களவாடப்பட்ட தமிழிசையே கர்நாடக சங்கீதம்!! – (2)

பிப்ரவரி 01-15

 

பண்ணிசைப் பாடல்கள்

பண்டைய தமிழிசைப்பண் இன்று இராகம் எனப் பெயர் மாற்றப்பட்டதின் அடிப்படையில் அமைந்த சில பாடல்களை ஒப்பீட்டு முறையில் இப்பொழுது பார்ப்போமே!

மாதவிப் பொன்மயிலாள்!

தமிழிசையில் அன்று படுமலைப்பாலைப் பண் இன்று கர்நாடக சங்கீதத்தில் கரகரப்பிரியா என்னும் இராகமாகப் பெயர் மாறியது. இந்த இராகத்தில், தியாகய்யரின் சக்கணி ராஜா… என்று தொடங்கும் பாடலும், ராமா நீ சமானமெவருரா? என்று தொடங்கும் கிருதி (கீர்த்தனை)யும் ஈடும் எடுப்பும் இல்லாதவை என்று கர்நாடக சங்கீதக்காரர் கதைப்பர்.

ஆனால், தற்காலத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஒன்றில், இதே இராகத்தி(பண்ணி)ல் அமைந்து இசைவாணர் டி.எம். சவுந்தரராஜனால் பாடப்பட்ட ஒரு பாடல் சிறப்பிடம் பெற்ற செய்தியை நினைவுபடுத்துகிறோம். அந்தப் பாடலின் முதலடி இதுதான். மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்
மையிட்ட கண்மலர்ந்து தூதுவிடுத்தாள்! _ (மாதவிப்)
மன்னவன் வந்தானடி!

பண்டைய அரும்பாலைப் பண் என்பது இன்று கல்யாணி ராகம் என அழைக்கப்படுகிறது. வலுவான இராகம் என்ற வகையில் இதனைக் கன ராகங்களுள் ஒன்று என்பர். இதற்கு எடுத்துக்காட்டாக, தியாகய்யரின், நிதிசால சுகமா? -_ ராமா! சந்
நிதி சால சுகமா?
என்று தொடங்கும் கீர்த்தனையையும்,
சியாமா சாஸ்திரியின்
ஹிம திரி சூட பாஹிமாம்
என்று தொடங்கும் கீர்த்தனையையும்; எடுத்துரைத்து பீற்றிக்கொள்வர் கர்நாடக சங்கீதக்காரர்கள். ஆனால், இதே இராகத்தில் கொஞ்சமும் பிசிர் இன்றி திரைப்பாடல்களாக வெளிவந்து பின்னி எடுத்துவிட்டன.

அவற்றுள் சில பின்வருவன:

மன்னவன் வந்தானடி! -_ தோழி
மஞ்சத்தி லேயிருந்து நெஞ்சத்தி லேயமர்ந்த _ (மன்னவன்)
முகத்தில் முகம்பார்க்கலாம்! கைவிரல்
நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்! _ (முகத்)
என்னும் பட்டுக்கோட்டையாரின் பாடல் இது.
அம்மா! என்றழைக்காத உயிரில்லையே!
அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே! _ (அம்மா)
இங்கு அம்மா என்ற சொல்லும் பொருளும் யாரையோ குறிப்பதாக எண்ணிக் குழம்பிக் கொண்டால் நான் பொறுப்பல்ல.

நீயே எனக்கு என்றும் நிகரானவன்

இளிப்பண் என்பதுதான் இன்று சுத்ததன்யாசி ராகம் எனப்படுகிறது. இந்த இராகத்தில், நடிகர் திலகம் சிவாஜிகணேசன், நீயே எனக்கு என்றும் நிகரானவன்! என்ற பாடலை, பாடும்போது நடிகவேள் எம்.ஆர். ராதாவைக் பார்த்து மா…மா… மாமா! _என்று சிவாஜியும், மமமா… மாப்ளே!.. என்று நடிகவேளும் பாடுவதாக பலே பாண்டியா _ என்னும் படத்தில் பாடல் காட்சி இடம் பெற்றுள்ளது. சரளி வரிசையும் இசை நுட்பமும் தவறாமல் பாடப்படும் இந்தப் பாடல் படம் பார்ப்பவரை வியப்புக்கும், மகிழ்ச்சிக்கும், நகைச்சுவைக்கும் ஆளாக்கியது. இப்பாடல் அன்றைய இளிப்பண்;

இன்றைய சுத்ததன்யாசி ராகம்! அதுபோலவே,
தொட்டால் பூமலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன்சிவக்கும்;
சுடாமல் கண்சிவந்தேன்!
என்று தொடங்கும் இந்தப் பாடலும் சுத்த தன்யாசியில் அமைந்ததுதான்!

கொஞ்ச நாள் பொறு தலைவா! பண்டைய இந்தளப்பண் இன்று ஆனந்த பைரவி ராகம் ஆகும். இதற்கு, தியாகய்யரின், ஓ! ஜகதம்பா! என்கிற கீர்த்தனையையும் முத்துசாமி தீட்சதரின்,
மனஸா குரு குஹா! க்ருரம் பஜாரே!
மாயா மாமா ஹர்த்தபம் த்யா ஜரே!
என்ற கீர்த்தனையையும், கூறி, புல்லரித்துப் போவர் கர்நாடக சங்கீத வித்துவான்களும் கத்துவான்களும். ஆனால், இதே ராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல் பின்வருமாறு

கொஞ்ச நாள் பொறு தலைவா! _ ஒரு
வஞ்சிக்கொடி இங்கு வருவா!
கண்ணிரண்டில் போர்தொடுப்பா _ அந்த
வெண்ணிலவைத் தோற்கடிப்பா!
இப்பாடல் அனைத்துத் தரப்பினரின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளவில்லையா?
போய்வா மகளே! போய்வா! _ கண்ணில் புன்னகை சிந்திடப் போய்வா!
என்ற கவிஞர் கண்ணதாசனின் கர்ணன் படப்பாடல் இந்த இராகத்தில் அமைந்ததுதான்.

பெரும்புகழ் பெற்ற கவிஞரின் மலர்ந்தும் மலராத பாதிமலர்போல
மலர்ந்த விழிவண்ணமே! _ வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே!
என்னும் பாடல் இதே இராகத்தில் அமைந்ததுதான். இப்பாடல் அனைவரின் எண்ணங்களையும் ஈர்த்து இன்பம் ஊட்டி பெயரும் புகழும் பெற்றது அனைவரும் அறிவர்.

எல்லோரையும் போல என்னை எண்ணலாகுமோ?

கொல்லிப்பண் என்னும் தமிழிசைஇன்று சுத்தசாவேரி ராகம் எனப்படுகிறது. அந்த நாளில், நாடக அரங்குகளில் நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி. ஸ்ரீவள்ளித் திருமண நாடகம். அதில் முருகன், வேலன், வேடன், விருத்தன் (முதியவன்) வடிவில் உருமாறி வருகிறான். இவ்வேடத்தில் நடித்தவர் எஸ்.ஜி. கிட்டப்பா. வள்ளியாக நடித்தவர் தமிழிசை வாணி கே.பி. சுந்தராம்பாள். அவரிடம் வேடனாக நடித்த கிட்டப்பா தன்னை உயர்வு படுத்தியும், கே.பி. எஸ்ஸை இசையில் தோற்கடிக்க வேண்டியும் போட்டி மனப்பான்மையில் அவர் பாடும் பாடல் இது; எல்லோரையும் போலவே என்னை

எண்ண லாகு மோடி, போடி!
_(எல்லோரையும்)
இந்தப்பாடல் சுத்த சாவேரி இராகத்தில் அமைந்தது.

ஆகுமோடி, போடி _ என, 2 தடவை டி போட்டு கிட்டப்பா பாடியதற்குப் பதிலடி கொடுக்கும் வண்ணம் உடனடியாக சுந்தராம்பாள் அவரது செருக்கை அடக்கும் வண்ணமாக, எல்லோரையும் போலவே என்னை எண்ண லாகுமோடா, போடா,

மூடா, வேடா!… (எல்லோரை)

எனப் பாடினார். 2 தடவை டி போட்டு பாடியதற்கு ஆக, கே.பி. எஸ்., 4 டா போட்டுப் பாடினாரே பார்க்கலாம்! அரங்கமே வியந்து தொடர்ந்து கைதட்டிக்கொண்டே இருந்தனர். கிட்டப்பா அய்யரின் ஆணவம் அடங்கியது. (பின்னாளில் இருவரும் வாழ்க்கை இணையர் ஆனது வேறு சங்கதி.)

சரியான சான்று

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். களவாடப்பட்ட தமிழிசையே கர்நாடக சங்கீதம் _ என்னும் எம் கருத்துக்குச் சான்றாக அமைகிறது பின்வரும் கருத்து. இன்று பல பெயர்களிலே வழங்கி வருகிற இராகங்களில் பெரும்பாலானவை, தமிழிசைப் பண்களில்  இருந்து தோன்றியவையே! _ (இராமச்சந்திர அய்யர், நூல்: கர்நாடக சங்கீத ராகங்கள்.)

அரியக்குடிக்கு சங்கராச்சாரி அறிவுரை        ஸங்கீத வித்வான்கள் முக்யமா ஒண்ணு பண்ணனும். தாங்க, பாடற ஸமஸ்கிருதப் பாட்டு, தெலுங்குப் பாட்டுகளுக்கு அர்த்தம் தெரிஞ்சுண்டு அர்த்த பாவத்தோடே பாடணும். தமிழே போதும்னு சொன்னா சரியில்லே ஸங்கீத நுட்பம், அர்த்த விசேஷம் ரெண்டிலேயும் உசத்தியா மஹாப் பெரியவா இந்தத் தமிழ்த் தேசத்திலே, தெலுங்கிலேயும், ஸமஸ்கிருதத்திலேயும் நூற்றுக்கணக்கான பாட்டுகளைக் கொட்டிண்டு போயிருக்கா! _ இவ்வாறு, ஜகத்குரு _  காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்த்ரசேசரேந்திர ஸவரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அரியக்குடி இராமானுஜய்யங்காருக்குக் கூறியதாக ஒரு பெட்டிச் செய்தி அருள்வாக்கு _ என்கிற, தலைப்பில் 23.12.2012 கல்கி வார இதழில் வெளிவந்துள்ளது.

காக்க, காக்க!

தமிழ்ப் பாட்டைப் பாட வேண்டாம்! சமஸ்கிருதம், தெலுங்கு மொழிகளில்தான் நூற்றுக்கணக்கான பாடல்களை இசை நுணுக்கம், பொருட்சிறப்புகளோடு பெரியவர்கள் கொட்டிவிட்டுப் போயிருக்கிறார்களாம்!

தமிழில் இச்சிறப்புகள் இல்லை! _ என்கிறார் இந்தக் காஞ்சிப் பெரிய சங்கராச்சாரி. நா, காக்கத் தவறிவிட்டாரே!

தமிழ்ப் பாவலர்கள் தகுதியற்றவர்களா?

சங்கப் பாடல்கள், சிலப்பதிகாரப் பாடல்கள், தேவார, திருவாசக, திருவாய் மொழிப் பாடல்களை யாத்தவர்கள்; தமிழிசை மூவர் எனப்படும் முத்துத்தாண்டவர் (கி.பி.1600); அருணாசலக் கவிராயர் (1711_1779); மாரிமுத்தாப் பிள்ளை (1712_ 1787); வள்ளலார் (1823_1874);  மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826_1889); புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (1891_1964); கவிஞர் கண்ணதாசன் முதலான பாவலர்கள் இசை நுணுக்கம், பொருட்சிறப்பு கொண்ட உசத்தியான பாட்டுகளைக் கொட்டிண்டு போகவில்லையா?
ஏனிந்த மொழிவெறி? –

சியாமா சாஸ்திரி (1763_1827); தியாகராஜ அய்யர் (1767_1847); முத்துசாமி தீட்சிதர் (1775_1835) முதலான பார்ப்பனப் பாவாணர்கள் மட்டும்தான் உசத்தியான பாடல்களைக் கொட்டிண்டு போயுள்ளனரா? என்ன, சமஸ்கிருத மொழி வெறி, மொழி வெறி, மொழி வெறி_டா! என்ன தமிழ் வெறுப்பு?

நினைவில் நிற்பது:

தமிழிசை வளர்ச்சிக்குத் தடைபோடுகிறாரே, இந்தக் காஞ்சிப் பெரியவாள்?

தசைப் பிண்டங்களா, தமிழர்கள்?

தமிழிசை வளர்ச்சிக்குத் தடை போடுகிறாரே இந்தக் காஞ்சிப் பெரியவாள்! அறிவுரை என்ற பெயரில் ஆணையிடுகிறாரே, இவர்? தமிழையும் தமிழிசையையும் கிள்ளுக் கீரைகளாக எண்ணிவிட்டாரா இவர்?

ஆசை, ஆசை அப்பொழுது பேராசை இப்பொழுது:

களவாடப்பட்ட தமிழிசைதான் கர்நாடக சங்கீதம் _ என்பதை ஒருவாறு நாம் உணர்ந்து கொண்டோம்; அல்லவா? பெயர் மாற்றப்பட்டதாலேயே தமிழிசையாகிய கர்நாடக சங்கீதம் நம்முடையது அல்ல, என்றாகி விடுமா? என்ன? தமிழிசை, ஆகிய கர்நாடக சங்கீதம் நம் தமிழ் முன்னோர்களின் சொத்து! வழிவழியாக நம்மிடம் வந்த சொத்து! தமிழினத்தின் சொந்த சொத்து!! இந்த உண்மைகளைத் தமிழ்கூறும் நல்லுலகம் உணரவேண்டும். தமிழிசைக் கலையின் தனித்தன்மை காப்பாற்றப்படல் வேண்டும்;  வளர்க்கப்படல் வேண்டும் என்பதே, எம் போன்றவரின் அவா, ஆசை! சின்னச் சின்ன ஆசை அல்ல; பேராசை இப்பொழுது! தழைக்கட்டும் தமிழிசை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *