கொண்டனர். பெரும்பான்மையாரால் வெளியேற்றப்பட்ட இச்சிறு கூட்டத்தினர் மகாசங்கிகளாம்! லோகாயதவாதம் தலைதூக்கிப் பீடுநடை போட்ட பவுத்தத்தில் புத்தரையே லோகோத்ர புத்த என்று அழைத்து மனிதனுக்கும் இந்த உலகத்திற்கும் அப்பாற்பட்ட பகவானாக மாற்றிவிட்டார்கள். ஆத்மா உண்டு என்றே பேசத் தொடங்கினர். இந்த வகையில் கொள்கையை விட்டுவிட்ட திரிபுவாதிகள் சர்வாஸ்திவாதிகள் என்று வருணித்துக் கொண்டனர். இவர்களால் நடத்தப்பட்டதுதான் நாளாந்தா கல்லூரி. நாளந்தா கல்லூரியைப் பார்ப்பனர்களும் அந்த ஜாதி வரலாற்று ஆசிரியர்களும் பெருமை பொங்கப் பேசுவதன் காரணம் விளங்குகிறதா? ஒரிஜினல் புத்தரை மறைத்ததால்தான் வேதமோதிகளின் பரம்பரையினர் நாளந்தா புகழ்பாடுகின்றனர்.
கனிஷ்கர் எனும் மன்னனின் ஆட்சியின்போது பொது ஆண்டுக்கு (கி.பி) முதல் நூற்றாண்டில் புத்த பிக்குகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன் முடிவுகள் அபிதர்மம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டன. அப்படியென்றால் வேதங்களின் சாரத்தையே இவர்கள் வேறொரு குப்பியில் அடைத்துக் கொடுத்தனர். எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது என்கின்ற மாறாத கருத்தையே இவர்கள் மறுதலித்தனர். மாறுவது ஒன்றுதான் மாறாதது என்பதை ஏற்க மறுத்தனர். இந்த வகைக் கருத்துக் குருடர்கள் பல்குழுவாக இருந்தனர். ஒரு குழு மாகத்மியவாதிகள் எனவும், மற்றொரு குழுவினர் லோகாசாரவாதிகள் எனவும் தங்களை அழைத்துக் கொண்டனர். புத்தரின் கொள்கைகளுக்கு நேர் எதிரான கருத்துகளைப் பரப்பத் தொடங்கினர்.
இந்தத் திரிபுவாதிகள்தான் தங்களது கொள்கையை மகாயானம் என்று கூறிக் கொண்டனர். மகாயானம் என்றால் பெரிய பாதை எனப் பொருள். புத்தர் கூறிய அறிவுசார் கொள்கைகளைக் கடைப்பிடித்தவர்களை ஹீனயானிகள் எனவும் கொள்கையை ஹீனயானம் எனவும் கூறிவிட்டனர். ஹீனயானம் என்றால் சிறிய பாதை எனப் பொருள்.
மகாயானம் என்பது உருட்சிக்குத் திரட்சி, புளிப்பில் அவங்கப்பன் எனும் சொலவடைபோல (எலுமிச்சையைவிட புளியம்பழம் புளிப்பு அதிகம்) வேதமோதிகள் தூக்கிப்பிடித்த உபநிடதக் கருத்துகளைவிடத் தீவிரமான மூடக்கருத்துகள் கொண்டது. பொருள்முதல்வாதம் எனும் லோகாயத்திற்குப் பதிலாக, எண்ணமுதல்வாதம் எனும் வைதிகத்தைத் தோற்கடிக்கும் விதத்தில் இவர்களது மகாயானம் இருக்கிறது.
இந்த அயோக்கியர்கள் தங்களது உளுத்துப்போன சரக்கை வணிகப்படுத்துவதற்காக வேதமோதிகள் கையாண்ட புரட்டுச் செயல்களைக் கடைப்பிடித்தனர். செப்பேடு ஒன்றினைக் கண்டுபிடித்ததாகக் கூறினர். புத்தரே எழுதி வைத்த செப்பேடு எனப் புளுகினர். புத்தர் இறந்து 500 ஆண்டுகளுக்குப்பிறகு தெரிவிக்கப்பட வேண்டிய தத்துவ முத்துகள் என்று கதைகட்டி விட்டனர். இந்தச் செப்பேடு நாகார்ஜூனன் என்பவனின் கையில் கிடைத்ததாகக் கூறினர். இந்த நாகார்ஜூனன் யார்?
இவன் ஒரு வேதமோதிப் பார்ப்பனன். புத்த கொள்கையால் ஈர்க்கப்பட்டதாகக் கூறிக் கொண்டவன். புத்தரது தத்துவ நூல்களைப் பாலி மொழியிலிருந்து சமக்கிருத்தத்திற்கு மொழி பெயர்த்தவன். சமக்கிருதம் இன்று போலவே அன்றும் பேச்சு மொழியாக இல்லாமல் வெகுசிலரே பயன்படுத்தும் மொழியாக இருந்தது. வேதங்களும் மற்றவையும் அம்மொழியில் இருப்பதாகக் கூறிக்கொண்டு பாமர மக்களை ஏமாற்றி வந்தனர் வேதமோதிகள். மொழி அறியாத மக்களும் ஏமாந்து வந்தனர்.
இந்தப் புரட்டைக் கண்டிக்கும் வகையில் புத்தர் மக்களின் மொழியில் பேசினார். எழுதினார். ஆம், மக்களின் மொழியான பாலிமொழியில் பேசி, எழுதி வந்தார். அதனால்தான் அந்நாள்களில் அக்கருத்துகள் இலட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்தது. கருத்தின்பால் மக்களை ஈர்த்தது.
அதைக் கெடுக்கும் வகையில் பேச்சுவழக்கு ஒழிந்த பார்ப்பன மொழியில் புத்தருடைய கொள்கைகளை மொழிமாற்றம் செய்த பாதகன் நாகார்ஜூனன் மொழிமாற்றத்தில் என்னென்ன திரிபுகள், முரண்பாடுகள், செய்யப்பட்டனவோ?
தத்துவங்கள் ஒருபுறம் இருக்க, புத்தரின் நடைமுறைகளுக்கும் செயல்முறைகளுக்கும் நேர் எதிராகச் செயல்பட்ட நாகார்ஜூனன் அவரது தத்துவங்களையே தலைகீழாக்கிப் பாழ்படுத்திவிட்டான். பார்ப்பனர்களைச் சேர்த்தால் எந்த முற்போக்குத் தத்துவத்திற்கும் இத்தகைய இழப்பும் இழிநிலையும்தான் ஏற்படும் என்பதற்குப் பவுத்தமே சரியான எடுத்துக்காட்டு.
ஆதிசங்கரனின் அத்வைதத்தைப் போலவே இவர்களும் இவ்வுலகை நிராகரித்து அவ்வுலகத்திற்கு வழிகாட்டினர். இவ்வுலகம் உண்மையல்ல, மாயை என்றனர். உலகம் இருப்பதாக நினைத்துக் செயல்படுவது மடமை என்பது நாகார்ஜூனன் கூறியது என்றால் வேதமோதிகள் தேவலை அல்லவா?
பவுத்தம் அவைதீகமானது, அதாவது வைதீகத்திற்கு எதிர்ப்பானது என்று ஆதிசங்கரனே கூறியிருக்கும் நிலையில், வேதக்கருத்துகளையே பவுத்தம் எனக் கூறுவது புரட்டு அல்லவா? இந்தப் புரட்டு வேலைகள் வேதமோதிகளுக்குப் பாயசம் உண்பதுபோல என்பது வரலாற்று உண்மை.
பவுத்த சங்கத்தில் சேர்பவர்கள் முதல்நிலைச் சடங்கு எனும் வகையில் பப்பஜா எனும் சடங்கை ஆற்றவேண்டும். இதற்கு முன் எந்தக் கொள்கைகள் அவர்களை ஆட்கொண்டிருந்தனவோ, அவற்றை விட்டு வெளியே வரவேண்டும் (ப்ரவிரஜ்யா) என்பது, இரண்டாம் சடங்கு உபசம்பதா (வருகை) எனப்படும். முந்தைய கொள்கைகளிலிருந்து வெளியேறாமலேயே இரண்டாம் சடங்கைச் செய்து சேர்ந்தவனாக நாகார்ஜூனன் இருந்திருக்கிறான். நாளடைவில் தன் முந்தையக் கொள்கைகளைப் பவுத்தத்தில் திணித்திருக்கிறான் என்றால் தீய நோக்கத்தோடே பவுத்தம் தழுவியிருக்க வேண்டும் என்பது கணிப்பு.
நியாயம்தானே!
தீய எண்ணக்காரர்களின் கை ஓங்கிய மகாயான முறைதான் இன்று உலகில் பலபகுதிகளிலும் பரவியிருக்கிறது. அவலம்தான்! வேதமோதிகள் வெற்றிபெற்றுக் கொண்டே வருகிறார்கள் என்பது கசப்பான உண்மை.
சமணம் (ஜைனம்)
இ ந்தியாவிலுள்ள ஆறு பெருமதங்களில் சமணம் மட்டுமே கடவுள் இல்லை எனப் பிசிறு இல்லாமல் தெரிவிக்கின்றது. புத்தரின் காலத்தவராக இருப்பினும் புத்தருக்கு முன் பிறந்த மகாவீர வர்த்தமானர் என்பார் சமணத்தின் ஆசிரியர்/ஆச்சாரியர். இவருக்கு முன்பும் 24 ஆச்சாரியர்கள் (தீர்த்தங்கரர்கள்) இருந்ததாக சமண நூல்கள் கூறுகின்றன. ஆடை அணியாமல் அம்மணமாகத் திரியும் திகம்பரர்கள் என ஒரு பிரிவும் வெண்ணிற ஆடை மட்டுமே அணியும் சுவேதாம்பரர் என மற்றொரு பிரிவும் ஆக இரு பிரிவினராக சமணர் உள்ளனர். இரு பிரிவினர்க்கும் ஒரே கொள்கைதான், கோட்பாடுதான்! வழிபாட்டு முறைகளில் சிறிய வேறுபாடு உண்டு. அவ்வளவுதான்! இவர்கள் தவிர ஸ்தான்கவாதம் என்றொரு பிரிவும் உண்டு.
எதுவுமே மாறாதது (சநாதனம்) என்பது வேதமோதிகளின் கொள்கை. எல்லாமே மாறிக்கொண்டேயிருக்கின்றன; மாறுவது ஒன்றுதான் மாறாதது என்பது லோகாயதவாதிகளின் கொள்கை. அதையே ஏற்றது பவுத்தம். இந்த இரண்டு முனைகளுக்கிடையே நடுவழி காண்பது சமணம் எனலாம். நிரந்தரம் என்பதும் உண்மையே. மாறுதல் என்பதும் உண்மைதான் என்பது சமணம். பொருள் நிரந்தரத்தன்மை கொண்டது; அதன் உருவமும் குணமும் மாறிக்கொண்டிருக்கின்றன என்கிற நடுவழிக் கொள்கை சமணத்தினுடையது.
களிமண் எனும் பொருள் நிரந்தரமானது அதனைக் கொண்டு செய்யப்படும் பாத்திரங்களின் (ஏனங்கள்) உருவமும் நிறமும் நிரந்தரமானவை அல்ல என விளக்குகிறார்கள்.
எதை உறுதிபடக் கூறினாலும் அதற்கு நேர் எதிரானதும் உள்ளடக்கமாக உள்ளது என்கிறார்கள். அது குவளை எனக் கூறும் அதே நேரத்தில் அது குவளையல்ல என்றும் கூறுவதைப் போன்று அவர்களது தத்துவம் அமைந்துள்ளது.
எதையும் முடிவு செய்யும்முன், ஏழுவிதமான அம்சங்களைக் கணக்கில் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும் என்கிறார்கள். 1. அது இருக்கிறது, 2. அது இருக்கவில்லை, 3. அது உண்டு அதே நேரத்தில் இல்லை, 4. அதை விளக்க முடியாது, 5. அது உள்ளது என்றாலும் அதை விளக்க முடியாது, 6. அது இல்லை, அதை விளக்கவும் முடியாது, 7. அது உண்டு, அது இல்லை அதை விளக்கவும் முடியாது என்பவை அந்த ஏழு அம்சங்களாகும்.
1. அஸ்தி, 2. நாஸ்தி, 3. அஸ்திக நாஸ்திச, 4. அவக்தவ்யம், 5. அஸ்திச அவக்தவ்யம்ச, 6. நாஸ்திச அவக்தவ்யம்ச, 7. அஸ்திச நாஸ்திச அவக்த வியம்ச இவையே ஏழு அம்சங்கள் என்கிறது சமணம். மொழி தெரியாது _ பொருளாவது தெரிகிறதா? இந்தக் குழப்பம்தான் சமணக் கொள்கை.
கடவுளை மறுத்தார்களே ஒழிய, ஆத்மாவை உண்டு என்கின்றனர். பொருள்களை இரண்டு விதமாகப் பிரிக்கின்றனர். ஆத்மா இல்லாத பொருள் (அஜீவ காய) என்றும் ஆத்மா உள்ள பொருள் (ஜீவ) என்றும் பிரித்தனர். இரண்டாக இருந்தாலும், இரண்டையுமே இயக்குவது தர்மம் எனக் கூறிவிட்டனர். அதர்மம் பொருள்களின் இயக்கத்தைத் தடைசெய்வது என்றும் கூறிவிட்டனர்.
சார்வாகத் தத்துவம் போன்று அனைத்துப் பொருள்களும் நிலம், நீர், தீ, காற்று எனும் நான்கு தனிமங்களின் சேர்க்கை என்றனர். அப்பொருள்களின் அடிப்படை அணுக்கள் என்றனர். மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அணுக்கள் காரணம் என்றனர். அணுக்களில் ஈரம் (கீணிஜி) உள்ளவை என்றும் உலர்ந்தவை (ஞிஸிசீ) என்றும் இருவகை என்றனர். அந்த வகையில் சமணர்களும் வைசேஷிகர்களும் அணுபற்றிய கொள்கையை இந்தியத் தத்துவத்தில் முதலில் கூறியவர்கள். அணுக்களே பொருள்களின் அடிப்படை என்றும் அணுக்களே படிநிலை வளர்ச்சிக்கு (பரிணாமத்திற்கு)க் காரணம் என்றும் சமணம் கூறுகிறது. இன்று இருக்கும் நிலையிலான உயிர்களை கடவுள் படைத்தது என்பதை சமணம் மறுத்து அனைத்தும் பரிணாம வளர்ச்சியே எனும் கடவுள் மறுப்புத் தத்துவத்தை வலியுறுத்துகிறது.
ஆனாலும் ஆத்மாவை உண்டு எனக் கூறிவிட்டது. கர்மா உண்டு என்றது. ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு நிலைகளாம். ஒன்றில் பொருளை அய்ம்புலன்களால் அறிய முடியும் என்றது. மற்றொரு நிலையில் அய்ம்புலன்களால் அறிய முடியாத பொருளும் உண்டு என்று குழப்பிவிட்டது. அதைவிட மோசமாக, அறிய முடியாத நிலையில் இருக்கும் பொருள்தான் பல்வேறு இனம் சேர்ந்த கர்மாவாக மாறுகிறது என்றும் குழப்பியுள்ளது. இந்தக் கர்மா ஆத்மாவுடன் ஒட்டிக் கொள்கிறது என்பது சமணம்.
துறவு, தவம், யோகம் போன்றவை அனைத்துமே கர்ம வினைப் பயன்கள் தம்மைத் தீண்டாமலும் தாக்காமலும் காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் என்கின்றனர். பழைய கர்ம வினையின் விளைவுகள் மட்டுமல்ல, புதிய கர்ம பயன்களும் தீண்டாமல் இருப்பதற்காக மேற்கண்ட மூன்றும் தேவையாம்.
ஆக, கடவுள் மறுப்பைத் தத்துவமாகக் கொண்டிருந்தாலும் ஆத்மா, கர்மவினைப் பயன் போன்ற மூடத்தனங்களும் புதைந்துள்ள மதமாக சமணம் உள்ளது என்லாம். சமணம் என்றால் துறவு என்றும் சமணர் என்றால் துறவு பூண்டவர் என்றும் பொருள். எதற்குத் துறவு பூணுவது எனக் கேட்டால் சுவர்க்கம் போவதற்கு என்கிறார்கள்.
தொடக்கத்திலேயே சமணம், இரு பிரிவுகளாக உள்ளது. ஏகாந்தவாதம், அநேகாந்தவாதம் என்கிறார்கள். அநேகாந்தவாதத்தை வியார்த்தவாதம் என்றும் கூறுகிறார்கள். சமணர்கள் மூன்று பிரிவினராக உள்ளனர். வெண்ணிற ஆடையை மட்டுமே அணியும் சுவேதாம்பரர்கள், ஆடையே அணியாத திகம்பரர்கள். இவர்களைப் போலவே இவர்களின் ஆலயங்களில் இருக்கும் தீர்த்தங்கரர்களின் உருவப் பொம்மைகளையும் ஆக்கிவிட்டனர். சுவேதாம்பரர்களின் பொம்மைகள் வெண்ணிற ஆடையுடனும் திகம்பரர்களின் உருவப் பொம்மைகள் ஆடையின்றி அம்மணமாகவும் உள்ளன.
ஸ்தானகவாசிப் பிரிவு சமணர்கள் உருவ வழிபாடு செய்வதில்லை. அவர்களது ஆகம நூல்கள்தாம் வழிபடு பொருள்கள். (சீக்கியம்போல)
எந்தப் பிரிவானாலும் அடிப்படைக் கொள்கை கடவுள் இல்லை என்பதே. பிரம்மம் படைத்தது என்றோ, கடவுள் படைத்தது என்றோ வைதீகம் சொல்வதை ஏற்றால் _ பிரம்மத்தைப் படைத்தது கடவுளைப் படைத்தது யார்? என்ற கேள்வி எழுவது இயற்கை. முடிவே கிடைக்காது என்கிறது சமணம்.
சொர்க்கமும் நரகமும் வசிக்கும் இடங்கள் அல்ல. மகிழ்ச்சியாக இருப்பது, வேதனைகளை அனுபவிப்பது என இரண்டுக்கும் வேதம் கூறும் விளக்கத்தை சமணம் ஏற்கவில்லை. மாறாக நல்வினை, தீவினை எனப் பிரித்து நல்ல செயல்கள், தீய செயல்கள் என விளக்கி, நல்வினை செய்தவர்கள் பேரின்பத்தை அடைவார்கள்; தீய வினையைச் செய்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து பிறவா நிலையை அடையும்வரை இவ்வுலக வாழ்விலேயே உழன்று கொண்டிருப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்.
சமணத் தத்துவங்களில் புத்கலம் என்பது ஒன்று உண்டு. பல அணுக்கள் இணைந்து பொருளாக மாறுவதும், பின் பிரிவதும், பின் அணுக்களின் சேர்க்கையால் புதிய பொருள்கள் உருவாவதும் எனும் தத்துவம் இது. இத்தகு பரமாணுக்கள் பலப்பல விதமாக ஒன்றோடு ஒன்று சேர்வதால் உலகம் உண்டானது; அணுக்களின் விகிதாச்சாரக் கூட்டமைப்பால்தான் உயிர்கள் தோன்றின என்பதுதான் புத்கலம் ஆகும்.
அணுக்களின் கூட்டுதான் உலகம், உயிர் எல்லாமே என்கிறது சமணம். எனவே கடவுளுக்கு வேலை இல்லை எனக் கூறிக் கடவுளை மறுக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், வேதங்களுக்கும் பிரமாணச் சடங்குகளுக்கும் உபநிடதங்களுக்கும் மறுப்பாக எழுந்ததுதான் சமணம். யாகங்கள் எனும் பேரால் கொல்லப்பட்ட விலங்குகளின் குருதி யாகங்களையும் அவற்றைப் பெருமைப்படுத்தும் பிரமாணக் கொள்ளை, சமரச முயற்சியில் ஈடுபட்ட உபநிடதக் கொள்கைகள் போன்றவற்றிற்கு எதிர்ப்பாகக் கொல்லாமை, மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்தும் கொள்கை கொண்டதே சமணத் தத்துவம்.
(ஆய்வோம்)
– சு.அறிவுக்கரசு