உலப்பகுத்தறிவாளர் – 3

மார்ச் 01-15

சல்மான் ருஷ்டி

ஒடுக்குமுறைகள் சல்மான் ருஷ்டியை அசைக்க முடியவில்லை.  இலக்கியத்திற்காக அவர் செய்துவரும் தொண்டினைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும்வகையில் பிரிட்டிஷ், அரசி இரண்டாம் எலிசபெத் அவருக்கு சர் பட்டம் கொடுத்துக் கவுரவித்துள்ளார்.  2007 ஜூன் முதல் அவர் சர். அகமது சல்மான் ருஷ்டி என அழைக்கப்படுகிறார்.  பிரான்சு நாட்டின் கலைத் தளபதியாக ஆக்கப்பட்ட பெருமையும் எமோரி பல்கலைக்கழகத்தின் சார்பில் போற்றுதலுக்குரிய எழுத்தாளர் எனும் பெருமையும் இதே ஆண்டில் அவரைத் தேடி வந்தன.  1945 முதல் இதுவரையிலான 50 மிகவும் புகழ் பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர்களில் ஒருவர் எனும் பெருமை, அமெரிக்க கலை, எழுத்தாளர் அகாடெமிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை ஆகியவையும் 2008 ஆம் ஆண்டில் அவர் பெற்ற பல சிறப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

அவர் பாடலாசிரியரும்கூட.  இசை பற்றிய அவரது அவள் காலுக்கடியிலுள்ள நிலம் எனும் நூல் புகழ் பெற்றது. பல சிறப்பான இசைப்பாடல்கள் இடம்பெற்ற நூல் இது.  இந்தியா, இங்கிலாந்து, டப்ளின், இத்தாலி, அமெரிக்கா, அய்ரோப்பிய யூனியன், ஜெர்மனி போன்ற எண்ணற்ற நாடுகளின் பரிசுகளும் விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.  அமெரிக்க எழுத்தாளர் அமைப்பான றிணிழி அமைப்புக்கு 2004 முதல் 2006 வரை தலைவராகவும் தேர்ந்தெடுக் கப்பட்டவர், மதக் கட்டளை எனும் கரைச்சேற்றால் இந்தத் தாமரையின் வாசம் போகவில்லை.  அந்தக் காரிருள் இந்த நாத்திகக் கதிரவனின் கதிர் வீச்சுகளை மறைக்கவும் முடியவில்லை.  முடியாது.

ஆலிவுட் நடிகராக விரும்பிய சல்மான் ருஷ்டி, நிறைவேறாத தம் ஆசையை இரு படங்களில் தலையைக் காட்டி நடித்திருக்கிறார்.  ஒரு திரைப்படத்தில் மருத்துவராகவும் நடித்திருக்கிறார்.

அவர்மீது பிறப்பிக்கப்பட்ட மதக் கட்டளை கொமேனி 1989 இல் இறந்த பிறகும் உயிருடன் இருக்கிறது.  அய்தொல்லா அலி கமேனி எனும் தற்போதைய மதத் தலைவர் அக்கட்டளையைப் புதுப்பித்துள்ளார்.  திரும்பப் பெறவேண்டும் என்று விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை இவர் மறுத்துவிட்டார்.  யார் போட்டாரோ, அவரேதான் திரும்பப் பெறமுடியும்.  அவர்தான் இறந்துவிட்டாரே!  எனவே, திரும்பப் பெறும் வாய்ப்பே இல்லை எனக் கூறிவிட்டார்.  அவரைக் கொல்ல முயன்றவர்கள்தான் இறந்துபோனார்கள்.

முகமது நபியைப்பற்றி கார்ட்டூன் வெளிவந்தபோது ஒரு மதப் பிரிவுத் தலைவர் கூறினார்; மதத்தைவிட்டு ஓடிய சல்மான் ருஷ்டியை எந்த இசுலாமியனாவது கொன்று போட்டிருப்பானேயானால், தீர்க்கதரிசியைக் கார்ட்டூன் போடும்நிலை டென்மார்க், நோர்வே, பிரான்சு நாடுகளில் வந்திருக்குமா என்று அங்கலாய்த்துக் கொண்டார். ஏன் அவரே அதனைச் செய்திருக்கக்கூடாது எனும் கேள்விக்கு ஹிஸ்புல்லா பிரிவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா என்ன பதில் கூறுவார்?  இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் முயன்று, முடியாமல் செத்துப்போனதை லண்டன் இடுகாடும் டெஹ்ரானின் இடுகாடும் சாட்சியம் கூறிக்கொண்டிருக்கின்றன.

அவருக்கு சர் பட்டம் தந்ததை மலேசிய, பாகிஸ்தானிய முசுலிம்கள் எதிர்த்தனர்.  அல்கொய்தா அமைப்பு எதிர்த்தது. இசுலாத்திற்குச் செய்யப்படும் அவமரியாதை என்று வருணித்தது.

அவர் செய்த குற்றம் என்ன? இசுலாம் மதத்தில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென விரும்புவதாக வாஷிங்டன் போஸ்ட், தி டைம்ஸ் ஆகிய ஏடுகளுக்கு ஆகஸ்ட் 2005 இல் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.  இது என்ன குற்றம்?  இது என்ன பாவம்?

பழக்க வழக்கங்களுக்கு அப்பால், நிகழ்காலத்திற்கு ஏற்றாற்போல் இசுலாத்தின் அடிப்படைக் கொள்கைகள் கொண்டுவரப்படவேண்டும், இருளடைந்த இறுக்கமான மதப் பாடசாலைகளில் இருப்போர் தூயகாற்றை அனுபவிக்க அனுமதிக்கப்பட வேண்டும்…இசுலாமிய வேதம், ஒரு சம்பவம் மட்டுமே என்ற எண்ணமும் இயற்கைக்கு அப்பாலுள்ள ஏதோ ஒன்றினால் அல்ல எனும் எண்ணமும் மதக் கல்வியைக் கற்கத் தொடங்குவோருக்குத் தெரிவிக்கப்படவேண்டும்…சகிப்புத் தன்மையும், பரந்த எண்ணங்களும், வெளிப்படையாக அமைதியை விரும்பும் தன்மையும், மதப் போர்களுக்குத் (ஜிகாத்)  தூண்டும் கருத்துகளுக்கு எதிர்ப்பும்… தேவைப்படுகின்றன… என்கிற ரீதியில் அவரது கருத்துகள் அமைந்திருந்தன.

பிரான்சு நாட்டு இடதுசாரி ஏடான, கார்லி ஹெப்டோவில் 2006 மார்ச் மாதத்தில் அவர் எழுதி வெளியிட்ட பிரகடனம், மதத் தீவிரவாதங்களையும் மதம் மட்டுமே முக்கியம் எனும் தத்துவத்தையும் முறிப்பதாக அமைந்திருந்தது. பிரிட்டனின் மக்கள் சபைக் கட்சித் தலைவர் ஜாக் ஸ்ட்ரா என்பவர் இசுலாமியப் பெண்கள் முகம் முழுவதையும் மூடிக் கண்களுக்கு மட்டும் ஜன்னல் வைத்து அணியும் நிகாப் முறையை எதிர்த்துப் பேசியதை சல்மான் ருஷ்டி ஆதரித்தார். தம் சகோதரிகள் மூவருமே முகமூடி ஏதும் அணிவதில்லை எனப் பகிரங்கப்படுத்தினார்.  இம்முறை பெண்களின் சுதந்திரத்தைக் குறுக்கும் செயல் என்பதால் தாம் ஜாக் ஸ்ட்ராவை ஆதரிப்பதாகக் கூறினார்.

ஒன்றைப் புரிந்து கொள்ளலாம்.  சல்மான் ருஷ்டி மதங்களை எதிர்த்தார்.  ஏன்?  மதங்கள் மனிதர்களை மதிப்பது கிடையாது.  மனித உரிமைகளை மதிப்பது கிடையாது.  மனிதநேயத்தை மதிப்பது கிடையாது.  மனித சுதந்திரத்தை _ கருத்துக் கொள்ளவோ வெளியிடவோ உள்ள சுதந்திரத்தை மதிப்பது கிடையாது.  பெண்களை மானுடப் பிரிவுகளாகவே கருதுவது கிடையாது.  பெண்களுக்கு எந்த உரிமையும் தருவதற்கு எண்ணமே கிடையாது.  இத்தகைய கிடையாதுகள் அவரிடம் கிடையாது என்பதால் அவர் மதத்தை மதிப்பது கிடையாது.  எதிர்த்தே வந்துள்ளார், வருவார். மதத்தை எதிர்க்கும் கடவுள் மறுப்பாளர் என்பதால் மதவாதிகள் மத்தியில் அவருக்கு இடம் கிடைக்காமல் இருக்கலாம்.  மதவாதிகளின் புளுகான மறு உலக வாழ்க்கையில் இடம் இல்லாது_ மகிழ்ச்சி இல்லாது போகலாம்.  ஆனால், மானுடப் பற்றாளர்களின் மனதில் அவர் பெற்றுள்ள இடத்தை எந்த மதவாதியாலும் அசைக்க முடியாது.  அவர் வாழ்க்கை கற்பிக்கும் பாடம் இது.

– சு. அறிவுக்கரசு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *