பொம்மைக் கல்யாணம் எது?

பிப்ரவரி 01-15

– தந்தை பெரியார்

நாங்கள் தோன்றுவதற்கு முன் பெண்களின் நிலை எப்படி இருந்தது? ஒரு வருடத்தில் தாலி அறுத்த பெண்கள், 3 வருடத்தில் தாலி அறுத்த பெண்கள், 5 வருடத்தில் தாலி அறுத்த பெண்கள் என்று, 100 பெண்களை எடுத்துக் கொண்டால் 20 பெண்கள் வரை விதவைகளாகவே இருப்பார்கள்.

விதவையான பெண்கள், காந்தியாரிடம் சென்று நாங்கள் எல்லாம் என்ன செய்வது என்று கேட்டதற்கு, ராட்டினம் சுற்றப் போங்கள் என்று தான் சொன்னார். நாங்கள் தான் வீட்டை விட்டு வெளியேறுங்கள், மறு திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினோம். அதன்பின் காந்தியாரும், விதவைக் கொடுமை பெரிய கொடுமை. அதை இந்த நாட்டில் மாற்ற வேண்டுமென்று சொன்னார். வெள்ளைக்காரன் வந்த பின்தான் உடன்கட்டை ஏறுதல் (சதி) நிறுத்தப்பட்டது. அவன் இல்லாமல் இருந்தால், இன்னும் அந்தக் கொடுமை நடந்து கொண்டி ருக்கும். இந்த உடன்கட்டை ஏறுதலை மாற்றியதற்காகவும், பெண்களுக்குப் பள்ளி வைத்ததற்காகவும் ஏற்பட்டதே சிப்பாய்க் கலகம். அதைத்தான் காங்கிரஸ்காரன் சுதந்திரப் போராட்டம் என்று சொல்கிறான்.

 

இந்தப் பெண் பார்த்தா இந்த ஆணை விரும்பியது? அல்லது இந்த பையன் இந்தப் பெண்ணை விரும்பினாரா? என்றால் இல்லை. தாய் தந்தையர்கள் பார்த்து முடித்து வைப்பதுதானே!. இது பொம்மைக்குக் கல்யாணம் செய்வது போன்றது தானே! மேல்நாடுகளில் தன் பெண்ணுக்குக் கல்யாணம் செய்ய மாப்பிள்ளையைத் தேடுவதோ அல்லது பையனின் தந்தை பெண்ணைத் தேடியோ திருமணம் செய்வது கிடையாது. அங்கெல்லாம் ஆணும், பெண்ணும் ஒருவரோடு ஒருவர் விரும்பிப் பழகி, ஓரிரு மாதங்கள் சென்ற பின் தங்களின் பெற்றோரிடம் சொல்லித் தாங்களே ஏற்பாடு செய்து கொள்வார்கள்!

(12.9.1966 அன்று வெங்கடசமுத்திரத்தில் (தர்மபுரி மாவட்டம்) நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரைலிருந்து)  விடுதலை 20.10.1966.

ஓர் ஆணும், பெண்ணும் உணர்ச்சி வசப்பட்டு காதலர்களாவது தான் இந்நிகழ்ச்சியின் தத்துவமே தவிர, இதற்கென்று முறைகள் என்பதெல்லாம் கிடையாது. முன்னெல்லாம் ஆணும், பெண்ணும் தாங்களே விரும்பி வாழ்க்கை நடத்தி வந்தனர். பின் தாய், தந்தையர் தலையிட்டு ஆண், பெண்களைத் தாங்களே பார்த்துச் சேர்த்து வாழ்க்கை நடத்த வைத்தனர். ஆரியர்கள் இங்கு வந்த பின் தான் சடங்குகள், முறைகள் யாவும் ஏற்படலாயிற்று. அதற்கு முன் கிடையாது.

பார்ப்பனர்களின் ஆட்சியில் நம் சமுதாயம் எவ்வளவு இழிவாக இருந்து இப்போது படிப்படியாக முன்னேறி இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சிறு குழந்தைகளை எல்லாம், 5 வயது 7 வயது பெண்களை எல்லாம் திருமணம் செய்திருக் கிறார்கள். திருமணம் செய்தது மட்டுமல்ல, உடல் சம்பந்தமும் வைத்திருக்கின்றனர். வெள்ளையன் வந்த பின் தான் இந்த நிலை மாறியது. பல வழக்குகள் கோர்ட்டுக்குச் சென்றிருக்கின்றன.

10 வயது பெண்ணைப் புணர்ந்தான் என்ற கேஸில், புணர்ந்தது தவறு அல்ல, கணவன் தான் புணர்ந்திருக்கிறான், அவனுக்குத் தனது மனைவியோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள உரிமையுண்டு என்று பார்ப்பனர் கள் கிளர்ச்சி செய்திருக்கின்றனர். சாதா ரண பார்ப்பனர்கள் அல்ல! காங்கிரசில் பெரிய தலைவராக இருந்த திலகரே தலைமை தாங்கி இந்தக் கிளர்ச்சியை நடத்தி இருக்கிறார். பல அறிஞர்கள் கூடி இப்படி இருப்பது தவறு என்று முடிவு செய்து வெள்ளையனோடு சேர்ந்து சட்டம் இயற்றத் துணை புரிந்தனர். வெள்ளையன் வந்து தான் சிறிது சிறிதாக இதையெல்லாம் மாற்றினான்.

****

நம் நாட்டில் பெரும்பாலான பெண்கள் பிள்ளை பெறவும், சோறு ஆக்கவும் தான் இருக்கின்றனரே தவிர, அந்த வேலையிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்துகின்றனரே தவிர, நேரத்தை வீணாக்குகின்றனரே தவிர, சமுதாயத்திற்கோ, நாட்டிற்கோ அவர்கள் பயன்படுவது கிடையாது. இந்த நிலை மாற வேண்டும். நான் மேல் நாடுகள் எல்லாம் போய் வந்திருக்கின்றேன். அங்குள்ள பெண்கள் அடுப்பைக் கட்டிக் கொண்டு அழுவதில்லை.  வாசலிலே கொண்டு வந்து வண்டியில் வைத்துக் கொண்டு ரொட்டி விற்பான். அதில் இரண்டை வாங்கி அறுத்து வெண்ணெய் தடவுவார்கள்.  டின்னில் பதம் செய்யப்பட்ட மீன் ரெடியாக இருக்கும். அதில் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டு தங்களின் உணவை முடித்துக் கொள்வார்கள். அது போதுமானதாக இருக்கும். வயிறும் நிரம்பி விடும். இங்கு போல பெண்கள் சமையலுக் கென்று காலை யிலிருந்து கஷ்டப்படுவதே கிடையாது. அதனால் தான் அவர்கள் உத்தியோகம் பார்க்க முடிகிறது. மற்ற பொது காரியங்களில் எல்லாம் பங்கேற்க முடிகிறது.

இந்தக் காட்டுமிராண்டி கால உணவுப் பழக்கத்தை நம் மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.  மற்ற நாட்டுப் பெண்களைப் போல் நம் பெண்களும் ஆண்களின் தயவை எதிர்பாராமல் வாழ வேண்டும்.

மணமக்கள் மூட நம்பிக்கையான, முட்டாள்தனமான விழாக்களில் தங்களின் பணத்தையும், நேரத்தையும் செலவழிக்கக் கூடாது. கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்டும் சினிமாக்களையே பார்க்கக் கூடாது. அதை வெறுத்து ஒதுக்க வேண்டும்.

அறிவு வளர்ச்சி ஏற்படும்படியான தொழிற்சாலைகள், விஞ்ஞானப் புதுமைகளைப் பார்க்க வேண்டும். சென்னை போன்ற பெரிய நகரங்களைப் போய்ப் பார்க்க வேண்டும். அங்குள்ள மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வரவுக்குள் செலவிடப் பழக வேண்டும். வரவுக்கு மேல் செலவழிக்கக் கூடாது. வருவாயில் ஒரு சிறு பாகமாவது சேமிப்பு இருக்க வேண்டும். இதையெல்லாம் விட அதிகமாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாமல் ஒன்று அல்லது இரண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், அந்தக் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்துப் படிக்க வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

(7.4.1967 அன்று மன்னார்குடியை அடுத்த ராயபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரைலிருந்து) விடுதலை 16.4.1967.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *