புதுப்பாக்கள்

மார்ச் 01-15

நாம் கொஞ்சம் பேசவேண்டும்

நாங்கள் பாவிகள்தாம் மன்னிக்கவும்
எம் பாவம் தீர நீர் ரத்தம் கொடுத்தீர்
உம் ரத்த வகை யாது?
இருக்கட்டும் ஒருபுறம் எம் பாவக் கணக்கு
இறங்கி வாரும் சிலுவைவிட்டு
ஈராயிரம் ஆண்டுகளா உயரம் தொங்கல்?
உயிர் இருந்தால் மருத்துவம் பார்க்கலாம்
இறந்திருந்தால் புதைத்துவிடலாம்
மீண்டும் வருவேன் என்கிறீர்
பலரும் இப்படி நம்புகின்றனர்
வந்ததில்லை ஒருவர்கூட
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே!
உம் கொள்கை பரப்பப் போர்கள் நடந்தன
உம் கொள்கையைவிடச்
சாவது மேலெனப் பலரும் போயினர்
டாலரோடு வழங்கப்பட்டபோது
நீர் மன்னிக்கப்பட்டீர்
பெண்சதைத் தேவை இருந்தபோது மேலாய் உம் மதம் சகிக்கப்பட்டது
எம்மிடம் போதுமான மடமை இருந்தது
உமது மடமையில் புதுமைகள் உண்டா?
உம் குமாஸ்தாக்களின் அக்கறை இனிது
வயிற்றுவலி முதல் மாதத் தேர்வுவரை
ஏழுகடல் தீவுக் கூண்டுக் கிளியில்
மந்திரவாதியின் உயிர் இருக்குமா?
ஏந்தும் பழைய புத்தக எழுத்துகள்
பரந்த வாழ்க்கையின் பாதைகள் அடங்குமா?
மரணதண்டனை நாகரிகமல்ல
ஈராயிர ஆண்டுமுன் நடைமுறை இருந்தது
சிலுவையடிப்பு அரசதண்டனை
குற்றவாளிகள் பெற்றனர் தண்டனை
அரசெதிர் கலகம் அப்போதும் குற்றம்
அதிகார மய்யம் ஒன்றுதான் இருக்கலாம்
புதிய கொள்கைகள் சொல்வதை  விட்டீர்
சத்து இல்லாது சக்கை ஏன் இன்று?
நாங்கள் பாவிகளா?
பாவம் அல்ல அது வாழ்க்கை
பாவதண்டனையே மரணம் என்கிறீர் மரணமுறாத மனிதர்யார் மண்ணில்?
உம்மை வணங்கும் நாடுகள்
செய்யும் வன்முறை பார்த்திருக்கின்றீர்
புஷ்சுக்கு உண்டு பிதா ஆசீர்வாதம்
ஜப்பான் கொரியா வியத்நாம்
ஆப்கன் ஈராக் நாசம்
நாப்பாம் எய்ட்ஸ் யாவும்
அவர் கொடையாகும்
சாயும் மானுடம்முன் உம்சமூகம் சென்றதா?
மகனைக் கைவிட்ட பிதாவே தாங்கள் கைவிடாத ஒரு மனிதனும் உண்டா?

– நீலமணி,
சென்னை.


துளிப்பாக்கள்

  • தொப்புள் கொடி ஜாதிக்கொடி பூணூல்….
  • சங்கராச்சாரிக்கு \ மயிர்
    பிரேமானந்தாவுக்கு \ உயிர்
    மனுநீதி மன்றம்
  • ஒழிப்போம்
    பயங்கரவாதம்…
    இந்து மதம்
  • இந்து, இந்தி
    இந்தியா…
    வரலாற்று மோசடி
  • கொதிக்கிறது
    அணு உலை
    இந்தியப் பலி….
  • சம்புகனுக்கு வாள்
    சீதைக்குத் தீ
    மாமாயணம்
  • கம்ப்யூட்டர் மலர்
    ஜோதிட மலர்
    உண்மை பேசும் நாளேடு

புதுவை.  ம. ஞானசேகரன்
முத்தரையர்பாளையம்


 

நஞ்சை

மரகதக் கம்பளம்
போர்த்தியிருந்த மண்ணில்
கான்கிரீட் கபாலங்கள்
நஞ்சை மடுவில்
ரியல் எஸ்டேட் முதலைகள்
வேட்டைக்குப் பலியாகும்
விவசாய ஆடுகள்
வருசா வருசம்
நடவுக்கு முன்
மேடு பள்ளம் நிரவ
பரம்பு இழுத்து
சமப்படுத்துவார் அப்பா
எப்போது சமமாகும்
வயலும்
வாழ்வும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *